மொஹாலியில் கோஹ்லி !

நேற்று(23-10-16) பஞ்சாபின் மொஹாலி மைதானத்தில் விராட் கோஹ்லி ஆடிய ஆட்டமிருக்கிறதே, அடடா! ரொம்ப நாளைக்கப்புறம் கொஞ்சம் ஃப்ரீயாக மட்டையைச் சுத்த விரும்பினார் போலும். விளைவு? 154 நாட் அவுட்! `இலக்கைத் துரத்த ஆரம்பித்துவிட்டால், கோஹ்லியை நிறுத்தமுடியாது`! இது வில்லியம்சனின் கமெண்ட்.

இந்தியாவுக்கு எதிரான 3-ஆவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில், நியூஸிலாந்து முதலில் பேட் செய்தது. டாம் லேத்தம், ராஸ் டேய்லர், ஜிம் நீஷம், மாட் ஹென்ரி ஆகியோரின் திறமையான ஆட்டத்தினால், நியூஸிலாந்து முதன் முறையாக இத்தொடரில் 280-க்கு மேல் ஸ்கோர் செய்து அசத்தியது. இந்திய ஸ்பின்னர்கள், கேதார் ஜாதவ், அமித் மிஷ்ரா மற்றும் அக்‌ஷர் பட்டேல் நெருக்கடியாகப் பந்து வீசுகையில், நியூஸிலாந்து இந்தமுறையும் 250-ஐத் தொடாது என்றே தோன்றியது. ஆனால் 9-ஆவது விக்கெட்டிற்காக நீஷம்-ஹென்ரி ஜோடியின் பிரமாத பேட்டிங்கினால் நியூஸிலாந்து ஸ்கோர் 285 வரை வந்தது. இறுதியில் பௌலிங் செய்த உமேஷ் யாதவை அடித்து விளையாடி இருவரும் பழிதீர்த்துக்கொண்டனர். யாதவ் 3 விக்கெட் எடுத்தும் 75 ரன்கள் விட்டுக் கொடுக்கவேண்டியதாயிற்று. கேதார் ஜாதவுக்கு 5 ஓவர்கள் மட்டுமே கொடுக்கப்பட்டது. இருந்தும் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். மிஷ்ரா, பட்டேலின் சுழல்வீச்சு ரன் அதிகம் கசிந்துவிடாமல் தடுத்தது.

286 என்கிற இலக்கு இந்தியாவை ஆச்சரியப்படுத்தியது; சற்றே பயமுறுத்தியது. டெல்லியில் திணறியதுபோலவே, துவக்கவீரர்களான ரோஹித் ஷர்மாவும், அஜின்க்யா ரஹானேயும் நின்று ஆடமுடியவில்லை. மணீஷ் பாண்டேவுக்கு முன்னால் களமிறங்கிய தோனி, வெகுநாட்களுக்கப்புறம் பழைய தோனிபோல் விளையாடினார். கோஹ்லியுடன் சிறப்பான பார்ட்னர்ஷிப் அமைந்ததால் நியூஸிலாந்து பௌலர்கள் திணறினர். தோனி 80 ரன்கள் எடுத்தபின் தான் அவரை வெளியேற்ற நியூஸிலாந்தால் முடிந்தது. மறுமுனையில் அசத்திக்கொண்டிருந்தார் விராட் கோஹ்லி. மணீஷ் பாண்டே இறங்கியபின் மேலும் வேகம் காட்டினார் கோஹ்லி. ஒரு-நாள் போட்டிகளில் தனது 26-ஆவது சதத்தைப் பிடித்தபின், சூடு அதிகமாகியது. மைதானத்தில் ரசிகர்களின், குறிப்பாக கன்னத்தில் மூவண்ண முத்திரை இட்டுக்கொண்டு வந்திருந்த இளம் பஞ்சாபிப்பெண்களின் குதூகலம் உச்சத்தில் இருந்தது. நியூஸிலாந்தின் ட்ரெண்ட் போல்ட் வீசிய 48-ஆவது ஓவரில் ருத்ர தாண்டவம் ஆடிய கோஹ்லி, 3 பௌண்டரிகளை விளாசி, ஒரு சிக்ஸரையும் பறக்கவிட்டார். ஒரு ரன் வெற்றிக்குத் தேவைப்படுகையில், 49-ஆவது ஓவரின் 2-ஆவது பந்தை பௌண்டரிக்குத் தட்டிவிட்ட பாண்டே, இந்திய வெற்றியை உறுதி செய்தார்.

ஒரு வருஷம் கழித்து தோனி அடித்த முதல் அரைசதமாகும் இந்தப் போட்டியில் அவர் அடித்த 80. இந்தியா வெற்றி இலக்கை துரத்தும்போதெல்லாம் விராட் கோஹ்லி அருமையாக ஆடி இதுவரை 16 சதங்களை அடித்துள்ளார். துரத்தலில் அவரது ரன் சராசரி: 90.10. Truly masterclass.

இது ஒருபுறமிருக்க, நம்ப ரோஹித்துக்கு என்னதான் ஆயிற்று? அடுத்த மேட்ச்சிலாவது அவரது மட்டை பேசுமா?