அதுவும் இதுவும் – 2

தொடர்ச்சி . .

இன்னொரு பாய் ஞாபகத்திற்கு வருகிறது. இல்லை, வருகிறார். இது பாய் (Bhai). பத்துப் பன்னிரண்டு வயதுப் பையனாக, நான் கிராமத்து சிறுவர்களோடு வீதிகளில் உலவியபோது பரிச்சயமான பாய். உப்பு பாய். உப்பு ராவுத்தர் என்றும் அழைக்கப்பட்டதுண்டு. உப்புமூட்டை வைத்த ஒற்றை மாட்டுவண்டியில் வருவார். இல்லை. நான் சரியாக சொல்லவில்லை. மாட்டுவண்டியில் உப்பு வரும். மாடு இழுத்துவரும். இவர் மாட்டின் தும்பைப் பிடித்துக்கொண்டு ஒரு கையால் வண்டியைத் தள்ளிக்கொண்டே நடந்து வருவார். ஏன் வண்டியில் ஏறி உட்காராமல் நடந்தே வருகிறார். ரொம்ப நாளானது சிறுவர்களான எங்களது மண்டையில் இது ஏற. மாடு பழையது. அதாவது வயதானது. மெலிந்துமிருந்தது. வெகு சிரமப்பட்டுத்தான் வண்டியை இழுத்தது. அதற்கு மேலும் பாரமாகிவிடக்கூடாது என்று தன் வண்டியிலேயே ஏறி உட்காரமாட்டார் பாய். மாறாக, மாடிழுக்க, வண்டியைத் தானும் தள்ளிச் செல்வார் எங்கள் பாய். உப்பு ராவுத்தர். மற்றபடி அவர் பெயர்தான் என்ன? யாருக்கும் தெரியாது. யாரும் கேட்டதில்லை. அதனால் அவரும் சொன்னதில்லை.

ஊரின் எல்லையில் அவர் குரல் கேட்டாலே, எங்கோ கோலிக்குண்டு விளையாடிக்கொண்டிருக்கும் நாங்கள் ஜாலியாகிவிடுவோம். அவர் ஊருக்குள் நுழையவும் நாங்கள் ஓடிச்சென்று வரவேற்போம். சந்தோஷத்தில் அவர் முகத்தில் ஒரு சின்ன சிரிப்பு. ‘என்னடா, பயல்களா!’ என்பார். காது கொஞ்சம் மந்தம் அவருக்கு.வண்டியை அவரோடு சேர்ந்து தள்ளிக்கொண்டு ஊருக்குள் வருவோம். ‘உப்போ… உப்பு !’ என்று கம்பீரமாக ஊரெங்கும் சிதறிப் பரவும் பாயின் குரல். நாங்களும் சேர்ந்து ’உப்போ .. உப்பு..!’ என்று கத்துவோம். சில பொடிசுகள் வண்டியின் பின்புறத்துக் குச்சியைப் பிடித்துக்கொண்டு தவ்வி ஏற முயற்சிக்கும். ’டேய், இறங்குங்கடா! போட்டேண்ணா..’ என்று தார்க்குச்சியை ஓங்குவார். வாண்டுகள் பயந்துபோய் அந்தப்பக்கமும் இந்தப்பக்கமுமாய் குதித்துவிடுங்கள். சிரித்துக்கொள்வார் பாய்.

சின்னச் சின்னத் தெருக்களில் உப்பு வண்டி ஆங்காங்கே நிற்கும். இவரது கூப்பாடு கேட்டு கிராமத்துப் பெண்கள் அலர்ட் ஆகிவிடுவார்கள். ’உப்பு ராவுத்தர் வந்துட்டார்டி!’ என்று பேசிக்கொள்வார்கள். வீடுகளிலிருந்து சின்னச் சின்னப் பெண்டுகள் சிறுகூடை, கொட்டான்களோடு வெளியே ஓடிவருங்கள். ஒரணாவுக்கு ஒரு படி உப்பு. கல் உப்பு. கும்பாச்சியா அளப்பார் பாய். ரெண்டு படி வாங்கினா, ஒரு கை நிறைய உப்பு எக்ஸ்ட்ராவா அள்ளிப்போடுவார். அவர் கை பார்க்கப் பெரிசா இருக்கும். நாங்கள் ஆச்சரியத்தோடு அவர் பேச்சையும், செய்கைகளையும் கவனிப்போம். கிராமத்துப் பெண்களுக்கும் அவரது பேச்சும், தாராள மனசும் பிடிக்கும். அவரும் ஏதாவது சொல்லி அவர்களைச் சீண்டாதிருக்கமாட்டார். ’ஒரு படி போராதும்மா.. இந்தா! பிடி இன்னொன்னு!’ என்று மேலும் அளக்க ஆரம்பிப்பார். பெண்டுகள் பயந்துபோய் ’ஐயோ! ராவுத்தரே! போட்றாதீங்க.. வேணாம். எங்கிட்ட காசு இல்ல!’ என்று பின்வாங்க முயற்சிக்குங்கள். ’அட! விடு புள்ள! காசு..பெரிய காசு! இல்லாட்டி என்ன. அடுத்த வாரம் குடு. இப்ப பிடி கூடையைச் சரியா!’ என்று செல்லமாக அதட்டுவதோடு, கூடையில் நிறைய உப்பைப் போட்டுவிடுவார் பாய். வாங்கவந்த பெண்களும் ’ஐயய்ய! இந்த பாய் சொன்னா கேக்கமாட்டாருல்ல!’ என்று சிணுங்கிக்கொண்டு சிரித்துக்கொண்டு எடுத்துக்கொண்டுபோவதைப் பார்த்து லேசாக சிரித்துக்கொள்வார் பாய். நாங்களும் அங்கு நடப்பதையெல்லாம் அதிசயமாய்ப் பார்த்து ‘பார்றா! நம்ம பாய் காசு வாங்காமயே அள்ளிப்போடறாரு!’ என்று பேசிக்கொள்வோம்.

மாதம் ஒரு முறை என்பதாக வருவார். வந்தால், ஊருக்குள் இரண்டு மூன்று மணிநேரம் சுற்றிக்கொண்டிருப்பார். அப்புறம் மெதுவாக வண்டியைத் தள்ளிக்கொண்டு அடுத்த கிராமத்தை நோக்கிச் செல்வார். நாங்கள் அவர் பின்னாடியே ஊரின் வெளிச்சாலை வரை சென்று வழியனுப்புவோம். அவரும் பின்வரும் எங்களைத் திரும்பிப் பார்த்து ’போங்கடா கண்ணுங்களா! போய் வெளயாடுங்கடா!’ என்று சொல்லிவிட்டுப் போவார். அவரது வண்டி மெல்ல அசைந்து அசைந்து போவதை சோகத்தோடு பார்த்துக்கொண்டு கொஞ்சநேரம் நின்றிருப்போம்.

பார்க்கணும்போல இருக்கு. இப்போது இருக்காரா அந்த பாய்? அப்போதே நாப்பத்தஞ்து ஐம்பது வயசிருக்குமே அவருக்கு?

*

இப்படி என்னென்னவோ சொல்லிவிட்டு, எல்லாவற்றுக்கும் காரணமாகும், ஒத்துழைக்கும் அதைப்பற்றி ஒன்றும் சொல்லாவிட்டால் எப்படி? மனிதனைப் பொறுத்தவரையில், என்ன நினைத்து ஆண்டவன் இதனைப் படைத்தானோ? ஒவ்வொரு முகத்திலேயும், மூக்குக் கீழே ஒரு பிரதான துவாரம். வெறும் ஓட்டை என்று அலட்சியப்படுத்திவிடக்கூடாதே என்று மேலும் கீழுமாக உதடுகள் எனும் சங்கதிகளைப் பொருத்தி அலங்கரித்துவைத்தான் அவன். உதடுகள் பிரிந்தால், பார்க்கும் கண்களை மேலும் கவரவென வெள்ளையாக, வரிசையாக சிலவற்றை அடுக்கிக் கவர்ச்சி கூட்டினான். மற்றவர்களால் கொஞ்சம் பார்த்து ரசிக்கப்படட்டும் என்றுதான், வேறென்ன. சிலர் விஷயங்களில், இதுவே பெரும்பிரச்னையாகப் போகும் என்பதை அவன் அறிந்திருந்தானில்லை. வெள்ளைவரிசை திறந்தால், ஒரு அப்பாவிபோல் உள்ளே பிங்க் கலரில் ஒன்று படுத்துக் கிடக்கும். ஆனால், சமயத்துக்கு ஏற்றபடி, எந்தப் பக்கமும், திடீரெனப் புரளும் சாமர்த்தியம் இதற்குண்டு. சில சமயங்களில் பெரும் தாக்குதலுக்கும் இது உள்ளாகிவிடும்: ‘அப்படிப் பேசின அந்த நாக்க இழுத்துவச்சு அறுக்கணும்!’ (கடவுள், அதான் அந்த படைப்பாளி – ஒரு காம்ப்ளிகேட்டட் கேரக்டர் என்பதற்கு இதனுடைய சாகசங்களை கவனித்தாலே போதுமானது). இப்பேர்ப்பட்ட மனித வாயைப் படைத்தபின், அதன் வழியாக மனிதன் சாப்பிடலாம், வேண்டுமானால், கொஞ்சம் சத்தமும் எழுப்ப வழி செய்திருக்கிறேன் என்பதாக அந்த சிருஷ்டிகர்த்தா நினைத்து திருப்திப்பட்டு, கால்நீட்டிப் படுத்துவிட்டான்போலும்.

படைத்தவன் என்ன நினைத்தாலென்ன? மனிதன் இந்த வாயை, இந்த லோகத்தில் பயன்படுத்தும் விதமிருக்கிறதே, அதை ஏன் கேட்கிறீர்கள்- சொல்லி மாளாது. ‘ஐயோ.. இவனுக்கும் வாயின்னு ஒன்னு இருக்கு. அது எப்போத்தான் மூடுமோ தெரியலையே !’ என்று சிலர் அங்கலாய்க்கும் அளவுக்குப்போய்விடும் சிலரது வேண்டாத வம்புப்பேச்சு. வாய்வீச்சு, வாய்ச்சவடால், வாய்க்கொழுப்பு என்றெல்லாம் விதவித விமரிசனங்களுக்கும் இதுவே காரணம். சிலருக்கு, குறிப்பாக அப்பாவிப் பெண்களுக்கு, ’வாயாடி’ என்றெல்லாம் பட்டம் வாங்கிக்கொடுத்த பெருமையும் இந்த வாய்க்கு உண்டு.

மேலும் சிலர் விஷயத்திலோ, வாயைத் திறந்தாலே போதும் – அபத்தக்குவியலாய், ஆபாசச் சிதறலாய் வார்த்தைகள் தெறிக்கும் – இடம், பொருள், ஏவல், இங்கிதம் எல்லாம் ஒரு பொருட்டில்லை இங்கே. அத்தகைய வாய்க்கெதிரே வருவதற்கே அஞ்சி ஓடுவார்கள் பலர். சிலநேரங்களில், சில சர்ச்சைக்குரிய விஷயங்களின்போது இது பெரியதொரு பரிமாணமெடுக்கும். அப்போது இதற்கு ’ஊர்வாய்’ என்றும் பெயர் வந்துவிடும். ‘ஊர்வாயை அடக்கமுடியுமா..’ என்று ஒருவருக்கொருவர், அதே வாயை வைத்தே, அதன் மூலமாகவே சொல்லிக்கொள்வார்கள்! வாய். மனிதனின் மகாவாய். தான் நினைத்ததையும் தாண்டி, தன் இஷ்டத்துக்கு இயங்கிக்கொண்டிருக்கும் இதைப் பார்த்துக் கதிகலங்கிப்போய்த்தான் கடவுள் கீழிறங்கி வருவதில்லை என்று சொல்லும் வாய்களுமுண்டு என்றால் பார்த்துக்கொள்ளுங்கள்.

**

அதுவும் இதுவும் . .

‘தரமாட்டியா? நா ஒன்னோட காய்! பேசமாட்டேன் போ..’ பிஞ்சு வயதில் கோபத்தையும் ஏமாற்றத்தையும் வெளிப்படுத்திய வார்த்தை. எத்தனையோ தடவை காயாகி, அடுத்த நாளே மறக்காமல் பழமாகி, சிரித்து, சேர்ந்து விளையாடிக் கழிந்த பொன்னான நாட்கள். பொன்னாள் அதுபோலே .. வருமா இனிமேலே.. என ஏங்கவைக்கும் ஒரு காலம்.

இன்னொரு காயும் உண்டு. மரத்தில், செடியில் காய்ப்பது. ஆனால், இதனைக் கண்டால் சிலருக்கே பிடிக்கும். பலருக்கோ சிரமமாக இருக்கும். பழம் சாப்பிடவே பிறந்தவர்கள் அவர்கள். அதுவும் யாராவது உரித்து, விண்டு வாயில்போட்டால், தோல் சீவிச் சின்ன சின்னத்துண்டுகளாகக் கொடுத்தால் எப்படி இருக்கும் என்று பழத்தின் மீது ஆசையிருந்தும், அடுத்தவரின் உதவியை நாடும் சோம்பேறிகள். இவர்களிடம் காயின் மகிமையைப்பற்றிப் பேசி என்ன பயன்? காய் தரும் சுகத்தைக் கனி தருமா? மாங்காய், கொய்யா, கலாக்காய், எலந்தை இவற்றையெல்லாம் காயாகவோ, செங்காயாவாகவோ –அதாவது பழுப்பதற்கான அறிகுறியுடன் சிவப்போ மஞ்சளோ மேலிடும் பச்சைக்காயாக-(குறிப்பாக எலந்தை) தின்று களித்தவர்க்கே அதன் தனி ருசி தெரியும். இதற்கெல்லாம் வாயில் பல்லும், மனதில் சின்னப்பிள்ளைகளின் துள்ளலும் இருக்கவேண்டும். அப்போதுதான் அனுபவிக்கமுடியும்! மற்றவர்கள் உட்கார்ந்து சிப்ஸ் சாப்பிட்டுக்கொண்டே டிவி பார்க்கலாம்..

*

ஒருகாலத்தில் நம்நாட்டில், வீடுகள் என்பன அவை பழசோ புதுசோ, தனிவீடுகளாயிருந்தன. வீடுகளில் திண்ணையென்று ஒன்று, இரண்டு பக்கமும் பரந்திருந்தது. சிறிய முன்வாசற்பகுதியைக் கடந்து உட்சென்றால், கூடமும் வந்தது. கூடவே இத்தகைய வீடுகளில் பாயும் இருந்தது. இப்போதிருப்பதுபோல் ஃபர்னிச்சர், சோஃபா, குஷன் என்றெல்லாம் ஒன்றும் கிடையாது. யாராவது வீட்டுக்கு வந்தால் திண்ணையிலேயே சந்தித்து, உட்கார்ந்து பேசி அனுப்பிவிடுவார்கள். ரொம்ப சொந்தமாக இருந்து, நெருக்கமானவர்களாக இருந்தால், நிலைமைக்கேற்றபடி கூடத்துக்குள் அழைத்துவரப்படுவார்கள். அங்கே அவசர அவசரமாக சாமான்களை ஓரமாக நகர்த்திவிட்டு, சுவரோரமாகப் பாய்விரித்து பவ்யமாகச் சொல்வார்கள்:’ அடடே! கீழே ஒக்காராதீங்கோ. ஒரே தூசி. இப்பிடிப் பாயில ஒக்காருங்கோ. காப்பி போடட்டுமா.. ?’ என்று வீட்டுப் பெண்கள் மென்மையாகக் கேட்பார்கள். இப்படியெல்லாம் ஒரு சமூகத்தின் கலாச்சார அடையாளமாகத் துணை வந்தது இந்தப் பாய். பாயில் ஓலைப்பாய், கோரைப்பாய், உட்காரத் தோதான தடுக்கு என்றெல்லாம் வகைவகையாக உண்டு. கல்யாணத்தின்போது ஸ்பெஷலாக கலர் கலராக மணமெக்கள் பெயரெழுதி ஆர்டர் கொடுக்கப்பட்டு செய்யப்படும் கல்யாணப்பாய்களும் இருந்தன. அப்புறம் நுழைந்தன ப்ளாஸ்டிக் பாய்கள். கோரைப்பாய்களும், ஓலைப்பாய்களும் பயந்துபோய் ஓடியே போய்விட்டன வீடுகளை விட்டு. துஷ்டனைக் கண்டதால் தூர விலகிவிட்டன போலும்.

– தொடரும்

*