புதுக்கோட்டை. தொண்டமான் அரசர்கள் தலைநகராகக் கொண்டு ஆட்சி செய்த நகரம். ஆங்கிலேயர்கள், வேறுவழியின்றி இந்தியசுதந்திரப் போராட்டத்திற்கு அடிபணிந்து, ஆட்சியை இந்தியர்களிடம் ஒப்படைத்து வெளியேறிய தருணம். பிரிட்டிஷ் இந்தியாவின் கீழ் மன்னர்களால் ஆளப்பட்ட வெவ்வேறு தனி ராஜ்யங்கள் (சமஸ்தானங்கள்), சுதந்திர இந்தியாவின் முதல் உள்துறை அமைச்சர் சர்தார் வல்லபாய் பட்டேல் அவர்களின் சீரிய முயற்சியினால் ஒருங்கிணைக்கப்பட்டு `இந்திய யூனியன்` என்கிற நவீன இந்தியா உருவானது. அப்படி வல்லபாய் பட்டேலால் இணைக்கப்பட்ட சமஸ்தானங்களில் (Princely States) ஒன்று புதுக்கோட்டை. இந்திய நாட்டின் வரலாற்றில் நீங்கா இடம் பெற்றிருக்கும் நகரம், பகுதி.
அத்தகு முன்னாள் ராஜ்யத்தின் தலைநகரில், 11 அக்டோபரில் நிகழவிருக்கிறது தமிழ் வலைப்பதிவர் சந்திப்பு, 2015. ஒரு விழாவினைப்போல ஏற்பாடுகள் செய்யப்பட்டிருக்கின்றன, புதுக்கோட்டை மற்றும் ஏனைய இணையத்தமிழ் அன்பர்களால். தமிழ்நாடு அரசின் “தமிழ் இணையக் கல்விக் கழகமும்“ இணைந்து இச்சந்திப்பை நடத்துகிறது.
கவிதை, கட்டுரைப் போட்டிகள் அதற்கான பரிசுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இளம் பதிவர்களை, வலைக்குப் புதியவர்களை, தமிழில் நன்றாக எழுத இது வெகுவாக ஊக்குவிக்கும். வலைத்தமிழ் வளரப் பயன்படும்.
முதன்முறையாக “தமிழ் வலைப்பதிவர் கையேடு“ ஒன்று வெளியிடுவது இந்தச் சந்திப்பின் சிறப்புகளில் ஒன்று. இது வருகை தரும் பதிவர்களுக்கு இலவசமாக வழங்கப்படவிருக்கிறது.மேலதிக விபரங்களுக்குப் பாருங்கள் இதற்கான பிரத்தியேக வலைப்பக்கத்தை. முகவரி: http://bloggersmeet2015.blogspot.com
வலைப்பதிவர் சந்திப்புக்கு எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணனும் வருகை தருகிறார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது; பதிவர்களுக்கு உற்சாகமூட்டும் செய்தி இது. அவர் ஒரு இலக்கியப் பேச்சாளரும்கூட என்பதால், வலைப்பதிவர் சந்திப்பில் அவர் என்ன பேசப்போகிறார் என்பதனை அறிய அனைவரும் ஆர்வம் கொள்வர்.
விழாக்குழுவினர், புதுக்கோட்டைத் தமிழ்ப்பதிவர், மற்றும் முன்வந்து சிறப்பு ஏற்பாடுகளைக் கவனிக்கும் தோழமைகளுக்கு இனிய வாழ்த்துக்கள்.
-ஏகாந்தன், டெல்லி