சுழல் தந்த திடீர் திகில் க்ளைமாக்ஸில் ஆஸ்திரேலியாவை சரணடையவைத்து இரண்டாவது டெஸ்ட் மேட்ச்சைக் கைப்பற்றிவிட்டது இந்தியா. பெங்களூரில் பந்துவீச்சு, வார்த்தைவீச்சு என அனல் பறக்க ரசிகர்களை, கிரிக்கெட் விமரிசகர்களை எகிறவைத்த அதிரடிப்போட்டி, இரண்டு அணிகளையும் வெகுவாக சூடேற்றியிருக்கிறது. தொடர் 1-1 என்று சமன்படுத்தப்பட்ட நிலையில் அடுத்த களமான ரான்ச்சி (16-03-2017) பெரும் எதிர்பார்ப்பைக் கிளப்பியிருக்கிறது.
புனேயின் பிட்ச் போலில்லாவிட்டாலும், இதுவும் ஸ்பின்னிற்கு துணைபோகும்தான் எனத் தயார்செய்துகொண்டுதான் ஆஸ்திரேலியா பெங்களூரின் சின்னசாமி ஸ்டேடியத்தில் கால்வைத்தது. புனேயில் இந்திய ஸ்பின்னர்களுக்குத் தண்ணிகாட்டி, இந்திய பேட்டிங்கை முறித்து ஒரேயடியாக வீழ்த்திவிட்டதில் கண்ட பெருமிதம் ஆஸ்திரேலியர்களின் முகத்தில் வெளிச்சமாய்த் தெரிந்தது. கோஹ்லியின் தலைமையிலான இந்தியாவோ அடிபட்ட நாகமெனக் கொதித்திருந்தது. அது எப்போது சீறும், எப்போது கொட்டும் எனத் தெரியாத ஆஸ்திரேலியர்கள் கோஹ்லியையும் மற்றவர்களையும் ஆட்டத்தினூடே கமெண்ட் அடித்து, அவர்களது கவனத்தைக் கலைத்துச் சீண்டுவதில் சுகம் கண்டனர். கோஹ்லியும் ஆஸ்திரேலிய கேப்டன் ஸ்டீவ் ஸ்மித்தை விடுவதாக இல்லை. தீவிரக் க்ரிக்கெட்டோடு, கடும் உளவியல் அழுத்தப்போட்டியும் அரங்கேறியிருந்தது பெங்களூர் மைதானத்தில். ’நீயா! நானா! பார்த்துவிடுவோம்!’ என்று புஸ்..புஸ் என்று ஒருவர்மீது ஒருவர் நெருப்புப்புகை விட்டுக்கொண்டிருந்த வரலாற்றுப்போட்டி!
இந்தியா டாஸ் வென்று முதல் பேட்டிங் செய்ததே தவிர அதனை சரியாகப் பயன்படுத்திக்கொள்ளவில்லை. போட்டியின் முதல்நாள் காலையில் முரளி விஜய்க்குக் காயம் என அறிவிக்கப்பட்டு அவர் நீக்கப்பட்டார். பதிலாக, ஐந்து வருடங்களுக்குப்பிறகு தலைகாட்டிய அபினவ் முகுந்த் (தமிழ்நாடு கேப்டன்) கே.எல்.ராஹுலுடன் துவக்க ஆட்டக்காரராக இறங்கினார். ரன் சேர்க்க மறந்துபோனார். கேப்டன் கோஹ்லி? அவருக்கும் பேட்டிங் மறந்துவிட்டது என்றே தோன்றுகிறது. ஆஸ்திரேலியர்கள் கேலிசெய்வதற்கு ஏதுவாக, அற்பத்தனமாக ஆடி அவுட்டானார். புஜாரா, ரஹானே, அஷ்வின், சாஹா, ஜடேஜா ..இவர்களெல்லாம் எதற்காக மட்டையைப் பிடித்துக்கொண்டூ மைதானத்தில் இறங்கினார்கள் என்றே தெரியவில்லை. நேத்தன் லயனின் (Nathan Lyon) அபார சுழல்வீச்சில் இந்தியர்கள் தவிடுபொடியானார்கள். கே.எல்.ராஹுல் மட்டும், வாங்குகிற சம்பளத்துக்கு ஏதாவது செய்யவேண்டும் என்று நினைத்தார் போலும். பெருங்கவனத்துடன் போராடி ஆடினார். கடைசியில் துணையாக சரியாக ஜோடி இல்லாத நிலையில், நேத்தன் லயனைத் தூக்கி அடிக்க முயற்சித்து 90 ரன்களில் அவுட்டானார். லயனுக்கு 8 விக்கெட்டுகள். இந்தியா வெறும் 189. முதல் நாள் பேட்டிங் ஆடிய லட்சணம் இது. ஸ்மித் & கம்பெனியின் குதூகலத்திற்கு ஓர் எல்லையில்லை.
தொலையட்டும்; ஆஸ்திரேலியா ஆடவருகையில் அவர்களை நமது ஸ்கோரை நெருங்கவிடாமல் நொறுக்கித்தள்ளியிருக்கவேண்டாமா? அதுதான் இல்லை. ஆஸ்திரேலியாவின் ப்ரமாதமான 20-வயது துவக்கவீரர் மேட் ரென்ஷா (Matt Renshaw) (60), ஷான் மார்ஷ் (66), மேத்யூ வேட்(Mathew Wade)(40) என்பவர்களின் முதுகில் சவாரிசெய்த ஆஸ்திரேலியா, முன்னேறி 276 அடித்துவிட்டது. அஷ்வின் அருமையாகப் போட்டும், ரன்கொடுப்பதைக் குறைக்கமுடிந்ததே தவிர, விக்கெட் சரியவில்லை. ஆனால் கோஹ்லியால் குறைவாகப் பயன்படுத்தப்பட்ட ரவீந்திர ஜடேஜா, 6 விக்கெட்டுகளை அனாயாசமாக வீழ்த்தினார். ஆஸ்திரேலியா 85 ரன் முன்னிலை என்ற நிலையில், இந்தியா இந்த மேட்ச்சிலும் காலி என்பதே பெரும்பான்மையோரின் சிந்தனையாக ஆகியிருந்தது.
வெடிப்புகள் தெரிய ஆரம்பித்த இத்தகைய பிட்ச்சில் மூன்றாவது நாள் ஆடுவது எளிதானதல்ல. அதுவும் தடவிக்கொண்டிருக்கும் இந்திய பேட்ஸ்மன்கள் என்ன செய்வார்கள் என்று எல்லோரும் யூகித்திருந்தார்கள். ஆனால் கதை கொஞ்சம் வித்தியாசமாக அமைந்துவிட்டது. முதல் நாளில் துல்லியமாக வீசி இந்தியாவை எளிதில் சுருட்டிய நேத்தன் லயனை, இரண்டாவது இன்னிங்ஸில் சரியாக ஆடிவிட்டார்கள் நம்மவர்கள். அவருக்கு ஒரு விக்கெட்டும் விழவில்லை. புனேயில் இந்தியாவை அதிரவைத்த ஓ’கீஃப் இங்கே பெரிதாக ஒன்றும் செய்யமுடியவில்லை. இருந்தும் வேகப்பந்துவீச்சாளர் ஜோஷ் ஹாஸ்ல்வுட்டின்(Josh Hazlewood) ப்ரமாத பந்துவீச்சில் இந்திய விக்கெட்டுகள் பலியாகிக்கொண்டிருந்தன. கே.எல்.ராஹுல் பொறுப்பாக ஆடி இன்னுமொரு அரைசதம் எடுத்துத் துணையிருந்தார். செத்தேஷ்வர் புஜாரா(Cheteshwar Pujara) அபாரமாக ஆட, கோஹ்லியைப்போலவே இதுவரை ஃப்ளாப்-ஆகிக்கொண்டிருந்த ரஹானே இந்த முறை முழித்துக்கொண்டு ஒழுங்காக ஆடினார். இந்தியாவுக்கு எதிர்பாராத 118-ரன் பார்ட்னர்ஷிப் அமைய, ஆஸ்திரேலியாவின் தலைவலி ஆரம்பித்தது. 4-ஆவது நாளில் தொடர்ந்து ஆடிய இந்தியா வழக்கம்போல் வேகமாக விக்கெட்டுகளை இழந்தது. புஜாரா 92, ரஹானே 52, சாஹா 20(நாட் அவுட்). இந்தியா இரண்டாவது இன்னிங்ஸில், ஆஸ்திரேலியாவின் திறமையான பந்துவீச்சு மற்றும் கூர்மையான ஃபில்டிங்கிற்குமுன் போராடி 274 எடுத்ததே நம்பமுடியாததாக இருந்தது.
ஆஸ்திரேலியாவுக்கு தரப்பட்டது 188 ரன் இலக்கு. 4-ஆவது, 5-ஆவது நாட்களில் இதனை அடைந்துவிட்டால் தொடரில் அசைக்கமுடியாத ஒரு வலுவான நிலை அதற்கு கிடைத்துவிடும். கடினமான இலக்குதான். இருந்தும் ஆஸ்திரேலிய பேட்ஸ்மன்கள், குறிப்பாக ரென்ஷா, ஸ்மித், ஹாண்ட்ஸ்கோம்ப் (Peter Handscomb), ஸ்டார்க் என்று நல்ல ஃபார்மில் இருப்பதால் நம்பிக்கையுடன் ஆட ஆரம்பித்தது ஆஸ்திரேலியா. அஷ்வினிடம் மீண்டும் விழுந்தார் வார்னர். (இதுவரை அஷ்வின் வார்னரை டெஸ்ட்டுகளில் 9 தடவை அவுட் ஆக்கியுள்ளார். ஜோடிப்பொருத்தம்!) ரென்ஷா இஷாந்திடம் காலியாக, 2 விக்கெட்டுக்கு 42 வெறும் 9 ஓவர்களில். வேகமாகப் போய்க்கொண்டிருந்த ஆஸ்திரேலியாவுக்கு ப்ரேக் கொடுக்க நினைத்து அஷ்வினைத் திருப்பிக் கூப்பிட்டார் கோஹ்லி. அஷ்வினிடம் விக்கெட்டை இழக்காமல் தடுத்து ஆடவேண்டும் என்பது ஆஸ்திரேலியாவின் பொதுவான இந்தத் தொடருக்கான ப்ளான். முதல் இன்னிங்ஸில் 49 ஓவர்கள் போட்டும் அஷ்வினுக்கு இரண்டே விக்கெட்டுகள்தான். ஆனால் இதுவோ 4-ஆவது நாள் விளையாட்டு. அஷ்வினைத் தடுத்து ஆடுவது பிரச்னையை உண்டுபண்ணும் என நினைத்து அடித்து ஆட ஆரம்பித்தார் ஸ்மித். இந்த சமயத்தில் ஷான் மார்ஷ் உமேஷ் யாதவிடம் எக்கச்சக்கமாக மாட்டினார். DRS கேட்டிருக்கவேண்டும். ஸ்மித் சொன்னதை சரியாகப் புரிந்துகொள்ளாமல் மார்ஷ் வெளியேற, 67-க்கு 3 விக்கெட் என்றானது. பயப்பட ஒன்றுமில்லை 7 விக்கெட் பாக்கியிருக்கிறது 120 ரன் தானே எடுக்கவேண்டும். ஆனால் உமேஷ் யாதவின் யார்க்கர்-நீளப் வேகப்பந்துகள் எகிற மறுத்து, கீழே தடவிச்சென்று பேட்ஸ்மனின் பாதத்தில் மோதி மோசம் செய்தன. அப்படி ஒரு பந்தில் ஸ்மித் எல்பிடபிள்யூ கொடுக்கப்பட்டார். DRS review கேட்கலாமா வேண்டாமா என்பதாக எதிரே நின்றிருந்த ஹாண்ட்ஸ்காம்போடு பேசினார். தவறில்லை. ஆனால் மேலும் குழம்பி, மைதானத்தில் (டிவி-யோடு உட்கார்ந்திருக்கும்) தங்கள் அணியினரிடமிருந்து இதுகுறித்து சிக்னல் பெற முயன்றார் ஸ்மித். This is not at all allowed. இந்தப் பித்தலாட்டத்தைக் கவனித்த கோஹ்லி இடையிலே புகுந்து சீற, அம்பயர் நைஜல் லாங் ‘நோ!..நோ!’ என அலறிக் குறுக்கிடவேண்டிவந்தது. (மேட்ச் முடிந்தபின்னும் கோஹ்லி இந்த சர்ச்சைபற்றி, ஆஸ்திரேலிய கேப்டன் ஸ்மித்தின் தில்லுமுல்லுபற்றி, நேர்காணலில் ஓபனாகப் போட்டுத்தள்ள, இது ஒரு பெரும் சர்ச்சையாகி விஸ்வரூபமெடுத்துள்ளது. உலகெங்கும் நிபுணர்களும், பழைய புலிகளும் இதனைக் கூர்மையாகக் கவனித்துவருகின்றனர்.) ஸ்மித் வேறுவழியின்றி நடையைக் கட்டுகையில் ஸ்கோர் 74-க்கு 4 ஆனது. ஆஸ்திரேலியாவின் பதற்றம் தெளிவாகத் தெரிந்தது. இந்தியாவின் உற்சாகமோ கோஹ்லியின் வடிவில் பொங்கித் தெறித்தது!
குழப்பத்தைத் தலையில் சுமந்துகொண்டு ஆஸ்திரேலியா ஆடிக்கொண்டிருந்தது. மிட்ச்செல் மார்ஷ் அவுட் ஆகையில், 5 விக்கெட் இழப்பிற்கு 101 ரன்கள் எடுத்திருந்த ஆஸ்திரேலியாவுக்கு ஜெயிக்க 87 ரன்களே தேவைப்பட்டது. இன்னும் 5 விக்கெட்டுகள் கைவசம். வண்டியை இலக்கை நோக்கி ஓட்டிவிடலாம் எனத்தான் ஆஸ்திரேலியா நினைத்திருக்கவேண்டும். ரசிகர்களையும் இப்படியான சிந்தனையே ஆட்கொண்டிருந்தது. ஆனால் அந்த மாலையில், அஷ்வினின் கணக்கோ வேறுவிதமாக இருந்தது. ஹாண்ட்ஸ்காம்ப், வேட், ஸ்டார்க் எனப் பிடுங்கி எறிந்து ஆஸ்திரேலியாவின் மிடில் ஆர்டரை முறித்தார் அஷ்வின். ஆரம்பித்தது கோஹ்லியின் ருத்ர தாண்டவம். ரசிகர்களின் பக்கம் திரும்பி கைகாட்டி ஏத்திவிட்டார் மனுஷன்! ரசிகர்கள் போதையில் எழுந்தாட, இந்தியக்கொடிகளும் சேர்ந்துகொண்டன. ஆஸ்திரேலியாவின் மூடுவிழா நடந்துகொண்டிருந்தது. கடைசி இரண்டு விக்கெட்டுகளான ஓ’கீஃபையும், லயனையும் முறையே ஜடேஜாவும், அஷ்வினும் லபக்க, ஆஸ்திரேலியாவின் பெங்களூர் தீர்த்த யாத்திரை, இந்தியாவுக்கு இனிதாக முடிந்தது.
இந்த ஆட்டத்தின்போது ஆஸ்திரேலியாவின் தரப்பிலிருந்து ஒரே அலட்டல், பீற்றல் வெளிப்பட்டது. இந்தியாவின் இரண்டாவது இன்னிங்ஸில் கருண்நாயரை ’டக்’ அவுட் செய்த ஆவேசத்தில் ஸ்டார்க் அவர் முன்னே சென்று ‘கமான்!’ என்றதோடு, மேலும் முன்னேறி ‘நாலெழுத்து’ கெட்டவார்த்தையை அவர் மீது வீசினார். கருண் நாயரிடமிருந்து ரியாக்ஷன் இல்லை. புஜாரா, கோஹ்லி விளையாடுகையில் கிண்டல்கள் அதிகமாக இருந்தது. முதல் நாளில் இந்தியாவின் 8 விக்கெட்டுகளை, குறிப்பாக விராட் கோஹ்லியின் விக்கெட்டையும் சாய்த்த ஸ்பின்னர் நேத்தன் லயன் குஷி மூடில் கூறியது இது: ’’எங்களுக்குத்தெரியும். பாம்பின் தலையை வெட்டிவிட்டால் உடல் சரிந்து விழுந்துவிடும் என்று!’’. ஆட்டம் முடிந்தபின் பேசுகையில், தன் தலைமையில் இது மிகவும் இனிப்பான வெற்றி என்று கூறிய கோஹ்லி, ஆஸ்திரேலியாவை சீண்டத் தவறவில்லை. ’தலை வெட்டப்பட்டாலும் இந்தப் பாம்பு கொட்டிவிடும் என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது!’ என்றார். ’என் விக்கெட்டை எடுத்துவிட்டதாலேயே இந்தியாவை எப்போதும் ஜெயித்துவிடமுடியாது. மற்றவர்கள் இருக்கிறார்கள்; கவனித்துக்கொள்வார்கள். நாங்கள் ஒரு அணி !’ என்றார் மேலும்.
வீரவசனங்கள் பேசியாயிற்று. மார்ச் 16-ல் தொடங்கும் ரான்ச்சி (ஜார்கண்ட்) கதை எப்படிச் செல்லுமோ ! இந்தியா பெங்களூர் டெஸ்ட்டை வென்றுவிட்டதே ஒழிய, அதன் பேட்டிங் ப்ரச்சினைகள் இன்னும் சரிசெய்யப்படவில்லை என்பதை மறந்துவிடமுடியாது. குறிப்பாக கோஹ்லி நேரே வரும் பந்தை சரியாக யூகிக்காமல், அவசரப்பட்டு மட்டையை மேலேதூக்கி, எல்பிடபிள்யூ ஆகிற அசட்டுத்தனத்திலிருந்து விரைவில் விடுபடவேண்டும். அவர் நன்றாக பேட்டிங் செய்துவிட்டு வாயைத் திறந்தால் நல்லது . இருந்தாலும், எப்படியும் இந்தியாவை ஜெயித்துவிடவேண்டும் என்று மைதானத்திலும், மைதானத்துக்கு வெளியேயும் ஏதேதோ செய்துகொண்டிருக்கும் ஆஸ்திரேலியா போன்றதொரு அணியை எதிர்கொள்கையில், இந்தியக் கேப்டனாக அவர் பேசாமல் இருக்கமுடியாதுதான் !
**