சுப்ரமணிய பாரதியிலிருந்து, அவருக்குப் பின் வளர்ந்து செழித்த தமிழ்ப் புதுக்கவிதை வரலாற்றை, ஒரு சிறந்த கட்டுரை நூலாக தமிழ் இலக்கியத்தில் பதித்த ஆளுமை வல்லிக்கண்ணன். நா.பார்த்தசாரதிதான், தான் நடத்திவந்த ’தீபம்’ இலக்கிய இதழில் இதனை ஒரு கட்டுரைத் தொடராக 1977-ல் வல்லிக்கண்ணனை எழுதவைத்தார். 1978-ல் சாகித்ய அகாடமி வல்லிக்கண்ணனுக்கு ’புதுக்கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும்’ என்கிற இந்த நூலுக்காக விருது வழங்கி கௌரவித்தது.
2006-ல் மறைந்த வல்லிக்கண்ணன், சிறுகதை, நாடகம், நாவல் என நிறைய எழுதியிருக்கிறார் எனினும் தன் கட்டுரை நூல்கள் சிலவற்றிற்காகக் கவனிக்கப்பட்டவர். பாரதி, ந.பிச்சமூர்த்தி, கு.ப.ராஜகோபாலன் ஆகியோரின் தாக்கத்தில் இளம் வயதிலிருந்தே கவிதைகளை எழுதிவந்தவர். எழுத்தாளர் சி.சு. செல்லப்பாவின் ‘எழுத்து’ இலக்கிய இதழில் இவரது புதுக்கவிதைகள் வெளிவந்தன. அவரே, ‘அமரவேதனை’ என்கிற தலைப்பில் வல்லிக்கண்ணனின் முதல் கவிதை நூலை 1974-ல் ‘எழுத்து பிரசுரமாக’ வெளியிட்டார். அறுபதுகளின் இறுதி, எழுபதுகளின் ஆரம்பத்தில் எழுதப்பட்ட கவிதைகளைக்கொண்ட ‘அமரவேதனை’ யை சமீபத்தில் புரட்டியபோது சில, மனம் கவர்ந்தன. வாசியுங்கள் அன்பர்களே:
அறிஞர் ஆந்தை ஆந்தை ஒன்று மரத்தில் இருந்தது அறிஞர் ஆந்தை அதிகம் பார்த்தது பார்க்கப் பார்க்க கூச்சல் குறைத்தது கூச்சல் குறையவும் கூரிய காதால் அதிகம் கேட்டது அதனால் பின்னர் உண்மை தெரிந்து தன்னை அறிந்து உலகை உணர்ந்தது. பேச்சை வளர்க்கும் பெரியவர் பலரும் ஆந்தையைப் போல ஆழ்ந்து அடங்கிடில் அமைதி வளரும் உலகம் உய்யுமே! ** பண்பு ஒன்றே ! விளக்கைப்போட்டேன் கொசுக்கள் ஆய்ந்தன இனிப்பைக் கொட்டினேன் ஈக்கள் மொய்த்தன மிட்டாய் நீட்டினேன் குழந்தைகள் சூழ்ந்தன புல்லைச் சிதறினேன் ஆடுகள் சேர்ந்தன பணத்தைக் காட்டிடில் மக்கள் கூடுவர் பார்க்கப் போனால்.. பண்பு ஒன்றே ! ** அமர வேதனை சிலுவையில் செத்த ஏசுவின் புண்கள் மீண்டும் கொட்டுது ரத்தம் மீண்டும் மீண்டும் உயிர்க்கும் நித்தம் குண்டடிபட்ட காந்தியின் இதயம் மீண்டும் கக்குது ரத்தம் துயரால் சாகும் நித்தம் உண்மைக்காக உரிமைக்காக மனிதருக்காக செத்த சாக்ரடீஸ், லிங்கன் புத்தன் வகையரா அத்தனை பேரின் ஆத்மாவும் அமைதியற்றுத் தவிக்கும் என்றும் என்றும்.. நித்தம் சத்தியம் கொலைபடல் கண்டு உரிமை பறிபடல் உணர்ந்து மனிதரை மனிதர் தாக்குதல், நசுக்குதல் கொல்லுதல் கண்டு.. மண்ணில் அங்கும் இங்கும் எப்பவும் போர்வெறி நரித்தனம் நாய்த்தனம் பயில்தல் அறிந்து.. மனிதர் மனிதம் மறந்தது கண்டு.. ** சென்னைக்கு வந்த சிவன் சென்னைக்கு வந்து சிவமானான் அன்றொரு புலவன் சென்னைக்கு வந்தான், சிவமானான்! சென்னைக்கு வந்தேன், என்னானேன்? இன்று நான் சென்னைக்கு வந்து என்னானேன்? வெண்பொடி போர்த்திய மேனி சடைபட்ட கூந்தல் மண்பட்ட ஆடை பூண்டான் பித்தனெனத் திரியும் சிவமானான் தமிழைப் போற்றிய புலவன் ஓட்டல்தோறும் உணவெனும் பேரில் கண்ட நஞ்சையே தின்னக் கற்றேன் வீதிகள் திரியக் கற்றேன் வெறிநோக்கும் பெற்றேன் உடலெனும் பேரில் எலும்புகள் சுமந்து நின்றேன் எதையும் எண்ணிச் சிரித்தல் கற்றேன் இவையும் சிவனின் பண்புகள்தானே! ** யாரே அறிவர்? ஒரு இல் ஒரு வில் எனக் கொள்கைகொண்டு வாழ்ந்து காட்டினை ராமா! நின் ராஜ்யம் இங்கு வரல் வேண்டுமென விரும்பினர் பலரே விரும்புவோர் இன்றும் உளரே எனினும் இன்று நீ இந்நாட்டிடை வந்திடில் உன் நிலை என்னாகுமோ யாரே அறிவர்? மீண்டும் கானகம் ஏகிட நேருமோ இருட்டடிப்பில் ஆழ்வையோ? அன்றிக் குண்டடிபட்டுச் சாவையோ.. யாருக்குத் தெரியும்? ரகரகத் துணைவியர் பலப்பலர் சுரண்டிப் பிழைத்திட உற்ற கருவிகள் பலப்பல எத்தி உயர்ந்திட நாவலித்தீடு நயம் நிறை சொற்கள் மிகப்பல பல கொண்டு வாழ்ந்திடும் அரசியல் தலைவர்கள், மேதைகள் வளர்ந்திடும் இந்நாட்டில் பிழைக்கத் தெரியாப் பித்தென பரிகசிப்புக்கு உள்ளாவையோ? ஏ ராமா! உன் நிலை என்னாகுமோ யாரே அறிவர் ?
**