கு.ப. ராஜகோபாலன்

”ராஜகோபாலனைப்போல ஒரு கதை, ஒரு வரியாவது எழுத வேண்டும் என்று எனக்கு வெகு கால ஆசை….  அவருடைய எழுத்துகளைப் படிக்கும்பொழுது ஒரு பிரமிப்புத்தான் ஏற்படுகிறது. பட்டுப்போன்ற சொற்களிலும், பத்து பக்கங்களுக்கு மேற்படாத கதைகளிலும் எப்படி இவ்வளவு பெரிய கலை வடிவங்களையும், உணர்ச்சி முனைப்பையும் வடிக்கிறார் அவர்!”

கு.ப.ரா. என்று தமிழ் இலக்கியப் பரப்பில் குறிப்பிடப்படும் கு.ப.ராஜகோபாலனைப்பற்றி, தி.ஜானகிராமன் சொன்னது, மேற்கண்டது. எழுத்தாளர்களே படித்துப் பிரமித்த புனைவெழுத்து கு.ப.ரா.வினுடையது. அவர் எடுத்துக்கொண்ட, அதே சமயம் ஏனைய எழுத்தாளர்கள் தவிர்த்துவந்த, பொருள்பற்றி, சமகால எழுத்தாளர்கள் சிலர் விமரிசனம் வைத்தார்கள்.   1934-லிலிருந்து 1944 வரை என ஒரு குறுகிய காலகட்டத்தில்தான், தமிழ் இலக்கிய உலகில் அவர் பங்காற்றியிருக்கிறார். அந்தக் காலவெளியில், அருமையான கதைகள், நாடகங்கள் பலவற்றைத் தந்துவிட்டுப் போயிருக்கிறார் இந்த ஆளுமை. அவரது நாற்பதுகளில் இடது கண் பார்வை போய், வேறுவிதமான உடல் நலக்குறைவுகளுக்கும் ஆளாகி, மருத்துவம் என்கிற பெயரில் போராடி, அகாலமாகக் காலமானார் கு.ப.ரா.

கு.ப.ரா.

”சளசளப்பும், சப்த ஜாலங்களும், ஏதோ பெரிதாகச் சொல்லப்போவதுபோல மிரட்டுகிற மூடுமந்திரச் சொற்பிரயோகங்களும், முழுமையில்லாத தோல்வி மூளிகளை, உள்மனச் சோதனைகளாகச் சப்பைக்கட்டு கட்டும் முடவெறியும் காதைத் துளைக்கிற காலத்தில், ராஜகோபாலனின் எழுத்தின் தெளிவும், அமைதியான வீர்யமும், தன்னம்பிக்கையும், சிறு பிரவாகமாக எங்கோ சலசலத்துக் கொண்டிருப்பதை இப்பொழுதைய வாசகர்களைப் போய்ப் பார்க்கச் சொல்லவேண்டும் போலிருக்கிறது. ‘கோபம் கொண்ட இளைஞன்’ (angry youngman) என்கிற இங்கிலீஷ் சொற்கட்டு ஒன்று அடிக்கடி கேட்கிறது. வயதுக்கும், கோபத்துக்கும் சம்பந்தமேயில்லை. ராஜகோபாலன் எழுதியதும் கோபக்கார இளைஞனின் எழுத்துத்தான். 42 வயதில் செத்துப் போகாமல் இன்று அவர் இருந்திருந்தால், அதே கோபக்கார இளைஞனாகத்தான் இருந்திருப்பார்.” இப்படித் தன் சமகால தமிழ் எழுத்துவெளியை ஒருபக்கம் குத்திக்காட்டி, கு.ப.ரா- வின் படைப்புகளைப் புகழ்ந்தவரும் தமிழின் தலைசிறந்த எழுத்தாளர்களுள் ஒருவராகக் கருதப்படும் தி.ஜானகிராமன்தான்.

பெண் மனதின் மென்நிலைகளை, கலாபூர்வமாக எழுத்தில் கொண்டுவருவதில் வல்லவர் கு.ப.ரா. அலங்காரமில்லாதது, அடக்கமானது, நுண்ணியது, நுட்பமானது; சில வரிகளில் வாசகனில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய புனைவெழுத்து அவருடையது. கும்பகோணத்தில் வாழ்ந்த கு.ப.ராஜகோபாலன்,  எழுத்தாளர் ந.பிச்சமூர்த்தியோடு கிட்டத்தட்ட 20 ஆண்டுகாலம், மிகவும் நெருங்கிப் பழகியிருக்கிறார். பிச்சமூர்த்தியும் கும்பகோணத்திலேயே வசித்ததால் இது எளிதாக அமைந்தது. எழுத்தாளர் கரிச்சான் குஞ்சுவோடும் தொடர்பில் இருந்தவர். கண்பார்வை மிகவும் பாழ்பட்டுத் தடுமாறி, கு.ப.ரா. மிகவும் துவண்டுபோன சமயத்தில், படைப்புச்சக்திப் பெரிதும் வெளிப்பட்டிருக்கிறதுபோலும் அவரிடமிருந்து. அவரது இளைய சகோதரி சேது அம்மாள் கூடவே இருந்து, கு.ப.ரா. சொல்லச் சொல்லப் பொறுமையாக உட்கார்ந்து எழுதிக்கொடுத்து, உபகாரம் செய்திருக்கிறார். இலக்கிய இதழ்களான மணிக்கொடி, சுதந்திரச் சங்கு ஆகியவை கு.ப.ராஜகோபாலனின் கதைகளை அக்காலத்தில் வெளியிட்டன. இப்படியெல்லாம் ஏகப்பட்ட சிரமங்களினூடே வெளிப்பட்டதே கு.ப.ரா.வின் படைப்புகள். ’சிறிது வெளிச்சம்’, ’கனகாம்பரம்’, ’காணாமலே காதல்’, ’புனர்ஜென்மம்’ போன்ற பிரபலமான சிறுகதைத் தொகுப்புகளோடு,  ’ஆறு அறிஞர்களின் அலட்சியம்’, ’எதிர்கால உலகம்’, ’அகலிகை’, ‘சிந்தனை’ போன்ற நாடகங்களையும் எழுதியவர் கு.ப.ரா.

அல்லையன்ஸ், காலச்சுவடு ஆகிய பதிப்பகங்களில் இவரது கதைகள் கிடைக்கும். ஆன் – லைனில் வாங்க: discoverybookpalace.com, panuval.com, noolulagam.com போன்ற தளங்கள். ’கு.ப.ரா. சிறுகதைகள்-முழுத்தொகுப்பு’ Paperback-ஆகவும், ‘சிறிது வெளிச்சம்’ சிறுகதைத் தொகுதி Kindle edition-ஆகவும் Amazon-ல் கிடைக்கின்றன

கு.ப.ரா.வின் சிறுகதை ஒன்றை அடுத்த பதிவில் பார்ப்போம்…

**

தி. ஜானகிராமனின் சிறுகதை ‘பஞ்சத்து ஆண்டி’ பற்றி:

வாழ்க்கையில் விழுந்த ஒரு மரண அடியில் நிலைகுலைந்துபோன ஒரு ஏழையின் கதை. தினமும் தறிபோட்டு நெய்து பிழைத்துவந்த சாதாரணத் தொழிலாளியின் குடும்பம். தொழில் திடீரெனப் படுத்தது. எல்லாம் போயேபோய்விட்டது. நன்னையனுக்கோ பிழைப்பதற்கென வேறெதுவும் செய்யத்தெரியவில்லை. நெசவு ஒன்றுதான் பரம்பரை பரம்பரையாகக் கைகொடுத்துவந்தது. யார் போட்ட சாபமோ அது கைவிட்டதோடு, எழுந்திரிச்சிப்போடா என்று சொல்லிவிட்டது. நேர்மையான, கண்ணியமான மனிதன் நன்னையன். இருந்தது எல்லாவற்றையும் விற்றுச் சாப்பிட்டாகிவிட்டது. இனி விற்க ஏதுமில்லை. கையில் காசில்லை. இருக்க இடமுமில்லை. யாரையும் போய்க்கேட்கும்படியான சூழலோ இல்லவே இல்லை. நல்ல மனைவியும் மூன்று சின்னக்குழந்தைகளும், திடீரென வாழ்வின் பெரும் சுமையாகி எதிரே கண்ணீரோடும் பசியோடும் நிற்கின்றனர். நன்றாக வாழ்ந்துவந்த குடும்பத்தைப் பார்த்து விதி தன் கோரப்பல் காட்டி வெடிச்சிரிப்புச் சிரித்தது. கதியற்றுப்போன குடும்பம், மூட்டை முடிச்சுகளுடன் ஆங்காங்கே, யார்யார்வீட்டுத் திண்ணைகளிலெல்லாமோ தங்கி பசிஇரவு கழித்து இலக்கின்றி அலைகிறது. நன்னையனும் பாவம், என்னதான் செய்வான்? எங்கு போவான் அவன்?

ஒரு திண்ணையிலிருந்து இரவு கழியுமுன் விரட்டப்பட்டு, தெருவின் ஒரு பக்கத்தில் இருந்த பிள்ளையார் கோவில் திண்ணையில் குடும்பத்தைப் படுக்கவைக்கிறான். பசியோடு சுருண்டுகிடக்கிறார்கள் மனைவியும் குழந்தைகளும். இவனுக்கோ தூக்கம் வரவில்லை. குழந்தைகள் எழுந்தால் பசிக்கிறது என்று அலறுமே! தானம் எங்கோ கிடைக்கிறது என ஓடிக்கொண்டிருக்கும் ஆண்டிகளின் கூட்டத்தோடுபோய் ஏதாவது வாங்கிவரச்சொல்கிறாள் மனைவி. தனக்கும் பிள்ளைகளுக்கும் வயிற்றில் காற்றுதான் இருக்கிறதென்றும், மூட்டைமுடிச்சோடு கூடவரத் தெம்பில்லை என்றும் சொல்கிறாள். பதறியவனாகப் போகிறான் நன்னையன். செட்டியாரின் வீட்டு வாசல் வரிசையில் ஆண்டிகளோடு உட்காரக் கூச்சப்பட்டு மனம் தவிக்கிறான்; உடல் சுருங்குகிறான் பிச்சைகேட்டுப் பழக்கமில்லாத இந்தப் பஞ்சத்து ஆண்டி. காவித்துணி ஆண்டிகளில் ஒருவன் இவன் யார், என்ன என்று குடைய ஆரம்பிக்க, ஏதோ சொல்லிவிட்டு, இன்னும் சரியாக விடியாத பொழுதில் தானம் கிடைக்க இன்னும் நேரமிருக்கிறது என உணர்ந்து, அங்கிருந்து கிளம்புகிறான். பிள்ளைகளுக்குப் பசி வயிற்றைக் கவ்வுமே.. சாப்பிட ஏதாவது கொஞ்சம் கிடைத்தால் நன்றாக இருக்குமே என நினைத்து நடக்கிறான். ஒரு வீடு தென்படுகிறது. பிச்சைக் கேட்கவும் தெரியாத நம் ஆண்டிக்கு அங்கே கிடைக்கும் வரவேற்பை தி.ஜா.வின் எழுத்தில் பாருங்கள்:

பெரிய வீடு. வாசலில் கொட்டகை. அங்கே சாய்வு நாற்காலியை மேற்கே பார்க்கப் போட்டுச் சாய்ந்திருந்தார் ஒரு பெரியவர்.

“அம்மா!” என்று நன்னையன் கூப்பிட்டான்.

“ஏனையா அம்மாவைக் கூப்பிடறே? ஐயா ஒண்ணும் கொடுக்க மாட்டாருன்னா? கண்ணைப் பிட்டுக்கறத்துக்கு முன்னாடி வந்து நிக்கிறியே; விடியட்டுமேன்னு காத்திருந்தியா, முகதரிசனம் கொடுக்க! ஐயா எளுந்தவுடனே நல்ல பண்டமாப் பாத்துக் கண் விளிக்கட்டுமேன்னு வந்தியாக்கும்? எனக்கு ஒண்ணும் புரியலியே. சும்மா நின்னுக்கிட்டே இருந்தா? பதில் சொல்லுய்யா.. விடியக் காலமே எளுந்திருக்கறத்துக்கு முன்னாடி வந்து நிக்கிறியே?…. என்ன எண்ணம்னு கேக்கறேன். பேசாம படுக்கையிலேருந்து எளுந்து மூஞ்சியைக் களுவிக்கிட்டு வந்து சாஞ்சிருக்கேன். மூஞ்சியைக் காட்டுறியே. நீ என்ன குத்து விளக்கா? கண்ணாடியா? கட்டின பொஞ்சாதியா? சொல்லு-”

மூச்சு விடாமல் பேசிக்கொண்டே இருந்தார் அவர். ’பதில் சொல்லு சொல்லு’ என்று சொன்னாரே தவிர, அது வருவதற்கு இடங்கொடுக்காமல் பேசிக்கொண்டே இருந்தார். ஒரு பாக்கு வெட்டு நேரம் கூட சும்மா இருந்தால், அவன் ஆரம்பிக்கலாம். அவர் நிற்கவில்லை.

“ஏனையா, கோளி கத்தறத்துக்குள்ளாற இந்தத் தாடி, மீசை, களிசல், கையிலை ஒரு இளிக்கிற சொம்பு – இப்படி வந்து நிக்கிறியே…. உடனே போட்டுடுவாங்கன்னு நினைக்கிறியா? இல்லை சொல்லேன்? பேசாமடந்தையா நிக்கிறியே.”

நன்னையனுக்கு, “நீங்க பேசாம இருந்தா போதும். நான் போயிடறேன். சும்மா அலட்டிக்காதீங்க” என்று சொல்லிவிட்டுப் போய்விடலாம்போல் இருந்தது.

தெருவில் விளையாட்டுக் காண்பிக்கும் ஒரு குரங்காட்டியை பார்க்க நேர்கிறது. பேச்சுக்கொடுத்த குரங்காட்டி, நன்னையனது போதாத காலமறிகிறான். அவன் குடும்பத்தோடு உழல்வதைக்கண்டு உதவி செய்ய நினைத்து அவனைக் கூட்டிச்செல்கிறான் சேரிப்பக்கம். பிழைக்க வழிசெய்யவென ஒரு குரங்குக்குட்டியை அவனுக்குக் கிடைக்குமாறு செய்கிறான். ஐயஹோ! நமக்கும் இனி இதுதானா வாழ்க்கை எனக் கூனிக்குறுகி சேரியில் நிற்கிறான் நன்னையன். அவனுக்குத் தைரியம் சொல்லி பழக்கப்பட்ட அந்தக் குரங்குக்குட்டியை கூட்டிப்போய் பிழைத்துக்கொள்ளச் சொல்கிறான் அந்த நல்லமனசுக் குரங்காட்டி.

வாழ்ந்து கெட்ட தனக்கும், தன் குடும்பத்துக்கும் இந்தக் குரங்குக்குட்டியா புதுவாழ்வு தரும் என நம்ப முடியாதவனாகக் குழப்பத்துடன், ஒரு கையில் கம்பும், இன்னொரு கையில் கயிறுமுனைக் குரங்குமாக நகல்கிறான் நன்னையன். என்ன நடந்தது? அவனது பிச்சை வாழ்க்கை சீரானதா?

தொடர்ந்து படியுங்கள் நண்பர்களே. தி.ஜானகிராமனின் பஞ்சத்து ஆண்டி.

லிங்க்: https://azhiyasudargal.wordpress.com/2013/12/06/பஞ்சத்து-ஆண்டி-தி-ஜானகிர/

நன்றி: அழியாச்சுடர்கள் இணையதளம்.

**

தி. ஜானகிராமன்


தமிழின் அதிஅற்புதப் படைப்பாளிகளில் ஒருவரான தி.ஜானகிராமனின் சிறுகதை ஒன்றைப் பார்க்குமுன், அவர்பற்றிய சிறுகுறிப்பு ஒன்றைக் கீழே காண்போம்.

தமிழ் எழுத்துலகின் பிதாமகர்களில் ஒருவர் தி.ஜா. என்று அழைக்கப்படும் தி.ஜானகிராமன். தி.ஜா.வின் எழுத்தைப் பார்க்காமல், அலசாமல் தமிழின் நவீன இலக்கியம்பற்றிப் பேசுவதில், வெறுமனே சிலாகிப்பதில் அர்த்தமேதுமில்லை. நாவல், குறுநாவல், சிறுகதை என இயங்கியவர். பயணக்கட்டுரைகளும் இவரிடமிருந்து வந்திருக்கின்றன. கர்னாடக இசையில் ஆழ்ந்த ஞானமுடையவராதலால், சங்கீதமே எழுத்தாக மாறிய தருணங்களும் உண்டு. எவ்வளவோ சிறப்பிருந்தும், தன் காலகட்டத்திலேயே ஒரு சிறந்த இலக்கியவாதியாக மதிக்கப்பட்டு, விவாதிக்கப்பட்டுமிருந்தும், தன்னை முன்னிலைப்படுத்திக்கொள்ளத் தெரியாதவராக இருந்தார் அவர். மோகமுள், மரப்பசு, அம்மா வந்தாள் போன்ற, தமிழ் இலக்கிய விமரிசகர்களால், இலக்கிய ஆர்வலர்களால் அடிக்கடி விவாதிக்கப்படும் புதினங்களை இயற்றியவர். இவரது சிறுகதைத் தொகுப்புகளில் அக்பர் சாஸ்திரி, சிவப்பு ரிக்ஷா, சக்தி வைத்தியம், பாயசம், மனிதாபிமானம், ஒரு துளி துக்கம், எருமைப் பொங்கல் ஆகியவை சில. ‘சக்தி வைத்தியம்’ சிறுகதைத் தொகுப்பு சாகித்ய அகாடமி விருதை வென்றது. அவலும் உமியும், வீடு, ’நாலாவது சார்’ போன்ற குறுநாவல்களையும் இயற்றியவர். காவேரி நதிக்கரையோரம் சென்றுவந்த தன் பயண அனுபவங்களை ‘நடந்தாய் வாழி காவேரி’ என்னும் கட்டுரை நூலாகத் தந்துள்ளார். ஜப்பான், செக்கோஸ்லோவகியா, இத்தாலி, மலேஷியப் பயணங்கள் பற்றியும் நூல்கள் அவரிடமிருந்து வெளிவந்திருக்கின்றன.

தஞ்சாவூர் மாவட்டத்தின் தேவக்குடி என்கிற கிராமம் சொந்த ஊர். பள்ளி ஆசிரியராக ஐயம்பேட்டை, கும்பகோணம், குற்றாலம், சென்னை ஆகிய இடங்களில் தன் பணியைத் துவக்கியவர். பின்னர் ’ஆல் இந்தியா ரேடியோ’வில் சேர்ந்து, தலைமைக் கல்வி ஒலிபரப்பு அமைப்பாளராக உயர்ந்து, செவ்வனே பணியாற்றி ஓய்வுபெற்றார். இலக்கிய விமரிசகரும் எழுத்தாளருமான வெங்கட் சாமிநாதனுடன் ஆல் இந்தியா ரேடியோவின் தமிழ் ஒலிபரப்பு நிகழ்ச்சியில் ’சிறுகதை எழுதுவது எப்படி’ என விவாதம் செய்திருந்தார் தி.ஜா. சங்கீதம், நாட்டியம், பயணம் போன்றவை இலக்கியம் தாண்டி இவரை ஈர்த்த மற்ற சங்கதிகள். சமகால எழுத்தாளர்களான தஞ்சை ப்ரகாஷ், கரிச்சான் குஞ்சு, சுவாமிநாத ஆத்ரேயன், சிட்டி, எம்.வி.வெங்கட்ராம், வெங்கட் சாமிநாதன் ஆகியோரிடம் நெருங்கிய நட்புகொண்டிருந்தார் ஜானகிராமன்.

தி.ஜா.-வின் படைப்புலகம்பற்றி கவிஞர் சுகுமாரன் இப்படிச் சொல்கிறார்: ’தி. ஜானகிராமனின் கதைகளின் மைய அக்கறை ‘மனித சேஷ்டைகள்’தாம். மனிதர்களைக் கொண்டாடி அலுப்பதில்லை அவருக்கு. அன்பு, பாசம், காதல், பரிவு என்று வெவ்வேறு வார்த்தைகளில் சொல்லப்படும் உணர்வுநிலைகளின் மையமான மானுடக் கருணையே அவரது படைப்பின் மையம் என்று சொல்லத் தோன்றுகிறது.’

– அடுத்தாற்போல் கதை ..
*