குழந்தையை இங்கிட்டுக் குடுத்துட்டு, போங்க உள்ளே !

 

நமது நாட்டில் நெருக்கடியான சமூக, அரசியல் சூழல்களிலும், அடிக்கடி தாக்கும் இயற்கைச் சீற்றங்களின்போதும் ராணுவம் மற்றும் துணைராணுவத்தினர் (para-military forces), தங்கள் பணி எல்லைகளைத் தாண்டி, ஒரு அவசர நிலையில், அதிரடியாக மக்கள் சேவைகளில் மத்திய அரசினால் ஈடுபடுத்தப்பட்டு  வருகிறார்கள். அஸ்ஸாம், மகாராஷ்ட்ரா, மேற்கு வங்கம், ஒடிஷா, குஜராத், கேரளா ஆகிய மாநிலங்கள் கடந்த சிலமாதங்களாக கடும் மழை, ஆற்றுவெள்ளம் ஆகியவற்றால் பாதிக்கப்பட்டு குடிசைகளும், சிறுவீடுகளும் அடித்து செல்லப்பட்டபோது,  ராணுவத்தினர் தங்கள் உயிரைப் பணயம் வைத்து ஆற்றில் குதித்து, வெள்ளத்தில் சிக்கிய வயதானோர், குழந்தைகளை மீட்டுவந்தது, ஆங்காங்கே நிகழ்வுகளாகப் படங்களுடன் மீடியாவில் தெரியவந்தன. கூடவே, அவ்வப்போது மாநில காவல்துறை அதிகாரிகள், காவலர்களின் பணிகளும், சாதாரண மக்களுக்காக செய்த திடீர் ஒத்தாசைகளும் தெரியவந்ததில், பொதுவாக எதற்கெடுத்தாலும் குறைகூறிக்கொண்டிருக்கும்  ஜனங்களுக்கும் ஒரு அசாதாரண திருப்தி. அப்பாடா,  ஏதோ கொஞ்சம் நல்லவங்களும் இருக்காங்கபோலத் தெரியுதே!

எந்த வகையான அரசுப் பணியில் நியமிக்கப்பட்டாலும், இந்தியப் பெண்கள் தங்கள் பணி எல்லைகள், நெருக்கடிகள், சமயங்களில் தங்களின் இயலாமைகளைத்  தாண்டியும், சில காரியங்களை செய்துகாட்டி அசத்திவிடுகிறார்கள். அதீத கடமை உணர்வு, சுயகட்டுப்பாடு, சேவை மனப்பான்மை ஆகிய தளங்களில், ஆண் வர்க்கத்தினரை அஸால்ட்டாக அடிச்சுத் தூக்கிவிடுகிறார்கள் இவர்கள் என்பதும் தெரியவருகிறது..

‘நியூஸ்18’  மீடியா சமீபத்தில் ஒரு சிறு செய்தியைப் போட்டது. ட்விட்டரில் அதிர்ந்ததின் விளைவு. அஸ்ஸாம் மாநிலத்தில் இரண்டு மாணவிகள், TET (Teachers’ Eligibility Test) தேர்வெழுத என, தேர்வு மையத்திற்கு வந்துவிட்டார்கள். தேர்வு நேரம் நெருங்கியது. தேர்வெழுத வந்த மற்றவர்கள் தேர்வு மையத்திற்குள் ஒவ்வொருவராக நுழைந்தார்கள். இந்த இரண்டு பெண்களும் பேந்தப்பேந்த விழிக்க ஆரம்பித்தார்கள். ஒரு பிரச்னை விஸ்வரூபமெடுத்து அவர்களைத் தாக்கியது. என்ன, ஹால்டிக்கட்டை மறந்துவிட்டு வந்துவிட்டார்களா, அந்த அசடுகள்? இல்லை. இருவரின் கைகளிலும் கைக்குழந்தைகள். இளம் தாய்மார்கள் அவர்கள். வீட்டில் பார்த்துக்கொள்ள ஆளில்லை போலும்; எடுத்துக்கொண்டு பரீட்சை நடக்கும் இடத்திற்கே வந்துவிட்டார்கள். இங்கே அதிகாரிகள் சொல்லிவிட்டார்கள். குழந்தையை எடுத்து பரீட்சை ஹாலுக்குள் செல்ல அனுமதியில்லை.

என்ன படித்து என்ன பயன்? தேர்வெழுதவே முடியாது, வீடு திரும்ப வேண்டியதுதானா? நமக்கெல்லாம் இனி உத்தியோகம் கிடைத்து, அதைப் பார்த்ததுபோல்தான்..எல்லாம் வெட்டிப்பேச்சு, வெறுங்கனவு..’ மனம் வெதும்பி, புலம்பிக்கொண்டே திரும்பிப் படிகளில் இறங்கியபோது, எதிரே நெருங்கினார்கள், இரண்டு அஸ்ஸாம் பெண் போலீஸ் அதிகாரிகள். ‘என்னம்மா ? என்ன பிரச்னை? எதுக்கு அழுகை இப்போ!’ பெண்கள் இருவரும் காட்டினார்கள். பொட்டலங்கள்போல கைகளில், ஒருவயதிற்கும் குறைவான கைக்குழந்தைகள். சொன்னார்கள்: ‘வீட்டில் பார்த்துக்கொள்ள யாருமில்லை. இங்கே, உள்ளே குழந்தையோடு செல்ல அனுமதி இல்லை. தேர்வு எழுத முடியாது. சான்ஸ் போச்சு… போகிறோம்! எங்களின் வேலைவாய்ப்பும் போகிறது எங்களோடு..”

அஸ்ஸாம் பெண் போலீஸ் சேவை!
Courtesy: Twitter/News 18

போலீஸ் அதிகாரிகள் அதிர்ந்தார்கள். ஒருவரையொருவர் பார்த்துக்கொண்டார்கள். கைகளை நீட்டினார்கள். ’ கொடுங்கள் எங்களிடம். குழந்தைகளைப் பார்த்துக்கொள்கிறோம். கவலைப்படாதீர்கள் அம்மா! உள்ளே ஓடுங்கள். பயப்படாமல், பரீட்சையைப் பார்த்து எழுதுங்கள்!’ இதை எதிர்பாராத அந்த இளம்பெண்கள் திடுக்கிட்டார்கள். வேறுவழியின்றி, தயக்கத்தோடும், பயத்தோடும் சின்னக்குழந்தைகளை பெண் போலீஸ் அதிகாரிகளிடம் கைமாற்றினார்கள். உள்ளே போய் தேர்வு எழுதினார்கள். இரண்டு மணிநேரம் கழித்து வெளியே ஓடிவந்து, அரக்கப் பரக்கப் பார்த்தார்கள். இரண்டு பெண் போலீஸ்களும், கொஞ்ச தூரத்தில், குழந்தைகளைக் கையிலேந்தி அங்குமிங்குமாக நடந்துகொண்டிருப்பதைக் கண்டு இழுத்து மூச்சுவிட்டுக்கொண்டார்கள்.  அவர்களிடம் போய், கலங்கிய கண்களுடன் கைகூப்பிவிட்டு,  குழந்தைகளை வாங்கிக்கொண்டு, வீட்டுக்கு நடையைக் கட்டினார்கள், நாளைய குழந்தைகளின் வருங்கால ஆசிரியைகள்.

’அஸ்ஸாம் போலீஸ் (AP)-இன் இந்த இரண்டு பெண் அதிகாரிகள் கையில் குழந்தையுடன் உலவும் படம், ட்விட்டரில், இப்படியான வாக்கியங்களுடன்  வந்தது:

‘அம்மா ‘என்பது ஒரு வினைச்சொல் . அது நீங்கள் யார் என்பதை அல்ல, நீங்கள் என்ன செய்கிறீர்கள் என்பதைக் குறிக்கிறது !’

ட்விட்டர்வாசிகளுக்குத் தலைகால் புரியவில்லை!

**

செய்வீர்களா ?

ஞானக்கூத்தன் போய்விட்டார்
கொஞ்சநாள் முன்பு குமரகுருபரனும்
அதற்கு முன்பு வைகறையும்
அறிமுகம் அதிகமில்லா கவிகள் சிலரும்
அப்படியே புறப்பட்டுப் போயிருக்கக்கூடும்
போதாக்குறைக்கு முந்தாநாள்
கிளம்பிப் போனார் நா. முத்துக்குமார்
உத்சவத்தில் சாமி புறப்பாடு போல
கவிகள் புறப்பாட்டுக் காலம்போலும் இது

இளசும் பெரிசுமாக மேலும் சிலர்
எங்கேயோ சுருண்டு கிடக்கக்கூடும்
வறுமையில் வதங்கியோ
வாசிப்போரின்றி வாடியோ
தணியாத தனிமையின் சோகத்தில்
தாங்கவொண்ணா மன உளைச்சலில்
தங்களைத் தாங்களே குடித்துக்கொண்டு
தயாராகிக் கொண்டிருக்கிறார்களோ என்னவோ
வாழ்க்கை ரசத்தைப் பருகி எழுதும் கவிகளே
வக்கிரமான வஸ்துக்கள் உங்கள் உடம்பை
வதைத்து சிதைத்துத் தீர்த்துவிடாமல்
கொஞ்சம் பார்த்துக்கொண்டால் அதுவும்
தமிழுக்கு நீவிர் செய்யும் சேவையாகும்தானே ?

**