ஹ்ம் . .

செயற்கரிய செய்துவிட்டதைப்போல்
என்ன இப்படிப் பார்க்கிறீர்கள் என்னை
தடுமாறி விழவிருந்த உங்களை
தற்செயலாக அந்தப்பக்கம் வர நேர்ந்ததால்
என் கை பிடித்துத் தூக்கிவிட்டது
இல்லாவிட்டாலும் நீங்கள்
எழுந்துதானிருப்பீர்கள்
கீழே விழுந்ததில்
மேலே ஒட்டிக்கொண்ட
அவமானத் துகள்களை
உதறிக்கொண்டே
இதற்குப்போயா நன்றி
சரி
நன்றிக்கு நன்றி

**

அப்படிப் பார்த்தால் ..

வாழ்க்கையில் யார் உங்கள் முன்னே செல்கிறார்கள், யார் உங்கள் பின்னால் வருகிறார்கள் என்பதல்ல, யார் உங்களுடன் வருகிறார்கள் என்பதே முக்கியம்.

– ஸ்வாமி வாட்ஸப்பானந்தா

ஸ்வாமி, இங்கே ஒன்றை கவனித்ததாகத் தெரியவில்லை. அல்லது மேற்கொண்டு விளக்கவில்லை. சிஷ்யை இன்று லீவு என்பதால் மூடு அவுட்டாகியிருக்கலாம். அந்த விஷயத்தை –சிஷ்யை விஷயத்தையல்ல- ஸ்வாமி கவனிக்காதுவிட்டுவிட்ட விஷயத்தை, கொஞ்சம் தொடர்வோம்.

யார் உங்களுடன் வருகிறார்கள் என்பது முக்கியந்தான். ஆனால் அது யாரைச் சார்ந்தது? யாரைவைத்து, கூடவே இனிக்க இனிக்கவோ அல்லது இடித்துப் பேசிக்கொண்டோ வருபவர் முக்கியம்? உங்களை வைத்துத்தான். எப்படி உங்களை நீங்கள் நடத்திக்கொண்டிருக்கிறீர்கள், எத்தகைய மனிதராய் இருக்கிறீர்கள், எப்படி வெளிஉலகுக்குத் தெரிகிறீர்கள் என்பதைப் பொறுத்ததுதான் யார் உங்களுடன் வருகிறார்கள் அல்லது இனியும் வருவார்கள் என்பதெல்லாம்.

அதனால் வாழ்க்கையில் உங்களின் முன்னே யார், பின்னே யார் என்பதல்ல பிரமாத விஷயம். உங்கள்கூடவே சதா வந்துகொண்டிருப்பவர்கூட, அவர் எவ்வளவுதான் அன்புக்குரியவராயிருப்பினும், சிறந்தவராக இருப்பினும் ஓரளவுக்குத்தான் அவரது முக்கியத்துவமும். அதற்கு மேலில்லை. பின்னே? இவை எல்லாவற்றுக்குமிடையே, நடுநாயகனாக அல்லது நாயகியாக நிற்கும் நீங்கள்தான் இங்கே உன்னிப்பாகக் கவனிக்கப்படவேண்டியது. மற்றவர்களிடம் மட்டுமல்லாது, உங்களிடமேகூட நீங்கள் எப்படி நடந்துகொள்கிறீர்கள், யாராக, எத்தகையவராக உண்மையில் இருக்கிறீர்கள், இந்த உலகில் வாழ்கிறீர்கள் – இதுதான் இங்கே விஷயமே. இதில் உன்னதம் இல்லையெனில் வேறொன்றும் பெரிதாக எந்தவித பாதிப்பையும் வாழ்க்கையில் ஏற்படுத்திவிடாது. நீங்கள்தான் இந்த உலகத்தில் உங்களுக்கு எல்லாம். வேறெதுவும், யாரும் இல்லை.

**