நேற்றைய ஆட்டம், ஆஸ்திரேலியாபோன்ற ஒரு professional outfit-ஐ அவர்களது சூழலிலேயே எதிர்நோக்க, மல்லுக்கட்ட, தேவைப்படும் பாடங்களைப் படிக்கவில்லை. அல்லது அதற்கான முழுமுனைப்பு இந்திய அணியிடம் இல்லை என்பதை வெளிச்சம்போட்டுக் காட்டியது. இந்த மந்தப் போக்கு அடுத்த மேட்ச்சுக்குள் சரிசெய்யப்படாவிட்டால், ஒரு-நாள் தொடரை இந்தியா பரிதாபமாக இழப்பது உறுதி.
போஸ்ட்-மார்ட்டம் தேவையில்லை. சில விஷயங்களைக் கவனித்தால் போதுமானது.
வழக்கம்போல் கோஹ்லி டாஸைத் தோற்றாயிற்று. ஆஸ்திரேலிய ஓப்பனர்கள் எப்படி நிதானமாக ஆரம்பித்து 150+ வரை இழப்பின்றி ஸ்கோரை கொண்டுசென்றார்கள். பின் வந்தவர்கள் எப்படி இந்தியாவின் பிரதான பௌலர்களைத் தாக்கி ரன் மலையை எழுப்பினார்கள் என்பதை சாஸ்திரி+கோஹ்லி டீம் கவனித்ததா? அல்லது பஜியா, பக்கோடா சாப்பிட்டுக்கொண்டு அசட்டு ஜோக்கடித்து, ஒருவருக்கொருவர் கிச்சுகிச்சு மூட்டிக்கொண்டிருந்தார்களா பெவிலியனில்? தெரியவில்லை.
ஆஸ்திரேலியாவின் திட்டமிட்ட பேட்டிங் வியூகங்களுக்கு, ஒத்து ஊதுவதாக அமைந்தது இந்திய பௌலிங்! ஸ்பின்னர் சாஹலையும், வேகப்பந்துவீச்சாளர் பும்ராவையும் சிட்னியில் சமாளிக்க போதுமான ஹோம்-வர்க் செய்திருந்தார்கள் எதிரிகள். முகமது ஷமியை மட்டுமே அவர்களால் தொடமுடியவில்லை. ஷமி 3/59. ஜடேஜாவுக்கு விக்கெட் விழவில்லை என்றாலும் எகானமி-ரேட் மோசமில்லை. மற்றவர்கள்? ஒரு ஸ்பின்னர் -that too, team’s leading wicket taker- 10 ஓவர்களில் 89 ரன் கொடுத்ததாக அனேகமாக சரித்திரம் இல்லை என நினைக்கிறேன். சாஹலை எப்படியும் நொறுக்கித்தள்ளினால்தான் இந்தியாவின் பௌலிங் தாக்கத்தை வரும் தொடர்களில் வெகுவாகக் குறைக்கமுடியும் எனத் திட்டமிட்டு வெற்றிகரமாக முடித்திருக்கிறார்கள் நேற்று. பும்ரா பொதுவாக தாக்கும் பௌலர். 2-3 விக்கெட்டுகளாவது அவருக்குக் கிடைத்திருக்கவேண்டும். நடக்கவில்லை. செய்னி ஒரு அனுபவமில்லாத பௌலர். வியூகமில்லாத வேகம் விக்கெட்டைத் தராது என்று அவரிடம் யாரும் சொல்லவில்லைபோலும். சாஹலும், செய்னியும் 10 ஓவர்களில் முறையே 89, 83 ரன்கள் கொடுத்தார்கள். எடுத்தது ஆளுக்கு ஒரு விக்கெட். பும்ராவும் பெரிசாக செய்யவில்லை. அவரும் எடுத்தது 1. கொடுத்தது 73. இப்படியான பௌலிங்கில் எதிர்டீமின் இரண்டுபேர் சதமடித்து, ஆஸ்திரேலியா 374 எடுக்காமல் வேறென்ன செய்யும்?

375 -ஐத் துரத்திய, அல்லது அப்படி ஆரம்பத்தில் காண்பித்துக்கொண்ட இந்திய பேட்டிங் நிலை, எப்படியானது? டாப்-ஆர்டர் லட்சணம்: மயங்க் அகர்வால் 22, கோலி 21, ஷ்ரேயஸ் 2, ராஹுல் 12. உருப்படுமா? 350+ இலக்கை குறிவைக்கிற அழகா இது? கோஹ்லியின் 21 -ல் ஒரு கேட்ச் ட்ராப் வேற. அவர் ஆடியது அவர் இன்னும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரை விட்டுவரவில்லை என்பதையே காட்டியது. ஷ்ரேயஸ் ஐயருக்கு பௌன்சர் ப்ரச்னை. மயங்கும், ராகுலும் ஃபீல்டர் எங்கே நிற்கிறான் எனத் தேடிக்கொடுத்தார்கள் கேட்ச்சை. பௌன்சர்களில் காலியானார்கள் அகர்வால், கோஹ்லி மற்றும் ஷ்ரேயஸ் ஐயர். Hardik Pandya was the only silver-lining. பாண்ட்யாவின் 90, தவன்-74 இல்லாவிட்டால் இந்தியா 250-க்குள் சரிந்து இன்னும் பரிதாபமாகப் பிதுங்கியிருக்கும்.
முன்பெல்லாம் டெண்டுல்கர், யுவராஜ், சேஹ்வாக், ரெய்னா போன்ற ஸ்பெஷலிஸ்ட் பேட்ஸ்மன்கள், இக்கட்டான நிலையில், அவ்வப்போது சில ஓவர்களும் போடுவார்கள். ரெகுலர் பௌலரிடம் சிக்காத விக்கெட்டுகளையும் சமயத்தில் தூக்கி, அணிக்கு ஒரு ஆசுவாசம் தருவார்கள். ஏற்கனவே ஏற்பட்ட முதுகுப்பிரச்னையால் பாண்ட்யா பௌலிங் செய்வதில்லை இப்போது. நேற்றைய ஆட்டத்தில், இந்திய அணியில் ஆறாவது பௌலர், அதாவது பார்ட்-டைம் பௌலர் இல்லாதது பெரும் ப்ரச்னையானது. ஐந்து முக்கிய பௌலர்களில் யாராவது ஒருவருக்கு காயம், அல்லது செமயா அடிவாங்கினால், கேப்டன் அழைக்க என அந்த 6-ஆவது ஆள், ஆல்ரவுண்டர் அல்லது பௌலிங்கும் கொஞ்சம் தெரிந்த பேட்ஸ்மன் இல்லாதது எவ்வளவு பெரிய இழப்பு. ஏகப்பட்ட ரன்கொடுத்துவிட்டு, கடைசி ஓவரில் கையை உதறிக்கொண்டு ஓடிய சாஹல்.. அடிவாங்கித் திணறிய பும்ரா, செய்னி.. பெப்பே என முழித்துக்கொண்டிருந்த கேப்டன் கோஹ்லி.. சகிக்கவில்லை..
சரி, இந்தியாவின் ஃபீல்டிங்? கேவலம். 3 கேட்ச்சுகள் வெண்ணெய்க்கைகளில் பட்டு வழுக்கித் தரைசேர்ந்தன. மடத்தனமான இந்திய ground fieldingவேறு ஆஸ்திரேலிய ஸ்கோர் வேகமாக ஏற அனுமதித்தது. இந்தியாவின் உடல்மொழி, ஒரு டாப்-லெவல் கிரிக்கெட் மேட்ச் ஆடிக்கொண்டிருக்கிறோம் என்கிற உணர்ச்சியே இல்லாததுபோல் இருந்தது.
அடுத்த போட்டி நாளை இதே மைதானத்தில். சாஸ்திரி-கோஹ்லியின் மண்டையில் இப்போது ஊர்வதென்ன? நேற்றும் ஆசையாகக் கொடிதூக்கி வந்திருந்தார்கள், நாளையும் வருவார்கள் இந்திய ரசிகர்கள். அவர்களுக்குக் கொண்டாட என, இனிவரும் போட்டிகளில் ஏதாவது இருக்குமா?
**