இவனே என் மணாளன் என ஒருவனைக் கைப்பிடித்த நாளிலிருந்து கூடவே இருந்து, தன் பரிசிரமம் பார்க்காமல் அவனுக்கு வேளாவேளைக்கு சோறுபண்ணிப்போட்டு, அவனது அசட்டுத்தனம், அடாவடித்தனம், முட்டாள்தனம், முரட்டுத்தனத்தையெல்லாம் பொறுத்து, எந்நிலையிலும் கைவிடாது அவனோடே உழன்று, வாழ்வின் கஷ்ட நஷ்டங்களை அனுபவித்து, போதாக்குறைக்கு அவனாலேயே ஏற்பட்ட கஷ்டங்களையும் (பெரும்பாலான சமயங்களில் வாயைத் திறக்காமலேயே) சகித்து, உடம்பு சரியில்லாது அவன் தடுமாறிய நாட்களில் மருந்து மாத்திரையெல்லாம் நேரத்துக்கு எடுத்துக் கொடுத்து, தினம் அவனுக்காகப் பிரார்த்தித்து, கடைசிகாலம் வரை மனைவி என்கிற ரூபத்தில் கூட வரும் பெண்ணுக்கு, ஒருவன் என்னதான் ப்ரதிஉபகாரமாகச் செய்வது ? நினைத்தாலே கனக்கிறதே ..
எழுத்தாளர் சுஜாதாவின் மனதையும் இத்தகைய சிந்தனை அலைக்கழித்திருக்கிறது என்று தோன்றுகிறது. அவருடைய மனைவி திருமதி சுஜாதா ஒரு வாரப்பத்திரிக்கைக்கு சமீபத்தில் அளித்த நேர்காணலில், தன் கடைசி நாட்களில் தன் மனைவி தனக்கு இயல்பாக, தினப்படியாகச் செய்த உதவிகளுக்கெல்லாம்கூட ஒவ்வொரு முறையும் `தாங்க்ஸ்!` என்று சுஜாதா கூறிக்கொண்டிருந்ததாகச் சொல்கிறார். “எனக்கு ஏன் தாங்க்ஸ் சொல்றீங்க`-ன்னு கேட்பேன். அதற்கும் அவர் சிரிச்சுக்கிட்டே `தாங்க்ஸ்!` என்பார். கடைசி நேரத்தில்கூட எனக்கு நன்றி சொல்லிவிட்டுத்தான் அவர் போனார்’` என்று தன் கணவர்பற்றி உருக்கமாகக் குறிப்பிடுகிறார் சுஜாதாவின் மனைவி.
இதனைப் படித்தபோது மனதை என்னவோ செய்தது. தன் ஆசாபாசங்களையெல்லாம் ஓரத்தில் மூட்டை கட்டிவைத்துவிட்டு, தன் விருப்பு, வெறுப்புகளைக்கூட சரியாக வெளிப்படுத்திக்கொள்ளாமல், கணவனுக்காகக் காலமெல்லாம் ஆயிரமாயிரம் காரியங்களைக் கடமையே எனச் செய்துவந்த மனைவியிடம் `நன்றி` என்கிற ஒற்றைச் சொல்லைச் சொல்லிவிட்டு அவளது கணவன் கடந்து சென்றுவிட முடியுமா? முடியாதுதான். சிந்திக்கையில், வேறென்னதான் செய்யமுடியும் என்கிற ஆற்றாமையே மனதைப் புரட்டி எடுக்கிறது. கல்யாணமான ஆண்கள், அன்பு, நேர்மை, கடமை உணர்வு ஆகிய நல்லியல்புகளில் தேர்ந்த தங்கள் மனைவிமார்களுக்கு நிரந்தரக் கடனாளிகள்தானா? இந்த ஜென்மத்தின் தீராக்கடனோ இது?
**