ஆண், பெண்ணுக்கு நடத்தும் .. !

“ஆண், பெண்ணுக்கு நடத்தும் அநியாயம்.. சொல்லுக்கடங்காது. அதை ஏட்டில் எழுதியவர் இல்லை. அதை மன்றிலே பேசியவர் யாருமில்லை…

எவனும் தனது சொந்த ஸ்த்ரீயை அலக்ஷ்யம் பண்ணுகிறான். தெருவிலே வண்டி தள்ளி நாலணா கொண்டுவருவது மேல் தொழில் என்றும், அந்த நாலணாவைக் கொண்டு நாலு வயிற்றை நிரப்பி, வீடு காப்பது தாழ்ந்த தொழிலென்றும் நினைக்கிறான். பெண்கள் உண்மையாக உழைத்து ஜீவிக்கிறார்கள். ஆண்மக்கள் பிழைப்புக்காகச் செய்யும் தொழில்களில் பெரும்பாலும் பொய், சூது, களவு, ஏமாற்று, வெளிமயக்கு, வீண்சத்தம், படாடோபம், துரோகம், கொலை, யுத்தம்…!

இந்தத் தொழில்கள் உயர்வென்றும், சோறாக்கி, துணிதோய்த்து, கோயில்செய்து கும்பிட்டு, வீடு பெருக்கி, குழந்தைகளைக் காப்பாற்றும் தொழில் தாழ்வென்றும் ஆண்மக்கள் நினைக்கிறார்கள்.

வியபிசாரிக்குத் தண்டனை இஹலோக நரகம். ஆண்மக்கள் வியபிசாரம் பண்ணுவதற்குச் சரியான தண்டனையைக் காணோம்.. பரஸ்த்ரீகளை இச்சிக்கும் புருஷர்களுக்கு எல்லையில்லை என்று, நான் சற்றே மறைவிடமாகச் சொல்லுகிறேன். அதனால், அவர்கள் பத்தினிகளை நேரே விழித்து நோக்க யோக்யதையில்லாமல் இருக்கிறார்கள். பூமண்டலத்தின் துக்கம் இதிலேதான் ஆரம்பமாகிறது. வீட்டிலே துரோகம் இருந்தால் வெளியே எப்படி நேராகும்? வீடுகள் சேர்ந்துதானே ஊர் உண்டாகிறது? …”

1917-லேயே, ஆண்களின் யோக்யதைபற்றி  இப்படிப் பகர்ந்திருக்கிறார் சுப்ரமணிய பாரதி -‘மிளகாய்ப்பழச் சாமியார்’ வாயிலாக ! சுதேசமித்திரன் இதழில் வெளியான அவரது சிறுகதையின் பிரதான பாத்திரம், அந்தக்கால புருஷ சிந்தனை, செயல்பாடுகள்பற்றி இப்படி விசனப்படுவதாக வருகிறது.

இப்போது ஆண்கள்? பலர், ஒருத்தருக்கும் ஒன்றும் தெரியாதென்று, ஹைடெக் துரோகம் செய்து ’த்ரில்லாக’ வாழ்கிறார்கள். பெண்மக்களின் நெஞ்செரிச்சல், நேர்கோட்டில் நீண்டு… நகர்கிறது.

**