மாறும் காட்சிகள்

 

காலையில் ஒரு  உலர் சூழல்
எப்போதும் தலை உயர்த்திக் காட்சிதரும்
ஆதவனுக்கு என்ன வந்ததோ இன்று
மேகமூட்டம் கவிந்திருக்கையில்
மேலோட்டமாக பொதுவாக உலவிச் செல்லும்
தென்றலையும் காணோம் இந்தப்பக்கம்
சிறு சிறு சிவப்புப் பூக்களின் மீது
அமர்ந்து அழுந்தித் தேன் குடிக்க
வண்ணத்துப் பூச்சிகளாவது
வரவேண்டாம்?
மரங்களின் அடர்த்திகளில் என்ன அசைவு
வேண்டப்படாத பழுப்புகள், மஞ்சள்கள்
வேகமாகக் கழட்டிவிடப்படுகின்றன
நிலத்தில் மோதி சரசரக்கின்றன
காலைநடை  நடப்பவர்களின்
காலடிபட்டு நொறுங்கித் தூளாகுமாறு
கடுமையாக எழுதப்பட்ட ரகசிய விதி..
நடப்பதாக எண்ணிக்கொண்டு எதிரே
மெல்ல மெல்ல அசைந்து செல்பவர்கள்
காலப்போக்கில் கசங்கிப்போன கனவான்கள்
எந்த திருப்பத்திலும் சாயக்கூடும்
எப்படியும் சரிந்துவிடலாம் ..
பூங்காவினுள் சாவகாசமாக நுழையும்
பூத்ததலைத் தாத்தாவின் கைபிடித்து
மென்நடைபோட்டுவரும்  குழந்தை
எதைப் பார்த்து இப்படிச்
சிலிர்த்துச் சிரிக்கிறது
என்ன புரிந்தது அதற்கு ?
**

ஆஹா. . மெல்ல நட மெல்ல நட . .

நகரின் அழகான பூங்காவினில் காலையில் அவசர அவசரமாக நுழைபவர்கள் இயந்திரகதியில் சுற்றிச் சுற்றி வருகிறார்கள். அடிக்கடி மணியைவேறு பார்த்துக்கொள்கிறார்கள். வேகநடை பயில்கிறார்களாம். 8 ரவுண்டு, 10 ரவுண்டு என ஓடுகிறார்களாம். உடம்பு அப்போதுதான் ஸ்லிம்மாக, தொந்தி தொப்பையைக் காட்டாமல், நீண்ட நாள் நீடித்திருக்குமாம். ஹெல்த் ஃபிட்னெஸ் நிபுணர்களின் அறிவுசார்ந்த உரை; ஆசீர்வாதம். நடக்கிறேன் என்று நல்லது நடந்தால் நல்லதே. எங்கோ ஒரு டஞ்சன் ரூமில் டிவி-க்கு முன் முடங்கிக்கிடப்பதற்கு இது எவ்வளவோ தேவலை.

சுற்றிச் சுற்றி நடப்பவர்கள், ஓடுபவர்கள், மூலையில் நின்றுகொண்டு கைகால்களை வளைப்பவர்கள், தலையை இடது வலதாகத் திருப்பிக் கழுத்தின் பலத்தை சோதித்துப் பார்ப்பவர்கள் எல்லாம் பெரும்பாலும் இருபதுகளின் வாலிபர்கள். இளங்கன்னிகள். (காலை 8 ½ மணியளவில் நிதானமாக சுற்றிவருகிறார்களே இவர்களில் சிலர் – காலேஜ், ஆஃபீஸ் போன்ற தொல்லை தரும் விஷயங்களோடு சம்பந்தப்படாதவர்களோ?) பார்க் சுற்றிகளில் வயதானவர்களும் அதிகமாகி வருகிறார்கள் என்பது பெங்களூர் ஃபிட்னெஸ் கான்ஷியஸ்-சிட்டி ஆகியிருக்கிறது என்பதைத் தெளிவாகச் சொல்கிறது. உடல்நலம் பேணுதல் சாலச்சிறந்ததே இருபாலாருக்கும்.

இவர்களில் பலர், ஓடுகையில் அல்லது நடக்கையில் சுற்றுமுற்றும் பார்ப்பதில்லை. சீரியஸாக முகத்தை வைத்துக்கொண்டு கடனே என்று அழுகிறார்கள் என்று தோன்றுகிறது. ஒருவேளை அந்த நிபுணர் இப்படி காலைநடையின்போது, பூங்காவிலுள்ள செடிகொடிகளிலோ, மரங்களின்மீதோ உங்கள் கண் தப்பித் தவறிக்கூடப் பட்டுவிடக்கூடாதென்றாரா? கவனம் போய்விடக்கூடாதென எச்சரித்துள்ளாரா? இந்தக்கால நிபுணர்களின் மேதாவித்தனத்தை யாரே அறிவார்? கன்சல்ட் செய்யுங்கள்; காசு கொடுங்கள். ஓடுங்கள். ஓடிக்கொண்டே இருங்கள்.

வழக்கமான காலைநடையில் ஈடுபட்டிருக்கையில் போகிறவழியிலே, ஒருநாள் சாலையோரப் பச்சைப்பசேல் பார்க் ஒன்று தென்பட்டது. சிறிய பார்க்தான் எனினும் நன்றாக பராமரிக்கப்பட்டுவருவதாய்த் தோன்றியது. சம்பந்தப்பட்ட புண்ணியவான்களுக்கு நன்றி. இந்தப் பச்சைத்திட்டைக் கடந்தா தினம் நடக்கிறேன். நுழைந்தேன். செவ்வக நடைபாதைச்சுற்றில் நானும் பாதத்தைப் பதித்து நடக்க ஆரம்பித்தேன். வேகமாக நடப்பவர்கள், ஓடுபவர்கள், கைகளைப் பக்கவாட்டில் வீசிக் காற்றை அளப்பவர்கள், ஏதேதோ ஓசைகளை எழுப்பிச் செல்பவர்கள் என விதவிதமான ஜீவன்களுக்கு வழிவிட்டு ஓரமாக இயல்பிற்கேற்ப நடந்தேன்.பொதுவாகவே ஓரமாகச் செல்வது உடம்புக்கு நல்லது என நுண்ணறிவு கூறும்.

நடந்து தொடர்கையில் ஒரு முதியவரைக் கவனிக்கிறேன்; கொஞ்சம் ஓடிவிட்டு பார்க்-பெஞ்சில் சம்மணமிட்டு உட்கார்ந்து தியானிக்கிறார். பூங்காவின் திறந்தவெளிமூலையில் ஒரு பெரியவர் தோப்புக்கரணம் போட்டுக்கொண்டு தன் உடலுக்கு வேறுவிதமான பயிற்சிதர முயல்கிறார். மெல்லச்சுற்றி வந்துகொண்டிருந்தபோது எங்கிருந்தோ தெளிவாகக் கேட்கிறது விஷ்ணு சகஸ்ரநாமம். இந்த மகாவிஷ்ணு நம்மை எங்கும் தனியே செல்ல விடுவதில்லை எனத் தோன்றியது. சுற்றுமுற்றும் பார்த்தேன். முன்னால், சற்றுத் தள்ளி சிவப்பு ஸ்வெட்டர், தொப்பி சகிதமாக வலம்வரும் அந்தப் பெரியவரிடமிருந்தா இந்தச் சத்தம்? புரிகிறது. தன் மொபைலில் போட்டு விஷ்ணுவின் திருநாமங்களை நினைவுபடுத்திக்கொண்டு நடைபயில்கிறார். நிச்சயம் ஹெல்த் நிபுணர்களை சந்தித்துவிட்டுப் பார்க்குக்குள் நுழைந்தவரல்ல இவர். ஒரிஜினல் மனிதர். உடம்போடு மனதின் ஃபிட்னெஸ் குறித்தும் ஏதோ யோசித்து வைத்துள்ளார். இளைஞர்கள், இளைஞிகளில் சிலரும் காதுக்குள் இயர்ஃபோனை விட்டுக்கொண்டு சுற்றிவருகிறார்கள். அவர்கள் அதில் என்ன பாடல் கேட்கிறார்களோ? ஒரு நாள் யாரோ..என்ன பாடல் சொல்லித்தந்தாரோ..? ஏகாம்பரநாதா, ஏழுமலையானே உனக்கே வெளிச்சம். ஏனெனில் நீயே இங்கு ஒரே வெளிச்சம்..

பார்க்கிலே ஆங்காங்கே சிமெண்ட் பெஞ்ச் போட்டிருக்கிறார்களே – அவை வயதானவர்களுக்கு மட்டும் என சிலர் நினைப்பதாகத் தெரிகிறது ’பெஞ்சிலபோய் உக்காந்துட்டா நம்ப யூத்தப்பத்தி மத்தவங்க என்ன நினைப்பாங்க’ – இப்படி சிந்திக்கிறார்களோ என்னவோ. வேர்க்க விறுவிறுக்க சுற்றிச் சுற்றி..எப்போது நிறுத்துவது என்றுகூடத் தெரியாமல் சிலர்.. அடப்பாவமே! முடிஞ்சுதுல்ல ஒங்க ஃபிட்னெஸ் ரெஜிமென்? தினப்படி ரவுண்டு? வாங்கப்பா, இப்படி உட்கார்ந்து, சுத்தி வளர்ந்திருக்கிற இந்த மரம் செடி கொடிகளையும் கொஞ்சம் ஏறெடுத்துப் பாருங்க. இதல்லாம் ஃபிட்னெஸ் ஆசாமிகள் சொல்லித் தரமாட்டானுங்க. அவன்களுக்கே ஒரு மண்ணும் தெரியாது. நாம் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும், உடம்போடு சூட்சும நிலையில் சேர்ந்து மனதென்றும் ஒன்று இருக்கிறதே அதன் நலத்திற்கு, நாம் நடமாடும் இந்த பூமியோடு, மேலே நீல ஆகாயம் பார்த்தலும் முக்கியம். மரம், செடி கொடிகளில், மலர்களில், பறவைகளில் ஈடுபடுதலும் மனதிற்கு இதம் தரும். நீங்கள் இதையெல்லாம் எப்போது அறிவீர்களோ தெரியவில்லையே..

தினம் தினம் வருகிறீர்களே பூங்காவிற்கு.. குறிப்பாக மழையிரவுகளுக்குப்பின்னான இளங்காலைகளில், சூரியனின் கிரணங்கள் பூங்காவின் புத்தம்புது இலைகளில் பட்டு மின்னுவதைக் கவனித்ததுண்டா? செடிகளின் மேலே தட்டான்களின் விர்-விர்.. கண்ணில்பட்டிருக்கிறதா? காகத்தின் கரைதலும், தேன்சிட்டுக்களின் கீச்சுமூச்சுக்களும் காதில் எப்போதாவது விழுந்திருக்கிறதா? (அதற்கு முதலில் உங்கள் இயர்ஃபோன் காதிலிருந்து வெளியே வந்துவிழவேண்டும்.) பூங்காவின் நடுவிலே ஒரு அடர்ந்த இளம் மரம் செந்நிற ஆரஞ்சுப்பூக்களோடு செழித்தாடுகிறதே காலைக்காற்றில்.. அந்த ஓரத்தில் ஒரு மரம் தன் தலையெல்லாம் மஞ்சள் பூக்களைச்சூடி சிலிர்த்திருக்கிறதே..இந்தப் பக்கம், குத்துக்குத்தாக உயர்ந்த இரண்டு, மூன்று ஈச்சைவகை மரங்கள் –அகோரி சாதுக்களின் ஜடாமுடியைப்போல் அதிலிருந்து அடர்ந்து தொங்கும் ஈச்சங்காய்ச் சரங்கள்.. செவ்விலைகளாய், கிளிப்பச்சைத்தழைகளாய் எழுந்து நிற்கும் செடிகள், வேலி ஓரத்து ஜாதிமல்லிக் கொடி பரப்பும் மென்சுகந்தம் – இவையெல்லாம் உங்கள் உணர்வினிலே ஒருபோதும் தட்டியதே இல்லையா? வெறும் இயந்திரகதி ஓட்டமும், ஏனோதானோ நடையும்தானா? பிறகு ஐம்புலன்கள் எதற்கு உங்களுக்கெல்லாம்? நகரத்தில், குடியிருப்பு வளாகங்களுக்கு நடுவில் பூங்காதான் எதற்கு? ஆம்லெட்டும் மோமோஸுமாய் முழுங்கிவிட்டு ஆஃபீஸ் வளாகத்துக்குள்ளேயே ஓடிக்கொண்டிருக்கலாமே – உபரி நேரத்தில் ?

**