அசோகமித்திரன்

இந்தியாவின் இணையற்ற சமகால எழுத்தாளர்களில் ஒருவர் அசோகமித்திரன். உலகின் மிகச்சிறந்த எழுத்தாளர்களுடன் ஒப்பிடப்படும் தகுதிபடைத்தவர். ஐம்பதாண்டுகளுக்கு மேலாகத் தமிழில் எழுதிவந்தும், பெரும்பாலான தமிழர்களுக்கு சரியாகத் தெரியாதவர். குற்றம் அவருடையதல்ல என்பதை, நண்பர்களே, அறிந்துகொள்வீராக!

மத்தியவர்க்க மனிதரின் அன்றாட வாழ்வுத் தடுமாற்றங்கள், மன உலைச்சல்கள், ஓயாத போராட்டங்கள் – இவையே அவரின் கதைக்கரு. அலங்காரமில்லா வார்த்தைகளில், சொற்சிக்கனத்துடன் மனித வாழ்வின் நீங்காத சோகம், அர்த்தமின்மை ஊடே பயணித்து வாசகனை வேறு தளத்திற்கு நகர்த்தும் சக்திவாய்ந்த படைப்புகள் அவரது நாவல்களாக, சிறுகதைகளாக வெளியாகியிருக்கின்றன. மானசரோவர், பதினெட்டாவது அட்சக்கோடு, ஆகாசத்தாமரை, கரைந்த நிழல்கள், இருவர் போன்ற சிறந்த நாவல்களை எழுதியிருக்கிறார். பல புகழ்பெற்ற சிறுகதைகளில் இவரின், வாழ்விலே ஒரு முறை, எலி, பிரயாணம், அப்பாவின் சினேகிதர், காலமும் ஐந்து குழந்தைகளும் போன்ற சிறுகதைகளும் அடங்கும். கட்டுரைத் தொடர்கள் பல வெளியாகியிருக்கின்றன. சமீபத்தில் குங்குமம் வார இதழில் தொடராக வெளியான அவரது அந்தக்காலச் சென்னை பற்றிய கட்டுரைகள் – `நடைவெளிப் பயணம்` புத்தகமாக வெளிவந்துள்ளது. இவரின் சிறந்த சிறுகதைகள் ஆங்கிலம் உட்பட்ட பிறமொழிகளில் மொழியாக்கம் செய்யப்பட்டுள்ளன.

`என் எழுத்து என்பது சக மனிதர்க்குச் செய்யும் மரியாதை’ என்கிறார் அசோகமித்திரன். நிறைய எழுதி, குறைவாகப் பேசுபவர். எப்போது எந்தப் பத்திரிக்கையில் எழுதலாம், எந்த டிவி-யில் கூப்பிடுவான் என்று ஒவ்வொருவரும் அலையும் இந்தக் காலத்தில், பேட்டிக்கு அழைத்தாலும் தவிர்க்க முயற்சிப்பவர். ஒரு எழுத்தாளனோட 20-பக்க பேட்டியை வாசிப்பதைவிட, அவனுடைய இரண்டு பக்க கதையை வாசித்தே அந்த வாசகனால் எழுத்தாளனைப் புரிந்துகொள்ளமுடியும் என்பவர் அசோகமித்திரன்.

வழக்கம்போல சிறந்த எழுத்தாளர்களை அடிக்கடி மறந்துவிடும் சாகித்ய அகாடெமி, 1996-ல் திடீரென விழித்துக்கொண்டு, அப்போது 30 ஆண்டுகளாக எழுதிவந்திருந்த அசோகமித்திரனுக்கு விருது அளித்தது. `ஞானபீட விருது` அமைப்புக்கு அவர் இன்னும் கண்ணில் படவில்லை. தமிழ் செய்த பாக்யம்! வேறென்ன சொல்ல.

அசோகமித்திரன் அவர்களுக்கு இன்று (22-09-2015) பிறந்த தினம். நிறைந்த ஆயுளும், நல்லாரோக்யமும் இறைவன் அருளால் அவருக்குக் கிட்டட்டும்.

**