சூப்பர்கிங்ஸின் சூப்பர் வெற்றி, மற்றும்..

ஏகப்பட்ட சாலைமறியல்கள், அடிதடிகள், காவல் நெருக்கடிகளைத்தாண்டியும், நேற்று(10-4-18) சேப்பாக் மைதானம் கிட்டத்தட்ட நிரம்பியிருந்தது என்றே தோன்றியது. மங்களகர மஞ்சள், ப்ரகாசம் காட்டியிருந்தது எங்கும். இப்படி ஒரு ரசிகர்கூட்டம் ஆவேசமாகக் குஷிப்படுத்துகையில், பெரும் உத்வேகத்துடன்தானே மைதானத்தில் இறங்கியிருக்கும் சென்னை சூப்பர் கிங்ஸ்? கேதார் ஜாதவ் இல்லாததால் சாம் பில்லிங்ஸை (Sam Billings) மிடில் ஆர்டரில் இறக்கியது சென்னை. இருந்தும், இப்படி ஒரு பயங்கர மாஸ் காட்டும் இந்த அணி என நான் நினைக்கவில்லைதான். அதுவும் கொல்கத்தா நைட் ரைடர்ஸின் பிரமாத ஸ்கோரான 202-க்குப் பின்.

முதலில் ஆடிய தினேஷ் கார்த்திக்கின் கல்கத்தா அணியும், தன் சொந்த மைதானத்தில் இரண்டு வருடங்களுக்குப்பின் இறங்கும் சிஎஸ்கே கடுமையாக விளையாடும் என எதிர்பார்த்தே இறங்கியிருந்தது. மஞ்சள் சட்டைகள் மடக்கிவிடுவார்கள் என்பதால், ஆரம்ப விக்கெட்டுகளுக்குப்பின் உஷாராக விளையாடியது கல்கத்தா. மிடில் ஆர்டரில் உத்தப்பா, கார்த்திக் மற்றும் நேற்றைய சூப்பர்ஸ்டார்களில் ஒருவரான ஆல்ரவுண்டர் ஆந்த்ரே ரஸ்ஸல். தோனியின் பந்துவீச்சாளர்கள், ஆரம்பத்திலிருந்தே கல்கத்தா வீரர்களை செட்டில் ஆக விடவில்லை. கொத்து கொத்தென்று கொத்தி விக்கெட்டுகளைத் தூரப்போட்டார்கள். திடீரென்று 89/5 என்று அலறியது கல்கத்தா ஸ்கோர். கல்கத்தா ரசிகர்களின் முகம் வாடிப்போய்விட்டது. மிஞ்சி மிஞ்சிப்போனால் 150-155-ஐ நெருங்கலாம். ஊதித்தள்ளிவிடலாம் மேட்ச்சை என தோனி&கோ நினைத்திருந்த நேரம். 7-ஆம் ஆளாக கல்கத்தாவுக்கு வந்திறங்கினார் ஆந்த்ரே ரஸ்ஸல். ஊக்கமருந்து சர்ச்சையில் சிக்கி, ஓராண்டு தடையிலிருந்து ஒருவழியாக மீண்டு வந்திருந்த ரஸ்ஸல், சில விஷயங்களை நிரூபிக்கக் காத்திருந்தார் போலும். சேப்பாக் அதற்கான வாய்ப்பை அவருக்குக் கொடுத்தது. என்ன ஒரு ஆட்டம்! முதல் மேட்ச்சில் ப்ராவோ, அப்புறம் கே.எல்.ராஹுல், பின்னர் சுனில் நாராய்ண், இப்போது இந்த ரஸ்ஸல்! அவர் விளாசிய 11 சிக்ஸர்களில் ஒன்று மைதானக் கூரைக்கு மேலே பறந்து ரசிகர்களை அண்ணாந்து பார்க்கவைத்தது. 102 மீட்டர்ஸ். காணாமற்போனது பந்து. இப்படி அதகளமாக ஆடி கொல்கத்தாவை 202-க்குத் தூக்கி நிறுத்தினார் கல்கத்தாவின் ஹீரோ. மைதானத்தில் ஒரே மஞ்சளாகப் பூத்திருந்தாலும், ஒருபகுதியில் கல்கத்தாவின் வயலட் கூட்டமுமிருந்தது. அதில் விஐபி பகுதியில் தன் பரிவாரத்துடன் அமர்ந்திருந்த கல்கத்தா அணி உரிமையாளருமான நடிகர் ஷா ருக் கான், ரஸ்ஸலை ஏதோ தேவதூதனை பார்ப்பதுபோல் பார்த்துக் கையசைத்தார். சென்னை காலி என்று அவரும் நினைத்திருப்பார் !

203 என்பது இலக்கு. தோனியின் சென்னைக்கு இது ஒரு வாழ்வா சாவா போட்டியாகத் தெரிந்திருக்கவேண்டும். செய் அல்லது செத்து மடி! இப்படியான மனநிலையில் சிஎஸ்கே துவக்க ஆட்டக்காரர்கள் அம்பத்தி ராயுடுவும், ஷேன் வாட்ஸனும் ஆரம்பத்திலேயே தூள்கிளப்பினார்கள். ஆறே ஒவர்களில் ஸ்கோர் 75. என்ன ஆச்சு சென்னைக்கு? ஏதாவது பூதம் கீதம் புகுந்துகொண்டதா! ஒன்றிரண்டு விக்கெட்டுகள் சரிந்தாலும், ரன் –ரேட்டை உயர்த்தியே வைத்திருந்தது சென்னை. தினேஷ் கார்த்திக் கல்கத்தா பௌலர்களை வேகவேகமாக சுழற்றிப்பார்த்தார். அவர்களும் அவ்வப்போது நன்றாக வீசியும் சென்னையிடம் பாச்சா பலிக்கவில்லை. இந்த சமயத்தில் வந்து சேர்ந்தார் சாம் பில்லிங்ஸ். முன்பு டெல்லி அணிக்காக விளையாடிய இங்கிலாந்து வீரர். ரஸ்ஸல் போட்ட ஆட்டத்திற்கு சென்னையிலிருந்து யாராவது ஒருவர் பதில் சொல்லியாக வேண்டுமே! அந்த வேலையை இவர் தன் கையிலெடுத்துக்கொண்டார். எதிரே தோனி நிதானம் காட்டுகையில், காட்டடியில் இறங்கினார் பில்லிங்ஸ். 23 பந்துகளில் 56 (5 சிக்ஸர்கள்) எனத் தூள்கிளப்பியது அவருடைய பேட். மைதானத்தின் மஞ்சள்சட்டைகள் எழுந்தாடின. ஆர்ப்பரித்தன. 19-ஆவது ஓவரில், டாம் கர்ரனிடம் பில்லிங்ஸ் விழுந்துவிட்டாலும், சென்னையில் உயிர் இன்னுமிருந்தது. கடைசி ஓவர் சிக்ஸரைக் காண்பித்து ’சுபம்’ போட்டுவைத்தார் ரவீந்திர ஜடேஜா. இன்னுமொரு மகத்தான சிஎஸ்கே வெற்றி, மஞ்சள் கொண்டாட்டம்.

குழப்பம் ஏற்படுத்தவேண்டுமென்றே சில தரப்பினர்களால் கிளப்பப்பட்ட சர்ச்சைகள், மறியல்கள், பேடித்தனமான மிரட்டல்களுக்கு மத்தியில், க்ரிக்கெட் எனும் அபாரமான விளையாட்டின் வெற்றி. உன்னத க்ரிக்கெட் ரசனைக்குப் பேர்போன சென்னையின் வெற்றி.

** .

சென்னையில் ஆடும் தோனியின் சிஎஸ்கே – ஐபிஎல்

சென்னை க்ரிக்கெட் ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்த நாள் இன்று. சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, சென்னையின் சேப்பாக் மைதானத்தில் ஆடுகிறது. எதிர் அணி தமிழ்நாட்டின் ஹாட்ஸ்டார் தினேஷ் கார்த்திக் தலைமை தாங்கும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ். மோதல் அதகளமாக இருக்கும் என ரசிகர்கள் சூடாக இருக்கிறார்கள். மும்பைக்கெதிரான ஐபிஎல்-இன் ஆரம்பப் போட்டியில் கடைசி ஓவர் சிக்ஸரினால் தப்பித்த சிஎஸ்கே, இன்று சொந்தமைதானத்தில் வெல்லுமா?

கல்கத்தா அணியின் ஸ்பின்னர்கள் சமாளிக்கக் கடினமானவர்கள். சுனில் நாராய்ன், குல்தீப் யாதவ் மற்றும் பியுஷ் சாவ்லா. கூடவே வேகப்பந்துவீச்சாளர்களாக மிட்ச்செல் ஜான்ஸன், வினய் குமார் மற்றும் ஆந்த்ரே ரஸ்ஸல். ஒருவேளை, 18-வயதான, அண்டர்-19 அணியின் வேகப்புயல் கம்லேஷ் நாகர்கோட்டி இன்று கல்கத்தா அணியில் விளையாடக்கூடும். பெங்களூருக்கு எதிரான ஆட்டத்தில், பெங்களூரின் கை ஓங்கியிருந்தபோது, கல்கத்தாவின் மிடில் ஆர்டர் பேட்ஸ்மனான நிதிஷ் ரானாவை ஆஃப் ப்ரேக் போடச்சொல்லி திடீரென நுழைத்தார் தினேஷ் கார்த்திக். அதுவரை சிறப்பாக ஆடிக்கொண்டிருந்த டி வில்லியர்ஸ், கேப்டன் கோலி அசந்துபோனார்கள். இது யாருடா புது பௌலர்? கொஞ்சமும் எதிர்பாராதபடி, இருவரையும் ஒரே ஓவரில் காலி செய்தார் ரானா. அந்த அடியிலிருந்து
கோலியின் பெங்களூர் விடுபடமுடியாமல் மேட்ச்சையும் தோற்றது. இப்படி ஏதாவது செய்து, சென்னையை மெர்சலாக்கக்கூடும் தினேஷ் கார்த்திக்!

பேட்டிங்கில் சுனில் நாராய்ண் துவக்கி அதிரடி காண்பிக்க முயல்வார். க்றிஸ் லின் ஜோடி சேரக்கூடும். மிடில் ஆர்டர் ராபின் உத்தப்பா, நிதிஷ் ரானா, கார்த்திக், ஆந்த்ரே ரஸல் ஆகியோரின் கையில் இருக்கிறது. சென்னையின் தோனி அமைக்கும் பௌலிங் வியூகங்களை இவர்கள் சமாளித்தால், கல்கத்தாவுக்கு 180-190 என நல்ல ஸ்கோர் எகிறும்.

சென்னையின் மஞ்சள் சட்டைகளின் பலம் எப்படி? முதல் போட்டியில் படுமோசமாக ஆடிய சென்னை அணி, ப்ராவோ, ஜாதவின் அதிரடியால்தான் தப்பித்தது. இவர்கள் இருவரையும் தவிர மற்றவர்கள் அன்று தடவிக்கொண்டிருந்தார்கள். இன்றைய மேட்ச்சில் காயம் காரணமாக, கேதார் ஜாதவ் விளையாடமாட்டார். பேட்டிங்கில் முன்னேற்றம் காட்டாவிட்டால், சென்னையின் பாடு திண்டாட்டம்தான். தோனியோடு, ரெய்னா, ப்ராவோ, அம்பத்தி ராயுடு, வாட்ஸன், ஜடேஜா – இவர்களில் யாராவது மூன்று பேராவது பேட்டிங்கில் கலக்கியாகவேண்டும். இல்லையெனில் கல்கத்தா கமால்வேலை காட்டிவிடும். சென்னையின் வேகப்பந்துவீச்சாளர்களாக, டுவெய்ன் ப்ராவோ, தீபக் சாஹர், மார்க் உட் மற்றும் ஷர்துல் டாக்குர், இறங்குவார்கள் என நம்பலாம். ஸ்பின்னில் சர்தார்ஜி ஏதாவது செய்வாரா? சேப்பாக் ஸ்டேடியத்தை சரியாக அறிந்தவர் என்னைவிட வேறு யாரும் இல்லை என்று ட்வீட் விட்டவராயிற்றே! பந்துவீச்சு உண்டா, வெறும் வாய்வீச்சுதானா?
சென்னை ரசிகர்களின் மனதில் ஒரு துறுதுறுக்கும் கேள்வி. சிஎஸ்கே-வுக்காக, தமிழன் ஒருவனாவது விள்சையாடுவானா இந்த மேட்ச்சில்? முரளி விஜய் துவக்க ஆட்டக்காரராக இறங்கினால்தான் உண்டு. விஜயையும், அணியின் இரண்டாவது விக்கெட் கீப்பரான ஜெகதீசனையும் விட்டால் வேறு தமிழர்களே இல்லை அணியில். சிஎஸ்கே முதலாளிகள் அணிவீரர்களை ஏலம் எடுத்திருக்கும் லட்சணம் இது. இப்படி மோசம் செய்துவிட்டு, விசில்போடு, அப்பிடிப்போடு, இப்பிடிப்போடுன்னு எனப் பாட்டுப்பாடி என்ன பிரயோஜனம்?

இதற்கிடையே – ஏய்! ஐபிஎல்-ஐ நிறுத்து.. ஏதாவது நடந்தால் நாங்கள் பொறுப்பில்லை! –என்றெல்லாம் ஞொய்..ஞொய்…என்று சுத்திசுத்தி ஓலமிடும் நுளம்புகள் வேறு. கொசுக்கடி தாங்கமுடியவில்லை சென்னையில்!

**