கடந்த நூறாண்டு காலத்தில் எழுதப்பட்ட தமிழின் புகழ்பெற்ற அல்லது குறிப்பிடத்தக்க சிறுகதைகள் என அவ்வப்போது கண்ணில் தென்படுகின்றன. இணையத்திலோ, வேறெங்கோ படிக்கக் கிடைத்தால் வாசிக்கும் வழக்கம் உண்டு. சில கதாசாரியர்கள், சிறுகதைத் தலைப்புகளைப் பார்க்கையில், முதன்முறையாகக் கேள்விப்படுகிறோம் என்பதில், நாம் தமிழில் எவ்வளவு குறைவாகப் படித்திருக்கிறோம் என்பது தெளிவாகிறது. என்ன செய்ய? அதற்காக சிலர்போல மூசுமூசு-ன்னு படித்துத் தள்ளுபவன் நானல்ல. மெல்லத்தான், selective ஆகத்தான் வாசிக்கமுடியும்!
கண்ணில்பட்ட, எண்ணத்தைத் தொட்ட சில சிறுகதைகளின் தலைப்புகள் சற்றே அபூர்வமாக, விசித்திரமாக இருப்பதைக் கவனிக்கிறேன். சிலது நீ..ள..மாகக் காட்சியளித்து மிரட்டுகின்றன. ’என்ன நினைத்து என்னைப் படைத்தாயோ, ஏனிந்தப் பெயரை.. வைத்தாயோ..’ என்று சம்பந்தப்பட்ட கதையே அந்தக் கதாசிரியரைப் பார்த்துப் பாடுமோ என்னவோ!
சுவாரஸ்யத்துக்காக சில ‘நீளத் தலைப்புகள்’ கீழே:
நான் என்ன செய்யட்டும் சொல்லுங்கோ – ஜெயகாந்தன்
செம்பொனார் கோவிலுக்குப் போவது எப்படி – ந.முத்துசாமி
சிவப்பாய், உயரமாய், மீசை வச்சுக்காமல் – ஆதவன்
சிவப்புக் கழுத்துடன் ஒரு பச்சைப் பறவை – அம்பை
டெரிலீன் ஷர்ட்டும் எட்டுமுழ வேட்டியும் அணிந்த மனிதர் – ஜி.நாகராஜன்
தாயம்மா பாட்டி சொன்ன நாற்பத்தியோரு சிறுகதைகள் – எம்.யுவன்
ஓணான்கொடி சுற்றிய ராஜாம்பாள் நினைவுகள் – பவா. செல்லதுரை
கனவில் பெய்த மழையைப் பற்றிய இசைக்குறிப்புகள் – ப்ரேம்-ரமேஷ்
இருளப்பசாமியும் இருபத்தியோரு கிடாய்களும் – வேல.ராமமூர்த்தி
மனகாவலப் பெருமாள் பிள்ளை பேத்தி மறுவீடும், வெஜிடபிள் பிரியாணியும் – நாஞ்சில் நாடன்
கதாசிரியர்களின் சிந்தனையில் மாட்டிக்கொண்ட குழந்தைகள், தாத்தாக்கள், பாட்டிகள் :
தாத்தாவும் பேரனும் – தி.ஜானகிராமன்
தாத்தாவின் பேனா – கோணங்கி
சாமியாரும் குழந்தையும் சீடையும் – புதுமைப்பித்தன்
நட்சத்திரக் குழந்தைகள் – பி.எஸ்.ராமையா
குதுப்மினாரும் குழந்தையின் புன்னகையும் – இந்திரா பார்த்தசாரதி
காலமும் ஐந்து குழந்தைகளும் – அசோகமித்திரன்
சிறுமி கொண்டுவந்த மலர் – விமலாதித்த மாமல்லன்
குழந்தைகள் – அசோகமித்திரன்
ஒரு எட்டு வயதுப் பெண் குழந்தையும், நவீன மலையாளக் கவிதையும் – நகுலன்
மறைந்து திரியும் கிழவன் – சுரேஷ்குமார இந்திரஜித்
காலனும் கிழவியும் – புதுமைப்பித்தன்
ஒரு பழைய கிழவரும் புதிய உலகமும் – ஆதவன்
இப்பிடியெல்லாமா ஒரு தலைப்பு (புரியலையே சாமி!) :
ரி – அ.முத்துலிங்கம்
ரீதி – பூமணி
தனுமை – வண்ணதாசன்
நுகம் – எக்பர்ட் சச்சிதானந்தம்
நீதம் -லட்சுமணப் பெருமாள்
மாஞ்சு -சுஜாதா
அன்னமயில் -வேல.ராமமூர்த்தி (அன்னமா, மயிலா.. தெளிவாச் சொல்லுய்யா!)
இதெல்லாம் -பெரும்பாலும்- அந்தக் கால எழுத்தாளர்களின் வேலை.. இப்போது எழுதிவரும் ஆசாமிகள் என்னென்ன சிந்தித்து எதைத் தலைப்பாக வைப்பார்களோ யாரேயறிவார்? எது எப்படியோ, இலக்கிய வாசக, வாசகியருக்கு கும்மாளம்தான்!
**