ஜல்லிக்கட்டு – அநியாயத் தடை

இப்போதெல்லாம் ஒவ்வொரு ஜனவரி மாதமும் தமிழ்நாட்டின் உணர்வுவெளியைக் கொளுத்திப்போடுகிற தவிர்க்கமுடியாத விஷயமாக மாறிவிட்டது இந்த ஜல்லிக்கட்டு. நீதிமன்றத் தடை காரணமாக, ஜல்லிக்கட்டை பாரம்பரியமாக நடத்திவரும் தமிழ்க்கிராமங்களில் பெரும் ஏமாற்றத்துடன், எரிச்சலுடன் ஜல்லிக்கட்டு ஆர்வலர்கள், கிராமத்து இளைஞர்கள் கோர்ட் அனுமதிக்காகக் காத்திருக்கிறார்கள். சீறித் திமிரும் காங்கேயம் வகை நாட்டுக் காளைகள் செழுமையாக வளர்க்கப்பட்டு, மெருகேற்றப்பட்டு, சிங்காரிக்கப்பட்டு இரண்டு வருடங்களாகப் பொறுமையின்றி நிலத்தைக்கீறி தூசி பரப்புகின்றன. ஆனால் ஜல்லிக்கட்டுக்கு அனுமதி இன்னும் கிடைத்தபாடில்லை. எதற்கெடுத்தாலும் இப்போதெல்லாம் கோர்ட்டின் அனுமதி அல்லவா தேவைப்படுகிறது. எவ்வளவு முன்னேறிவிட்டது நம் நாடு, ஆஹா..!

’ஏறுதழுவுதல்’ என ஆரம்பத்தில் கொண்டாடப்பட்டு, பிற்காலத்தில் ஜல்லிக்கட்டு, மஞ்சுவிரட்டு என்றெல்லாம் அழைக்கப்பட்ட இந்தக் கிராமிய விளையாட்டு காலங்காலமாக தொடர்ந்து நடந்துதானே வந்தது தமிழ்நாட்டில்? பொங்கல் விழாவின் தொடர்ச்சி அல்லவா இது? நிச்சயமாக தமிழ்க் கலாச்சார உணர்வோடு, விழாக்கோலத்தோடு தொடர்புடைய வீரவிளையாட்டு. இதையெல்லாம் இப்போது கோர்ட்டில்போய் சொல்லவேண்டிய, நிரூபிக்கவேண்டிய அவசியம் ஏன் தமிழனுக்கு வந்தது? இப்போது எதற்காக, யார் இதில் குற்றம் கண்டுபிடித்துத் தடைசெய்யச் சொல்லியிருக்கிறார்கள்?

பீட்டா (PETA) என்றொரு சர்வதேச விலங்குநல அமைப்பும், ’விலங்குநல வாரியம்’ போன்ற இந்திய அமைப்புகளும் சேர்ந்து, ஜல்லிக்கட்டின்போது விளையாட்டு என்கிற பெயரில் காளைகள் துன்புறுத்தப்படுகின்றன என உச்சநீதிமன்றத்தில் சோகக்குரல் எழுப்பி, முதலைக்கண்ணீர் வடித்து, ஜல்லிக்கட்டிற்கான தடையை வாங்கியுள்ளன. PETA என்றால்? People for the Ethical Treatment of Animals. விலங்குகளை முறையாக நடத்தவேண்டும் எனக் கோருபவர்களின் அமைப்பு! பலே! கேட்பதற்கு நன்றாகத்தான் இருக்கிறது. இது ஒரு அமெரிக்க நிறுவனம் என்பதை முதலில் கவனியுங்கள். இன்று, நேற்றல்ல. 36 ஆண்டுகளுக்கு முன் துவங்கப்பட்டது. உலகெங்கும் கிளைகள் எனப் பரவிக்கிடக்கிறது இப்போது. புகழ்பெற்ற மனிதர்கள், செய்வதறியா, பொழுதுபோகாப் பணக்காரர்கள், அசட்டு நடிக, நடிகைகள் எனப் பெரும்புள்ளிகளை தங்களோடு இணைத்துக்கொண்டு ஏதேதோ விளம்பரம் செய்து,உலகெங்கும் விலங்குகள் துன்புறுத்தப்படாது காப்பாற்ற முயற்சிப்பதாக டமாரம் அடித்துவரும் ஒரு அமைப்பு.

விலங்குநலத்திற்காகவென, மூன்றாம் உலக நாடுகளில் முனைப்புக் காட்டும் இத்தகைய சர்வதேச அமைப்புகள், முன்னேறிய நாடுகளில் ஒரு புல்லையும் புடுங்கமுடிந்ததில்லை. சுருக்கமாக சில உதாரணங்கள்: பணக்கார நாடான கனடாவில் ஆண்டுதோறும் ‘சீல்’ (Seal) எனப்படும் சாதுவான, அப்பாவிப் பனிப்பிரதேச விலங்குகளை அடித்துக் கொல்கிறார்கள் ஆயிரக்கணக்கில். எதற்காக? அந்த விலங்கின் தோல் விலை மிகுந்தது. காசாசை. அதற்காக உலோகத் தடிகளால் அடித்து, துடிதுடித்து விழும் விலங்குகளைக் கத்தியால் கொடூரமாகக் கிழித்து உயிர் இன்னும் இருக்கும் நிலையிலேயேகூட, தோலை உரித்து எடுத்துக்கொள்கிறார்கள். இவர்களெல்லாம் மனிதர்கள் என அழைக்கப்படலாமா? கண்ணெதிரே நடக்கும் இத்தகைய மிருகவதைக்கு, கொடுங்கொலைக்கு எந்த அரசுத் தடையையும் இந்த பீட்டாவினால் அங்கே வாங்கமுடியவில்லை. ஜப்பான் போன்ற வளமான நாட்டில் என்ன நடக்கிறது? வருடாந்திர டால்ஃபின் வேட்டை(Annual Dolphin hunt) எனச் சொல்லிக்கொண்டு மீனவர்கள் கடற்பகுதிகளில் உயர்வகை டால்ஃபின்களைச் சுற்றி வளைத்துக் கொலைசெய்து ஆர்ப்பரிக்கிறார்கள். இது ஜப்பானிய வேட்டைக்காரர்களின் வீரவிளையாட்டாம். ஒவ்வொரு வருடமும் செப்டம்பரிலிருந்து மார்ச் வரை இந்தப் படுகொலை தவறாது அரங்கேறுகிறது. பீட்டா போன்ற விலங்குநலக் கருணையாளர்கள் ஜப்பானில் இந்தக் கொடுமைக்கு எதிராகத் தடைவாங்குவதுதானே? ஏன் செய்யவில்லை? அங்கே அவர்களின் பாச்சா பலிக்காது. பீட்டாவிற்குள் தோட்டாவைப் பாய்ச்சிவிடுவார்கள் அவர்கள் !

பணம் கொழிக்கும் நாடுகளில் முண்டமுடியாமல்போன நிலையில், இந்தியா போன்ற பெரிய, அதே சமயம்சாதகமான சுதந்திரச் சூழலுடன் கூடிய, இன்னும் சுயக் கலாச்சாரத்தை ஒரேயடியாக விட்டுவிலகிவிடாத நாடுகளின் பக்கம் பீட்டா தன் கவனத்தைத் திருப்ப ஆரம்பித்தது. அதற்கும் பணம் இருக்கிறது, பலம் இருக்கிறது. விளையாடக் கொஞ்சம் களம் வேண்டாமா? நல்ல நோக்கத்தை முன்வைத்துத் தப்புத்தண்டாக்கள் செய்வதும் எளிது இல்லையா? வல்லரசு நாடுகள், பன்னாட்டு நிறுவனங்களின் இலக்குகள், சுயநலக்காரியங்களுக்குத் துணைபோக, அவர்களிடம் பணமும், உதவியும் பெற்று விலங்கு நலம் என்கிற பெயரில் இந்தியா போன்ற ஆசிய, ஆஃப்பிரிக்க நாடுகளில் தன் விஷமங்களை பீட்டா செய்ய ஆரம்பித்து வருடங்கள் ஆகின்றன. மேற்கொண்டு விளக்க ஆரம்பித்தால், விஸ்தாரமாக தனியாகக் கட்டுரை எழுதவேண்டிவரும். அந்த வேலை இப்போது வேண்டாம். ஆதலால், சுதந்திர, ஜனநாயக விழுமியங்களைக்கொண்டு தங்களுக்கு சாதகமான சூழல் பெற்றிருப்பதால், இந்தியா போன்ற முன்னேறிவரும் நாடுகளில் தங்களின் கைவரிசைகளை , பீட்டா போன்ற அமைப்புகள் காட்ட ஆரம்பித்துள்ளன; மிருகநலம் என்கிற பெயரில், கிராம மக்களின் சமூக, கலாச்சார, பாரம்பரியச் சுவடுகளை, அதற்கான மூலங்களை, வாழ்வாதாரங்களை சிதைப்பதில் கவனம் செலுத்துகின்றன எனப் புரிந்துகொண்டால், இப்போதைக்குப் போதுமானது.

பீட்டா போன்ற விலங்குநல அமைப்புகள் எழுப்பிய நீதிமன்ற சிக்கலில் ஜல்லிக்கட்டு பலிகடாவாக ஆகியுள்ளது தமிழ்நாட்டில். கடந்த இருவருடங்களாக ஜல்லிக்கட்டுத் தடைக்கு எதிர்ப்புத் தெரிவித்து தமிழக அரசியல், சமூக தளங்களில் குரல்கள் உயர்ந்துவருகின்றன. அரசியல், சினிமா உலக உணர்ச்சிவீரர்களைத் தாண்டி, வேறொரு குரலும் கேட்கக் கிடைத்தது. ஆழ்ந்த சிந்தனையுடன், அளந்து பேசும் ஆன்மீகவாதியான சத்குரு ஜக்கி வாசுதேவ் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாகக் கூறியவற்றிலிருந்து ஒரு பகுதி:

“…..நம் கலாச்சாரத்தில் மாட்டினை நாம் வெறும் விலங்காக பார்க்கவில்லை. நம் வாழ்வில் பல அம்சங்களில் மாடுகள் அங்கம் வகிக்கின்றன. நாம் விவசாயம் செய்தாலும் சரி, விளையாடினாலும் சரி, மாட்டுடன் அதன் பாலுடன் நமக்கொரு சம்பந்தம் இருக்கிறது. அதைப் போலவே அதனுடன் விளையாடும் பழக்கமும் நம் கலாச்சாரத்தில் நெடுங்காலமாக வழக்கத்தில் இருந்துவருகிறது.

ஜல்லிக்கட்டில் போட்டியிடும் காளைகளை யாரும் துன்புறுத்துவது இல்லை. கொல்வதும் இல்லை. காயம் ஏற்படுவதோ, தற்செயலாக மரணம் சம்பவிப்பதோ மனிதர்களுக்குத்தான், காளைகளுக்கு அல்ல. விலங்குகள் உரிமை, விலங்குகள் துன்புறுத்தல் என்று பேசுபவர்கள், உண்மையுடன் இருந்தால், தினமும் லட்சக்கணக்கான மிருகங்களை கொன்று வருகின்ற இறைச்சி தொழிற்சாலைகளை மூடுவதற்கு பாடுபடட்டும்.

ஒரு மிருகத்தின் உயிரை எடுப்பது கொடுமை அல்லவா? ஆனால், அதுகுறித்து யாருக்கும் கவனம் இல்லை. உணவுக்காகக் கூட அவற்றைக் கொல்வதில்லை, ஏற்றுமதி செய்வதற்காக கொல்கிறார்கள். உலகிலேயே அதிக மாட்டுக்கறி ஏற்றுமதி செய்வது இந்தியாதான். வெட்கக்கேடான விஷயம் இது. நமக்கு ஊட்டமளித்து, நமக்காக உழைத்து, நம் மண்ணை வளப்படுத்திய இந்த விலங்குகளை வெறும் பணத்துக்காக வெட்டிக் கொல்கிறோம். நம் தாயின் பாலினை குடித்தது போலவே இந்த விலங்குகளின் பாலினையும் நாம் குடித்திருக்கிறோம். ஆனால், அவற்றை வெட்டி, வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்கிறோம். அவமானத்துக்குரிய செயல் இது.

இவற்றை எல்லாம் எதிர்த்து சண்டையிடுவதற்கு பதில், தமிழக கிராமங்களில் உள்ள இளைஞர்களுக்குக் கிடைக்கும் எளிமையான சந்தோஷத்தை அழிக்கப் பார்ப்பது முறையல்ல. ஜல்லிக்கட்டு விளையாட்டு உயிர்ப்புடன் இருக்க வேண்டும். எதிர்காலத்திலும் இது மிகுந்த சிறப்புடன் நடக்க வேண்டும்..’’ என்று சொல்லியிருக்கிறார் ஜக்கி வாசுதேவ்.

இத்தகைய ஜல்லிக்கட்டுக்கு இந்த வருடமும் அனுமதி வழங்கவில்லை உச்சநீதிமன்றம். பொங்கலுக்கு முன்பாக அவசரம் அவசரமாகத் தீர்ப்பு வழங்கமுடியாதாம். இதுவே சல்மான் கான் போன்ற ஒரு பாலிவுட் நடிகரின் கேசாக இருந்தால், 24 மணிநேரத்துக்குள் சாதகமான முடிவுகொடுத்துவிடுவார்கள் நமது நீதி அரசர்கள்! சாதாரண மக்களின் உணர்வெழுச்சிக்குப் பதில் சொல்ல நேரமில்லை, கொழுத்த சம்பளத்துடன் இந்நாட்டில் வேலைசெய்யும் இந்த மாமனிதர்களுக்கு. மகா கேவலம்.
இந்த நிலையில், தடையை மீறி அலங்காநல்லூரிலும், வழக்கமாக ஜல்லிக்கட்டு நடைபெறும் ஏனைய தமிழ்நாட்டு கிராமங்களிலும் ஜல்லிக்கட்டு நடத்தப்படும் என கிராமத்தார்கள், போராட்டக்காரர்கள் அறிவித்துள்ளனர். அவர்களுக்கும் வேறுவழி தெரியவில்லை. ஒவ்வொரு வருடமும் காத்திருந்து கண்டது ஒன்றுமில்லை. களத்தில் காளைகளுடன் இறங்கிவிடவேண்டியதுதான் என முடிவெடுத்துவிட்டார்கள் போலும்.

கலகம் பிறந்தால்தான் நியாயம் பிறக்குமோ இந்த விஷயத்திலும்?
**