FIFA கால்பந்துக் கோப்பை – நெய்மார், லியொனெல் மூஸா !

நேற்று (22-6-18) கடுமையான போட்டியில் பிரேஸில், காஸ்ட்ட ரிக்காவை 2-0 என்ற கோல்கணக்கில் வென்றது. அடுத்ததொரு போட்டியில் ஆப்பிரிக்க நாடான நைஜீரியா, ஐரோப்பாவின் ஐஸ்லாந்தை 2-0 என்ற கணக்கில் வீழ்த்தி அதிர்ச்சி அலைகளைப் பரப்பியது.

முதல் போட்டியில் பிரேஸிலை காஸ்ட்ட ரிக்கா 90 நிமிடங்களுக்குக் கட்டுக்குள் வைத்திருந்தது ஆச்சரியம். பிரேஸிலின் 300 மில்லியன் டாலர் சூப்பர் ஸ்டாரான நெய்மார் பந்தை உருட்டினார், திரட்டினார், நெஞ்சில் ஏற்றார், முட்டினார், பாய்ந்து தாக்கினார். ம்ஹும். காஸ்ட்ட ரிக்காவின் தடுப்பாட்டம் அவரது பந்தை கோல்பக்கம் அண்டவிடவில்லை. ஒனக்கும் பேப்பே, ஒங்கப்பனுக்கும் பேப்பே என்று எதிர்த்தாடியது. போதாக்குறைக்கு ரெஃப்ரியுடன் வாக்குவாதம் செய்து மஞ்சள் அட்டையையும் வாங்கிக்கொண்டார் நெய்மார்! நடுக்களத்தில் மார்ஸெலோ (Marcelo), முன்னணியில் ஃபிலிப்பே கௌட்டின்ஹோ ( Philippe Coutinho), கேப்ரியல் ஜேஸுஸ் (Gabriel Jesus) ஆகிய முன்னணி வீரர்கள் இடைவிடாது கடுமையாகத் தாக்கியும், துரிதமாகப் பாஸ் செய்தும் நடக்கவில்லை. குறிப்பாக இரண்டாவது ஆட்டப்பகுதியில் ஒருமணிநேரத்தில் பிரேஸில் 12 ஷாட்களை காஸ்ட்ட ரிக்கா கோல்போஸ்ட்டில் தாக்கியது. அவ்வளவும் காஸ்ட்ட ரிக்காவின் அபாரமான கோல்கீப்பரான கேலோர் நவஸ் (Keylor Navas)-ஆல் பாய்ந்து கவ்வப்பட்டது. அல்லது துரதிர்ஷ்டவசமாய் கோல்போஸ்ட்டின் மேலே மிதந்து சென்றது.

எக்ஸ்ட்ரா டைம் 6 நிமிடம் (இறுதியில் 8 நிமிடமானது) வாய்க்க, இன்று ஜெயிக்காமல் வெளியேறுவதில்லை என உத்வேகம்கொண்டு பொங்கியது பிரேஸில். 91 ஆவது நிமிடத்தில் பிரேஸில் ஸ்ட்ரைக்கர் கௌட்டின்ஹோ முதல் கோலைப்போட்டு, இதுவரை சீட்டு நுனியில் துடித்துக்கொண்டிருந்த மஞ்சள்பூச்சு ரசிகர்களை எகிறவைத்தார். கோச் டைட்டேயும் (Tite) உற்சாகத்தில் கோட்டிற்கு ஓடிவர, வேறொரு ஆட்டக்காரருடன் மோதித் தடுமாறிக் கீழே விழுந்தார். உணர்ச்சிகள் அடங்கி, விளையாட்டு தொடர்ந்த அடுத்த சில நிமிடங்களில் டக்ளஸ் காஸ்ட்டாவின் (Douglas Costa) கார்னர் பாஸ் ஒன்று சீறி வந்தது எதிர்ப்பக்கம் நின்றிருந்த நெய்மாரை நோக்கி. இதுவரை தன் முயற்சிகள் யாவும் வீணாகிக்கொண்டிருப்பதைக்கண்டு, கோபப்பட்டுக்கொண்டும், தலையிலடித்துக்கொண்டும், முகத்தை மூடிக்கொண்டும், புலம்பிக்கொண்டும் உலவிய நெய்மார், ஒருகணம் அபார நிதானம் காட்டி தொடையில் பந்தைத் தாங்கி, லாவகமாக கோலின் இடதுமூலையை நோக்கி உந்தினார். காஸ்ட்ட ரிகாவின் கோல்கீப்பர் திரும்பிப் பாய்வதற்குள் உள்ளே புகுந்துவிட்ட பந்து, ’கோல்’ என்று வீரிட்டது. நெய்மாரை இரண்டு பிரேஸில் ஸ்ட்ரைக்கர்கள் ஓடிவந்து அணைத்து உச்சிமுகர, அவர் உணர்வின் உச்சத்தைத் தொட்டார். அவர்களை விலக்கி, ஒரு கணம் தனித்து நின்று கைகளால் முகம்மூடி மெல்ல நெய்மார் அழுதவிதம், பிரேஸிலின் ரசிகர்களை மட்டுமல்லாமல் அனைத்து ரசிகர்களையும் நெகிழ்த்தியது.

பிரேஸில் கோச்சும் ரசிகர்களும் ஒருபக்கம் விமரிசையாகக் கொண்டாடினாலும், அழுது உணர்ச்சிக்குள்ளானதற்காக நெய்மார் விமரிசிக்கப்பட்டார். அதற்கு பதில் சொன்னார் பிரேஸிலின் 23 வயது ஸ்ட்ரைக்கர் நெய்மார்: அந்தக் கோலுக்காக நான் எவ்வளவு கஷ்டப்பட்டுள்ளேன் என்பது எனக்கு மட்டும்தான் தெரியும். வாழ்க்கையில் எதுதான் எனக்கு எளிதாகக் கிடைத்திருக்கிறது? உலகக்கோப்பை கோல்மட்டும் ஈஸியாக வந்துவிடுமா என்ன?

ஐஸ்லாந்துக்கெதிரான அன்றைய இரண்டாவது போட்டியில், தன் முதல் மேட்ச்சில் க்ரோஷியாவிடம் தோற்றிருந்த நைஜீரியா, ஆக்ரோஷம் மிகக்காட்டி ஆடியது. குறிப்பாக, நைஜீரிய கோச்சினால் இந்த போட்டிக்காக உள்ளே நுழைக்கப்பட்டிருந்த லைசஸ்டர் சிட்டி ஸ்ட்ரைக்கர் அஹ்மத் மூஸா. அப்பாவிபோல் முகத்தை வைத்துக்கொண்டு ஐஸ்லாந்தின் கோலுக்கருகில் துருவிக்கொண்டிருந்த மூஸா, நைஜீரியாவின் இரண்டு கோல்களையும் மிகச்சாதுர்யமாகப் போட்டு ஐஸ்லாந்தை அதிரவைத்தார். ஐஸ்லாந்து ஒரு கோலையும் போடமுடியவில்லை. நைஜீரிய பச்சைச்சட்டை விசிறிகள் குதிகுதியெனக் குதித்து ஆரவாரம் செய்தனர். ஐஸ்லாந்து ரசிகர்களின் நிலையைப்பற்றி ஏதும் சொல்வதற்கில்லை.

நைஜீரியாவின் வெற்றி, அர்ஜெண்ட்டினா ரசிகர்களைக் குஷிப்படுத்திவிட்டது. ஐஸ்லாந்து தோற்றதால், அர்ஜெண்ட்டினா அடுத்த ரவுண்டுக்குப்போகும் வாய்ப்பு தென்படுகிறது. மற்றவர்களின் விளையாட்டையும் பொருத்தது இது எனினும், அர்ஜெண்ட்டீனிய ரசிகர்கள் இதற்காக மூஸாவைப் புகழ ஆரம்பித்துவிட்டார்கள்! இதுவரை ஒன்றும் செய்யாத தங்களின் ஹீரோ லியோனெல் மெஸ்ஸியோடு, நைஜீரிய ஹீரோவை மனதில் சேர்த்து, மூஸாவை ‘லியோனெல் மூஸா’ என்று ஆசையாக அழைக்கிறார்கள் இப்போது. இதைக்கண்ட மூஸா எச்சரிக்கும் தொனியில், இந்த அர்ஜெண்ட்டீனிய ஆட்டபாட்டம் செவ்வாய்க்கிழமை வரைதான் என்றிருக்கிறார்! செவ்வாய்க்கிழமை ஆட்டத்தில் அர்ஜெண்ட்டினாவுடன் மோதப்போவது இதே நைஜீரியாதான். கடவுள் புண்ணியத்தில், மெஸ்ஸிக்கெதிராக நான் நன்றாக ஆடுவேன் என்றிருக்கிறார் மூஸா ! காத்திருங்கள் ரசிகர்களே, நிறைய இருக்கிறது இன்னும் ரஷ்யாவிலிருந்து.

**

FIFA-கால்பந்து உலக்கோப்பை : மங்கும் நட்சத்திரங்கள், ஏங்கும் ரசிகர்கள்

உலகக்கால்பந்து கோப்பையில் ஆரம்பமுதலே ரசிகர்களாலும் விளையாட்டு விமரிசகர்களாலும் துழாவப்படும் நட்சத்திரங்கள் லத்தீன் அமெரிக்க நாடான அர்ஜெண்டினாவின் லியோனல் மெஸ்ஸி (Lionel Messi), ஐரோப்பிய நாடான போர்ச்சுகலின் க்றிஸ்டியானோ ரொனால்டோ, பிரேஸிலின் நெய்மார் (Neymar) ஆகியோர். கால்பந்து உலகின் புகழின் சிகரத்தில் இருந்து கீழே பார்த்துக்கொண்டிருப்பவர்கள். கடந்த சில வருடங்களாக ஐரோப்பியக் கால்பந்து சேம்பியன்ஷிப், கோப்பா அமெரிக்கா எனப்படும் அமெரிக்கக் கண்டத்தின் கால்பந்து சேம்பியன்ஷிப் மற்றும் லீக் சேம்பியன்ஷிப் போட்டிகளில் சுற்றிச் சுற்றி வெற்றி மிதப்புடன் வலம்வந்த நட்சத்திரங்கள். ரசிகர்களின் கனவு ஹீரோக்கள். இவர்களோடு, உருகுவேயின் லூயிஸ் ஸுவாரஸ் (Luis Suarez), எகிப்தின் மொகமது ஸாலே(Mohamed Saleh), பெல்ஜியத்தின் புகழ்பெற்ற கால்பந்துக்காரரான ஈடன் ஹஸார்ட் (Eden Hazard) போன்ற நட்சத்திரங்களும் அவ்வப்போது ஆங்காங்கே மின்னி வியப்பூட்டுவதுண்டு. மாஸ்கோவில் நடைபெற்றுக்கொண்டிருக்கும் உலகக்கோப்பை போட்டிகளிலும் இவர்கள் தத்தம் நாடுகளுக்காக ஆடிக்கொண்டிருக்கிறார்கள்.

மெஸ்ஸி, ரொனால்டோவைப்போலவே, பிரேஸிலின் நெய்மார், லத்தீன் அமெரிக்காவைத் தாண்டியும் மிகவும் கொண்டாடப்படும் ஒரு கால்பந்துவீரர். பெப்ருவரியில் காலில் ஏற்பட்ட காயத்திலிருந்து மீண்டு வந்திருக்கும் இவர், பரிபூரண குணமடைந்ததாகத் தெரியவில்லை. பிரேஸில்-ஸ்விஸ் டிரா-வான மேட்ச்சில் இவரால் ஸ்விஸ் தடுப்பாட்டக்காரர்களை (defenders) எதிர்த்து ஒன்றும் செய்யமுடியவில்லை. இன்றைய காஸ்ட்டா ரிகா (Costa Rica) போட்டியில் அவர் என்ன செய்யப்போகிறார் என்பது பிரேஸில் ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்பு. ஒரு கோலாவது, அவரிடமிருந்து வருமா? இல்லை, மெஸ்ஸியின் அழுகைக் கதையின் இன்னொரு வடிவம்தானா நெய்மாரும்? உலகெங்கும் பரவியுள்ள கால்பந்து ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புடன் விரியும் இன்றைய மாலை.

இந்த மூன்று ஸூப்பர் ஸ்டார்களில் –மெஸ்ஸி, நெய்மார், ரொனால்டோ- போர்ச்சுகலின் ரொனால்டோ மட்டும்தான், மாஸ்கோ மைதானங்களில் ஒரு துள்ளலுடன் திரிகிறார். இதுவரை 4 கோல்களை (வலிமையான அணியான ஸ்பெயினுக்கெதிராக 3, மொராக்கோவிற்கெதிராக 1) அனாயாசமாக விளாசி, தன் அணியை முன்னேற்றியிருக்கிறார் க்றிஸ்டியானோ ரொனால்டோ. போர்ச்சுகலின் சிகப்புச்சட்டை ரசிகர்கள் குதூகலத்தின் உச்சியில். இவரது இந்த ஃபார்ம், மற்றவர்களும் ஒத்துழைக்கும் பட்சத்தில், போர்ச்சுகலை காலிறுதிவரை எளிதாக அழைத்துவந்துவிடும் எனத் தோன்றுகிறது.

ஐரோப்பிய நாடான க்ரோஷியாவோடு நேற்று இரவு மோதிய, கால்பந்து உலகின் முன்னணி அணிகளில் ஒன்றான அர்ஜெண்டினா, சகிக்கமுடியாத ஒரு பாடாவதி ஆட்டத்தை வெளிக்கொணர்ந்தது. க்ரோஷியா ஆக்ரோஷ ஆட்டம் காண்பித்ததோடு, 3-0 என்ற கணக்கில் எளிதாக அர்ஜெண்டினாவைத் தூக்கி வீசியது, அர்ஜெண்டினாவின் கால்பந்து ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியைத் தந்தது. அர்ஜெண்டினாவின் கேப்டனும் சூப்பர் ஸ்டாருமான மெஸ்ஸி, மைதானத்தில் எங்கோ தனியே நின்றுகொண்டிருப்பதுபோன்று தோன்றியது. அவரிடம் பந்து பாஸ் ஆனால்தானே அவர் பாய முடியும்? அர்ஜெண்டினா கோச்சின் தாக்குதல்/தடுப்பாட்ட வியூகம் க்ரோஷியாவிற்கெதிராகப் பலிக்காதுபோனது. இதில் தோற்றவிதம், தோற்ற மார்ஜின் எல்லாமே அர்ஜெண்டினா போன்ற ஒரு சேம்பியன் அணிக்கு அவமானமே அன்றி வேறில்லை.அர்ஜெண்டீனியப் பத்திரிக்கைகள் அந்த அணியின் கேப்டன் மெஸ்ஸி மற்றும் கோல்கீப்பர் வில்லி கபயேரோ (Willey Caballero) வின் அசட்டு ஆட்டத்தை ‘சர்வநாசம்’ ‘அவமானம்’ என அடைமொழிகளைப்போட்டுக் கிழித்திருக்கின்றன. போகிறபோக்கைப் பார்த்தால், விரைவில் அவர்கள் அர்ஜெண்டினாவின் தலைநகர் ப்யூனஸ்-ஐரெஸுக்கு ஃப்ளைட் பிடிக்கவேண்டியதுதான். அங்கு எத்தகைய வரவேற்பு அவர்களுக்குக் காத்திருக்கும் என யாரும் யூகிக்கவேண்டியதில்லை! ஸாரி, மெஸ்ஸி ரசிகர்களே – கிட்டத்தட்ட, முடிந்துவிட்டது ஆட்டம் உங்களுக்கு.

’ஹேய்! மெஸ்ஸி என்கிற தனி ஒரு ஸ்டாரின் ரசிகன் மட்டுமல்ல, கால்பந்து எனப்படும் மாபெரும் விளையாட்டின் ரசிகன் நான் !’ என நீங்கள் உணர்ந்து குரல் உயர்த்துவீர்களேயானால், இந்த உலகக்கோப்பையில் பார்க்க நிறைய மீதி இருக்கிறது, உஙகளுக்கு. தவிர்க்கமுடியா அதிர்ச்சிகளுடன். ரஷ்யாவந்திருக்கும் ரசிகர்களே, நீங்கள் கூட அழைத்துவந்திருக்கும் காதலிகளுடன் சேர்ந்து, ரஷ்ய வோட்கா அளவாக அடியுங்கள், ஆனந்தியுங்கள்!

**