’சூப்பர்’ சோகம் : நியூஸிலாந்து கிரிக்கெட்

நடந்து முடிந்த நியூஸிலாந்து-இந்தியா கிரிக்கெட் தொடர்பற்றி என்ன சொல்வது? இந்தியா, கடந்த மாதம் நியூஸிலாந்தின் கரைகளில் வந்து இறங்குகையில், யாரும் டி-20 தொடரில் இப்படி ஒரு முடிவை எதிர்பார்த்திருக்கமாட்டார்கள். 5-0 – இந்தியாவின்  வெற்றி. இந்த மார்ஜின் இந்தியர்களுக்கே ரொம்ப ஓவராகத்தான் தெரியும்! அப்படி என்ன மோசமான அணியா நியூஸிலாந்து என்றால், இல்லை என்பதே உடனடியான பதில். கடைசி மூன்று போட்டிகளில் கருப்புத்தொப்பிகளுக்கு என்னதான் ஆனது? உலகக் கோப்பையில் இங்கிலாந்திடம் தோற்றது(? )- இங்கிலாந்து வென்றதாக பலர் இன்னும் நம்ப மறுக்கின்றனர் என்பது கிரிக்கெட்டின் மர்மக்கதை- இன்னுமா அந்த சோகம் உளவியல் ரீதியாகப் பீடித்திருக்கிறது நியூஸிலாந்தை?சந்தேகிக்கவேண்டியிருக்கிறது.

Kane Williamson & Virat Kohli

விராட் கோஹ்லியின் இந்தியா முதல் இரண்டு டி-20 போட்டிகளில் வென்றதும், மூன்றாவது போட்டியில் நியூஸிலாந்து, செமயாகத் திருப்பிக் கொடுக்கும் எனத்தான் எதிர்பார்ப்பு, எல்லா திசைகளிலிருந்தும். அவர்கள் நன்றாகத்தான் விளையாடினார்கள். ஜெயித்திருக்கவேண்டும். ஆனால் முகமது ஷமி வீசிய கடைசி ஓவரில் 9 ரன் எடுக்கமுடியாமல் தடுமாற்றம். சூப்பர் ஓவருக்கு அனாவசியமாக மேட்ச்சை அனுப்பினார்கள். தோல்வி. அதிர்ச்சி. உலக்கோப்பைப் பேய் விஷமம் செய்கிறதா?

நான்காவது போட்டியில், மீண்டும் நியூஸிலாந்து நல்ல நிலையில் இருந்தது. இந்தியா, தான் தோற்றுவிட்டோம் என்பதை உணர ஆரம்பித்திருந்தது கோஹ்லியின் முகத்தில் தெளிவாகத் தெரிந்தது. ஆனால் என்ன நடந்தது? ”தோல்வி எங்கே.. தோல்வி எங்கே.. என்று தேடு! அது எங்கிருந்தபோதும், அதை நாடி ஓடு..!” என்று பாடிக்கொண்டே ஆடினார்கள்போலும்  நியூஸிலாந்தின் வீரர்கள். சரிவுதான் நமக்குச் சரி என்று எண்ண ஆரம்பித்து விட்டார்களோ? ஷர்துல் டாக்குர் (Shardul Thakur) அப்படி ஒன்றும் ப்ரமாத பௌலர் இல்லை. கோஹ்லி ’நாம் தோற்றுவிட்டோம்’ என நினைத்துத்தான், தொலையட்டும் என டாக்குரிடம் கடைசி ஓவரைக் கொடுத்தார். ஆனால், மறுபடியும் நியூஸிலாந்தின் மண்டைக்குள் அந்த மர்மப்பேய் உட்கார்ந்து மந்தகாசமாய்ப் புன்னகைத்தது. கடைசி ஓவரில் அசட்டுத்தனமாக விக்கெட்டுகளை இழந்தது நியூஸிலாந்து. சித்தம் கலங்கிய நிலையில், மீண்டும் ‘டை’ (tie) ஆக, மேட்ச் ’சூப்பர் ஓவ’ரில் வந்து நின்றது! ரசிகர்களுக்கே தங்கள் கண்களை நம்பமுடியாத அதிர்ச்சிநிலை. கோஹ்லி கொண்டாடினாரே ஒழிய, அவருடைய அசட்டுச் சிரிப்பில், அவருக்கே ஒரு எழவும் புரியவில்லை என்பது கண்கூடாகத் தெரிந்தது: ’நாம் தோற்றிருக்கவேண்டிய போட்டி, சூப்பர் ஓவருக்கு எப்படி வந்தது!’ சூப்பர் ஓவரில் இந்தியா தாக்க, அவமானத் தோல்வி மீண்டும் நியூஸிலாந்தை இறுகக் கட்டித் தழுவியது. ஒரு தரமான சர்வதேச அணி இப்படியா 20-ஓவர்களில் வெல்லமுடியாமல், அடுத்தடுத்து இரண்டு மேட்ச்களில் ’சூப்பர் ஓவர்கள்’ விளையாடும்? இரண்டிலுமே மண்ணைக் கவ்வும்? என்னடாது.. அந்த இரவில், சித்தப் பிரமையில் இருந்திருக்கவேண்டும் முழு நியூஸிலாந்தும். உலகெங்கிலும் உள்ள கிரிக்கெட் வல்லுனர்களும் அதிர்ந்துபோனார்கள் -என்ன நடக்கிறது நியூஸிலாந்தில்?

5-ஆவதும் இறுதியுமான போட்டியிலும்,  சோகம் நியூஸிலாந்தைத் துரத்தத் தவறவில்லை. நியூஸிலாந்து ஆரம்பத்திலிருந்தே அருமையாக ஆடி, வெற்றியை நோக்கி சீராக நகர்வதாகத்தான் தோன்றியது. ஸைஃபர்ட் (Seifert), ராஸ் டைலர் (Ross Taylor) ஆகியோரின் திறனான அரைசதங்களும், கடைசி மேட்ச்சில் நியூஸிலாந்தை வெற்றிப்பாதையில் அனுப்புவதாய்த் தெரிந்தது. இந்தியாவின் ஷிவம் துபே (Shivam Dube), இந்தப் போட்டியை எப்படியாவது நியூஸிலாந்து ஜெயிக்கவேண்டும் என நினைத்துவிட்டாரோ? 10-ஆவது ஓவரை ராஹுல் (Stand-in Skipper), துபேயிடம் கொடுக்க, ஷிவம் எதிரணி வீரர்களை ஆனந்தத் தாண்டவம் ஆடவைத்தார்! ஒரே ஓவரில் 34 ரன்கள். நியூஸிலாந்து ரசிகர்களின் மனதில் பால்வார்த்தார், நம்ப ஹீரோ.. இது எப்படி இருக்கு! அந்த நிலையில் நியூஸிலாந்து மேட்ச்சை எளிதில் கைப்பற்றிவிடும் என்றே தோற்றம். அதற்கப்புறம் பந்துவீசிய, ஜஸ்ப்ரித் பும்ரா (Jasprit Bumrah) படபடவென ஸ்க்ரிப்ட்டை மாற்றிவிட்டார். அவருடைய யார்க்கர்கள் ஸ்டம்ப்புகளை பிளக்க, நியூஸிலாந்து குப்புற விழுந்தது. மீண்டும் அதே கதை.. தோல்வி தேவதையின் ருத்ரதாண்டவம்..

இப்படியுமா ஒரு அணி தோற்றுக்கொண்டே இருக்கும்? நியூஸிலாந்து என்ன ஜிம்பாப்வேயா! தொடரின் ஆரம்பத்தில் கேப்டன் வில்லியம்சன் சொன்னார் : ’நான் கேப்டன் பதவியிலிருந்து விலகுவது அணிக்கு உதவுமென்றால், நான் தள்ளி நின்றுகொள்கிறேன்’ என்று. யாரும் ஒத்துக்கொள்ளவில்லை. அவர் அணியின் மிகச்சிறந்த பேட்ஸ்மன். அதிரடியாக ஸ்கோர் செய்பவர், செய்கிறார். சந்தேகத்துக்கிடமின்றி நல்ல கேப்டனும். (முதல் மூன்று போட்டிகளில் அவர்தான் கேப்டனாக இருந்தார். காயம் காரணமாக வில்லியம்சன் விலக, கடைசி மேட்ச்சில் டிம் சௌதீ (Tim Southee) நியூஸிலாந்தின் கேப்டன் பொறுப்பை ஏற்றார். அதேபோன்று, இந்தியாவுக்கு கே.எல்.ராஹுல் கேப்டன் ஆனார் (கோஹ்லி பெஞ்சில் உட்கார விரும்பியதால், ரோஹித்திற்கு காலில் அடிபட்டதால்). தொடர் முடிவில், நியூஸிலாந்து அணிபற்றி கருத்துச்சொன்ன விராட் கோஹ்லி, ‘தொடரின் முடிவு எதைச் சொன்னாலும், வில்லியம்சனே நியூஸிலாந்தைத் தலைமை தாங்க சரியானவர். அவரைப்போல் ஒரு வீரர் கிடைப்பது அரிது’ என்பதாகப் புகழ்ந்திருக்கிறார். கிரிக்கெட் தெரிந்தவர்கள் ஒத்துக்கொள்வார்கள்.

பிப்ரவரி 5-ஆம் தேதியிலிருந்து மூன்று போட்டிகள் கொண்ட ’ஒரு-நாள்’ தொடர் இரண்டு அணிகளுக்குமிடையே ஆரம்பிக்கும். அதன்பின், இரண்டு ‘டெஸ்ட்’ போட்டிகள்.  கதை மாறுமா? சோகம்தான் வாழ்வா, நியூஸிலாந்துக்கு?

**

CWC 2019: உலகக்கோப்பை … இங்கிலாந்துக்கு!

 

இங்கிலாந்து 2019-க்கான கிரிக்கெட் உலகக்கோப்பையை ஜெயித்துவிட்டது. ஆனால், எதிர் அணியான நியூஸிலாந்து தோற்றுவிட்டதாகச் சொல்லமுடியாது! என்னப்பா சொல்ல வர்றே! -என்கிறீர்கள். உலகக்கோப்பை கிரிக்கெட்டில் இதுவரை காணாத அதிசயமாய் கதை விசித்திரமாய் விரிந்து அப்படித்தான் முடிந்தது. நியூஸிலாந்து வீரர்களுக்கு தங்களுக்கு ஏன் உலகக்கோப்பை கொடுக்கப்படவில்லை என்றே புரிந்திருக்காது என்று தோன்றியது. அப்படி ஒரு அதிர்ச்சியில் நியூஸிலாந்து வீரர்கள் ஓரமாய் நின்றிருந்தார்கள்.

பந்து பந்தாக விவரிக்காமல், சுருக்கமாகச் சொல்வோம்.   லார்ட்ஸ் மைதானத்தில் நேற்று (14/7/19) நடந்த இறுதிப்போட்டியில், டாஸ் வென்றது, முதலில் பேட் செய்தது நியூஸிலாந்து. பிட்ச் மந்தமாக செயல்பட, நியூஸிலாந்து நினைத்த அளவுக்கு தாக்கி ஆட இயலவில்லை. ஹென்றி நிக்கோல்ஸ் 55, டாம் லேத்தம் 47, வில்லியம்சன் 30 என்றுதான் போனார்கள். இறுதியில் 8 விக்கெட்டுகளை இழந்து 241 எடுத்தார்கள்.  இங்கிலாந்தின் தரப்பில் க்றிஸ் வோக்ஸ், ஜோஃப்ரா ஆர்ச்சர், லியாம் ப்ளங்கெட் சிறப்பாக வீசினார்கள்.

242 ஐ நோக்கி நன்றாகத் துவங்கியது இங்கிலாந்து. இதற்கு முந்தைய மேட்ச்சில் அம்பயரோடு(ஸ்ரீலங்காவின் குமார் தர்மசேனா) குஸ்திபோட்ட ஜேஸன் ராய் எளிதில் தூக்கப்பட்டார். ஜானி பேர்ஸ்டோ நிதானம் காட்டினார். விக்கெட்டுகள் சில விழுந்தன. த்டுமாற்றம். அப்போது  பென் ஸ்டோக்ஸ், ஜோஸ் பட்லர் (59) சேர்ந்து ஸ்க்ரிப்ட்டை மாற்றி எழுதினர். ஒரு கட்டத்தில், இங்கிலாந்து எளிதாக கோப்பையைத் தட்டிச் செல்லும் எனவே தோன்றியது. 84/4 என்றிருந்த ஸ்கோரை 196 க்கு 5 விக்கெட்டுகள்(45 ஆவது ஓவர்) என வேகமாக அவர்கள் உயர்த்தியது, நியூஸிலாந்துக்கு பீதியைக் கிளப்பியது. அவ்வப்போது குதித்துக் காண்பித்த நியூஸி ரசிகர்கள் அடங்கிக் கிடந்தார்கள்.

அடுத்த பக்கத்தில் விக்கெட்டுகள் சரிய, ஸ்டோக்ஸ் மட்டும் அஞ்சாது ரன் சேர்த்துக்கொண்டிருந்தார்.  அவரது துணிச்சலும், இலக்கில் குவிந்த கவனமும் பாராட்டத்தக்கது. 9 பந்துகளில் இங்கிலாந்து 22 ரன் அடித்தாகவேண்டிய நிலையில், ஸ்டோக்ஸ் உயர அடித்த ஷாட்டை பௌண்டரி லைனுக்கு முன்னாள் எம்பிப் பிடித்த நியூஸி ஃபீல்டர் ட்ரெண்ட் போல்ட், அதனை உள்ளே  எறிவதற்குள் தடுமாறி வெளியே காலை வைத்துவிட்டார். சிக்ஸர்! கடைசி ஓவரில் மேலும் ஒரு பயங்கரம். 3 பந்துகளில் 9 ரன்கள் தேவை. ஸ்டோக்ஸ் இருக்கிறாரே..அவரடித்த பந்து ஃபீல்டாகிவிட இரண்டாவது ரன்னுக்காக விக்கெட்கீப்பர் பக்கம் மட்டையைத் தூக்கிக்கொண்டு பாய்ந்தார். நியூஸி ஃபீல்டர் ஃபீல்ட் செய்து வீசிய பந்து ஸ்டோக்ஸின் மட்டையைப் பதம்பார்த்து, கோபித்துக்கொண்டு பௌண்டரியை நோக்கி ஓடிவிட்டது! அம்பயர் தர்மசேனா ஆனந்தமாகி, 2+4=6 ரன் என விரல்களைக் காண்பித்துவிட்டார். இப்படியெல்லாமா ஒரு துரதிருஷ்டம் வரும் நியூஸிலாந்துக்கு. கடைசி பந்தில் இரண்டு ரன் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் கடைசி பேட்ஸ்மன் மார்க் உட் ரன் -அவுட் ஆகிறார். ஸ்கோர் இங்கிலாந்து 241 ஆல் அவுட் (பென் ஸ்டோக்ஸ் 84 நாட்-அவுட்). நியூஸிலாந்தின் ஸ்கோர் 241/8.  உலகக்கோப்பையின் முதல் Tie!

இங்கேதான் காரியத்துக்கு வருகின்றன ஐசிசி-யின் விதிமுறைகள் – இந்த உலகக்கோப்பைக்காக விசேஷமாகத் தயாரித்தவை! ஃபைனலில் ஸ்கோர் ‘டை’ஆனால், சூப்பர் ஓவர் விளையாடி முடிவு செய்யவேண்டும். ஒவ்வொரு அணியும் ஒரு ஓவர் விளையாட, எந்த அணி அதிகபட்ச ஸ்கோர் செய்கிறதோ அதுதான் சேம்ப்பியன்.

முதலில் பேட் செய்த இங்கிலாந்து அவர்களது ராசிக்காரர்களான ஸ்டோக்ஸ், பட்லர் ஆகியோரை அனுப்பியது. இங்கே பௌலரைத் தேர்ந்தெடுப்பதில் நியூஸி. கேப்டன் வில்லியம்சன் தப்பு செய்துவிட்டார் எனத் தோன்றுகிறது. ட்ரென் போல்ட் நியூஸிலாந்தின் டாப் பௌலர் என்றாலும், நேற்று அவர் வீசிய லட்சணம் சரியில்லை. ஏகப்பட்ட ரன் கொடுத்தார். விக்கெட் எடுக்கவில்லை. பழைய ரெப்யூட்டேஷனை மனசில் கொள்ளாமல், ஃபெர்குஸன், மேட் ஹென்றி ஆகிய இருவரில் ஒருவருக்கு சூப்பர் ஓவரைத்தந்திருந்தால் இங்கிலாந்து இப்படி அடித்திருக்காது எனத் தோன்றுகிறது. ஆளுக்கொரு பௌண்டரி அடித்த இங்கிலாந்து ஜோடி, 15 ரன்கள் எடுத்துவிட்டது. இருபக்கத்து ரசிகர்களும் உலைபோல் கொதித்துக்கொண்டிருந்தனர்.

இங்கிலாந்து உலக சேம்பியன் !

நியூஸிலாந்து சூப்பர் ஓவர் ஆட, மார்ட்டின் கப்ட்டில் (ஃபார்மில் இல்லாதவர்) மற்றும் ஜிம்மி நீஷம் ஆகியோரை அனுப்பியது. இவர்கள் 16 எடுத்துவிட்டால் நியூஸிலாந்து உலக சேம்ப்பியன். ஆனால், விதிக்கு பிடித்த ஆட்டமாயிற்றே கிரிக்கெட்! அது 23-ஆவது ப்ளேயராக மைதானத்தில் ஏற்கனவே இறங்கியிருந்தது. இங்கிலாந்து தன் சூப்பர் பௌலராக,  உலகக்கோப்பைக்கு சில மாதங்கள் முன்புதான் அணியில் சேர்க்கப்பட்ட ஜோஃப்ரா ஆர்ச்சரை பந்துபோடச் சொன்னது.  ஆர்ச்சருக்கு இது முதல் இண்டர்னேஷனல் டூர்னமெண்ட். பதற்றம் முகத்தில். அடிக்கடி அருகில்போய் கேப்டன் மார்கன் ஏதேதோ சொல்கிறார். ஆர்ச்சரின் ஒரு பந்தை ஆவேசமாகத் தூக்கி சிக்ஸருக்கு அனுப்பிவிட்டார் நீஷம். நியூஸியின் பல்ஸ் ஏறியது! ஆனால் அனுபவசாலியான கப்ட்டில் ஒன்று, இரண்டு என்று ஓடினார். நியூஸியின் வேதனை. கடைசி பந்து. 2 ரன் தேவை நியூஸிலாந்துக்கு. ஆர்ச்சருக்கு அட்வைஸ் கேப்டனிடமிருந்து. கீழே குனிந்து தலையாட்டிய ஆர்ச்சர் வேகமாக ஓடி வந்து, எதிர்த்துத் தாக்கமுடியாத லெந்த்தில் பந்தை இறக்கினார். கப்ட்டில் பதறி லெக்சைடில் அடித்துவிட்டு ஒரு ரன் ஓடினார். ரெண்டு ரன் வேண்டுமே..திரும்பிப் பாய்ந்தார். அந்தோ! இங்கிலாந்து ஃபீல்டிங் நேராக  விக்கெட் கீப்பருக்கு அனுப்ப, பட்லர் பெய்ல்ஸைத் தட்டி,  ரன் -அவுட் செய்துவிட்டார். என்ன ஃபைனல்டா இது.. ஒரே பேஜாராப்போச்சே. சூப்பர் ஓவரும் டை Tie). இரு அணியும் எடுத்தது , தலா 15 ரன்கள்!

சோகமே உருவாக நியூஸிலாந்து

வேறொரு ஸ்போர்ட்டாக இருந்திருந்தால், இந்த இடத்தில் முடிவு வந்திருக்கும். நியூஸிலாந்து, இங்கிலாந்து இரு அணிகளும் ஜாய்ண்ட்-வின்னர்ஸ் என அறிவிக்கப்பட்டிருக்கும். அதுவே நியாயமானதாகவும் இருந்திருக்கும். ஆனால் ஐசிசி-யின் குதர்க்கம் நிற்காதே. சூப்பர் ஓவர் பற்றி அவர்கள் அசரீரி கேட்டு, மேலும் ஒன்று எழுதிவைத்திருந்தார்கள். சூப்பர் ஓவர் ’டை’ ஆனால், எந்த அணி நிறைய பௌண்டரிகள் அடித்ததோ அதுவே வின்னர்.. கோப்பை அதற்குத்தான். வேகவேகமாக எண்ணி, இங்கிலாந்து உலகக்கோப்பையை வென்றதாக அறிவித்துவிட்டார்கள். நியூஸிலாந்து உறைந்து நின்றது. இவ்வளவு சிறப்பாக ஃபைனலிலும் ஆடி என்ன பயன்? வெறும் ரன்னர்ஸ்-அப் தானே கடைசியில்.  நியூஸிலாந்துக்கு இல்லையே கோப்பை..

’’எல்லாம் ‘டை’, ‘டை’ என்றானபின், அடித்த பௌண்டரிகளை எண்ணி, உலகக்கோப்பையை அறிவிக்கிறார்களே.. என்னால் ஜீரணிக்கமுடியவில்லை’’ என்றார் சோகம் ததும்பும் குரலில் நியூஸி. கேப்டன் வில்லியம்சன்.  மிகவும் மென்மையானவர். மேற்கொண்டு சொல்லமாட்டார்.  ‘’உலகக்கோப்பையில் 22 ஹீரோக்கள். யாருக்கும் வெற்றியில்லை!” என்று தலைப்பு கொடுத்த ’நியூஸிலாந்து ஹெரால்ட்’ என்கிற நாளேடு, மேலும் கேள்வி கேட்டது: ”ஓவர்-த்ரோ (ஸ்டோக்ஸ் பேட்டில் பட்டு பௌண்டரிக்கு ஓடிய பந்து)-விற்கு 5 ரன் தானே தரவேண்டும். 6 ரன் ஏன் கொடுக்கப்பட்டது?’’ நியூஸிலாந்தின் இன்னுமொரு பத்திரிக்கை, ’பௌண்டரி எண்ணுகிறேன் என்று சொல்லி, எங்களது கோப்பையைத் திருடிவிட்டார்கள்!’ என்கிறது.

ஆட்டத்தை அந்த நாட்டில் விடிய விடிய பார்த்துக்கொண்டிருந்த நியூஸிலாந்தின் பெண் பிரதமர்  ஜஸிண்டா ஆர்டன் (Jacinda Ardern) சொல்கிறார். ’’என்ன ஒரு நம்பமுடியாத மேட்ச். இப்படி ஒன்றை வாழ்நாளில் பார்த்ததில்லை. கிரிக்கெட் சரித்திரத்தில்  ஒரு அருமையான போட்டியாக இது நிற்கும். ஆயினும் முடிவு கண்டு, என் நாட்டினரைப் போலவே நானும் புத்தி பேதலித்துப்போயிருக்கிறேன். என்ன செய்வது? எங்களது அணி நாடு திரும்பட்டும். அவர்களுக்கு நியூஸிலாந்தின் உயர் ஹீரோக்களுக்கான சிறப்பான வரவேற்பைத் தருவேன்!’’

**

Pictures courtesy: Google