கு.ப. ராஜகோபாலன்

”ராஜகோபாலனைப்போல ஒரு கதை, ஒரு வரியாவது எழுத வேண்டும் என்று எனக்கு வெகு கால ஆசை….  அவருடைய எழுத்துகளைப் படிக்கும்பொழுது ஒரு பிரமிப்புத்தான் ஏற்படுகிறது. பட்டுப்போன்ற சொற்களிலும், பத்து பக்கங்களுக்கு மேற்படாத கதைகளிலும் எப்படி இவ்வளவு பெரிய கலை வடிவங்களையும், உணர்ச்சி முனைப்பையும் வடிக்கிறார் அவர்!”

கு.ப.ரா. என்று தமிழ் இலக்கியப் பரப்பில் குறிப்பிடப்படும் கு.ப.ராஜகோபாலனைப்பற்றி, தி.ஜானகிராமன் சொன்னது, மேற்கண்டது. எழுத்தாளர்களே படித்துப் பிரமித்த புனைவெழுத்து கு.ப.ரா.வினுடையது. அவர் எடுத்துக்கொண்ட, அதே சமயம் ஏனைய எழுத்தாளர்கள் தவிர்த்துவந்த, பொருள்பற்றி, சமகால எழுத்தாளர்கள் சிலர் விமரிசனம் வைத்தார்கள்.   1934-லிலிருந்து 1944 வரை என ஒரு குறுகிய காலகட்டத்தில்தான், தமிழ் இலக்கிய உலகில் அவர் பங்காற்றியிருக்கிறார். அந்தக் காலவெளியில், அருமையான கதைகள், நாடகங்கள் பலவற்றைத் தந்துவிட்டுப் போயிருக்கிறார் இந்த ஆளுமை. அவரது நாற்பதுகளில் இடது கண் பார்வை போய், வேறுவிதமான உடல் நலக்குறைவுகளுக்கும் ஆளாகி, மருத்துவம் என்கிற பெயரில் போராடி, அகாலமாகக் காலமானார் கு.ப.ரா.

கு.ப.ரா.

”சளசளப்பும், சப்த ஜாலங்களும், ஏதோ பெரிதாகச் சொல்லப்போவதுபோல மிரட்டுகிற மூடுமந்திரச் சொற்பிரயோகங்களும், முழுமையில்லாத தோல்வி மூளிகளை, உள்மனச் சோதனைகளாகச் சப்பைக்கட்டு கட்டும் முடவெறியும் காதைத் துளைக்கிற காலத்தில், ராஜகோபாலனின் எழுத்தின் தெளிவும், அமைதியான வீர்யமும், தன்னம்பிக்கையும், சிறு பிரவாகமாக எங்கோ சலசலத்துக் கொண்டிருப்பதை இப்பொழுதைய வாசகர்களைப் போய்ப் பார்க்கச் சொல்லவேண்டும் போலிருக்கிறது. ‘கோபம் கொண்ட இளைஞன்’ (angry youngman) என்கிற இங்கிலீஷ் சொற்கட்டு ஒன்று அடிக்கடி கேட்கிறது. வயதுக்கும், கோபத்துக்கும் சம்பந்தமேயில்லை. ராஜகோபாலன் எழுதியதும் கோபக்கார இளைஞனின் எழுத்துத்தான். 42 வயதில் செத்துப் போகாமல் இன்று அவர் இருந்திருந்தால், அதே கோபக்கார இளைஞனாகத்தான் இருந்திருப்பார்.” இப்படித் தன் சமகால தமிழ் எழுத்துவெளியை ஒருபக்கம் குத்திக்காட்டி, கு.ப.ரா- வின் படைப்புகளைப் புகழ்ந்தவரும் தமிழின் தலைசிறந்த எழுத்தாளர்களுள் ஒருவராகக் கருதப்படும் தி.ஜானகிராமன்தான்.

பெண் மனதின் மென்நிலைகளை, கலாபூர்வமாக எழுத்தில் கொண்டுவருவதில் வல்லவர் கு.ப.ரா. அலங்காரமில்லாதது, அடக்கமானது, நுண்ணியது, நுட்பமானது; சில வரிகளில் வாசகனில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய புனைவெழுத்து அவருடையது. கும்பகோணத்தில் வாழ்ந்த கு.ப.ராஜகோபாலன்,  எழுத்தாளர் ந.பிச்சமூர்த்தியோடு கிட்டத்தட்ட 20 ஆண்டுகாலம், மிகவும் நெருங்கிப் பழகியிருக்கிறார். பிச்சமூர்த்தியும் கும்பகோணத்திலேயே வசித்ததால் இது எளிதாக அமைந்தது. எழுத்தாளர் கரிச்சான் குஞ்சுவோடும் தொடர்பில் இருந்தவர். கண்பார்வை மிகவும் பாழ்பட்டுத் தடுமாறி, கு.ப.ரா. மிகவும் துவண்டுபோன சமயத்தில், படைப்புச்சக்திப் பெரிதும் வெளிப்பட்டிருக்கிறதுபோலும் அவரிடமிருந்து. அவரது இளைய சகோதரி சேது அம்மாள் கூடவே இருந்து, கு.ப.ரா. சொல்லச் சொல்லப் பொறுமையாக உட்கார்ந்து எழுதிக்கொடுத்து, உபகாரம் செய்திருக்கிறார். இலக்கிய இதழ்களான மணிக்கொடி, சுதந்திரச் சங்கு ஆகியவை கு.ப.ராஜகோபாலனின் கதைகளை அக்காலத்தில் வெளியிட்டன. இப்படியெல்லாம் ஏகப்பட்ட சிரமங்களினூடே வெளிப்பட்டதே கு.ப.ரா.வின் படைப்புகள். ’சிறிது வெளிச்சம்’, ’கனகாம்பரம்’, ’காணாமலே காதல்’, ’புனர்ஜென்மம்’ போன்ற பிரபலமான சிறுகதைத் தொகுப்புகளோடு,  ’ஆறு அறிஞர்களின் அலட்சியம்’, ’எதிர்கால உலகம்’, ’அகலிகை’, ‘சிந்தனை’ போன்ற நாடகங்களையும் எழுதியவர் கு.ப.ரா.

அல்லையன்ஸ், காலச்சுவடு ஆகிய பதிப்பகங்களில் இவரது கதைகள் கிடைக்கும். ஆன் – லைனில் வாங்க: discoverybookpalace.com, panuval.com, noolulagam.com போன்ற தளங்கள். ’கு.ப.ரா. சிறுகதைகள்-முழுத்தொகுப்பு’ Paperback-ஆகவும், ‘சிறிது வெளிச்சம்’ சிறுகதைத் தொகுதி Kindle edition-ஆகவும் Amazon-ல் கிடைக்கின்றன

கு.ப.ரா.வின் சிறுகதை ஒன்றை அடுத்த பதிவில் பார்ப்போம்…

**