எங்கள் அப்பார்ட்மெண்ட் காம்ப்ளெக்ஸில் நுழைந்து உள்பக்கமாகபோய்த் திரும்பி நடைபாதையில் நடந்துகொண்டிருந்தேன். தற்செயலாக அடுக்குமாடிச்சுவரின் உயரத்தில், அந்த சிறிய போர்டு கண்ணில் பட்டது. Don’t feed the pigeons. அடப்பாவிகளா! புறாவுக்கு சாப்பிட ஒன்றும் போடக்கூடாதா? பிச்சைக்காரனுக்கும் காசு, கீசு போட்றக்கூடாது. நாய் வாசலில் பசியோடு நாளெல்லாம் பட்டினியாகப் படுத்துக்கிடக்கட்டும். எதையும் போடாதே. நாம் மட்டும் நல்லா இருப்போம்.. டேய், நடக்கக்கூடிய காரியமா இது?
அந்தக்காலத்து மாடப்புறாக்கள் தான் இந்தக்காலத்து கோபுரப் புறாக்கள், அப்பார்ட்மெண்ட்டுப் புறாக்கள். இவைகள் மரங்கள் பக்கம் போகாது குடியிருக்க. கோயில் கோபுரங்கள், சர்ச்சுகள், மசூதிகள் என உயர்ந்த கட்டிட அமைப்புகளில் வாழும். இந்தக்கால அடுக்குமாடிக் கட்டிடங்களின் உச்சிகள், மொட்டை மாடிகள் இவை ஜோடி ஜோடியாய்க் குடும்ப வாழ்வு நடத்த வசதியாகிப்போகின. கட்டிடங்களின் பால்கனிகளில் இங்குமங்குமாக அவ்வப்போது இவை பறக்கும். சிலசமயங்களில் எங்காவது ஒரு மூலையில் அமர்ந்துகொண்டு ஙூம்..ஙூம்.. என ஒரு அழுத்தமான ஒலியில் முனகும். இவற்றின் வாழ்வு முறை அது. வேறென்ன செய்துவிடுகின்றன இந்தப் புறாக்கள்? இவை உன்னிடம் என்ன அல்வாத்துண்டையா தினம் தினம் கேட்கின்றன? இதுகளுக்காக மூலையில் கொஞ்சம் தானியத்தைத் தூவினால் என்ன, குறைந்தா போய்விடுவாய் நீ? ஏனிந்தக் கொலவெறி?
மெத்தப்படித்த உனது புத்திசாலித்திட்டங்கள் நாடெங்கும் பல காடுகளை சீராக அழித்துவருகின்றன; இயற்கை வளங்களை சூறையாடுகின்றன. வளமான வாழ்விடங்கள் அமைத்துக்கொள்வதாகச் சொல்லிக்கொண்டு, விலங்குகளின், பறவைகளின் இருப்பிடங்களைக் கபளீகரம் செய்கிறாய். கட்டிடங்கள், தொழிற்கூடங்கள் என்று ஏதேதோ முன்னேற்றமொழி பேசியே ஏரி, குளங்களையும் தூர்த்து மூடுகிறாய். இயற்கையை இப்படி சீண்டிவிட்டுக்கொண்டே நாளெல்லாம் வாழ்கிறாய். நவீனம் என்கிறாய்; நாகரிகம் என்கிறாய். என்னே என் திறமை என்று மார்தட்டிக் கொள்கிறாய். இடையிடையே பழம்பெருமையும் பேசி பம்மாத்து வேலை செய்கிறாயடா நீ! திடீரென எங்காவது சுனாமி, புயல், பூகம்பம் என இயற்கை சீற்றம் காட்டிவிட்டால், ஐயோ, அம்மா என்று அலறுகிறாய். ஓஸோனில் விழுந்தது ஓட்டை; உலகமே அழியப்போகிறதென்று என்று பேத்தினாய் ஒருமுறை! வான்வெளியின் கருங்குழி என்னையே பார்ப்பதுபோல் தெரிகிறதே என்கிறாய். அழிவுக்குழிகளை உன்னைச் சுற்றியும் நீயே தோண்டிவைத்திருக்கிறாய். திடீரென்று எல்லாக்குழியும் என்னயே பார்க்கிற மாதிரி இருக்கிறதே என்றால், என்னதான் செய்வது?
ஐந்தறிவை மட்டும் வைத்துக்கொண்டு, எத்தனையோ பிரச்சினைகளுக்கிடையேயும், விலங்குகள் எல்லாம் தங்கள் வாழ்வை சரிவர நிர்வகித்துவருகின்றன. உனக்குப் புரியாததா இது? ஆறை வைத்துக்கொண்டு அலட்டும் உன்னிடம் இந்த அடிப்படை சாமர்த்தியம் கூட காணப்படவில்லையே? மாண்புமிகு மனிதா! உன் தலையில் நீயே மண்ணை அள்ளிப்போட்டுக்கொண்டு எங்கே வேகமாகப் பறந்துகொண்டிருக்கிறாய்? புதிய உலகம் படைப்பதற்கா? இல்லை, இந்தக் கிரஹத்தின் கணக்கை ஒருவழியாக செட்டில் செய்துவிட்டு, வேற்றுக்கிரஹத்தில் போய் உட்காருவேன் என்கிறாயா?
உன்னைச் சொல்லிக் குற்றமில்லை.. இந்த
மண்ணைச் சொல்லிக் குற்றமில்லை
காலம் செய்த கோலமடா
கடந்து செல்லவும் முடியலைடா…
**