ஏலம் ! ஐபிஎல் 2020

 

19 டிசம்பர் 2019-ல், கொல்கத்தாவில் கோலாகலமாக நடந்த ஐபிஎல் (IPL-Indian Premier League) ஏலத்தை ஸ்டார் நெட்வொர்க்கில் பார்த்துக் களித்தேன். 8 ஐபிஎல் அணிகளும் முக்கியமெனத் தாங்கள் கருதிய போனவருடத்திய வீரர்கள் 10-15 பேரைத் தக்கவைத்துக்கொண்டு, மீதமுள்ளவர்களை ஏலத்தில் தூக்குவதில் போட்டிபோட்டன. ஏலத்தில் இருந்த 338 கிரிக்கெட் வீரர்களில் இந்திய மற்றும் அந்நியநாட்டு வீரர்கள் பலர். அதிரடி பேட்ஸ்மன்கள், ஆக்ரோஷ பௌலர்கள், ஆல்ரவுண்டர்களோடு, விக்கெட்கீப்பர்கள் சிலர்  என சுவாரஸ்யக் கதம்பம். ஏலத்தில் எடுக்கப்படவேண்டியவர்கள்இந்த 338-லிருந்து, 73 பேர்கள்தான்.   சிறந்த வீரர்கள் அல்லது அணியின் தேவைக்கேற்றவர்கள் எனக் கருதப்பட்டவர்களுக்காக நான், நீ என போட்டாபோட்டி ஆரம்பமானது.

SRH -இன்
காவ்யா !

அந்தந்த அணியின் ஜெர்ஸி நிறத்திற்கேற்ப அணியின் உரிமையாளர்கள் அல்லது தேர்வாளர்கள், ஆலோசகர்கள் உட்கார்ந்திருந்த நாற்காலிகள்-மேஜைகள் – ஒரே வண்ணமயம்தான். பளிச்சென்று தெரிந்தவை பஞ்சாபின் சிவப்பு மேஜை, சென்னை(CSK)யின் மஞ்சள், கொல்கத்தா(KKR)வின் பர்ப்பிள், மும்பை(MI)அணியின் நீலம். மும்பை அணிக்கென நீத்தா அம்பானி (Nita Ambani) பிரதானமாக பளபளவென அமர்ந்திருந்தார்! பஞ்சாபிற்காக ஒவ்வொரு வருட ஏலத்தின்போதும் வந்து, கூந்தலை இடது வலதாகக் கோதி அலையவிடும் , அணி உரிமையாளர்களில் ஒருவரான நடிகை ப்ரீத்தி ஜிந்த்தா (Preity Zinta) வராதது ஏமாற்றம் வேடிக்கை பார்ப்பவருக்கு. கொல்கத்தா அணிக்கானவர்களில் முன்னாள் பாலிவுட் பிரபலம் ஜூஹி சாவ்லா வெள்ளையில் வந்து அமர்ந்திருந்தார். இருந்தும் டிவி பார்ப்போர் மற்றும் பார்வையாளர்களின் கண்கள் அடிக்கடி மேய்ந்தது ஹைதராபாத் அணியின் பக்கம்தான். என்ன விசேஷம்? அங்கே ஒரு மஞ்சள் முகம். துறுதுறு யுவதி! யாரது என்கிற க்யூரியாஸிட்டி இந்தியர்களின் மண்டையைப் பிளந்துவிடுமே! பின்னர் தெரிந்தது. சன் ரைஸர்ஸ் ஹைதராபாத் (SRH) அணியின் சொந்தக்காரரான கலாநிதி மாறனின் மகள். காவ்யா. வெள்ளைப்பல்வரிசை மின்ன அடிக்கடி சிரித்துக்கொண்டும், பேசிக்கொண்டும், ஏலத்தைத் தூக்கிவிட்டுக்கொண்டும் ஆனந்தமாக இருந்தார். கிரிக்கெட்டில் ஏகப்பட்ட ஆசை என்பதோடு, ‘ஸன் குழும’த்தில் மியூஸிக் இன்-சார்ஜாம் காவ்யா. உபரி தகவல்.   

மேடையில் ஏலம்கூவுபவர் (auctioneer) ஒவ்வொரு செட் செட்டாக அமைக்கப்பட்ட வீரர்களின் பெயர்களிலிருந்து ஒரு சீட்டை வாங்கி, குறிப்பிட்ட வீரரின் பெயரை, ஏற்கனவே அணிகளுக்குக் கொடுக்கப்பட்ட பட்டியல்படி வரிசைஎண்ணோடு  மைக்கில் அறிவிக்கிறார். சில சமயங்களில் ஆஸ்திரேலியா, நியூஸிலாந்து என (அவருக்குப் பிடித்த?) நாட்டின் பெயரையும் சொல்வதுண்டு. மற்றபடி ஏலத்திற்கு விடப்படும் வீரர் ஒரு பௌலரா, பேட்ஸ்மனா என்று சொல்வதில்லை. புகழ்பெற்ற வீரர் பெயர் வரும்போது இது பிரச்னையில்லை. 22-23 வயதிற்குக்கீழ்ப்பட்டவர்கள், Under-19 அணிவீரர்கள் பெயர் தலைகாட்டும்போது, யாரப்பா இது, பேட்ஸ்மனா, பௌலரா எனக் குழப்பம் ஏற்படுகிறது. டிவியில் ஓரத்து விண்டோவில், இதுவரை அவர் ஆடிய ஆட்டம்பற்றி கொஞ்சம் புள்ளிவிபரம் தெரிகிறது! அணிக்காரர்கள், வீரரின் எண்ணை வைத்து, தங்கள் பட்டியலில் அவரின் விளையாட்டுக் கதையைப் பார்த்துக்கொள்கிறார்கள்.   உடனே ஒவ்வொரு மேஜையைச்சுற்றிலும் படபட ஆலோசனை, லேப்டாப்பில் அந்த வீரர் பற்றிய புள்ளிவிபரங்களை ஆராய்தல், தலையைச் சொறிதல், பக்கத்திலிருப்பவர் காதில் ஓயாத கிசுகிசு, யார் முதலில் கையைத் தூக்குகிறார்கள் என நோட்டம்விடல், தானும் 10, 20 லட்சமெனத் தூக்கிவிட்டுப் பார்த்தல், நேரம் பார்த்து அமுங்கிவிடல் – என ஒரே அமர்க்களம். இந்த மாதிரிக் கூத்துகளிடையே இந்திய, அந்நிய வீரர்கள் விலைபோனார்கள்.

சின்னப்பையன் ஜெய்ஸ்வால் !

ஏலத்தின் ஆரம்பத்தில் ஆஸ்திரேலியாவின் க்றிஸ் லின் (Chris Lynn)-ஐ மும்பை இண்டியன்ஸ் ஆரம்பத்தொகையான (player’s base price) ரூ.2 கோடிக்கே வாங்கியது. நீத்தா அம்பானியின்  முகத்தில் மலர்ச்சி! கடந்த சீசனில் KKR-அணிக்கு விளையாடிய அதிரடி வீரர் இந்த லின். ராபின் உத்தப்பா, மற்றும் ஜெயதேவ் உனாட்கட்டை (Jayadev Unadkat) ராஜஸ்தான் ராயல்ஸ், தலா ரூ.3 கோடிக்கு ஏலம் எடுத்தது. Good buys. ஆனால் கொல்கத்தா நைட் ரைடர்ஸ்(KKR) இங்கிலாந்து கேப்டன் அய்ன் மார்கனுக்கு(Eoin Morgan) ரூ.5.25 கோடி கொடுத்தது அதிகம்தான். பார்க்கலாம். ஆஸ்திரேலிய டி-20 கேப்டன் ஆரோன் ஃபிஞ்சை(Aaron Finch), விராட் கோஹ்லி தலைமை தாங்கும் பெங்களூரு அணி ரூ.4.4 கோடிக்கு வாங்கியது. அவரது திறமைக்கு அது சரியான விலை. இங்கிலாந்தின் ஜேஸன் ராய், டெல்லி கேப்பிடல்ஸ் அணியால் ரூ.1.5 கோடிக்கு மலிவாகத் தூக்கப்பட்டார். இந்திய டெஸ்ட் வீரர்களாக முத்திரை குத்தப்பட்ட புஜாரா, விஹாரி ஆகியோரை எந்த அணியும் ஏறெடுத்தும் பார்க்கவில்லை. ஸ்டூவர்ட் பின்னி, மனோஜ் திவாரி ஆகியோரும் ஏலம் போகவில்லை. Sad.

இரண்டாவது ரவுண்டிலிருந்து, ஏலம் வெகுவாக சூடுபிடித்தது. ஆஸ்திரேலியாவின் வேகப்பந்துவீச்சாளர் பேட் கம்மின்ஸ் (Pat Cummins) பெங்களூர், டெல்லி அணிகளுக்கிடையே புகையைக் கிளப்பினார். மாறி மாறி இரு அணிகளும் விலையை உயர்த்த, 14.75 கோடிவரை ஏற்றிவந்த டெல்லி, தடாலென்று விலகிக்கொண்டது! உள்ளே புகுந்தது கொல்கத்தா. பெங்களூரோடு கடும்போட்டி போட்டு, ரூ.15.5 கோடிக்கு கம்மின்ஸை வாங்கியது. இந்த அளவுக்கு இவருக்கு hype தேவைதானா? கம்மின்ஸ் தன் வேகத்தை ஆட்டத்தில் காண்பிப்பாரா? விக்கெட்டுகள் விழுமா,  இல்லை, KKR-ன் ஷாருக் கானுக்கு நாமம் தானா!

அதிக விலைக்குப்போன மேலும் சில வெளிநாட்டு வீரர்கள்: போனவருடம் ஐபிஎல் ஆடாத, ஆஸ்திரேலியாவின் ஆல்ரவுண்டர் க்ளென் மேக்ஸ்வெல்(Glenn Maxwell) ரூ. 10.75 கோடி (பஞ்சாப்), தென்னாப்பிரிக்காவின் ஆல்ரவுண்டர் க்றிஸ் மோரிஸ் (Chris Morris) ரூ. 10 கோடி (பெங்களூர்), முதன்முதலாக ஐபிஎல் ஏலத்தில் பங்குபெற்ற வெஸ்ட் இண்டீஸின் பௌலர், ‘சல்யூட்’ புகழ் ஷெல்டன் காட்ரெல் (Sheldon Cottrell) ரூ. 8.25 கோடி (பஞ்சாப்), ஆஸ்திரேலிய வேகப்பந்துவீச்சாளர் நேத்தன் கூல்டர்-நைல் (Nathan Coulter-Nile) ரூ.8 கோடி(மும்பை), வெஸ்ட் இண்டீஸின் அதிரடி பேட்ஸ்மன் ஹெட்மயர் (Shimron Hetmyer) ரூ. 7.75 கோடி (டெல்லி).

போனவருட வீரர்களை அதிகமாகக் கழட்டிவிடாமல் வைத்துக்கொண்டதால், கொஞ்ச இருப்புப் பணத்துடன் உட்கார்ந்து, மற்றவர்கள் பணத்தை விசிறி ஏலம் எடுப்பதை வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்த சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK), திடீரென ஒரு சமயத்தில் உள்ளே புகுந்து, இங்கிலாந்தின் வேகப்பந்துவீச்சாளர் சாம் கர்ரன் (Sam Curran)-ஐ ரூ.5.5 கோடிக்கு வாங்கியது. நல்ல பர்ச்சேஸ்தான். ஆனால் சென்னை, ஸ்பின்னர் பியுஷ் சாவ்லாவுக்கு ரூ.6.75 கோடி கொடுத்தது அசட்டுத்தனம். சென்னையிடம் ஏற்கனவே ஜடேஜா, ஹர்பஜன், கரன் ஷர்மா ஆகிய ஸ்பின்னர்கள் உண்டு.  இறுதியில் பணம் கரைந்துவிட்ட நிலையில், முதல் ரவுண்டில் ஏலம்போகாத TNPL ஸ்டாரான ஸ்பின்னர் சாய் கிஷோரை, 20 லட்ச ரூபாய்க்கு மலிவாக வாங்கிப் போட்டது சென்னை.  தமிழ்நாட்டின் இன்னுமொரு TNPL ஸ்பின்னரான, வித்தியாச ஆக்‌ஷன் காட்டும் வருண் சக்ரவர்த்தி ரூ.4 கோடிக்கு, கொல்கத்தா அணியினால் வாங்கப்பட்டார். கேப்டன் தினேஷ் கார்த்திக்கின் ‘சாய்ஸ்’ ஆக இருந்திருக்கும்.

பெரிசு: ப்ரவீன் டாம்பே

 இந்தியாவின் 19-வயதிற்குக் கீழ்ப்பட்டோரின் கிரிக்கெட் அணியிலிருந்து சில வீரர்கள் ஏலத்தில் எடுக்கப்பட்டது நேற்றைய விசேஷம்.  இந்திய U-19 கிரிக்கெட் கேப்டன் 19-வயது ப்ரியம் கர்க் (Priyam Garg) மற்றும் 22-வயது அதிரடி ஜார்கண்ட் பேட்ஸ்மன் விராட் சிங் ஆகியோர் தலா ரூ. 1.90 கோடிக்கு ஹைதராபாத் அணியினால் ஏலம் எடுக்கப்பட்டார்கள். கோச் வி.வி.எஸ். லக்ஷ்மணுடன் பேசியபின், நம்ப காவ்யா செய்த வேலை! மேலும், லெக்-ஸ்பின்னர் ரவி பிஷ்னோய் பஞ்சாப் அணியினால் 2 கோடி ரூபாய்க்கு வாங்கப்பட்டார். ராஜஸ்தான் பார்த்துக்கொண்டிருக்குமா? இந்திய U-19-அணிக்காகத் தேர்வாகியிருக்கும் 17-வயது பேட்ஸ்மன் யஷஸ்வி ஜெய்ஸ்வால்  (Yashaswi Jaiswal) -ஐ ரூ.2.40 கோடிக்கும், வேகப்பந்துவீச்சாளர் 19-வயது கார்த்திக் தியாகியை ரூ.1.30 கோடிக்கும் வாங்கியது. எதிர்காலத்தை மனதில் கொண்டு இரு இளைஞரையும் அணியில் இணைத்துக்கொண்டதாக ராஜஸ்தான் விளக்கியது. உத்திரப்பிரதேசத்தில் ஏழைக்குடும்பத்தில் பிறந்து, 15 வயதுவரை பானி-பூரி விற்றுவந்த சின்னப்பையன் ஜெய்ஸ்வாலின் எதிர்காலம் கண்ணுக்குத் தெரிய ஆரம்பித்துவிட்டது எனச் சொல்லலாமா?

இளசுகளா பார்த்து அணிக்குள் அள்ளிப்போட்டா எப்படி? பழுத்த பழத்தை யாராவது வாங்கவேண்டாமா? ப்ரவீன் டாம்பே (Pravin Tambe) என்கிற லெக்-ஸ்பின்னரை ரூ.20 லட்சத்துக்கு வாங்கியது கொல்கத்தா அணி. டாம்பேக்கு வயசு? சும்மா 48-தான்!

**