மேதமையின் பேதமை

கணித மேதை ஸ்ரீனிவாச ராமானுஜம் பிறந்த பாரதப் பெருநாட்டில், அவருக்கப்புறம் யாரும் வரவில்லையா? இருந்திருக்கிறார்கள் சிலர், கணிதத்துறையில் வல்லமை காண்பித்து – ராமானுஜம் அளவிற்கு ஒப்பிடமுடியாதெனினும், சுதந்திர இந்தியாவில் கணித மேதைகள் எனப் புகழ்பெற்றவர்கள் என இருவர்  குறிப்பிடப்படுவர். ஒருவர் புகழ்பெற்ற பெண் – சகுந்தலா தேவி. கணிதத்தோடு ஜோஸ்யத்திலும் கொஞ்சம் விளையாடியவர். இன்னொருவர் அவருக்கிருந்த மேதமைக்கேற்றவாறு கவனிக்கப்படாமல் குறிப்பாகக் கடைசி நாட்களில்,  குடத்திலிட்ட விளக்குபோல் கேட்பாரற்று  ஒரு மூலையில் வாழ்ந்த வசிஷ்ட நாராயண் சிங் எனும் கணித அறிஞர்.

யாரிந்த வசிஷ்ட நாராயண் சிங்? பீஹாரில் பசந்த்பூர் எனும் குக்கிராமத்தில், ஒரு ஏழைக் குடும்பத்தில் 1942-ல் பிறந்து, வறுமையின் காரணமாக இளம் பிராயத்தில் தடுமாறியவர். அவரது கணிதத்திறன் யாரும் அறியாத ஒன்றாக அவரிடமே பதுங்கிக் கிடந்தது. ஏழைக்கு என்ன சிறப்பு? சொன்னாலும் எவன் கேட்பான்? யாரும்  கேட்கமாட்டார்கள். நம்பமாட்டார்கள். அப்படிப்பட்ட அசட்டுச் சமூகத்தில் வளர்ந்துவந்தான் சிறுவன் நாராயண் சிங். எப்படியோ ஆரம்பப் பள்ளிப்படிப்பை கிராமத்தில் முடித்து, ராஞ்சியில் உள்ள அந்தக்காலத்தில் நல்லபேர் வாங்கியிருந்த ஒரு அரசுப்பள்ளியில் சேர்ந்துவிட்டான். கடுமையாகப் படித்திருக்கிறான் பையன்.  அங்கேதான் அவனுக்குள் பம்மியிருந்த சிறப்பு கணிதத்திறன் உற்சாகித்து, வெளியில் தலைகாட்டியது. மெட்ரிகுலேஷனிலும், இண்டர்மீடியட் வகுப்பிலும், முதலாவதாகத் தேறினான் நாராயண் சிங். ’கௌன் ஹை ஏ காவ்(ன்)வாலா!’ – யாரிந்த கிராமத்துப்பயல் ! – என்று உற்றுப்பார்த்தனர் மற்றவர்.  யார், யாரோ உதவிசெய்ய, பீஹார் தலைநகர் பாட்னாவில் ’பாட்னா சோஷியல் காலேஜ்’ என அழைக்கப்பட்ட, ஒரு நல்ல கலைக்கல்லூரியில் கணிதம் (ஹானர்ஸ்) பட்டவகுப்பில் சேர்ந்து படித்தான் நாராயண் சிங். அவனைப் பெற்ற,  படிப்பறிவில்லா கிராமம், பட்டணத்திலிருந்து அவனது கல்விபற்றி  வந்த செய்திகளை இப்போது கொஞ்சம் காதுகொடுத்துக் கேட்க ஆரம்பித்தது.

1961 -இல் பாட்னாவின் ’பீஹார் காலேஜ் ஆஃப் இஞ்ஜினீயரிங்’ (தற்போது நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னாலஜி (NIT, Patna)-இல் ஒரு கணித வல்லுநனர் கலந்தாய்வு, கூட்டம் நடந்தது. அதற்கு ஒரு உயர்கணிதம் பயிலும் மாணவன் என்கிற நிலையில் தன் கல்லூரியிலிருந்து ஒரு பார்வையாளராக அனுப்பப்பட்டான் மாணவன் நாராயண் சிங். பேராசிரியர்கள் பலர் கலந்துகொண்ட கற்றோரின் சிறப்பு அரங்கில் பிரபல அமெரிக்க கணித மேதையான பேராசிரியர் ஜான் கெல்லி-யுடன் ( Prof. John Kelly, University of California, Berkeley (UCB)), யாரோ ஒரு புண்ணியவான் நாராயண் சிங்கை அறிமுகப்படுத்தியிருக்கிறார். துறுதுறுவென்றிருந்த மாணவனைப் பார்த்த ஜான் கெல்லி, ஐந்து கடுமையான கணக்குகளை சிங்கிடம் கொடுத்து, ’போடு இதையெல்லாம், விடை எழுது பார்க்கலாம்’ என்றிருக்கிறார். விறுவிறுவென அந்த ஐந்து கணக்குகளையும் போட்டு விடை காண்பித்தான் நாராயண் சிங். அதோடு விட்டானா? இதை வேறு சில வழிகளில் போடலாம், இதே விடையைக் கொண்டுவரலாம் என்றிருக்கிறான். நொடிகளில் செய்தும் காட்டியிருக்கிறான். ஆ.. இப்படி ஒரு பயலா இந்த நாட்டில்..! அசந்துபோனார் அமெரிக்க ப்ரொஃபஸர்! அதோடு நிற்காமல், அமெரிக்கா திரும்பியதும், தான் பணியாற்றிய கலிஃபோர்னியா பல்கலையின் (UCB) ’Summa cum laude’ எனும் கணித PhD படிப்பில் தன் மேலான சிபாரிசுடன் நாராயண் சிங்கிற்கு இடம் வாங்கிக்கொடுத்துவிட்டார் ஜான் கெல்லி.

நாராயண் சிங்கிற்கு அவரது முழுத்திறனை வெளிப்படுத்தும் வாய்ப்பு. அதற்கான நேரம், வசதிகள். கடுமையாக உழைத்தார் சிங்.  1969-ஆம் வருடம், ‘Reproducing Kernels and Operators with a Cyclic Vector’ (Cycle Vector Space Theory) – எனும் உயர்கணிதப் பிரிவில், பி.ஹெச்.டி. பட்டத்தை வசிஷ்ட நாராயண் சிங்கிற்கு கலிஃபோர்னியா பல்கலைக்கழகம் வழங்கி கௌரவித்தது. அதைத் தொடர்ந்து அவர் வாஷிங்டன் பல்கலைக்கழகத்தில் துணைப்பேராசிரியராக சேர்ந்து பணியாற்றினார். தொடர்ச்சியாக. அமெரிக்க விண்வெளிக் கழகமான நாஸா, நாராயண் சிங்கை அழைத்து,  அவரை தன்னோடு ஒரு ஆய்வுத்திட்டத்தில் இணைத்துக்கொண்டது. சில வருடங்கள் நாஸாவில் பணிபுரிந்த நாராயண் சிங்கிற்கு, முழுநேர ஆய்வாளர் பொறுப்பை நாஸா வழங்க முயற்சித்ததாம். ஆனால் தான் இந்தியா திரும்ப விரும்புவதாக சொல்லி மறுத்த சிங், தாய்நாடு திரும்பிவிட்டார். முதலில் ஐஐடி, கான்பூர் (உ.பி)-யிலும், பின்னர் டாடா அடிப்படை ஆராய்ச்சிக் கழகம் (Tata Institute of Fundamental Research, Bombay) மற்றும், இந்திய புள்ளியியல் கழகம், கல்கத்தா (Indian Statistical Institute, Calcutta) ஆகியவற்றிலும் சிறப்புப் பேராசிரியராக  பணியாற்றினார் வசிஷ்ட நாராயண் சிங்.

எழுபதுகளில், நாராயண் சிங்கின் அகவை முப்பதுகளில், அவரது மேதமை உச்சத்தில் இருந்தது. 1974-ல், நாராயண் சிங்கின் சிறப்பு ஆய்வுக் கட்டுரை ஒன்று ‘Quantum Mechanics and Optimisation Theory’-பற்றி, வெளியாகியிருந்தது. அப்போது உலகப்புகழ்பெற்ற இயற்பியல் விஞ்ஞானி ஆல்பர்ட் ஐன்ஸ்டீனின் ’சார்புக்கொள்கை’ (Theory of Relativity)-யிலிருந்து வெகுவாக மாறுபட்டு சில கருத்துக்களை முன்வைத்திருந்தார் நாராயண் சிங். அந்தக் காலகட்டத்தில்தான் உள் மன ரீதியாக அவருள் மாற்றங்கள் நிகழ ஆரம்பித்தன. அவ்வப்போது சில விசித்திர உணர்வு வெளிப்பாடுகளும் அவரிடம் காணப்பட்டன; அல்லது அவ்வாறு மற்றவர்களால் பார்க்கப்பட்டன.

அவரினுள் இடையறாது பொங்கிக்கொண்டு, வெளிவரக் குறுகுறுத்துக்கொண்டிருந்த கணித மேதமை, ஒரு புறம். மனதின் வேறொரு ஆழடுக்கிலிருந்து அவ்வப்போது வெளிப்பட்ட, புரிந்துகொள்ளமுடியாத  நடத்தைகள், கோப வெளிப்பாடுகள் என எதிராக்கங்கள் தலைகாட்ட, கூட இருந்தவரையும் குழப்பின. இந்த நிலையில்  அவரது இளம் மனைவிவேறு, துக்கத்திலிருந்தார். என்ன பிரச்னை? நாராயண் சிங் அமெரிக்காவிலிருந்தபோது அவரைக் கல்யாணம் செய்துகொண்ட வசதியான வீட்டுப் பெண். கணவருக்கு அமெரிக்காவில் வேலை. அங்கேயே செட்டில் ஆகி சுகபோகமாய் வாழலாம் என வசந்தகாலக் கனவுகள். இந்த மனுஷன் என்னடா என்றால், அமெரிக்க வேலையை விட்டுவிட்டு இந்தியாவுக்குத் திரும்பிவிட்டான். தாய்நாட்டில்தான் பணிசெய்வானாம். பைத்தியம்.. இவனைக் கட்டிக்கொண்டு நான் என்னத்தைக் கண்டேன்? ஒரு நகை, நட்டு உண்டா? சொத்து, சுகம் உண்டா? நாளெல்லாம் ஒக்காந்து கணக்குப் போட்றானாம்.. கணக்கு.. ம்ஹ்ம்… அவளது ஓயா எரிச்சல். வெறுப்பின் உச்சத்தில், அந்தப் பெண் ஒருநாள், இவரது கணித ஆய்வுக்கட்டுகளை எடுத்து வீட்டின் பின்புறம் வைத்தாள். கொளுத்தினாள். போய்விட்டாள். நாராயண் சிங்கிற்கு அடுத்த நாள் மனைவியைக் காணாத கடும் அதிர்ச்சி. அதற்குமேலும், தன் ஆய்வுக் கட்டுரைகள், கணித ஃபார்முலாக்கள். இங்கேதானே கிடந்தது..எங்கே போச்சு அந்த கட்டு ? மனம் பிறழாமல் என்ன செய்யும்  மனிதனுக்கு? சில வருடங்களில் அவரது தந்தையின் மறைவும் தொடர,  துக்கச் சுழல் அவரை அணைத்து, அணைத்து ஏதோ ஒரு ஆழத்திற்குள் உள்ளிழுத்தது. இந்தக் கட்டத்தில் சிங்கின் இயல்பு வாழ்வு பெரிதும் நிலைகுலைந்து கிட்டத்தட்ட ஒரு பைத்தியக்காரனாக ஆகிவிட்டார்.

Schizophrenia எனச் சொன்னார்கள் மருத்துவ நிபுணர்கள். அடிக்கடி மருத்துவமனை, வீடு, மருத்துவமனை என அலைக்கழிக்கப்பட்டார் சிங். மேதை என்கிற உச்சத்திலிருந்து சீக்காளி என்கிற பரிதாபநிலை வாழ்வின் வேண்டாத எதிர் துருவமாய் அவரை மிரட்டியது. துவட்டிப்போட்டது. அவரை சார்ந்த வெகுசிலரையும் அதிரவைத்தது. தூரத்தே செல்லவைத்தது. ஒன்றும் செய்வதற்கில்லை. மனநிலை மருத்துவம் வருடக்கணக்கில் தொடர்ந்தது. சிலவருடங்களுக்குப்பின்  வீட்டுக்கு அனுப்பப்பட்டார். உடல் நலம் வெகுவாகக் குன்றிப்போய்விட்டிருந்தது. இடையிலே (1988) தன் தம்பியொடு ஒரு ரயில் பயணித்திலிருந்த நாராயண் சிங் எங்கோ இறங்கிச் சென்றவர்தான். காணாமற்போய்விட்டார். எங்கு தேடியும் கிடைக்கவில்லை. நான்கு வருடங்கள். பின் பீஹாரின் ஏதோ ஒரு குக்கிராமத்தில் கிழிந்த சட்டையும், பரட்டைத் தலையுமாய் ஒரு பிரேதம்போல் அவர் உலவிக்கொண்டிருந்ததைக் கண்டுபிடித்து (1992), வீட்டுக்குக் கொண்டு வந்தார்கள். மீண்டும், மீண்டும் மனநல மருத்துவமனை. பேர்தெரியா மருந்துகள். நான்கு வருடங்கள் பெங்களூரிலுள்ள சிறப்புமிகு ஆய்வுகேந்திரமான NIMHANS-ல் அரசு உதவியுடன்

சிகிச்சையில் இருந்திருக்கிறார். குணம் தெரிந்திருக்கிறது. அவரது குடும்பத்தினால் தொடர்ந்து அவரை பெங்களூரில் வைத்துக்கொண்டிருக்கமுடியாது என, திருப்பி  அழைத்துச் சென்றுவிட்டார்களாம்.

பீஹாரில் அவரது கிராமத்தில் அம்மாவுடனும், தம்பி குடும்பத்தினருடனும் வசித்து வந்தார் சிங். சில சமயங்களில் இயல்பு நிலை. பேச்சு, தொடர்ந்த சிந்தனை, எழுத்து. வேறு சில சமயங்களில் சொல்லவொண்ணா மனத் தடுமாற்றம் என வருடங்கள் வலியோடு நகர்ந்தன. லோக்கல் அரசியல்வாதிகள் சிலர் அவ்வப்போது வந்து பார்த்து இதை, அதைச் செய்கிறேன் என்று சொல்லிச் சென்றார்கள். ஏமாற்றமே மிஞ்சியது. வாஜ்பாயி அரசின் முன்னாள்  அமைச்சர் ஷத்ருகன் சின்ஹா அந்தக் குக்கிராமத்துக்கு வந்து நாராயண் சிங்கை பார்த்ததில், நல்லது கொஞ்சம் நடந்தது. நாராயண் சிங்கின் சகோதரர் பையனுக்கு மத்திய சுகாதார அமைச்சகத்தில் ஒரு வேலை தரப்பட்டது. அதன் காரணமாக,  குறைந்த பட்ச விலையில் நாராயண் சிங்கிற்கு மருந்துகள் வாங்க முடிந்திருக்கிறது. இருந்தும் மாதாமாதம் 1200 ரூபாய் மருந்துக்கே செலவாகிறது எனக் கஷ்டப்பட்டிருக்கிறது அந்த ஏழைக் குடும்பம். இவ்வளவு பெரிய கணித மேதைக்கு மாதாந்திர சிறப்பு ஓய்வூதியம் என பீஹார் அரசு ஏதோ கொஞ்சம் வழங்கியிருக்கலாம். அப்படியெல்லாம் சிந்திப்போர் அரசாங்கத்தில் இல்லை. தனிப்பட்டோரிடமும் தாட்சண்யம் இல்லை.

அவருக்கும் தன் கிராமத்தில் என்னதான் இருந்ததோ, அதைவிட்டுப் பிரிய மனமில்லை. மேற்கொண்டு கவனிப்பாரின்றி மூலையில் கிடந்தார் நாராயண் சிங். வயதான மெலிந்த உடல், தலையில் குரங்குக் குல்லாய் என,  ஒரு சராசரி கிராமத்தானாக அங்குமிங்கும் உலவிக்கொண்டிருக்க, அவரது முதுமையும் அவரை ஆட்கொண்டிருந்தது. அவ்வப்போது ஏதேதோ சிந்தனையில், அவசரமாக வீடு திரும்பி காகிதத்தில் வேகவேகமாகக் கிறுக்கிவைப்பார். மூலையில் காகிதக் கட்டு.. முகவரியில்லா மேதமை.

எப்போதாவது யாராவது அவரைப்  பார்க்க வந்தால், பேச்சின் ஊடே கேட்பாராம். ’பேனா கொண்டு வந்திருக்கியா?’ (பீஹார் போன்ற ஒரு மாநிலத்தில், அதுவும் கிராமத்தில் பேனா, பேப்பர் என்பது பேரதிசயம் என அறிக). வந்தவர் தற்செயலாக பேனா வைத்திருந்து அதை அவரிடம் கொடுத்தால், வந்தவரின் உள்ளங்கையில் ஏதோ கணித ஃபார்முலா ஒன்றை எழுதிக் காட்டுவாராம் நாராயண் சிங். வந்தவருக்கு ஒன்றும் புரியாது. ஆனால் ஒரு  சந்தோஷம் – பெரிய கணித மேதை தன் கையில் ஏதோ எழுதியிருக்கிறார் என! பிறிதொரு சமயம் யாராவது வந்து பேச ஆரம்பித்தால், தன் தம்பியிடம் சொல்வாராம் நாராயண் சிங். ’போகச்சொல்லு இவனை. ஏதோ எண்டர்டெய்ன்மெண்ட்டுக்காக வந்திருக்கான்..’ அந்த அதிர்ச்சியில் சில நல்லவர்களும் படபடத்து வெளியேறியிருக்கிறார்கள். மனம் கேட்கமாட்டாமல், மீண்டும் சிலர் தயங்கியவாறு அவரது வீட்டுக்கு மரியாதை நிமித்தம் வந்தபோது, நாராயண் சிங் ஒன்றும் நடக்காததுபோல் பேசிக்கொண்டிருப்பாராம். பின்னர் வந்தவரிடம் கேட்பாராம்: ’கேமரா இருக்கா ஒங்கிட்ட! என் தம்பியோடு என்னை சேத்து ஒரு ஃபோட்டு எடுத்துக்கொடேன்..!’  தம்பியின் தோளில் கைபோட்டுக்கொண்டு போஸ் கொடுப்பாராம். அப்போது அவரைப் பார்த்தால் மனநிலை குலைந்தவர்போல் தோன்றியதில்லையாம். அவரது வயசான அம்மாவோடு பேசிக்கொண்டிருக்கையில், ஒரு நண்பர் நாராயண் சிங்கின் சமீபத்திய வாழ்க்கைபற்றி கேட்டபோது அவர் சொல்லியிருக்கிறார். ”அவன் இப்போ சாதாரணமாத்தான் இருக்கிறான். தினமும் காலையில் கீதை படிப்பான். மாலையில் கொஞ்சம் ராமாயணம். இடையிடையே மூலையில் உட்கார்ந்துகொண்டு,  பேப்பரில் எதைஎதையோ எழுதிக்கொண்டே இருக்கிறான். என்ன எழுத்தோ.. என்னமோ.. ஏதோ..?  யாருக்குப்  புரியுது இதெல்லாம்.” என்று அங்கலாய்த்திருக்கிறார் அந்த மூதாட்டி. இப்படி பலவேறாக மாறுபட்ட மேதமையின் மனநிலைகள். துணைக்கு என ஓயாத மருந்துகள், மாயங்கள். ஒரு சிந்தனையாளனின் கடைசிகாலம்.

சமீபத்தில் பாட்னா மெடிக்கல் காலேஜ் ஹாஸ்பிடலில் வசிஷ்ட் நாராயண் சிங் காலமானார். அவரது குடும்பத்தினர் என்று சிலர் மருத்துவமனை வாசலில் அன்று, அவரது பூத உடலை வைத்துக்கொண்டு ஆம்புலன்சிற்காக இங்குமங்குமாக அல்லாடிக்கொண்டிருந்திருக்கிறார்கள். அப்போது திடீரென வீறிட்டது அரசு அறிவிப்பு. ‘பீஹாரின் மறைந்த கணித மேதை வசிஷ்ட் நாராயண் சிங், அரசு மரியாதைகளுடன் அடக்கம் செய்யப்படுவார்!” இருக்கும்போது அவரைக் கொண்டாடாத, போற்றாத, உதவிகளை ஒழுங்குமுறையாகச் செய்யாத அரசாங்கம், அவருக்கான இறுதி வழியனுப்புதலை மாலை, மரியாதைகளுடன் நிறைவேற்றி தன் பாவமூட்டையிலிருந்து கொஞ்சம் குறைத்துக்கொண்டது. சமூகம் ?

**

யானையை வர்ணிக்க முயன்ற சுண்டெலி

நகரின் உட்புறச்சாலையோர சாக்கடைப் பொந்திலிருந்து வெளிப்பட்டது சின்னதாய் ஒரு சுண்டெலி. வெளியைக் கண்டால் பயமதற்கு. மிரண்டு போய் அந்தப் பக்கம் பார்க்க, எதிரே நடைபாதையைத் தாண்டி இன்னொரு இருட்டுப்பொந்து ஈர்த்தது மனதை. எலிமனமாயிற்றே!. ஆனால் பெரிய சாலையைக் குறுக்காகக் கடக்க வேண்டுமே. ஒரே ஓட்டமாக ஓடிவிடவேண்டியதுதான் அந்தப் பக்கத்துக்கு. அதற்குள் ஏதோ சத்தம் கேட்க, தன் எண்ணெய்க்கண்ணை இடுக்கிப் பக்கவாட்டில் பார்த்தது. கருப்பாக பெரியமலையொன்று சாலையின் நடுவிலே அசைகிறதே. யானை ஒன்று வந்துகொண்டிருந்தது. ‘என்ன ஒரு ஜீவனிது. எத்தனை பெரிசு.. இருந்தும் எத்தனை மெதுவாக நடக்கிறது’ என மனதுக்குள் கிண்டலடித்தது சுண்டெலி. தன் சிற்றறிவைக் கூராக்கி மேலும் ஆராய்ந்தது:

உருவமோ கருப்பு
முகமோ ஐயோ..வெறுப்பு
மலைபோலிருந்தும் என்ன ஒரு மசமசப்பு
தூணைப்போலக் கால்கள்..துவண்டுபோன நடை
சாலையில் இது நடக்க யாரும் போடலையோ தடை
சாலையென ஒன்றிருந்தால்
சரக்கெனப் பாய்ந்து கடக்கவேண்டும்
சாய்ந்து சாய்ந்து நடப்பதென்பது
மனிதர்கள் மட்டுமே செய்யும்
மரபுகளின் மீதான அத்துமீறல் ..

யானை சென்றுவிட்டது. தன் சிறுமண்டைக்குள் சிக்கிக்கொண்ட பெரும் யானையை இன்னும் எப்படியெல்லாம் தாக்கவேண்டும் என விமரிசன வரிகளை அசைபோட்டுக்கொண்டே, சாலையின் குறுக்கே சரக்கென்று ஓடியது சுண்டெலி. இன்னுமொரு பொந்துக்குள் சுகமாய் நுழைந்துகொண்டது.
ஏதோ ஒரு சாதாரண ஜீவன் என நினைத்துவிடாதீர். சுண்டெலி சமூகத்தில் விருதுபல வாங்கிய பெருங்கவிஞன் இது என சேதி ஒன்று காதுக்கு எட்டியிருக்கிறது.

**

பெண்கள் படுத்தும்பாடு !

’ஏதோ கொஞ்சம் படிச்சிடுத்துகளாம். சம்பாதிக்கிறதுகளாம். இதுகளுக்கு இருக்கிற திமிரு இருக்கே..அடேங்கப்பா ! எங்கே போயி சொல்றது..’ என்று அங்கலாய்த்தார் ஒரு மாமி. தன் பிள்ளைக்குப் பெண் தேடும் படலத்தில் ஒரேயடியாக சலித்துப்போயிருக்கவேண்டும். ’அத ஏன் கேக்கறே, பையன் நாப்பது நாப்பத்தஞ்சாயிரம்னு சம்பளம் வாங்கினாப் போதாதாம். குறைஞ்ச பட்சமா எழுபதாயிரம், எண்பதாயிரமாவது கையில வந்தாத்தான் கல்யாணத்தப்பத்தி யோசிக்கவே முடியுமாம். இப்படியெல்லாம் பெரியமனுஷத்தனமா பேசறுதுகள். இதுகளோட எப்படி சம்பந்தம் வச்சிக்கறது!’ என்றார் இன்னொருவர். ’அட, அதவிட்டுத்தள்ளுங்கோ.. கல்யாணத்துக்கப்பறம் மாமியார் மாமனார் எங்ககூட இருக்கக்கூடாதுங்கறா! பிள்ளையப் பெத்தவா – அதுவும் ஒத்தப்பிள்ளைக்காரா- வயசான காலத்துல தன் பிள்ளையோட இருக்காம எங்கதான் போயிருக்கணுங்கறா? பொண்ணப்பெத்தவாளும் இதுகளோடப் பேச்சக்கேட்டுண்டு ஆடறா. இது எங்கபோயி முடியும்னே தெரியலையே..’ சூடான காஃபியை உறிஞ்சிக்கொண்டே கவலையும் கோபமும் தெறிக்கும் உரையாடலில் இரண்டு மாமிகள் ஆழ்ந்திருப்பதை ஒரு ஃபங்க்‌ஷனில் கவனித்தேன்.

உண்மைதான். உலகமயமாக்கல், பொருளாதார, தொழில்துறை முன்னேற்றம், வெளிநாட்டுக் கம்பெனிகளின் அதிரடி வருகை, உயர்கல்வியில் பெண்களின் தொடரும் உழைப்பு, முன்னிலை, இளையோருக்கான புதிய வேலைவாய்ப்புகள், உயர்ந்துவிட்ட சம்பள விகிதங்கள், தராதரங்கள் என கடந்த இருபதுவருடங்களில் மாற்றத்தில் இந்தியா கனவேகம் எடுத்திருக்கிறது. இவற்றின் தாக்கம் சமூகத்தின்மீது, குறிப்பாக மத்தியதர வர்க்கத்தின்மீது வெகுவாகப் படிந்துவிட்டது. அப்போதெல்லாம் நல்ல உத்தியோகத்திலிருந்த பிள்ளைகளைப் பெற்றோர், கல்யாணச்சந்தையில் ஒரு பக்கம் தங்கள் கோரிக்கைகளோடு கூத்தடிக்க, தெண்டத்துக்கு ஒரு டிகிரியுடன், மற்றபடி ஒன்னுக்கும் லாயக்கில்லாத, சாமர்த்தியமில்லாத அசட்டுப் பிள்ளைகளை வைத்துக்கொண்டிருந்தவரும்கூட போடாத ஆட்டமெல்லாம் போட்டார்கள். ’என் பிள்ளக்கு ஒம்பொண்ண கல்யாணம்பண்ணி வைக்கணுங்கிறியா? எத்தன நகை போடுவே? வீடு, வாசலிருக்கா? மாப்பிள்ளைக்கு ஸ்கூட்டர், பைக் ஏதாவது வாங்கித் தருவியா? – என்றெல்லாம் அவர்கள் ஏழ்மையிலிருந்த, அல்லது போதிய பொருளாதார வசதியில்லாமல் தடுமாறிய பெண்வீட்டுக்காரர்களை சீண்டிப் பார்த்ததையும், சித்திரவதை செய்ததையு்ம் எளிதில் இந்த சமூகம் மறந்துவிடாது. பிள்ளைவீட்டுக்காரர்களின் தடித்தனம், நியாயமற்ற கோரிக்கைகளின் காரணமாக எத்தனையோ ஏழை, மத்தியவர்க்க யுவதிகள் கல்யாணம் செய்துகொள்ளமுடியாமல் தவித்தார்கள். பெற்றோருக்கு பாரமாய் நின்றதில், மன உளைச்சலில் உழன்றார்கள். அந்தக்காலந்தான் இப்போது ஒருவழியாக மலையேறிப்போய்விட்டது. காலச்சக்கரத்தின் சுழற்சியில் ஆண்கள் சரிய, பெண்கள் மேலே வந்துவிட்டார்கள். Poetic justice !

தற்காலப் பெண்கள் பெரும்பாலும் நன்றாகப் படித்திருக்கிறார்கள். சிலர் சிறப்பான உயர்கல்வித்தகுதிகளையும் பெற்றிருக்கிறார்கள். நல்ல வேலைகளுக்கு, சவாலான வேலைகளுக்கும்கூடப் போகிறார்கள். பை நிறைய சம்பாதிக்கிறார்கள். பொருளாதார ரீதியில் சொந்தக்காலில் உறுதியாய் நிற்பவர்கள் இவர்கள். இவர்களுக்கென ப்ரத்தியேக சமூக, நட்பு வட்டமும் உண்டு. சுய சிந்தனை, தீர்க்கமான முடிவு இவர்களுக்குக் கைவந்திருக்கிறது. இவர்களெல்லோரும் காதலித்துத்தான் கல்யாணம் செய்துகொள்கின்றனர் என்றில்லை. பெரும்பாலானோர் பெற்றோர் பார்த்துக் கல்யாணம் செய்துவைப்பதை விரும்புகின்றனர். ஆனாலும், தங்களுக்கான வாழ்க்கைத் துணை எப்படி இருக்கவேண்டும் என்பதில் இவர்கள் தெளிவாக இருக்கிறார்கள். இன்னொரு விஷயம்: தற்போதெல்லாம் பெண்ணைப் பெற்றவர்களின் confidence level-ம் அதிகமாகியிருக்கிறது. வேகமாக முன்னேறிவரும் நாட்டில், சமூகமாற்றங்கள், புதிய வாழ்வியல் மதிப்பீடுகள் போன்றவை காலப்போக்கில் நிகழத்தான் செய்யும். தவிர்க்க இயலாதவை இவை.

இந்தக்கால யுவதிகளின் கல்வித்தகுதி, சம்பாத்யம், சுதந்திரம், துணிவு ஆகியவற்றைக் கவனிக்கும் பெற்றவர்கள் – அதாவது பிள்ளையைப் பெற்றவர்கள், நல்ல மருமகளாக நம்வீட்டுக்கு வரவேண்டுமே எனக் கவலைப்படுகிறார்கள். பெண்ணைப் பெற்றோர் ஒன்றும் எந்தக் கவலையுமின்றிக் காத்துவாங்கிக்கொண்டிருக்கவில்லை. அவர்களும், வரப்போகிற மாப்பிள்ளைப் பையன் நன்றாகச் சம்பாதிப்பதோடு மட்டுமல்லாமல், நல்ல குடும்பத்திலிருந்தும் இருக்கவேண்டுமே, குணாளனாக அமையவேண்டுமே என்று கவலைப்படத்தான் செய்கிறார்கள். மாறிவரும் உலகில் இருதரப்பு அக்கறைகள், கவலைகள் எல்லாம் நியாயமானதுதான். ஆனால், சுதந்திரம், சுயமான முடிவு என்கிற பெயரில் இளைஞர்கள் தான்தோன்றித்தனமாகக் காரியம் செய்து குடும்பவாழ்வில் குழப்பங்கள் ஏற்பட்டுவிடாதிருக்க, என்ன செய்யவேண்டும்? பெற்றோர் முதலில் தங்களது பிள்ளையை, பெண்ணை நினைத்து ’நம்பளோட கொழந்த’ என்று பெருமிதம்கொள்வதோடுமட்டும் நின்றுவிடாமல், அவர்களைச் சரியாக அவதானிக்கவேண்டும். நம்வீட்டுப் பிள்ளைகள்தான் எனினும், தனிப்பட்ட மனிதர்கள் என்கிற நிலையில் இவர்கள் யார், எப்படி உருவாகியிருக்கிறார்கள், எத்தகைய நம்பிக்கைகள், வாழ்வியல் மதிப்பீடுகளை நம் பிள்ளைகள் கொண்டிருக்கிறார்கள் எனப் புரிந்துகொள்ள பெற்றோர் முயற்சிக்கவேண்டும். அவர்களிடம் ஒரேயடியாக புத்திமதி சொல்கிறேன் பேர்வழி என்று லெக்சர் அடிக்காமல், புலம்பாமல், போரடித்து விரட்டிவிடாமல், கனிவோடு, தோழமையோடு பேசி இணக்கம் கொள்வது முக்கி
யம். இப்படி ஒரு சூழலை வீட்டில் அமைத்துக்கொண்டால் மட்டுமே கல்யாணம், கார்த்திகை போன்ற விஷயங்களில் குடும்பமாக சேர்ந்து உட்கார்ந்து பேச வாய்ப்புகள் ஏற்படும். இப்படி எடுக்கப்படும் முடிவுகள் சரியாக அமைந்துவிட வாய்ப்புகள் அதிகம். காலங்காலமாக, ஒரு தனிமனித, சமூகத் தேவையாக உருவெடுத்துவிட்ட ’குடும்பம்’ என்கிற institution-மீது, அமைப்பின்மீது வளர்ந்த பிள்ளைகள் நம்பிக்கை இழந்துவிடாதிருக்க இது பெரிதும் உதவும். இத்தகைய ஹோம்வொர்க்கைச் சரியாகச் செய்யாமல் பெற்றோர்கள் வெறும் குழப்பமும், அனாவசியப் பதற்றமும், தடுமாற்றமும் கொள்வதில் ஒரு புண்ணியமும் இல்லை எனத் தோன்றுகிறது.

**

கவிஞர் ஞானக்கூத்தன்

என்ன நடக்கிறது இங்கே?
கவிஞர்கள் ஒவ்வொருவராய்க்
கடந்து செல்லும் காலமா இது?
எமதர்ம ராஜனுக்கு
எது தர்மம் என்றே மறந்துவிட்டதா
கவிஞனையே குறிவைத்துக்
காரியம் செய்தால் அவன் தன்
கடமையைச் செய்வதாய் ஆகாதே
ஒருவேளை .. ஒருவேளை ..
உயிர்பறித்துச் செல்வதிலும்
ஊழல் கலந்துவிட்டதா?

-ஏகாந்தன்

பாரதிக்குப் பின் நகர்ந்த காலகட்டத்தில், கடந்த அரைநூற்றாண்டுக் காலமாக தமிழ்க்கவிதை உலகில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்திய கவிஞர் ஞானக்கூத்தன். இப்போது நம்மிடமிருந்து விலகிவிட்டார். நகுலன், ஆத்மாநாம், பிரமிள், சி.மணி, கல்யாண்ஜி, கலாப்ரியா, விக்ரமாதித்யன் என விரிந்த ஒரு வீரியமான தமிழ்க்கவிதைப் பரப்பின் பிரகாசமான ஜொலிப்பு அவர். முறுக்கிய வடிவம், கறாரான தத்துவசாரம் என இறுகிக்கிடந்த தமிழ்க்கவிதைச் சூழலில், ஒரு நளினம், நையாண்டித்தனம், முறுவலைக் கொணர்ந்தவர் ஞானக்கூத்தன். எழுபதுகளின் அபத்த அரசியல் கலாச்சாரத்தை, சுய லாபங்களுக்காகத் தமிழ், தமிழ் எனக் கூவி விற்றுப் பிழைத்த மேடைகளின் போலித்தனத்தை, அரசு அதிகாரத்தைக் கண்டு அஞ்சாமல் தன் எழுத்துக்களில் கடுமையாக விமரிசித்த கவிஞர். தமிழின் பொதுக்கலாச்சாரத்திலிருந்து மாறுபட்டு, அங்கதத்துடன் ஒலித்தன அவரது கவிதைகள். அவருடைய சிறுகவிதை ஒன்று:

தமிழ்

எனக்கும் தமிழ்தான் மூச்சு
ஆனால்
பிறர் மேல் அதை விடமாட்டேன்

**

தமிழ் அரசியல் கலாச்சாரத்தின்மீது கவிஞனின் அங்கத அட்டகாசம் கீழே(1969, 1971-ல் எழுதிய கவிதைகள்):

காலவழுவமைதி

“தலைவரார்களேங்…
தமிழ்ப்பெருமாக்களேங்… வணக்கொம்.
தொண்ணூறாம் வாட்டத்தில் பாசும் வாய்ப்பய்த்
தாந்தமைக்கு மகிழ்கின்றேன். இன்றய்த் தீனம்
கண்ணீரில் பசித்தொய்ரில் மாக்களெல்லாம்
காலங்கும் காட்சியினெய்க் காண்கின்றோங் நாம்”

‘வண்ணாரப் பேட்டகிள சார்பில் மாலெ’

“வளமான தாமிழர்கள் வாட லாமா?
கண்ணாளா போருக்குப் போய்வா யேன்ற
பொற நான்ற்றுத் தாயெய் நாம் மறந்திட்டோமா?
தாமிழர்கள் சொகவாழ்வாய்த் திட்டாமிட்டுக்
கெடுப்பவர்கள் பிணாக்குவ்யல் காண்போ மின்றே
நாமெல்லாம் வரிப்பொலிகள் பகைவர் பூனெய்
நாரிமதி படைத்தோரை ஒழிப்போம் வாரீர்
தலைவரார்களேங்
பொதுமாக்களேங் நானின்னும்
யிருகூட்டம் பேசயிருப்பதால்
வொடய் பெறுகறேன் வணக்கொம்”

‘இன்னுமிருவர் பேச இருக்கிறார்கள்
அமைதி… அமைதி …’

**
மண்ணும் மந்திரியும்

ராமன் கால் பட்ட பின்பு
கல்லெல்லாம் பூக்களாச்சாம்
அதிசயம் என்ன. எங்கள்
அமைச்சர் கால்
படுமுன்னேயே
என்னென்ன மண்ணுக்காச்சு?

**

விமரிசனங்களையோ, ஓரங்கட்டப்படுதலையோ பொருட்படுத்தாமல், சுதந்திரமாய்க் கவிதைகள் புனைந்தவர் ; எந்தப் புனிதத்தையும் முன்னிறுத்தாதவர். புதுக்கவிதையின் புன்னகையாக மிளிர்ந்தவர் ஞானக்கூத்தன். அதிகாரத்தில் இருப்போரை அண்டி வாழ்ந்து, அரசு உபச்சாரம், விருதுக்கென முண்டியடித்தோடும் தமிழ்ப்படைப்பாளி அல்ல அவர். தமிழ்ச்சூழலின் அவலமான குழுஅரசியலும் சாகித்ய அகாடமி போன்ற விருதுகளிலிருந்து அவர் விலக்கி வைக்கப்பட்டதற்கு ஒரு காரணம் எனலாம். இருந்தும், தமிழ்ப் புதுக்கவிஞர்களின் முன்னோடிகளில் ஒருவரான ஞானக்கூத்தனுக்கு 2014-ல் விஷ்ணுபுரம் விருது வழங்கப்பட்டது.
சிந்தித்துப் பார்க்கையில், கவிஞன் ஒருவனுக்கு அஞ்சலி என்பதாக ஒன்று தேவையில்லைதான். ஏனெனில், கவிஞன் காலங்கடந்தவன். ஆதலால் அவனுக்கு இறப்பில்லை. அவனது எழுத்துக்கள் மூலம் நாம் அவனுடன் எப்போதும் உரையாடுவோம். வாருங்கள் அதைக் கொஞ்சம் செய்வோம் இப்போது. ஞானக்கூத்தனின் சில கவிதைகள் :

சொல்

எதையும் மனதில் வைத்துக் கொள்ளாமல்
வெளியில் சொல்லும் பழக்கம் எனக்கு
நண்பன் ஒருவனோ நேரெதிர் இதற்கு
ஒன்றையும் சொல்ல மாட்டான் எதற்கும்
மௌனமாய் இருப்பதே அவன் வழியாகும்
பலரும் சொன்னோம்
‘சொல்லப்படுதலே என்றும் சிறந்தது’
அதற்குப் பிறகும் அவன் சொல்லவில்லை.
நாங்கள் வியந்தோம்.

இறக்கும் பொழுதும் சொல்ல மாட்டானா
ஒருநாள் அவனும் இறந்தான்
கட்டைப் புகையிலை போல அவன்
எரிந்ததைப் பார்த்துத்
திரும்பும் பொழுது தெருவில் வெயிலில்
சேவல் கூவிற்று ஒருமுறை விறைத்து.
வழக்கம் போல நான் சொன்னேன்
‘புலர்ந்தற் கப்புறமும் கோழிகள் கூவும்’

**
என்ன மாதிரி

என்னை நோக்கி ஒருவர் வந்தார்
எதையோ கேட்கப் போவது போல
கடையா? வீடா? கூடமா? கோயிலா?
என்ன கேட்கப் போகிறாரென்று
எண்ணிக் கொண்டு நான் நின்றிருக்கையில்
அனேகமாய் வாயைத் திறந்தவர் என்னிடம்
ஒன்றும் கேளாமல் சென்றார்.
என்ன மாதிரி உலகம் பார் இது.

**
காலைநடை

வில்லைத்தகர எழுத்துகளால்
வெட்டுப்பட்ட விளம்பரம் போல்
நிலத்தின் மீது வயல்வரப்பு
விடிந்த நாளின் முதல் சிகரெட்
நெருப்பைத் தவிர மற்றெல்லாம்
பச்சை பொலியும் செழும்பூமி
தோப்புப் பனைகள் தொலைவாக
தாழைப் புதர்கள் உரசாமல்
நடக்கும் அவரைத் தெரிகிறதா?
கையில் கொஞ்சம் நிலமுண்டு
ஸ்டேஷன் மாஸ்டர் கொடிபோல
உமக்கும் இருந்தால் தஞ்சையிலே
நீரும் நடப்பீர் அதுபோல

**
உயர்திரு பாரதியார்

சிறுவயதில் நான் பார்த்த நடனம் ஒன்றில்
பாடினார் இளம் பெண்கள் இருவரேதோ
பாட்டுக்கு. எவரெழுதித் தந்தா ரந்தப்
பாட்டென்று நான் கேட்டேன் உம்மைச் சொன்னார்
சிறுவயதில் நான் சென்ற பொதுக் கூட்டத்தில்
சூடுள்ள சிலவரிகள் ஒருவன் சொன்னான்
எவரெழுதித் தந்தாரிதை என்றேன். வேர்த்த
முகம் துடைத்துக் கொண்டபடி உம்மைச் சொன்னான்
மணியறியாப் பள்ளிகளில் தண்டவாளத்
துண்டொன்று மணியாகத் தொங்கல் போலக்
கவிஞரிலாத் தமிழகத்தில் எவரெல்லாமோ
கவிஞரெனத் தெரிந்தார்கள் உமக்கு முன்பு
அணைக்காத ஒலிபெருக்கி மூலம் கேட்கும்
கலைகின்ற கூட்டத்தின் சப்தம் போலப்
பிறகவிஞர் குரல் மயங்கிக் கேட்குமின்னும்
நீர் மறைந்தீர் உம் பேச்சை முடித்துக் கொண்டு

**
சைக்கிள் கமலம்

அப்பா மாதிரி ஒருத்தன் உதவினான்
மைதானத்தில் சுற்றிச் சுற்றி
எங்கள் ஊர்க் கமலம் சைக்கிள் பழகினாள்
தம்பியைக் கொண்டு போய்ப்
பள்ளியில் சேர்ப்பாள்
திரும்பும் பொழுது கடைக்குப் போவாள்
கடுகுக்காக ஒரு தரம்
மிளகுக்காக மறு தரம்
கூடுதல் விலைக்குச் சண்டை பிடிக்க
மீண்டும் ஒரு தரம் காற்றாய்ப் பறப்பாள்
வழியில் மாடுகள் எதிர்ப்பட்டாலும்
வழியில் குழந்தைகள் எதிர்ப்பட்டாலும்
இறங்கிக் கொள்வாள் உடனடியாக
குழந்தையும் மாடும் எதிர்ப்படா வழிகள்
எனக்குத் தெரிந்து ஊரிலே இல்லை
எங்கள் ஊர்க்கமலம் சைக்கிள் விட்டாள்
என்மேல் ஒருமுறை விட்டாள்
மற்றப் படிக்குத் தெருவில் விட்டாள்

**
அம்மாவின் பொய்கள்

பெண்ணுடன் சினேகம் கொண்டால்
காதறுந்து போகும் என்றாய்
தவறுகள் செய்தால் சாமி
கண்களைக் குத்தும் என்றாய்
தின்பதற் கேதும் கேட்டால்
வயிற்றுக்குக் கெடுதல் என்றாய்
ஒருமுறை தவிட்டுக்காக
வாங்கினேன் உன்னை என்றாய்
எத்தனைப் பொய்கள் முன்பு
என்னிடம் சொன்னாய் அம்மா
அத்தனைப் பொய்கள் முன்பு
சொன்ன நீ எதனாலின்று
பொய்களை நிறுத்திக் கொண்டாய்
தவறு மேல் தவறு செய்யும்
ஆற்றல் போய் விட்டதென்றா?
எனக்கினி பொய்கள் தேவை
இல்லையென் றெண்ணினாயா?
அல்லது வயதானோர்க்குத்
தகுந்ததாய்ப் பொய்கள் சொல்லும்
பொறுப்பினி அரசாங்கத்தைச்
சார்ந்ததாய்க் கருதினாயா?
தாய்ப்பாலை நிறுத்தல் போலத்
தாய்ப் பொய்யை நிறுத்தலாமா
உன் பிள்ளை உன்னை விட்டால்
வேறெங்கு பெறுவான் பொய்கள்?

**