வருஷத்தில் பாதிநாள் தண்ணீர் தண்ணீர் என்று தவிக்கிறோம். மீதி நாட்களில், தண்ணீரில் மூழ்கியே செத்துவிடுகிறோம் !
இது என்ன, ஏதாவது புதுப்பட வசனமா? இல்லை சஞ்ஜிப் பானர்ஜியும், ஆதிகேசவலுவும் சேர்ந்து அலறிவைத்தது. எந்தத் தேள் கொட்டியது? யார் இந்த மஹானுபாவர்கள்? மதராஸ் ஹைகோர்ட் ஜட்ஜுகள்தான். பொறுக்கமுடியவில்லை போலிருக்கிறது. வாயிலிருந்து கொட்டிவிட்டது வார்த்தை. ஹைகோர்ட்டு வளாகத்திலும் தண்ணி புகுந்துவிட்டதோ என்னவோ? ஆக்ஷன் எடுக்காவிட்டால்.. நீதி அரசர்கள் சென்னை கார்ப்பரேஷனுக்கு எச்சரிக்கை விடுத்திருக்கிறார்கள். கார்ப்பரேஷன் என்பதென்ன, பொட்டிக்கடைதானே.. பெருவணிகமான அரசுக்கு எச்சரிக்கை விடுத்துப்பார்ப்பதுதானே?
சமூகநீதிக்குப் பேர்போன அரசு என்ன சொல்கிறது? ’சமரசம் உலாவும் இடம்.. நம் வாழ்வில் காணா.. சமரசம் உலாவும் இடமே..!’ – என வெள்ளக்காடாய் மாறிவிட்ட சென்னையின் கோலாகலத்தைப் பார்த்து, கோவிந்தராஜன் மாதிரிப் பாட்டுப் பாடிக்கொண்டிருக்கிறதா? அது சொன்னது இது: மழையோ, வெள்ளமோ எங்களுக்கு அதெல்லாம் தெரியாது; முன்னாடி ஆண்டவங்கதான் எல்லாத்துக்கும் காரணம்..
கொட்டிக்கொட்டிப் பேசி.. கதிகலங்கவைக்கும் வானம்.
கார் மிதக்குது, கட்டடம் மிதக்குது, ஊரே மிதந்து ஓடமா ஆடுது.
இப்படியே போனா..
விடிஞ்சிரும் !
**