சென்னையில் நடந்த இரண்டாவது டெஸ்ட்டில், இங்கிலாந்தைப் போட்டுத்தள்ளிவிட்டது இந்தியா. தொடரின் தற்போதைய ஸ்கோர் 1-1. சரி, இப்போது அடுத்த காட்சி !
இன்று சென்னையில் கோலாகலமாக வருகிறது இந்த ஆண்டுக்கான ஐபிஎல் ஏலம்(18-2-21 மதியம், Star Sports 1 சேனல்). எட்டு IPL அணிகள், கடந்த ஆண்டின் தத்தம் லிஸ்ட்டிலிருந்து முக்கியமான சிலரைத் தக்கவைத்துக்கொண்டு, நிறையப்பேரைக் கழட்டிவிட்டிருக்கிறார்கள். அபுதாபியில் நடந்த ஐபிஎல் 2020-இல், கொடுத்த காசுக்கு ஏற்ற, சரியான ஆட்டம் காண்பிக்கவில்லை அவர்கள். சிலருக்கு வாய்ப்பும் கிடைக்கவில்லை! அவர்களில் சிலர்: க்ளென் மேக்ஸ்வெல், ஸ்டீவ் ஸ்மித், ஆரோன் ஃபின்ச், நேதன் கூல்ட்டர்-நைல் (ஆஸ்திரேலியப் புலிகள்), மொயீன் அலி (இங்கிலாந்து) ஜிம்மி நீஷம் (நியூஸிலாந்து). வெளியேற்றப்பட்ட இந்திய சீனியர்களில் சிலரும் இன்றைய ஏலத்தில் முழித்துக்கொண்டு நிற்கிறார்கள் (ரூவா போச்சே.. இன்னிக்கு என்ன கெடைக்குமோ, கெடைக்காதோ?) : ஹர்பஜன் சிங், பியுஷ் சாவ்லா, கேதார் ஜாதவ், ஷிவம் துபே, முரளி விஜய், உமேஷ் யாதவ். இவர்களில் சிலர் திரும்பவும் வாங்கப்படலாம். ஆனால் முன்பு கிடைத்த ’பணப்பெட்டி’ நிச்சயம் கிடைக்காது! சொற்ப பணத்தில் ஒரு குறிப்பிட்ட அணிக்குள் வரலாம்.

ஆரம்பத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட உள்நாட்டு, வெளிநாட்டு வீரர்கள் தங்களை ஐபிஎல் 2021 ஏலத்திற்காகப் பதிவு செய்திருந்தார்கள். அவர்களை ‘ஆராய்ந்த’ இந்திய கிரிக்கெட் போர்டு பலரை, லாயக்கில்லை என நீக்கிவிட்டது. 298 பெயர்களை மட்டுமே ஏலத்தில் இருக்கிறார்கள். இவர்களில் உள்நாட்டு வீரர்கள், அந்நியநாட்டவர் கலவை. பங்களாதேஷ், ஸ்ரீலங்கா, நேபாளம், ஆஃப்கானிஸ்தான் போன்ற குட்டிநாடுகளின் வீரர்களும் உண்டு. இது அல்ல சுவாரஸ்யம். சில இளம் இந்திய வீரர்கள், நாட்டிலேயே அதிகமாக அறியப்படாதவர்கள், சமீபத்திய ’முஷ்டாக் அலி 20-ஓவர் கோப்பை’யில் சிறப்புப் பங்களிப்பு செய்தவர்கள் – தங்களின் big break-ற்காகக் காத்திருக்கிறார்கள், ஏல லிஸ்ட்டில். அவர்களில் அதிர்ஷ்டக்காரர்கள் யார், யார்? இன்று மாலை வெளிச்சம் விழும்.

Nagaland Spinner
ஐபிஎல்-இல் ’நுழைய முயற்சிக்கும்’ இளம் இந்திய வீரர்கள் : பேட்ஸ்மன்கள் முகமது அஜருத்தீன் (கேரளா), விவேக் சிங் (பெங்கால்), விஷ்ணு சோலங்கி (பரோடா). ஆல்ரவுண்டர்கள் ஷாருக் கான் (தமிழ்நாடு), அர்ஜுன் டெண்டுல்கர் (மும்பை). லெக்-ஸ்பின்னர் க்ரிவிட்ஸோ கென்ஸே (Khrivitso Kense) (நாகாலாந்து). இடதுகை வேகப்பந்துவீச்சாளர்கள் சேத்தன் ஸகாரியா (சௌராஷ்ட்ரா), லுக்மன் மேரிவாலா (குஜராத்), மிதவேகப் பந்துவீச்சாளர் ஜி.பெரியசாமி (தமிழ்நாடு -கடந்த TNPL-ன் man of the series, நடராஜனின் ஊர்க்காரர், ஊக்குவிக்கப்பட்ட நண்பர்!) போன்றோர்.
மேலே சொன்னவர்களில் சுவாரஸ்யமானவர்கள் சச்சின் டெண்டுல்கரின் 21-வயது மகன் அர்ஜுன் டெண்டுல்கர். இடதுகை வேகப்பந்துவீச்சாளர், பயனுள்ள லோயர்-ஆர்டர் பேட்ஸ்மன். மும்பை அணியின் நெட்-பௌலராக அபுதாபி ஐபிஎல்-இல் இருந்தவர். எந்த அணியாவது இன்று இவரைக் ’கவனிக்குமா’! இன்னொரு sensation : கென்ஸே! 16-வயது நாகாலாந்து லெக்-ஸ்பின்னர். கடந்தமாதம்தான் சென்னையில், நாகாலாந்து அணிக்காக தன் முதல் டி-20 போட்டியை விளையாடினார் – முஷ்டாக் அலி கோப்பையில். நாலே போட்டிகளில் இவர் காண்பித்த ’ஸ்பின்’ சாகஸம், ‘மும்பை இண்டியன்ஸ்’ அணியைக் கவர்ந்திருக்கிறது. நாகாலாந்தில் எங்கோ ஒரு மூலைக்கிராமத்தில் சுற்றிக்கொண்டிருந்த இந்த இளைஞனை மும்பை இண்டியன்ஸ் தொடர்புகொண்டு போனமாத இறுதியில் தங்கள் அணிக்கான புதியவர்களின் பயிற்சிகளில் சேர்த்திருக்கிறது. உண்மையில் இவரை ‘ஏலத்தில்’ மும்பை வாங்குமா? அல்லது வேறு ஏதாவது அணியின் கண்ணில் படுவாரா? மாலையில் தெரியலாம்.
இன்னொரு விஷயம்! Kings XI Punjab தன் பெயரை ’பஞ்சாப் கிங்ஸ்’ என்று மாற்றிக்கொண்டுவிட்டது. பெயர் ‘ராசி’ எப்படியோ!
**