’பதாகை’ இணைய இலக்கிய இதழில் பிரசுரமாகியிருக்கின்றன, கீழ்க்காணும் என் ஐந்து கவிதைகள் (நன்றி: https://padhaakai.com) :
அம்மா நிலா
மொட்டைமாடிக்குத்
தூக்கிக்கொண்டுவந்து
அம்மா காட்டிய முதல் நிலா
அழகு மிகவாக இருந்தது
இப்போதும் ஒன்று அவ்வப்போது
வந்து நிற்கிறது என் வானத்தில்.
மேலே சுட்டுவிரல் நீட்டிக் காட்டி
கதை சொல்ல
அம்மாதான் அருகிலில்லை.
தானாக எதுவும்
புரிவதில்லை எனக்கும்
**
கணப்பொழுதே ..
தாத்தா தூங்கிண்டிருக்கார்
ரூமுக்குள்ள போகாதே !
அம்மாவின் எச்சரிக்கையை
காதில் வாங்காது
குடுகுடுவென உள்ளே வந்த
குட்டிப்பயல் கட்டிலில் தாவினான்
குப்புறப்படுத்திருந்த என்
முதுகிலேறி உட்கார்ந்து
திங் திங்கெனக் குதித்து
குதிரை சவாரிசெய்தான்
முதுகின்மேலே இந்தச் சின்ன கனம்
எவ்வளவு சுகமாயிருக்கு ..
மனம் இழைய ஆரம்பிக்கையில்
தடாலெனக் குதித்து ஓடிவிட்டான்
குதிரைக்காரன்
**
எங்கெங்கும் எப்போதும்
வெளியூர் போயிருந்த
குடும்பம் திரும்பியிருந்தது
கேட்டாள் பெண் கவலையோடு:
தனியா இருந்தது போரடிச்சதாப்பா?
என்று நான் தனியே இருந்தேன்
என்னுடன் அல்லவா
எப்போதுமிருக்கிறேன்
என்ன சொல்லி எப்படிப்
புரியவைப்பேன் மகளுக்கு ..
**
ஒத்துழைப்பு
ஜன்னலைத் திறந்துவைத்தேன்
மின்விசிறியைச் சுழலவிட்டேன்
சுகாசனத்தில் உட்கார்ந்தேன்
கண்ணை மெல்ல மூடியவாறு
’தியானம்!’ என்றேன்
உத்தரவிடுவதுபோல்.
அப்படியே ஆகட்டும் – என்றது
முன்னே தன் குப்பைக்கூடையை
திறந்துவைத்துக்கொண்டு
அருகிலமர்ந்துகொண்ட மனம்
**
நிலை
படுக்கையறையின் தரையில்
மல்லாக்கக் கிடந்தது கரப்பான்பூச்சி.
இல்லை, இறந்துவிட்டிருந்தது.
தன்னை நிமிர்த்திக்கொண்டு
ஓடி ஒளிவதற்கான ப்ரயத்தனம்
வாழ்வுப்போராட்டமாக மாறிவிட,
இறுதித் தோல்விகண்டு
உயிரை விட்டிருக்கிறது அந்த ஜீவன்.
நிமிர்ந்து படுத்து நிதானமாகக்
கூரையைப் பார்த்துக்கொண்டிருக்கிறேன் –
உயிரோடு இன்னும் நானிருப்பதாக
நம்பிக்கொண்டு
**