தென்னாப்பிரிக்காவில் நேற்று இரவு முடிந்த ஃபைனலில் இந்தியாவைத் தோற்கடித்த பங்களாதேஷ், முதல்தடவையாக U-19 உலகக் கோப்பையை வென்றது. Potchefstroom -ன் ஸென்வெஸ் பார்க் மைதானத்தில் கிரிக்கெட் நடந்தது என்பதைவிட, வாய்ச்சவடால்களும், வெறித்தனங்களும் அரங்கேறியிருக்கிறது. குறிப்பாக ஃபைனலின் கடைசிப் பகுதியில் காணப்பட்ட வன்மம், ஐசிசி-யின் கடும் கவனத்துக்கு வந்திருக்கிறது. பங்களாதேஷின் கொண்டாட்டம் என்பது மைதானத்தில் ரௌடித்தனம் என்கிற அளவுக்குப் போய்விட்டது எனவே தோன்றுகிறது. Their reaction was dirty – என்று ‘லேசாக’க் குறிப்பிட முனைகிறார் இந்தியக் கேப்டன் ப்ரியம் கர்க் (Priyam Garg). பங்களாதேஷ் கேப்டன் அக்பர் அலி ”What happened, should not have happened. I am sorry on behalf of the team..” என்று தடுமாறிச் சொல்லியிருக்கிறார். மேட்ச் ரெஃப்ரீயிடம் முறையீடு செய்யப்போன, அதிர்ச்சியிலிருந்த இந்திய மேனேஜ்மெண்ட்டிடம், மேட்ச்சின் video footage-ஐப் பார்த்து முடிவெடுக்கவிருப்பதாக சமாதானப்படுத்தியிருக்கிறது ஐசிசி.

கிரிக்கெட் கோணத்தில் பார்க்க, மேட்ச்சில் என்னதான் நடந்தது? டாஸ் வென்ற பங்களாதேஷ், முதலில் பந்துவீச்சு என்றது. மைதானத்தின் ஈரப்பதம் வேகப்பந்துவீச்சுக்கு இசைவானது என்கிற அதன் முடிவு சரி என்றவாறு, அதீத நிதானம் காட்டி ஆட ஆரம்பித்து ரன் எடுக்கமுடியாமல் தடுமாறியது இந்தியா. இரண்டாவது ஓவரிலேயே பங்களாதேஷ், தங்கள் எதிரியான இந்திய அணியை எப்படி அணுகப்போகிறது என்கிற ஹிண்ட் கிடைத்தது. ஷொரிஃபுல் இஸ்லாமின் பந்தொன்றை முன் வந்து தடுத்தாடினார் திவ்யான்ஷ் சக்சேனா. உடனே பாய்ந்து வந்து பந்தை எடுத்த இஸ்லாம் ஏதோ ரன் -அவுட் செய்யமுயற்சிப்பதாகக் காட்டி சக்ஸேனாவின் தலையை நோக்கி வேகமாகப் பந்தை எறிந்தார். சக்ஸேனா உடனே குனிய, பந்து விக்கெட்கீப்பரிடம் சென்றது. இங்கே நிற்கவில்லை இஸ்லாம். சக்ஸேனாவை நெருங்கி, அவர் முகத்துக்கெதிரில் ஏதோ முணுமுணுத்துக் கடுப்பேற்றியது தெரிந்தது. மேட்ச் முழுதும் இஸ்லாம் அளவுமீறிய sledging-ல் ஈடுபட்டு இந்திய பேட்ஸ்மன்களின் கவனத்தைக் கலைக்க முயன்றார். (இறுதியில் நடந்த fracas-லும் ஷொரிஃபுல் இஸ்லாமின் பங்கு தனித்து வெளிப்பட்டது.)
இந்தியாவின் அளவுக்கதிகமான தடுப்பாட்டம் அதை நிர்கதியில் கொண்டுபோய்விடும் என துவக்கத்திலேயே சிக்னல் கிடைத்தது. முதல் பவர் ப்ளேயில் (1-10 ஓவர்கள்) இந்தியா ஒரு விக்கெட்டை இழந்து 26 ரன்கள். முட்டாள்தனமான அணுகல். அடுத்த கட்டங்களிலும் இந்த ‘கவனமான’ ஆட்டம் தொடர்ந்தது. ஜெய்ஸ்வால் மட்டும் அவ்வப்போது ஆவேசமாக மட்டையை சுழற்றினார். திலக் வர்மா (நம்பர் 3) பொறுப்பாக, ஆனால் மெதுவாக ரன் சேர்க்க முயன்று 38 ரன்னில் அவுட்டானார். அடுத்தமுனையில் வலிமை காண்பித்த ஜெய்ஸ்வாலோடு, சேர்ந்து ஆட ஒரு பேட்ஸ்மன் கிடைத்தால்தானே. கேப்டன் ப்ரியம் கர்க், சித்தேஷ் வீர், அன்கொலேகர் ஆகியோர் தெண்டம். 20-30 ரன் எடுக்கக்கூட மிடில் ஆர்டர் பேட்ஸ்மன்களால் முடியவில்லை என்றால் பங்களாதேஷுக்கு சவாலான ஒரு டோட்டலை எப்படிக் கொடுக்கமுடியும்? 22 ரன் எடுத்து விக்கெட்கீப்பர்-பேட்ஸ்மன் ஜுரெல் வீழ்ந்தவுடன், தொடர்ந்து சரிவுகள். போதாக்குறைக்கு மடத்தனமான ஒரு ரன்-அவுட் வேறு. அன்கொலேகரும், ஜுரெலும் தேவையில்லாத சிங்கிள் எடுக்க முயன்று, ஒரே பக்கத்தில் கோட்டைத் தொடமுயற்சித்த அபத்தக் காட்சி! யாருக்கு ரன் -அவுட் கொடுப்பது என்றே ஆன்-ஃபீல்டு அம்பயர்களால் முடிவு செய்ய முடியவில்லை! இதுவா உலகக்கோப்பை ஃபைனலில் பேட்டிங் செய்கிற லட்சணம்? ஜெய்ஸ்வால் மட்டும் ஒளிர்ந்தார். அபாரமாக ஆடி, 88 ரன் எடுத்து அவர் அவுட் ஆனவுடன், அடுத்துவந்த இந்திய பேட்ஸ்மன்கள் விழித்தார்கள். க்ரீஸில் ‘நிற்க’ முயன்றார்கள். பங்களாதேஷின் வேகப்பந்துவீச்சு – குறிப்பாக ஷொரிஃபுல் இஸ்லாம் – அவர்களை அங்கே தங்கவிடவில்லை. ஆஃப் ஸ்பின்னர் ரகிபுல் ஹாஸன் (Rakibul Hassan) அளவாக, அருமையாக வீசி இந்தியர்களை இறுக்கினார். சிங்கிள் எடுத்தாலே சாதனை என்கிற அளவிற்கு போய்விட்டிருந்தது நிலைமை! இறுதியில் கடைசி 7 இந்திய விக்கெட்டுகள் 21 ரன்களில் பறிபோனதென்றால், பார்த்துக்கொள்ளுங்கள். 177-ல் இந்தியா ஆல் அவுட். அவிஷேக் தாஸ் 3, ஷொரிஃபுல் இஸ்லாம் 2 விக்கெட்கள்.
ப்பூ..! 178 தானா எடுக்க வேண்டும் உலகக்கோப்பையை வெல்ல! பங்களாதேஷிற்கு ஒரே குஷி. துவக்க ஆட்டக்காரர்கள் இந்திய வேகப்பந்துவீச்சை அனாயாசமாகத் தாக்கி ரன் சேர்த்தார்கள். இந்தியாவின் ஸ்பின் ஸ்டாரான ரவி பிஷ்னோய் வரும்வரை ஆட்டம்போட்டார்கள். பிஷ்னோய் லெக்-ஸ்பின் 5 ஓவர் போட்டார். 4 பங்களாதேஷ் பேட்ஸ்மன் உடனடியாக பெவிலியன் வாபஸ்! Classic leg spin on show. இதில் ஜுரெல் நிகழ்த்திக்காட்டிய மின்னல்வேக ஸ்டம்பிங்கும் அடங்கும். தொண்டையில் ஏதோ சிக்கிக்கொண்டது போலிருந்தது இப்போது பங்களாதேஷிற்கு. பிஷ்னோய் ஒரு பக்கம் பங்களாதேஷிகளைப் போட்டு இறுக்க, அடுத்தபக்கத்தில் இந்திய வேகப்பந்துவீச்சு நேரங்காலம் தெரியாமல் சொதப்பியது. எக்ஸ்ட்ரா ரன்கள்வேறு இந்தியாவின் நிலையை மோசமாக்கியது. தொடையில் தசை இறுக்கம் எனச் சொல்லி பாதியில் வெளியேறியிருந்த பர்வேஸ் இமோன் இப்போது திரும்பிவந்து ஆடினார். பிஷ்னோயின் கடைசி இரண்டு ஓவர்களை ஜாக்ரதையாகத் தடுத்தாடி, விக்கெட் விழாமல் பார்த்துக்கொண்டார். கேப்டன் அக்பர் அலி விவேகத்துடன் அதிரடியைத் தவிர்த்து சிங்கிள் சிங்கிளாக ஓடியதோடு, எதிர் நிற்கும் பேட்ஸ்மனை நிதானப்படுத்திக்கொண்டு ஆடியது பங்களாதேஷ் வெற்றிக்கு வழிவகுத்தது. இறுதிப் பகுதியில் சுஷாந்த் மிஷ்ரா 2 மற்றும் ஜெய்ஸ்வால் ஒரு விக்கெட் வீழ்த்தியும் பங்களாதேஷை நிறுத்த இந்தியாவால் முடியவில்லை. ஃபீல்டிங்கும் மோசம். இமோன் 47-ல் விழுந்தார். பங்களாதேஷ் ஸ்கோர் 163/ 7 என இருக்கையில், மழைவந்து பூச்சி காட்டியதால், ஆட்டம் கொஞ்சநேரத்துக்கு நிறுத்தப்பட்டது. திரும்பி பங்களாதேஷ் வருகையில், DL-முறையின்படி அவர்கள் 170 எடுத்தால் வெற்றி என்ற நிலை. பங்களாதேஷ் பதற்றம் காட்டாது தட்டித் தட்டி வெற்றி இலக்கை அடைந்தது. இறுதிப்போட்டியில் சிறப்பாக ஆடிய அணி. கேப்டன் அக்பர் அலி 43 நாட்-அவுட். பங்களாதேஷுக்கு முதல் உலகக்கோப்பை இது. அக்பர் அலி பங்களாதேஷின் overnight hero !
ஆட்டநாயகனாக பங்களாதேஷின் அக்பர் அலி, தொடர் நாயகனாக இந்தியாவின் யஷஸ்வி ஜெய்ஸ்வால் விருதுபெற்றனர்.
Tailpiece : இறுதிக்கட்ட டிராமாபற்றி தங்களுக்கு வந்த வாசகர் கருத்துகளில், ‘டாப் கமெண்ட்’- ஆக ’டைம்ஸ் ஆஃப் இண்டியா ‘ நாளிதழ் இதனை வெளியிட்டுள்ளது :
”Hateful people overall. No class, no manners, whatsoever. Winning 1 or 2 matches out of hundreds of matches, that too in under 19, when India’s Sr team has beaten them black and blue so many times but never behaved like wild animals. This speaks a lot about their upbringing, education and overall traits as human beings. Shameful is a very soft word for them.”
..