பாலித்தீன் சொக்கப்பனை

நெருக்கித் தெறிக்கும்
நகர வீதிகளில்
யார்மீதும் மோதிவிடாமல்
ஓரமாக ஊர்ந்து செல்வதும்
அவ்வளவு எளிதான காரியமில்லை
எங்கோ ஏதோ எரியும்
விஷ வாடை நாசியைத் தீண்டுகிறது
அருகில் நெருங்குகையில் தெரிகிறது
சாலையோரக் குப்பைக்குன்றில்
யாரோ தீ மூட்டியிருக்கிறார்கள்
கிழிக்கப்பட்ட பால் பாக்கெட்
உபயோகமான ஏதேதோ
நுகர்வோர் பொருட்கள்,
ரசாயனக் கழிவுகள்
தீக்கங்குகள் தீண்டி மகிழ
பாலித்தீனும் பிளாஸ்டிக்கும்
கக்குகின்றன நச்சுப்புகையை
மூச்சைத் தற்காலிகமாக நிறுத்தி
வேகமாகக் கடக்கையில்
நினைவில் எழுந்து ஆடுகிறது
அந்தக் கலகல கிராமத்தின்
கார்த்திகை இரவு மைதானம்
பழம்பெரும் சிவன் கோவிலுக்கருகில்
பனைமட்டைகளோடு கட்டப்பட்ட
நெற்கதிர்களும் மரக்கிளைகளும்
கோபுரமாய் உயர்ந்து நிற்க
கொளுத்தப்பட்ட சொக்கப்பனை
ஜ்வாலையின் நடிக்கும் ப்ரகாசத்தில்
ஒருவரை ஒருவர் ஆச்சரியமாகப் பார்த்து
சீண்டிக்கொண்டது
சிரித்துக்கொண்டது
ஆழ்மனதிலிருந்து மேலெழுந்தன
அந்த காலத்தின் அழகுக் காட்சிகள்
ஒரு கணம் நகரம் விழுங்கப்பட
ஒளிர்ந்தது பளிச்சென
குளிர்ந்த மனதின் குழந்தைத்தனம்

**