குஜராத்தின் நரேந்திர மோதி மைதானத்தில் குதூகல IPL ஆரம்ப விழா நேற்று (31-3-23). தங்களுக்குத் தெரிந்த ‘கிரிக்கெட்டை ஆடி’ மஹா ரசிகர்களை சூடேற்றிவைத்த இந்தியத் திரைவானின் இளம் நட்சத்திரங்கள் – ரஷ்மிகா மந்தனா. தமன்னா பாட்டியா (Tamannaah Bhatia). சுஃபி, வெஸ்டர்ன் பாடகர் அரிஜித் சிங் ஆட்டத்திற்குத் துணையாகக் குரல்கொடுத்தார். ரசிகர்களின் ஆனந்தம்பற்றிக் கேட்கவும் வேண்டுமா!

அரங்கேறி நடமாடும் மங்கை… போல
அன்பே என் இதயத்தில் நீ ஆடுகின்றாய்..!
-ஆடும் அணங்குகள் தமன்னா, ரஷ்மிகா மந்தனா

தோனியின் காலில் விழும் (வடக்குப் பழக்கம்) பிரபல பாடகர் அரிஜித் சிங்
(என்னதான் சிரிப்போ!) – ரஷ்மிகா, தமன்னா
முதல் மேட்ச். பாண்ட்யாவின் குஜராத் டைட்டன்ஸ் vs தோனியின் சென்னை சூப்பர் கிங்ஸ். பாண்ட்யா டாஸ் ஜெயித்து பௌலிங் என்று சொல்ல, தோனியின் மஞ்சள் வீரர்கள் மைதானத்தில் பேட்டுடன். ருதுராஜ் கெய்க்வாட் சில நிமிடங்களிலேயே ரசிகர்களின் மனதிலிருந்து ரஷ்மிகாவையும், தமன்னாவையும் மறையும்படி செய்துவிட்டார்! அப்படி ஒரு விளாசல். குறிப்பாக பாண்ட்யா, (அயர்லாந்தின் ஜோஷுவா லிட்டில், ஜோஸப் போன்ற வேகப்பந்துவீச்சாளர்களை கடைந்துஎடுத்துவிட்டார் கடைந்து. முகமது ஷமியும், ரஷீத் கானும் மட்டுமே அவரது ஆவேசத்திலிருந்து தப்பித்தார்கள். இருந்தும், சதம் வரவில்லை அவரிடம். 4 பௌண்டரி, 9 சிக்ஸர், 92-ல் அவுட். மொயீன் அலி கொஞ்சம் சேர்த்தார்.

CSK’s Gaikwad: Sublime innings
தோனி இவ்வளவு கடைசியில் வந்திருக்கக்கூடாது எனத் தோன்றியது. 5-ஆவது அல்லது 6-ஆவது இடத்தில் வந்திருந்தால் இன்னும் ரன் சேர்ந்திருக்கும். ராயுடு, ஜடேஜா, ஷிவம் துபே எல்லாம் ஃப்லாப் ஷோ. ஆனாலும், அஹமதாபாத் ஸ்டேடிய ரசிகர்களை மெஸ்மரைஸ் செய்துதான் வைத்திருந்தார் மகேந்திர சிங் தோனி. அவர் அடித்த ஒரு சிக்ஸரே, ரசிகர்களின் முகங்களை மினுமினுக்கவைத்தது. காமிரா காண்பித்தது. இறுதியில், 7 விக்கெட் இழப்புக்கு 178 என்றது சென்னையின் ஸ்கோர்.
வ்ரித்திமான் சாஹாவும், ஷுப்மன் கில்லும் துவக்கினார்கள் குஜராத்தின் அக்கவுண்ட்டை. வேகம் காட்டமுயன்ற சாஹா 25-ல் வெளியேற்றப்பட்டார். முதன்முறையாக இம்பேக்ட் ப்ளேயர் (impact player) ரூல் அறிமுகப்படுத்தப்பட்டது இந்த ஐபிஎல்-இல். ரூலின்படி, ஆரம்ப 11-ல் இருக்கும் ஒரு வீரருக்கு பதிலாக, போட்டியின் தருணத்தை பொருத்து அணியின் வெற்றிவாய்ப்பை அதிகரிக்கும் வகையில் ஒரு இம்பாக்ட் ப்ளேயர் உள்ளே வந்து ஆடலாம். பௌலிங், பேட்டிங் செய்யலாம். ஏற்கனவே இரண்டு அணியாலும் அறிவிக்கப்பட்ட தலா 5 இம்பேக்ட் ப்ளேயர்களிலிருந்து ஒருவர் தான் இதற்கு கேப்டனால் தேர்வுசெய்யப்படவேண்டும். ஆனால், வெளியேற்றப்பட்ட வீரர் திருப்பி வந்து ஆட்டத்தில் கலந்துகொள்ளமுடியாது என்பதும் நிபந்தனை. முதலில் இதைப் பயன்படுத்தியது தோனி. குஜராத் பேட்டிங்போது, வேகப்பந்துவீச்சாளர் துஷார் தேஷ்பாண்டேயை (Tushar Deshpande), பேட்ஸ்மன் அம்பதி ராயுடுவுக்கு பதிலாக உள்ளே வரச் செய்தார். ஆனால் தேஷ்பாண்டே அப்படி ஒன்றும் இம்பாக்ட் ஏற்படுத்திவிடவில்லை!

Player of the Match: GT’s Rashid Khan
புதிதாக ஐபிஎல் ஆட வந்த சிஎஸ்கேயின் வேகப்பந்துவீச்சாளர் ராஜ்வர்தன் ஹங்கர்கேகர் தனது அருமையான யார்க்கர், லெக்-கட்டர்களுடன் குஜராத்தின் வேகத்தை மட்டுப்படுத்தித் திணறவைத்தார். 3 முக்கிய விக்கெட்களைப் பிடுங்கி வீசினார்.
ஃபீல்டிங்கில் அடிபட்ட வில்லியம்ஸனுக்குப் பதிலாக இம்பாக்ட் ப்ளேயராக பேட்ஸ்மன் சாய் சுதர்ஷனை குஜராத் பேட்டிங்போது உள்ளே அழைத்தார் பாண்ட்யா. சாய் வேகமாக 22 அடித்துவிட்டு வெளியேற, விஜய் ஷங்கர் 27 அடித்தார். ஷுப்மன் கில் தன் ஃபார்மை உறுதிசெய்தவாறு விறுவிறுவென 63 என விளாசி குஜராத்திற்கு டாப் ஸ்கோர் கொடுத்தார். இருந்தும், டெத் ஓவர்களில் சென்னை ஜெயிக்க வாய்ப்பிருப்பதுபோல் மேட்ச் வித்தை காட்டியது. ஆனால் ரஷீத் கான் 19-ஆவது ஓவரில் சிக்ஸர், பௌண்டரி விளாசி சென்னையை அடக்க, கடைசிஓவரில் ஒரு சிக்ஸ், பௌண்டரி என குஜராத் வெற்றிக்கு வழிசெய்தார் ராஹுல் தெவட்டியா. 182/5. சென்னை சூப்பர் கிங்ஸுக்கு எதிராக குஜராத் டைட்டன்ஸின் மூன்றாவது தொடர் வெற்றி இது. சிஎஸ்கே! அடுத்த சந்திப்புல திருப்பிக் கொடுத்திருங்கப்பா!
இன்று (1-4-23) சனிக்கிழமை. Double header. முதலில் (3:30 pm) பஞ்சாப் கிங்ஸ், டெல்லி கேப்பிடல்ஸையும், அடுத்த போட்டியில் (7:30 pm) லக்னோ சூப்பர் ஜயண்ட்ஸ், கொல்கத்தா நைட்ரைடர்ஸையும் சந்திக்கின்றன. 3 புதிய கேப்டன்கள் – டெல்லிக்கு டேவிட் வார்னர், பஞ்சாபுக்கு ஷிகர் தவன், கொல்கத்தாவுக்கு நிதிஷ் ரானா. லக்னோவுக்கு கே.எல்.ராஹுல் என்பது தெரிந்ததே!