ஜடேஜாவின் தலைமையில் சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK)

ஆரம்பத்திலிருந்தே CSK-யின் கேப்டனாக மிக வெற்றிகரமாக செயல்பட்டவர். அவருக்கும் 40 ஆயிடுச்சே. வயசு யாரை விட்டது… சரியான தருணமிது. கிரீடத்தை வேறு யாருடைய தலையிலாவது வைத்துவிட்டு டீமோடு டீமா நிற்பதே நல்லது என அவருக்குத் தோன்றியிருக்கலாம். தோனியின் இந்த முடிவினால், ரவீந்திர ஜடேஜா ஆனார் கேப்டன், சிஎஸ்கே. இன்று ஐபிஎல் 2022-ன் முதல் போட்டியில் சென்னையை கொல்கத்தாவுக்கெதிராகத் திருப்புகிறார். கேப்டன்சி எப்படி இருக்கும் எனப் பார்ப்பதில் ரசிகர்களுக்கு ஒரே ஆவல், அவசரம்.

Ravindra Jadeja alongside outgoing CSK Captain

இதற்கு முன் அவர் ரஞ்சிக்காக ஆடும் சௌராஷ்ட்ரா உட்பட, முக்கிய அணி எதற்கும் ஜடேஜா தலைமை வகித்ததில்லை. பலவருடங்களுக்கு முன் U-19 போட்டி ஒன்றில் அந்த அணிக்கு தலைமை தாங்கியிருக்கிறார் ஒரு முறை. மற்றபடி அனுபவம் என்பதாக ஏதுமில்லை. ஆயினும், கெவின் பீட்டர்சன் சொல்கிறார்: கூர்மையான கிரிக்கெட் மூளை உண்டு ரவி ஜடேஜாவுக்கு. அவர் தலைமையில் சிஎஸ்கே சில ஆச்சர்யங்களைக் கொடுக்கக்கூடும்…

பழைய வீரர்களில் சிலரும் ஜடேஜா சென்னையின் தலைமைக்கு சரியான ஆள்தான் என ஒப்புதல் தருகிறார்கள். இந்த ஐபிஎல் -இல் சில சுவாரஸ்யமான பெயர்கள், அணிகளின் கேப்டன்களாக. ஷ்ரேயஸ் ஐயர் – கொல்கத்தா, ஹார்தீக் பாண்ட்யா – குஜராத், மயங்க் அகர்வால் – பஞ்சாப், ஃபாஃப் டூப்ளஸீ – பெங்களூரு. இப்போது,  ரவி ஜடேஜா! (பதவி இழந்தவர்கள் லிஸ்ட்டே தனி!) என்னென்ன வியூகங்களோடு புதுக் கேப்டன்கள் மைதானத்தில் இறங்கப்போகிறார்கள் என்பது டாடா ஐபிஎல் 2022- தரும் குறுகுறுப்பு, கிளுகிளுப்பு !

First match : KKR vs CSK 26/3/2022 @ 1930 hrs, Wankhede, Mumbai.

**

CSK ? No, Chennai Super Flops !

சென்னை சூப்பர் கிங்ஸ்-ஐ மறந்துவிடலாம்.

மிச்சமிருக்கும் அணிகளிடையே நடக்கவிருக்கும் கடும்போட்டிகளை இனி,  ‘ஆராம்ஸே’ உட்கார்ந்து ரசிக்கலாம். சாதிப்பவர்களைக் கொண்டாடலாம்! சென்னை அணிக்காக இரவு பகலென உருகிய, முணகிய, மனதுக்குள் கிரிக்கெட் ஆடிய  சிஎஸ்கே ரசிகர்களே.. துடித்தது, துவண்டது போதும். கிரிக்கெட் எனும் மாபெரும் விளையாட்டை ஆராதியுங்கள், ஆனந்தியுங்கள். இனிவரும் IPL போட்டிகளில் உயிர்த்துடிப்புடன் யார் யார் விளையாடுகிறார்கள் என pure cricketing pleasure-க்காகப் பார்த்து மகிழுங்கள். You deserve better things..

ஏதோ வெறுப்பில்,  அலுப்பில், சொரணை ஏதுமில்லாமல், புதிய வீரர்களை, பெஞ்சில் உட்கார்ந்திருந்தவர்களை, இதுகாறும் மைதானத்துக்குள் டவல், ட்ரிங்க்ஸ் எடுத்துவந்தவர்களை, ஒரே மேட்ச்சில் உள்ளே தள்ளிப் பதறவைத்து அணியையும் வீரர்களையும் ஒன்றுமில்லாமல் ஆக்கிவிடப் பார்த்தாரா மஹீந்தர் சிங் தோனி? அதாவது சென்னையின் ‘தல’? இவரைப்போய் ஓவராக ’போற்றி போற்றி’ எனப் பாடி, தலையில் தூக்கிவைத்து ஆடி – கொண்டிருந்த தமிழர்களுக்கு இது தேவைதான். தோல்வி எதிர்வந்து முட்டி மோதி சாய்த்தபின், கீழேபோட்டு மிதித்தபின் குறை சொல்லி, குற்றம்சாட்டிப் பிரயோஜனம் இல்லை. தோனியின் ‘ஆட்டம்’  ஆட்டம்கண்டுவிடவில்லை. முற்றிலுமாக முடிந்துவிட்டது. ரோஹித் ஆடாத, கேப்டனாக இல்லாத மும்பை இண்டியன்ஸுக்கு எதிராக 30 ரன்களில் 6 விக்கெட்டுகள் வீழ்ந்தது- கேப்டன் தோனி உட்பட- என்பது, ’கண்முன்னே தெரிந்தது, தெரியாதது’ என எல்லாவற்றையும் சேர்த்தே சொல்கிறது. விளக்கவேண்டியதில்லை.

2019-ல், உலக்கோப்பைத் தோல்விக்கப்புறம் உடனடியாக ஓய்வை அறிவித்திருக்கவேண்டும் தோனி. வயசாகிவிட்டது என்பது அப்போதே ஸ்க்ரீனில் தெரிந்ததே. செய்யமாட்டாரே.. ஒரு வருடத்துக்கு ஆடாமல் ஆறப்போட்டு, மற்றவர்களைத் தன் ரிடையர்மெண்ட் பற்றிப் பேசவைத்து, கேட்டு மகிழ்ந்து, முடிவேதும் எடுக்காமலும் காலம் கடத்துவதில் ஒரு கர்வம். ’தல’க்கனம். தனி சுகம். கூடவே நிறைய ’டைமும்’ கிடைத்தது அல்லவா ‘தல’க்கு. எதுக்கு? விதவிதமான விளம்பரப்படங்களில் ஆனந்தமாக நடித்து, கூவிக்கூவி சாமான்களை விற்க.  விளம்பர உலகிலும் நான்தான் சூப்பர்ஸ்டார் என வணிக உலகிற்குக் ’காண்பிக்க’வேண்டாமா? இதுவரை சேர்த்த சொத்தும் போதாதே. இன்னும்.. இன்னும்..

ஒருகாலத்தில்.. ஒரு காலத்தில் இந்தியாவுக்காக நன்றாக ஆடியவர். இரண்டு உலகக்கோப்பை வெற்றிகளுக்குக் காரணமானவர். மஞ்சள் சட்டைகளைப் பெரும் அணியாக ஐபிஎல் -இல் நிலைநாட்ட ஒத்துழைத்தவர். நிலைகுலைந்ததற்கும் அவரேதான் பிரதான காரணமெனினும்….

போகட்டும் விடுங்கள். ஆகிற காரியத்தைப் பாருங்கள்.

**

அமீரகத்தில் ஐபிஎல்

ஐபிஎல் இந்தியாவில் நடந்தாலென்ன, அமீரகத்திலோ, அமெரிக்காவிலோ,  ஆஃபிரிக்காவிலோ நடந்தால்தானென்ன.. கொரோனா கால குழப்பங்களுக்கிடையே, ஐபிஎல்-ஐ நடத்த முடிந்ததே ஒரு பெரும் சாதனை. ஆஸ்திரேலிய பேட்ஸ்மனும் சன்ரைஸர்ஸ் ஹைதராபாத் அணியின் கேப்டனுமான டேவிட் வார்னரும் நேற்று துபாயில்(Dubai) இதையே கூறினார். இந்திய மற்றும் அமீரகக் கிரிக்கெட் போர்டுகள் பாராட்டுக்குரியவர்கள். மாசக்கணக்கில் முடங்கியிருந்தும்  துருப்பிடித்துவிடாமல், ஃபிட்டாக வந்து விளையாடிக்கொண்டிருக்கும் இந்திய மற்றும் சர்வதேச கிரிக்கெட் வீரர்களுக்கு வாழ்த்துகள். ஆரோக்யமாக இருங்கள், அதிரடியாக ஆடுங்கள். மைதானத்தில் உட்கார்ந்திருப்பது ஐபிஎல் நிர்வாகிகள், அணிகளின் வீரர்கள், பயிற்சியாளர்கள், அலுவலர்கள் மட்டும்தானா.. இருக்கட்டுமே. கண்காணா ரசிகர்கள் எங்கும் நிறைந்திருக்கிறார்கள், இறைவனைப்போலவே! டி-20 மேஜிக் தெறிக்கட்டும் எங்கும்..

கோவிட்-19 தாக்குதல்.. சுரேஷ் ரெய்னா, ஹர்பஜன் சிங் ஆடாததால் சிஎஸ்கே பலவீனமடைந்துவிட்டதாக ஒருபக்கமாகக் கிளம்பிய விமரிசனம், புலம்பல்.   எல்லாவற்றையும் தாண்டி, செப்டம்பர் 19-ல் நடந்த ஐபிஎல் 2020-ன் முதல் போட்டியில் தோனியின் தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ் அணியை வீழ்த்தியது. உலகக்கோப்பைக்கான தேர்வில் தேர்வுக்கமிட்டி மற்றும் கோஹ்லி & கோ.வினால் தவிர்க்கப்பட்ட அம்பத்தி ராயுடு(71),  சிஎஸ்கே-வுக்காக மிடில்-ஆர்டரில் விளாசி தன் ஆட்டத்தரத்தை மீண்டும் நிரூபித்தார். தென்னாப்பிரிக்காவின் முன்னாள் கேப்டன் ஃபாஃப் டூப்ளஸீ(Faf du plessis 58 N.O.) இறுதிவரை கவனமான ஆட்டத்தைக் காண்பித்தார். சென்னை அணியை கோட்டைக் கடக்கவைத்தார். மும்பை அணியில் க்விண்ட்டன் டி காக் (Quinton de Kock)(33) மற்றும் சௌரவ் திவாரி(42) ஓரளவு ஆடியும், சென்னையை சாய்க்கப் போதுமானதாக இல்லை. ரோஹித் சொற்ப ரன்களில் கவிழ்க்கப்பட்டார். பௌலர்களில் பியூஷ் சாவ்லா (ஸ்பின்னர்) மற்றும் லுங்கி இங்டி (வேகப்பந்துவீச்சாளர்) சென்னைக்காக ஜொலித்தார்கள்.

இரண்டாவது IPL மேட்ச்! பஞ்சாப் – டெல்லி மோதல். என்ன சொல்வது இந்த மேட்ச்சைப்பற்றி.  முதலில் ஆடிய டெல்லி ஆரம்பத்திலேயே திணறித் தடுமாறியது. பஞ்சாபின் பௌலிங் -குறிப்பாக முகமது ஷமியின் வேகம்- தூள்கிளப்பியது. ஷ்ரேயஸ் ஐயர் 39, ரிஷப் பந்த் 31 அடித்து நிலைமையை சரிசெய்யமுயன்றும் போதாதுபோல் தெரிந்தது. இறுதிக் கட்டத்தில் நுழைந்த ஆல்ரவுண்டர் மார்க்கஸ் ஸ்டாய்னிஸ்(53) மைதானத்தைக் கொளுத்திவிட்டார். 150-ஐத் தாண்டி இரண்டே ஓவர்களில் டெல்லியைக் கொண்டு சென்றார். டெல்லியின் 157/8 பஞ்சாபை நிறுத்த முடியுமா?

பேட்டிங்கில் பஞ்சாப் அணி ஒன்றும் பெரிதாக செய்ய முடியவில்லை.  விக்கெட்டுகள் சரிய (டெல்லிக்காக முதல் தடவையாக ஆடும் அஷ்வின் ஒரே ஓவரில் 2 விக்கெட்டுகள்), மயங்க் அகர்வால் மட்டும் தனியொரு ஆளாக எதிர்த்தாடினார். வெற்றிக்கு 13 ரன் என்று கடைசி ஓவரில் நுழைத்தார் பஞ்சாபை. அதிலும் 12 ரன்களை அவரே எடுத்தும்விட்டார். இன்னும் இரண்டு பந்துகள் 1 ரன் தேவை என்கிற வெற்றிமுகம். ப்ரீத்தி ஸிந்தாவின் முகத்தில் தாமரைப்பூ! ஆனால், கடைசி இரண்டு பந்துகளில் ஆட்டத்தின் கதையை, தோசையைத் திருப்பிப் போட்டதுபோல் போட்டுவிட்டார் டெல்லியின் மார்க்கஸ் ஸ்டாய்னிஸ். கடைசி இரண்டு பந்துகளில் இரண்டு பஞ்சாப் டிக்கெட்டுகளைக் கிழித்தெறிந்தார். குலை நடுங்கியது பஞ்சாபுக்கு. மேட்ச் டை(tie), Super Over !

எலிமினேட்டர் சூப்பர் ஓவரில் பஞ்சாபைத் தெறிக்கவிட்டார், முதலில் ஓவர் போட்ட டெல்லியின் சூப்பர் ஓவர்-ஸ்பெஷலிஸ்ட் ககிஸோ ரபாடா (Kagiso Rabada). மூன்று பந்துகளில் 2 ரன் கொடுத்து,  பஞ்சாப் கேப்டன் ராகுலையும், நிகோலஸ் பூரனையும் (Nicholas Pooran) தூக்கிவிட்டார். தன் பதிலில் டெல்லி, எளிதாக 3 ரன் எடுத்து மேட்ச்சை வென்றது.

இத்தோடு முடியவில்லை கதை. ஐபில் கமிஷனிடம் பஞ்சாப் குற்றச்சாட்டு வைத்திருக்கிறது. கடைசி ஓவரில் பஞ்சாபின் க்றிஸ் ஜார்டன் எடுத்த 2 ரன்களில் ஒரு ரன்னைத்தான் அனுமதித்தார் அம்பயர் நிதின் மேனன். ரன் ஓடுகையில் ஜார்டன் கோட்டை பேட்டினால் சரியாகத் தொடவில்லையாம். ஆனால் ’ரீ-ப்ளே’ என்று ஒன்று இருக்கிறதே.. டெக்னாலஜி! அது காட்டிவிட்டது உண்மையை. ஜார்டனின் பேட் கோட்டிற்குள்தான் வைக்கப்பட்டது! இந்த தவறான ரன் -கழித்தல் இல்லாதுபோயிருந்தால், பஞ்சாப் 20-ஓவர்களிலேயே ஜெயித்திருக்கும். வீரேந்திர சேஹ்வாக்கும் அம்பயரின் தவறைச் சாடியுள்ளார்.

Dev Dutt Padikkal

நேற்று (21-9-20) துபாயில் நடந்த பெங்களூர் Vs ஹைதராபாத் போட்டியில் சுறுசுறுப்பு அதிகமில்லை. பெங்களூர் அணி,  கர்னாடகாவின் 20-வயது ஓப்பனர் தேவ் தத் படிக்கல் (Dev Dutt Padikkal) – ஆரோன் ஃபிஞ்ச் ஜோடியுடன் பேட்டிங்கை ஆரம்பித்தது.  படிக்கல் தன் முதல் ஐபிஎல் போட்டியில் அனுபவ வீரரைப்போல,  சுதந்திரமாக பேட்டை சுழற்றினார். ரன்கள் வேகமாக வந்தன. இந்தியாவுக்கு ஒரு நல்ல எதிர்கால மிடில்-ஆர்டர் பேட்ஸமனாக உருவாகக்கூடுமோ எனத் தோன்றுகிறது.  படிக்கல் 56, டி வில்லியர்ஸ் 51 – டாப் ஸ்கோர்கள். 163 என்பது ஹைதராபாதுக்கு, பெங்களூர் கொடுத்த இலக்கு.  ஹைதராபாதின் மிடில்-ஆர்டரில் தம் இல்லை. ஓப்பனர் ஜானி பேர்ஸ்டோவின் (Jonny Bairstow)  61 தான் உருப்படியான ஆட்டம். யஜுவேந்திர சாஹலின் ஸ்பின்னில் பேர்ஸ்டோ விழுந்தவுடனே, ஹைதராபாத் ஆட்டம் கண்டது. விக்கெட்டுகள் நில்லாது ஓடின. முக்கியக் கட்டத்தில் சாஹல் 3 விக்கெட் எடுத்து, முறித்துப்போட்டார் ஹைதராபாதை. இறுதியில் 10 ரன் வித்தியாச வெற்றி கோஹ்லியின் பெங்களூருக்கு.

இன்று இன்னுமொரு க்ளாசிக் ? தோனியின் சென்னை சூப்பர் கிங்ஸ் Vs ஸ்டீவ் ஸ்மித்தின் ராஜஸ்தான் ராயல்ஸ். மேட்ச் ஷார்ஜாவில். சென்னை அணியில் 20-வயது அதிரடி பேட்ஸ்மன் ருதுராஜ் கெய்க்வாட் (Ruturaj Gaikwad) இருப்பாரா?  கோவிட்-19 நெகடிவ்-ஆகி, தப்பிவந்திருக்கும் வீரர். அவர் உள்ளே வந்தால் முரளி விஜய் வெளியே! சிறிய மைதானம் ஷார்ஜா. சிக்ஸர்கள் பறக்கும்!

**

ஏலம் ! ஐபிஎல் 2020

 

19 டிசம்பர் 2019-ல், கொல்கத்தாவில் கோலாகலமாக நடந்த ஐபிஎல் (IPL-Indian Premier League) ஏலத்தை ஸ்டார் நெட்வொர்க்கில் பார்த்துக் களித்தேன். 8 ஐபிஎல் அணிகளும் முக்கியமெனத் தாங்கள் கருதிய போனவருடத்திய வீரர்கள் 10-15 பேரைத் தக்கவைத்துக்கொண்டு, மீதமுள்ளவர்களை ஏலத்தில் தூக்குவதில் போட்டிபோட்டன. ஏலத்தில் இருந்த 338 கிரிக்கெட் வீரர்களில் இந்திய மற்றும் அந்நியநாட்டு வீரர்கள் பலர். அதிரடி பேட்ஸ்மன்கள், ஆக்ரோஷ பௌலர்கள், ஆல்ரவுண்டர்களோடு, விக்கெட்கீப்பர்கள் சிலர்  என சுவாரஸ்யக் கதம்பம். ஏலத்தில் எடுக்கப்படவேண்டியவர்கள்இந்த 338-லிருந்து, 73 பேர்கள்தான்.   சிறந்த வீரர்கள் அல்லது அணியின் தேவைக்கேற்றவர்கள் எனக் கருதப்பட்டவர்களுக்காக நான், நீ என போட்டாபோட்டி ஆரம்பமானது.

SRH -இன்
காவ்யா !

அந்தந்த அணியின் ஜெர்ஸி நிறத்திற்கேற்ப அணியின் உரிமையாளர்கள் அல்லது தேர்வாளர்கள், ஆலோசகர்கள் உட்கார்ந்திருந்த நாற்காலிகள்-மேஜைகள் – ஒரே வண்ணமயம்தான். பளிச்சென்று தெரிந்தவை பஞ்சாபின் சிவப்பு மேஜை, சென்னை(CSK)யின் மஞ்சள், கொல்கத்தா(KKR)வின் பர்ப்பிள், மும்பை(MI)அணியின் நீலம். மும்பை அணிக்கென நீத்தா அம்பானி (Nita Ambani) பிரதானமாக பளபளவென அமர்ந்திருந்தார்! பஞ்சாபிற்காக ஒவ்வொரு வருட ஏலத்தின்போதும் வந்து, கூந்தலை இடது வலதாகக் கோதி அலையவிடும் , அணி உரிமையாளர்களில் ஒருவரான நடிகை ப்ரீத்தி ஜிந்த்தா (Preity Zinta) வராதது ஏமாற்றம் வேடிக்கை பார்ப்பவருக்கு. கொல்கத்தா அணிக்கானவர்களில் முன்னாள் பாலிவுட் பிரபலம் ஜூஹி சாவ்லா வெள்ளையில் வந்து அமர்ந்திருந்தார். இருந்தும் டிவி பார்ப்போர் மற்றும் பார்வையாளர்களின் கண்கள் அடிக்கடி மேய்ந்தது ஹைதராபாத் அணியின் பக்கம்தான். என்ன விசேஷம்? அங்கே ஒரு மஞ்சள் முகம். துறுதுறு யுவதி! யாரது என்கிற க்யூரியாஸிட்டி இந்தியர்களின் மண்டையைப் பிளந்துவிடுமே! பின்னர் தெரிந்தது. சன் ரைஸர்ஸ் ஹைதராபாத் (SRH) அணியின் சொந்தக்காரரான கலாநிதி மாறனின் மகள். காவ்யா. வெள்ளைப்பல்வரிசை மின்ன அடிக்கடி சிரித்துக்கொண்டும், பேசிக்கொண்டும், ஏலத்தைத் தூக்கிவிட்டுக்கொண்டும் ஆனந்தமாக இருந்தார். கிரிக்கெட்டில் ஏகப்பட்ட ஆசை என்பதோடு, ‘ஸன் குழும’த்தில் மியூஸிக் இன்-சார்ஜாம் காவ்யா. உபரி தகவல்.   

மேடையில் ஏலம்கூவுபவர் (auctioneer) ஒவ்வொரு செட் செட்டாக அமைக்கப்பட்ட வீரர்களின் பெயர்களிலிருந்து ஒரு சீட்டை வாங்கி, குறிப்பிட்ட வீரரின் பெயரை, ஏற்கனவே அணிகளுக்குக் கொடுக்கப்பட்ட பட்டியல்படி வரிசைஎண்ணோடு  மைக்கில் அறிவிக்கிறார். சில சமயங்களில் ஆஸ்திரேலியா, நியூஸிலாந்து என (அவருக்குப் பிடித்த?) நாட்டின் பெயரையும் சொல்வதுண்டு. மற்றபடி ஏலத்திற்கு விடப்படும் வீரர் ஒரு பௌலரா, பேட்ஸ்மனா என்று சொல்வதில்லை. புகழ்பெற்ற வீரர் பெயர் வரும்போது இது பிரச்னையில்லை. 22-23 வயதிற்குக்கீழ்ப்பட்டவர்கள், Under-19 அணிவீரர்கள் பெயர் தலைகாட்டும்போது, யாரப்பா இது, பேட்ஸ்மனா, பௌலரா எனக் குழப்பம் ஏற்படுகிறது. டிவியில் ஓரத்து விண்டோவில், இதுவரை அவர் ஆடிய ஆட்டம்பற்றி கொஞ்சம் புள்ளிவிபரம் தெரிகிறது! அணிக்காரர்கள், வீரரின் எண்ணை வைத்து, தங்கள் பட்டியலில் அவரின் விளையாட்டுக் கதையைப் பார்த்துக்கொள்கிறார்கள்.   உடனே ஒவ்வொரு மேஜையைச்சுற்றிலும் படபட ஆலோசனை, லேப்டாப்பில் அந்த வீரர் பற்றிய புள்ளிவிபரங்களை ஆராய்தல், தலையைச் சொறிதல், பக்கத்திலிருப்பவர் காதில் ஓயாத கிசுகிசு, யார் முதலில் கையைத் தூக்குகிறார்கள் என நோட்டம்விடல், தானும் 10, 20 லட்சமெனத் தூக்கிவிட்டுப் பார்த்தல், நேரம் பார்த்து அமுங்கிவிடல் – என ஒரே அமர்க்களம். இந்த மாதிரிக் கூத்துகளிடையே இந்திய, அந்நிய வீரர்கள் விலைபோனார்கள்.

சின்னப்பையன் ஜெய்ஸ்வால் !

ஏலத்தின் ஆரம்பத்தில் ஆஸ்திரேலியாவின் க்றிஸ் லின் (Chris Lynn)-ஐ மும்பை இண்டியன்ஸ் ஆரம்பத்தொகையான (player’s base price) ரூ.2 கோடிக்கே வாங்கியது. நீத்தா அம்பானியின்  முகத்தில் மலர்ச்சி! கடந்த சீசனில் KKR-அணிக்கு விளையாடிய அதிரடி வீரர் இந்த லின். ராபின் உத்தப்பா, மற்றும் ஜெயதேவ் உனாட்கட்டை (Jayadev Unadkat) ராஜஸ்தான் ராயல்ஸ், தலா ரூ.3 கோடிக்கு ஏலம் எடுத்தது. Good buys. ஆனால் கொல்கத்தா நைட் ரைடர்ஸ்(KKR) இங்கிலாந்து கேப்டன் அய்ன் மார்கனுக்கு(Eoin Morgan) ரூ.5.25 கோடி கொடுத்தது அதிகம்தான். பார்க்கலாம். ஆஸ்திரேலிய டி-20 கேப்டன் ஆரோன் ஃபிஞ்சை(Aaron Finch), விராட் கோஹ்லி தலைமை தாங்கும் பெங்களூரு அணி ரூ.4.4 கோடிக்கு வாங்கியது. அவரது திறமைக்கு அது சரியான விலை. இங்கிலாந்தின் ஜேஸன் ராய், டெல்லி கேப்பிடல்ஸ் அணியால் ரூ.1.5 கோடிக்கு மலிவாகத் தூக்கப்பட்டார். இந்திய டெஸ்ட் வீரர்களாக முத்திரை குத்தப்பட்ட புஜாரா, விஹாரி ஆகியோரை எந்த அணியும் ஏறெடுத்தும் பார்க்கவில்லை. ஸ்டூவர்ட் பின்னி, மனோஜ் திவாரி ஆகியோரும் ஏலம் போகவில்லை. Sad.

இரண்டாவது ரவுண்டிலிருந்து, ஏலம் வெகுவாக சூடுபிடித்தது. ஆஸ்திரேலியாவின் வேகப்பந்துவீச்சாளர் பேட் கம்மின்ஸ் (Pat Cummins) பெங்களூர், டெல்லி அணிகளுக்கிடையே புகையைக் கிளப்பினார். மாறி மாறி இரு அணிகளும் விலையை உயர்த்த, 14.75 கோடிவரை ஏற்றிவந்த டெல்லி, தடாலென்று விலகிக்கொண்டது! உள்ளே புகுந்தது கொல்கத்தா. பெங்களூரோடு கடும்போட்டி போட்டு, ரூ.15.5 கோடிக்கு கம்மின்ஸை வாங்கியது. இந்த அளவுக்கு இவருக்கு hype தேவைதானா? கம்மின்ஸ் தன் வேகத்தை ஆட்டத்தில் காண்பிப்பாரா? விக்கெட்டுகள் விழுமா,  இல்லை, KKR-ன் ஷாருக் கானுக்கு நாமம் தானா!

அதிக விலைக்குப்போன மேலும் சில வெளிநாட்டு வீரர்கள்: போனவருடம் ஐபிஎல் ஆடாத, ஆஸ்திரேலியாவின் ஆல்ரவுண்டர் க்ளென் மேக்ஸ்வெல்(Glenn Maxwell) ரூ. 10.75 கோடி (பஞ்சாப்), தென்னாப்பிரிக்காவின் ஆல்ரவுண்டர் க்றிஸ் மோரிஸ் (Chris Morris) ரூ. 10 கோடி (பெங்களூர்), முதன்முதலாக ஐபிஎல் ஏலத்தில் பங்குபெற்ற வெஸ்ட் இண்டீஸின் பௌலர், ‘சல்யூட்’ புகழ் ஷெல்டன் காட்ரெல் (Sheldon Cottrell) ரூ. 8.25 கோடி (பஞ்சாப்), ஆஸ்திரேலிய வேகப்பந்துவீச்சாளர் நேத்தன் கூல்டர்-நைல் (Nathan Coulter-Nile) ரூ.8 கோடி(மும்பை), வெஸ்ட் இண்டீஸின் அதிரடி பேட்ஸ்மன் ஹெட்மயர் (Shimron Hetmyer) ரூ. 7.75 கோடி (டெல்லி).

போனவருட வீரர்களை அதிகமாகக் கழட்டிவிடாமல் வைத்துக்கொண்டதால், கொஞ்ச இருப்புப் பணத்துடன் உட்கார்ந்து, மற்றவர்கள் பணத்தை விசிறி ஏலம் எடுப்பதை வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்த சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK), திடீரென ஒரு சமயத்தில் உள்ளே புகுந்து, இங்கிலாந்தின் வேகப்பந்துவீச்சாளர் சாம் கர்ரன் (Sam Curran)-ஐ ரூ.5.5 கோடிக்கு வாங்கியது. நல்ல பர்ச்சேஸ்தான். ஆனால் சென்னை, ஸ்பின்னர் பியுஷ் சாவ்லாவுக்கு ரூ.6.75 கோடி கொடுத்தது அசட்டுத்தனம். சென்னையிடம் ஏற்கனவே ஜடேஜா, ஹர்பஜன், கரன் ஷர்மா ஆகிய ஸ்பின்னர்கள் உண்டு.  இறுதியில் பணம் கரைந்துவிட்ட நிலையில், முதல் ரவுண்டில் ஏலம்போகாத TNPL ஸ்டாரான ஸ்பின்னர் சாய் கிஷோரை, 20 லட்ச ரூபாய்க்கு மலிவாக வாங்கிப் போட்டது சென்னை.  தமிழ்நாட்டின் இன்னுமொரு TNPL ஸ்பின்னரான, வித்தியாச ஆக்‌ஷன் காட்டும் வருண் சக்ரவர்த்தி ரூ.4 கோடிக்கு, கொல்கத்தா அணியினால் வாங்கப்பட்டார். கேப்டன் தினேஷ் கார்த்திக்கின் ‘சாய்ஸ்’ ஆக இருந்திருக்கும்.

பெரிசு: ப்ரவீன் டாம்பே

 இந்தியாவின் 19-வயதிற்குக் கீழ்ப்பட்டோரின் கிரிக்கெட் அணியிலிருந்து சில வீரர்கள் ஏலத்தில் எடுக்கப்பட்டது நேற்றைய விசேஷம்.  இந்திய U-19 கிரிக்கெட் கேப்டன் 19-வயது ப்ரியம் கர்க் (Priyam Garg) மற்றும் 22-வயது அதிரடி ஜார்கண்ட் பேட்ஸ்மன் விராட் சிங் ஆகியோர் தலா ரூ. 1.90 கோடிக்கு ஹைதராபாத் அணியினால் ஏலம் எடுக்கப்பட்டார்கள். கோச் வி.வி.எஸ். லக்ஷ்மணுடன் பேசியபின், நம்ப காவ்யா செய்த வேலை! மேலும், லெக்-ஸ்பின்னர் ரவி பிஷ்னோய் பஞ்சாப் அணியினால் 2 கோடி ரூபாய்க்கு வாங்கப்பட்டார். ராஜஸ்தான் பார்த்துக்கொண்டிருக்குமா? இந்திய U-19-அணிக்காகத் தேர்வாகியிருக்கும் 17-வயது பேட்ஸ்மன் யஷஸ்வி ஜெய்ஸ்வால்  (Yashaswi Jaiswal) -ஐ ரூ.2.40 கோடிக்கும், வேகப்பந்துவீச்சாளர் 19-வயது கார்த்திக் தியாகியை ரூ.1.30 கோடிக்கும் வாங்கியது. எதிர்காலத்தை மனதில் கொண்டு இரு இளைஞரையும் அணியில் இணைத்துக்கொண்டதாக ராஜஸ்தான் விளக்கியது. உத்திரப்பிரதேசத்தில் ஏழைக்குடும்பத்தில் பிறந்து, 15 வயதுவரை பானி-பூரி விற்றுவந்த சின்னப்பையன் ஜெய்ஸ்வாலின் எதிர்காலம் கண்ணுக்குத் தெரிய ஆரம்பித்துவிட்டது எனச் சொல்லலாமா?

இளசுகளா பார்த்து அணிக்குள் அள்ளிப்போட்டா எப்படி? பழுத்த பழத்தை யாராவது வாங்கவேண்டாமா? ப்ரவீன் டாம்பே (Pravin Tambe) என்கிற லெக்-ஸ்பின்னரை ரூ.20 லட்சத்துக்கு வாங்கியது கொல்கத்தா அணி. டாம்பேக்கு வயசு? சும்மா 48-தான்!

**

சென்னையில் ஆடும் தோனியின் சிஎஸ்கே – ஐபிஎல்

சென்னை க்ரிக்கெட் ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்த நாள் இன்று. சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, சென்னையின் சேப்பாக் மைதானத்தில் ஆடுகிறது. எதிர் அணி தமிழ்நாட்டின் ஹாட்ஸ்டார் தினேஷ் கார்த்திக் தலைமை தாங்கும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ். மோதல் அதகளமாக இருக்கும் என ரசிகர்கள் சூடாக இருக்கிறார்கள். மும்பைக்கெதிரான ஐபிஎல்-இன் ஆரம்பப் போட்டியில் கடைசி ஓவர் சிக்ஸரினால் தப்பித்த சிஎஸ்கே, இன்று சொந்தமைதானத்தில் வெல்லுமா?

கல்கத்தா அணியின் ஸ்பின்னர்கள் சமாளிக்கக் கடினமானவர்கள். சுனில் நாராய்ன், குல்தீப் யாதவ் மற்றும் பியுஷ் சாவ்லா. கூடவே வேகப்பந்துவீச்சாளர்களாக மிட்ச்செல் ஜான்ஸன், வினய் குமார் மற்றும் ஆந்த்ரே ரஸ்ஸல். ஒருவேளை, 18-வயதான, அண்டர்-19 அணியின் வேகப்புயல் கம்லேஷ் நாகர்கோட்டி இன்று கல்கத்தா அணியில் விளையாடக்கூடும். பெங்களூருக்கு எதிரான ஆட்டத்தில், பெங்களூரின் கை ஓங்கியிருந்தபோது, கல்கத்தாவின் மிடில் ஆர்டர் பேட்ஸ்மனான நிதிஷ் ரானாவை ஆஃப் ப்ரேக் போடச்சொல்லி திடீரென நுழைத்தார் தினேஷ் கார்த்திக். அதுவரை சிறப்பாக ஆடிக்கொண்டிருந்த டி வில்லியர்ஸ், கேப்டன் கோலி அசந்துபோனார்கள். இது யாருடா புது பௌலர்? கொஞ்சமும் எதிர்பாராதபடி, இருவரையும் ஒரே ஓவரில் காலி செய்தார் ரானா. அந்த அடியிலிருந்து
கோலியின் பெங்களூர் விடுபடமுடியாமல் மேட்ச்சையும் தோற்றது. இப்படி ஏதாவது செய்து, சென்னையை மெர்சலாக்கக்கூடும் தினேஷ் கார்த்திக்!

பேட்டிங்கில் சுனில் நாராய்ண் துவக்கி அதிரடி காண்பிக்க முயல்வார். க்றிஸ் லின் ஜோடி சேரக்கூடும். மிடில் ஆர்டர் ராபின் உத்தப்பா, நிதிஷ் ரானா, கார்த்திக், ஆந்த்ரே ரஸல் ஆகியோரின் கையில் இருக்கிறது. சென்னையின் தோனி அமைக்கும் பௌலிங் வியூகங்களை இவர்கள் சமாளித்தால், கல்கத்தாவுக்கு 180-190 என நல்ல ஸ்கோர் எகிறும்.

சென்னையின் மஞ்சள் சட்டைகளின் பலம் எப்படி? முதல் போட்டியில் படுமோசமாக ஆடிய சென்னை அணி, ப்ராவோ, ஜாதவின் அதிரடியால்தான் தப்பித்தது. இவர்கள் இருவரையும் தவிர மற்றவர்கள் அன்று தடவிக்கொண்டிருந்தார்கள். இன்றைய மேட்ச்சில் காயம் காரணமாக, கேதார் ஜாதவ் விளையாடமாட்டார். பேட்டிங்கில் முன்னேற்றம் காட்டாவிட்டால், சென்னையின் பாடு திண்டாட்டம்தான். தோனியோடு, ரெய்னா, ப்ராவோ, அம்பத்தி ராயுடு, வாட்ஸன், ஜடேஜா – இவர்களில் யாராவது மூன்று பேராவது பேட்டிங்கில் கலக்கியாகவேண்டும். இல்லையெனில் கல்கத்தா கமால்வேலை காட்டிவிடும். சென்னையின் வேகப்பந்துவீச்சாளர்களாக, டுவெய்ன் ப்ராவோ, தீபக் சாஹர், மார்க் உட் மற்றும் ஷர்துல் டாக்குர், இறங்குவார்கள் என நம்பலாம். ஸ்பின்னில் சர்தார்ஜி ஏதாவது செய்வாரா? சேப்பாக் ஸ்டேடியத்தை சரியாக அறிந்தவர் என்னைவிட வேறு யாரும் இல்லை என்று ட்வீட் விட்டவராயிற்றே! பந்துவீச்சு உண்டா, வெறும் வாய்வீச்சுதானா?
சென்னை ரசிகர்களின் மனதில் ஒரு துறுதுறுக்கும் கேள்வி. சிஎஸ்கே-வுக்காக, தமிழன் ஒருவனாவது விள்சையாடுவானா இந்த மேட்ச்சில்? முரளி விஜய் துவக்க ஆட்டக்காரராக இறங்கினால்தான் உண்டு. விஜயையும், அணியின் இரண்டாவது விக்கெட் கீப்பரான ஜெகதீசனையும் விட்டால் வேறு தமிழர்களே இல்லை அணியில். சிஎஸ்கே முதலாளிகள் அணிவீரர்களை ஏலம் எடுத்திருக்கும் லட்சணம் இது. இப்படி மோசம் செய்துவிட்டு, விசில்போடு, அப்பிடிப்போடு, இப்பிடிப்போடுன்னு எனப் பாட்டுப்பாடி என்ன பிரயோஜனம்?

இதற்கிடையே – ஏய்! ஐபிஎல்-ஐ நிறுத்து.. ஏதாவது நடந்தால் நாங்கள் பொறுப்பில்லை! –என்றெல்லாம் ஞொய்..ஞொய்…என்று சுத்திசுத்தி ஓலமிடும் நுளம்புகள் வேறு. கொசுக்கடி தாங்கமுடியவில்லை சென்னையில்!

**