கவிஞர் விக்ரமாதித்யனுக்கு 2021-ஆம் ஆண்டிற்கான விஷ்ணுபுரம் விருது வழங்கப்படுகிறது. நண்பர் ஸ்ரீராம் மூலம் தெரிந்துகொண்டபின்னரே, ஜெயமோகன், சிலிகான் ஷெல்ஃப் தளங்கள் சென்று சற்றுமுன் பார்க்க நேர்ந்தது. 24/8/2021 – ஆம் தேதியே இது அறிவிக்கப்பட்டுள்ளது ஜெயமோகனின் தளத்தில்.
சுமார் 40 வருட காலம் கவிதையில், கவிதை வெளியில் மட்டுமே பிரதானமாக இயங்கிவரும் ஒரு உன்னதக் கலைஞனுக்கு அங்கீகாரம், பாராட்டு என உரக்கச் சொல்லும் ஒரு விருது என்பது மனதிற்கு சந்தோஷம் தருகிறது. காலை நன்றாக விடிந்தது. தமிழ்நாட்டில் வெளிச்சம் பரவினால் நல்லது…
சரி, கொஞ்சம் விக்ரமாதித்யன், அவரது ’சுடலைமாடன் வரை’ தொகுப்பிலிருந்து. என்ன இது – பாம்பு.. பாம்பு என அலறுகிறாரா.. குதூகலிக்கிறாரா ? :
பாலியலின் குறியீடு
பாம்பு
எப்போது வருகிறது
தமிழில் ?
**
வாசுகியா ஆதிசேஷனா?
வாசுகியைக்கொண்டுதான்
திருப்பாற்கடல் கடைந்தது
ஆதிசேஷன் அவதாரம்தான்
ஸ்ரீ ராமானுஜர்
**
எல்லாப் பெண்களுமே
பாம்புகள்தாம்
எந்த நேரத்தில்
எங்கே கொத்துமோ
**
சிவலிங்கத்துக்கு
குடைபிடிக்கிறது ஐந்துதலை நாகம்
அரவணையில்
பள்ளிகொண்டிருக்கிறான் திருமால்
பாம்புகளைக் காட்டியே
பயமுறுத்துகிறார்கள்
**
ஒரு நல்ல பாம்பு
யாரையும் தீண்டாது
ஒரு நல்ல மனுஷன்
பாம்பு கடித்துச் சாவதில்லை
**
பாம்புகள்
பேரழகு
பாம்புகளைக் கட்டியாள்பவன்
பேரழகன்
***