எங்கே ?

ஏற்றி வைத்த தீபம்
எரிந்துகொண்டிருக்கிறது இன்னும்
ஊற்றிய நெய் குறையாதிருக்கிறது
உயர்ந்துகொண்டிருக்கிறது ஜ்வாலை
பரவி நிற்கிறது தீப ஒளி
தேடுகின்ற தெய்வம் மட்டும்
தென்பட்டபாடில்லை

**

என்ன செய்தாலும் . .

பாலைக் கொட்டி
தேனைக் கொட்டி
திருமஞ்சனம் செய்தாலும்
திருடிக்கொண்டு ஓடினாலும்
பரவசத்தோடு கைகூப்பி நின்றாலும்
பார்க்காதது மாதிரி கடந்து சென்றாலும்
சந்தோஷமாய் ஏதாவது சொன்னாலும்
சதா புலம்பித் தள்ளினாலும்
இருக்கென்றாலும்
இல்லவே இல்லை என்றாலும்
பார்த்துக்கொண்டுதான் இருக்குமது
ஒன்றும் செய்யாது
அதன் பேர் தெய்வம்

**

தனி ஒருவன்

வேண்டுதல் பிரார்த்தனை
பணங்காசு நகைநட்டு
சகலத்தையும் நேரில் சமர்ப்பிக்கவென
லட்சக்கணக்கில் மோதிக்கொண்டிருந்தது
பக்தர் கூட்டம் தினம் தினம்
சக்திவாய்ந்த அந்த தெய்வமோ
வழிமேல் விழிவைத்துக்
காலமெலாம் காத்திருந்தது
எந்த பாரத்தையும் தன்மீது போடாமல்
எதையும் கேட்காமல் வேண்டாமல்
தன்னை ஒருமுறை
பார்த்துவிட்டாலே போதும் என்கிற
ஆசையை மட்டும் சுமந்துவரும்
அந்த ஒருவனை எதிர்பார்த்து

**