சொல்வனத்தில் `க்யூபா: ஒரு லத்தீன் அமெரிக்க விசித்திரம் -பகுதி 2`

க்யூபா அனுபவம் பற்றி `க்யூபா: ஒரு லத்தீன் அமெரிக்க விசித்திரம்` என்கிற தலைப்பிலான எனது கட்டுரையின் இரண்டாம் பகுதி நடப்பு `சொல்வனம்` இதழில் வெளிவந்துள்ளது. அன்பர்களை வாசிக்க அழைக்கிறேன்.
லிங்க் கீழே:

http://solvanam.com/?p=47689

நன்றி: சொல்வனம்

-ஏகாந்தன்

ஃபிடெல் காஸ்ட்ரோ ஆண்ட க்யூபா

காஸ்ட்ரோ என்றதும் சே குவாரா-வின் நினைவும் மனதில் நிழலாடும் புரட்சிப்பித்தர்களுக்கு. லத்தீன் அமெரிக்க சரித்திரத்தின் ஹீரோக்கள். அது சரி. புரட்சிக்குப் பின், காஸ்ட்ரோவின் க்யூபா உண்மையில் எப்படி இருந்தது? எத்தகைய இயற்கை வனப்புடைய, துள்ளலான சிறுதேசம் அது! ஆனால், ஆட்சி என அவர் விரித்த கம்யூனிச, சோஷலிச மாயக்கம்பளத்தில் மக்கள் ஆனந்தமாக உட்கார்ந்து பறந்துசென்றார்களா? இல்லை, வெறும் வார்த்தை ஜாலங்கள் ஒரு காலகட்டத்தின்பின் துடிப்பிழந்து மக்களைத் தாங்கவொண்ணா துயரத்தில் தள்ளினவா? கொஞ்சம் சொல்லப் பார்க்கிறது என் கட்டுரை `க்யூபா: ஒரு லத்தீன் அமெரிக்க விசித்திரம்`. இரு பகுதிகளாக வெளிவரும் இக்கட்டுரையின் முதல் பகுதி நடப்பு `சொல்வனம்` இணைய இதழில் வெளிவந்துள்ளது. கட்டுரையைப் படிக்க` வாசக அன்பர்களை `சொல்வன`த்துக்கு அன்புடன் அழைக்கிறேன். லிங்க் கீழே:

http://solvanam.com/?p=47535

நன்றி: சொல்வனம்
-ஏகாந்தன்

ந்யூமிஸ்மேட்டிக்ஸ் !

பெங்களூர். ஒரு அமைதியான சனிக்கிழமை. அதாவது காவிரி தலைவிரித்து ஆடுவதற்கு கொஞ்சம் முன்பான காலம். காலை 8 ¾ மணிக்குள் வெங்கடரமண ஸ்வாமி கோவிலுக்குப்போனால்தான் சனிக்கிழமை விசேஷ தீபாராதனையை பார்க்கமுடியும் என்பதால் அவசர அவசரமாகக் கிளம்பினோம். உபர் டேக்சி பிடித்துக்கொண்டு ஹென்னூரிலிருந்து குந்தனஹள்ளிக்கு வேகமாகச் சென்றோம்.

பெங்களூரில் அலுவலக நாட்களில் சாலைப்போக்குவரத்து லட்சணம் இருக்கிறதே, மகா கேவலம். ஊர் பாடும் ஒப்பாரி. சனிக்கிழமை காலையிலுமா இப்படி இருக்கவேண்டும்? கே.ஆர்.புரம் அருகே ட்ராஃபிக் முடிச்சு. எப்படியோ நெரிசலுக்குள் புகுந்து, நெளிந்து, தாண்டி ஓடியது டேக்ஸி. கிட்டத்தட்ட தீபாராதனைக்குப் பத்து நிமிஷம் முன் கோவில் அருகில்போய் நின்றது. மனைவியும் மகளும் முதலில் இறங்கி `கடமையே கண்ணாயினார்` என்பதாக வேகமாகக் கோவிலுக்குள் சென்றுவிட்டார்கள். 202 ரூபாய் ஃபேர் என்று ஸ்மார்ட்ஃபோனில் காட்டினார் ஓட்டுனர். இளைஞர். என்னிடம் இருந்ததோ 500 ரூ. நோட்டுக்கள். `சேஞ்ச் கொடுங்க சார்!` என்றார் தமிழில். அவரிடம் உண்மையில் இல்லை போலும். பர்சைத் திறந்து 100 ரூ. நோட்டுகள் இல்லாததைக் காண்பித்தேன்.

கோவிலுக்கெதிரே உட்கார்ந்து பூ விற்றுக்கொண்டிருந்த பெண்களிடம்தான் சில்லரைக்கு சரணடையவேண்டும் போலிருக்கிறது என நினைத்துக்கொண்டிருக்கையில், ஓட்டுனரின் கண்கள் என் பர்சில் துழாவினபோலும். ஒரு நோட்டைப் பார்த்துவிட்டு` அது என்ன நோட்டு சார் !` என்றார். நான் பர்ஸ் திறந்து மூடிய சில நொடிகளில் பார்த்துவிட்டாரா ? “அதுவா? அது வெளிநாட்டு நோட்டு ’’என்றேன், மேற்கொண்டு சொன்னால் இவருக்குப் புரியுமா என்கிற சிந்தனையுடன். `அதக் கொஞ்சம் காட்டுங்க பாக்கலாம் ` என்றார் உற்சாகமாகி. காட்டியவுடன் கையில் வாங்கி ஆச்சரியத்துடன் திருப்பித் திருப்பிப் பார்த்தார். `க்யூபாவின் கரன்சி நோட்டு இது` என்றேன். திகைப்போடு பார்த்தவரின் கண்களில் மேற்கொண்டு தெரிந்துகொள்ளவேண்டும் என்கிற ஆசை இருப்பதுபோல் தோன்றியது. `உலகத்தின் பலபகுதியிலிருந்தும் விதம் விதமான காசுகள், நோட்டுகளை எப்படியாவது சேகரிக்கும் பழக்கம் சில பசங்களுக்கு உண்டு. ந்யூமிஸ்மேட்டிக்ஸ் (numismatics)-னு சொல்லுவாங்க இங்கிலீஷ்ல. பெரியவங்கள்லகூட சிலபேர் பொழுதுபோக்காக இப்பிடி ஆசப்பட்டு சேகரிக்கிறது உண்டு. உங்களுக்கு இந்த விஷயத்தில ஆர்வம் இருக்கா?` கேட்டேன்.

`என்ன சார் இப்பிடிக் கேக்குறீங்க! எனக்கு இதுல சின்ன வயசுலேர்ந்து இண்ட்ரஸ்ட்டு உண்டு சார். நானும் கொஞ்சம் சேர்த்திருக்கேன். ஆனா, இந்த மாதிரிப் பார்த்ததில்லே! ` என்றார் கண்கள் மிளிர. `இந்தாங்க.. பிடிங்க!` என்று அந்த நோட்டை அவரிடம் நீட்டினேன். அசந்து போய் `என்ன சார் ! ஒடனே தூக்கிக் கொடுத்திட்டீங்க. இதுக்குல்லாம் எவ்வளவு மதிப்பு இருக்கும்! ` என்று பின்வாங்கினார் அந்த இளைஞர். `அதப்பத்தி எல்லாம் நீங்க கவலைப்பட வேண்டாம். ஒங்க கலெக்‌ஷன்ல இருக்கட்டும்` என்றேன். சும்மா வாங்கிக்கொள்ள அவருக்கு மனசு பொறுக்கவில்லை போலும். தன் பர்ஸைத் திறந்துகொண்டே `எவ்வளவு சார் நான் கொடுக்கணும்!` என்றார். பதற்றம் இப்போது என்னைத் தொற்றிக்கொண்டது. இவருக்கு கொஞ்சமாவது விளக்கியாக வேண்டுமே : ஒன்று -அவர் எனக்கு எதையும் தரவேண்டியதில்லை என்பதற்காக. மற்றொன்று – எப்படிப்பட்ட அபூர்வமான நோட்டு இது என்று புரியவைப்பதற்காக!

`கொஞ்சம் இருங்க. க்யூபான்னு ஒரு நாடு இருக்குன்னு ஒங்களுக்குத் தெரியுமா?`

`தெரியாது சார் !`என்றார் அப்பாவியாக.

அடடா.. கொஞ்சம் பின்னாடிலேர்ந்து ஆரம்பிக்கணும்போலேருக்கே! `பரவாயில்ல. சுருக்கமா வர்றேன். தென்னமெரிக்கா, வட அமெரிக்கக்க் கண்டங்களுக்கு நடுவில, அட்லாண்ட்டிக் சமுத்திரம்னு கேள்விப்பட்டிருப்பீங்கல்ல.. ஸ்கூல் புஸ்தகத்துல எங்கேயாவது படிச்சிருக்கலாம். அதன் ஓரத்துல கரீபியன் கடல் அப்படின்னு ஒரு கடல் இருக்கு. அதுல தீவுகளாலான சின்ன நாடு க்யூபா. ஒரு கம்யூனிஸ்ட் நாடு. மக்கள் தொகை ரொம்பக் கம்மி !` என்று ஜாக்ரதையாக ஆரம்பித்தேன்.அதிகமாகச் சொல்ல அவகாசமில்லை. ஆர்வத்துடன் கேட்க ஆரம்பித்தார்.

`அந்த நாட்டுல கொஞ்ச நாள் வேல பார்த்திருக்கேன். அந்த நாட்டு கரன்சிக்கு பேரு க்யூபன் பெசோ. நம்ப ஒரு ரூபா நோட்டு மாதிரி, ஒரு பெசோ நோட்டு இது. மதிப்பப் பத்தி நெனச்சு பயப்படவேண்டாம். நம்ப ரூபா மதிப்புல நாலு ரூபான்னு வச்சிக்குங்க. அவ்வளவுதான். ஆனா இது ஈசியாக் கிடைச்சிராது. இப்ப இத ஒங்க பர்ஸுல தைரியமா வைங்க! ` என்றேன்.

கொஞ்சம் தெளிவடைந்து எடுத்துக்கொண்டார். `தேங்க்ஸ் சார்!` என்றார்.

இவருக்கு விதம்விதமா காசுகள் சேர்க்கறதுல ஆசை இருக்கே. இப்படி ஒருத்தரைப் பார்ப்பேன் என்று தெரிந்திருந்தால் வீட்டில் கிடக்கும் சில அபூர்வக் காசுகளை இவருக்குக் கொடுத்திருக்கலாம். எந்த சமயத்தில் எந்த மாதிரி ஆசாமி எதிரே வருவார் என்று யாருக்குத் தெரியும்? இந்த விஷயம்பற்றி மேலும் சொல்லலாம்தான். ஆர்வமுடன் கேட்கக்கூடிய இளைஞராகத் தோன்றினார். ஆனால் இவரோ ஓட்டவேண்டும் வண்டி. நானோ ஓடவேண்டும் கோவிலுக்குள். பூ விற்கும் பெண்மணியிடம் ஒருவழியாகப் பேசி, சில்லரை மாற்றி உபர் ஓட்டுனருக்குக் கொடுத்தனுப்பிவிட்டு, கோவிலுக்குள் பாய்ந்தேன்.

கோவில் உள்பிரகாரம் கணீரென்ற நாதஸ்வர ஓசையில் சிலிர்த்திருந்தது. மிருதங்க வித்வானும் சும்மா சளைத்தவரல்ல. சன்னிதிக்கு இருமருங்கிலும் பக்தர் கூட்டம். எப்படியோ என்னையும் திணித்துக்கொண்டு எம்பிப் பார்த்தேன். பொதுவாக இப்படிப்பட்ட இக்கட்டான நேரத்தில் கர்ப்பக்கிருஹத்தை பார்க்க முயற்சிக்கையில், எதிரே ஏழடி உயரமுள்ள ஒரு ஜீவன் நமக்காகவே நின்றிருப்பதற்கான வாய்ப்புகள் அதிகம். ஆனால் அன்று அப்படியில்லை. தீபாராதனை நடந்துகொண்டிருந்தது. மின்விளக்குகள் அணைக்கப்பட்டிருக்க, தீபத்தின் தங்க ஒளியில் தெய்வத்தின் முகம் ஒரு வினோத அழகுடன் மின்னியது. ஸ்ரீனிவாசா கோவிந்தா..ஸ்ரீவெங்கடேசா கோவிந்தா..! என்று உச்சஸ்தாயியில் இசைத்தது நாதஸ்வரம். பக்தர்களின் `கோவிந்தா! கோவிந்தா!` -வும் கூடவே சேர்ந்துகொண்டது. மின்விளக்குப் போடப்பட்டு மீண்டும் விதவிதமான தீபாராதனைகள் நடந்து முடிந்தன. மகாவிஷ்ணுவின் புகழ்பாடும் சமஸ்கிருத ஸ்லோகங்களை முடித்து, ஆண்டாள் பாசுரங்களுக்கு வந்து சேர்ந்தார் அர்ச்சகர். கூடி முன் நின்ற சில பெரியவர்களும் சேர்ந்துகொண்டனர்:

சிற்றம் சிறுகாலே வந்துன்னைச் சேவித்து -உன்
பொற்றாமரை அடியே போற்றும் பொருள் கேளாய்
பெற்றம் மேய்த்துண்ணும் குலத்திற் பிறந்து – நீ
குற்றேவல் எங்களைக் கொள்ளாமல் போகாது
இற்றைப் பறைகொள்வான் அன்று காண் கோவிந்தா!
எற்றைக்கும் ஏழேழ் பிறவிக்கும் – உன்தன்னோடு
உற்றோமே ஆவோம்; உனக்கே நாம் ஆட்செய்வோம்;
மற்றை நம் காமங்கள் மாற்றேலோர் எம்பாவாய்.

வங்கக் கடல் கடைந்த மாதவனை கேசவனை
திங்கள் திருமுகத்து சேயிழையார் சென்று இறைஞ்சி
அங்கப் பறை கொண்ட ஆற்றை அணிப் புதுவைப்-
பைங்கமலத் தண் தெரியல் பட்டர்பிரான் கோதை சொன்ன
சங்கத்தமிழ்மாலை முப்பதும் தப்பாமே
இங்கு இப்பரிசுரைப்பார் ஈரிரண்டு மால் வரைத்தோள்
செங்கண் திருமுகத்துச் செல்வத் திருமாலால்
எங்கும் திருவருள் பெற்று இன்புறுவர் எம்பாவாய்.

ஆண்டாள் உருகிய பாசுரங்களில் மனம் லயித்து பெருமாள் தீர்த்தமும், சடாரியும் வாங்கிகொண்டு வெளியே வந்தேன். நவக்கிரக சன்னிதியை சுற்றிவந்து வணங்கி, வெளிப்பிரகாரத்தையும் சுற்றிவந்தபின், முன்பக்கம் பிரசாதத்திற்கு ஒரு குட்டிவரிசையைக் கவனித்தேன். வரிசையில் நின்று பெற்றுக்கொண்டு தேடினேன், தர்மபத்தினியையும், பெண்ணரசியையும். எங்கே போனார்கள்?

நிழலில் ஒதுக்குப்புறமாக நின்றிருந்ததைப் பார்த்தேன். அவர்களிடம் சேர்ந்துகொண்டு பிரசாதத்தை ருசிக்க ஆரம்பித்தேன். மனைவியிடமிருந்து சீறியது ஒரு பௌன்சர் – இதுவரை எனக்காகக் கஷ்டப்பட்டுக் காத்திருந்த கேள்வி: `தீபாராதனைக்கு டயத்துக்கு வந்துடணும்னுதானே டேக்சி பிடிச்சு அவசரம் அவசரமா வந்தோம்? எங்களோட கோவிலுக்குள் நுழையாம, டேக்சி டிரைவர்கிட்ட அப்படி என்ன பேச்சு ? தீபாராதனையையும் சரியாப் பார்க்கமுடியலைன்னா நீங்கள்ல்லாம் எதுக்கு கோவிலுக்கு வரணும்?`

அம்மணி கேட்டதில் அர்த்தம் இருந்தது. பிரசாதத்தின் மிளகுக்கும் நாக்கோடு தன் ஜென்மப்பகையைத் தீர்த்துக்கொள்ள நேரம் அப்போது கிடைத்துவிட்டிருந்தது. ஒரு கணம் அந்த டேக்சி டிரைவரும், வெங்கடரமணப் பெருமாளும் வேகமாக மனக்கண்முன் வந்து சென்றனர். புரிந்தது: அருமையான மனுஷன்னு பேர் வாங்கறதோ, ஆண்டவனுக்கு பக்தனா இருக்கறதோ அவ்வளவு எளிதான காரியமில்லை இந்த உலகில்.

**

காசியில் உயிர்நீத்தால்தான் மோட்சமா?

க்யூபாவின் தலைநகரான ஹவானாவில் வசித்திருந்தபோது, அங்கே அபூர்வமாகத் தென்பட்டு பழக்கமாகியிருந்த ஒரு இந்திய நண்பரின் வீட்டுக்குப்போயிருந்தோம். ஆர்.எஸ்.பாண்டே. ராதே ஷ்யாம் பாண்டே? சரியாக நினைவில்லை. உத்திரப்பிரதேச ஆசாமி. இந்திய எண்ணெய் மற்றும் இயற்கைஎரிவாயு நிறுவனத்தில் பணிபுரிந்தார். மனைவி மீனா பாண்டே. சுவாரஸ்யமான ஜோடி. எனது மனைவியும் உத்திரப்பிரதேசத்தில் வளர்ந்தவள், படித்தவள் என்பதால் ஒரு நெருக்கம், affinity உண்டாகியிருக்கலாம். (மீனாஜியின் தந்தை ஒரு ஹிந்தி மொழி அறிஞர். ஆனால் மீனா பாண்டேயிடம் சாகித்யம் நெருங்கவில்லை.) அவர்கள் வீட்டிலோ, எங்கள் வீட்டிலோ சந்திக்கையில், மீனாஜியும் என் மனைவியும் மனம்விட்டுப் பேசிக்கொண்டிருப்பார்கள். நாங்கள் அவர்களது வீட்டுக்குச்செல்கையில், அவரது வீட்டு பால்கனியில் அமர்ந்து க்யூபாவின் ’க்ரிஸ்தால்’ கொஞ்சம் அருந்திக்கொண்டு, நானும் பாண்டேயும் பேசிக்கொண்டிருப்போம். ஏதேதோ பொதுவான விஷயங்களுக்கிடையில், க்யூபாவின் கடல் எல்லைக்குள் ONGC-யின் சர்வதேசப்பிரிவான OVL (Overseas Videsh Ltd) –ன் ஆழ்கடல் எண்ணெய் வள ஆய்வு பற்றி, க்யூப அரசு நிறுவனங்களுடனான கலந்தாடுதல், அதில் உள்ள தீராசிக்கல்கள்பற்றியெல்லாம் பேச்சு சுற்றிவரும்.

இப்படி நாங்கள் ஒரு மாலை பேசிக்கொண்டிருக்கையில், இந்த இரண்டு பெண்மணிகளும் சமையற்கட்டில் சமோசா செய்துகொண்டே, சாப்பாட்டிற்கு சம்பந்தமில்லாத ஒருவிஷயத்தில் தீவிரமாகப் பேசிக்கொண்டிருப்பதாய்த் தெரிந்தது. என்ன அது? கபீர் தாஸ்! பனாரஸ் எனப்படும் காசியில், 15-ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த மெய்ஞானி. அந்தக் காலகட்டத்திலேயே மிகவும் சர்ச்சைக்குள்ளான, அதனால் பல சிரமங்களுக்குள்ளான தத்துவவாதி.

உத்திரப்பிரதேசத்தின் 60,70-களின் பள்ளிப்பாடத்திட்டத்தில் கபீர்தாஸின் பாடல்கள் இடம்பெற்றிருந்ததாகவும், அவை தன்மனதில் ஆழமாகப் பதிந்திருப்பதாகவும் என் மனைவி சொல்வாள். அப்போதெல்லாம் அதன் அர்த்தம் ஒன்றும் புரியவில்லை என்றும், இப்போது அவை உள்ளார்ந்த பொருள் கொண்டிருப்பது தெளிவாகிறது என்றும் அடிக்கடி சொல்வதுண்டு. தோஹா (doha) எனப்படும், பாமரனுக்கும் ஆன்மிகம் சொல்லும் கபீரின் ஈரடி வெண்பாக்கள் வடநாட்டின் சாதாரண மக்களிடையே பிரசித்தமானவை. பேச்சுமொழி வழக்கில் கலந்து பரவியவை. இன்றும் காலங்கடந்து சிரஞ்சீவியாக உள்ளவை; ஆத்மார்த்தமாய் பேசப்படுபவை. சீக்கிய மதகுருக்களால் தங்களின் புனித நூலான குருக்ரந்த் சாஹிப் (Gurugranth Sahib) –இலும் சேர்க்கப்பட்டிருக்கின்றன கபீரின் தத்துவ, ஆன்மிகப் பாடல்கள்.

அந்த மாலையிலும் என் தர்மபத்தினிதான் கபீரை எடுத்திருக்கவேண்டும். சந்தேகமில்லை. இடையிலே மீனாஜி பதில் சொல்வது காதில் விழுகிறது: “கபீரின் ஞானத்தைப்பற்றி நீங்கள் எவ்வளவு பேசுகிறீர்கள். எனக்கென்னவோ அவர் ஒரு முட்டாள் எனத் தோன்றுகிறது!“

“ஏன் அப்படி சொல்கிறீர்கள்!“ என்றாள் என் மனைவி திடுக்கிட்டு.

“பின்னே என்ன? காசியில் இறந்தால் மோட்சம் என்பார்கள். கடைசிகாலத்தைக் காசியில் கழித்து அங்கேயே உயிர்விடவென எத்தனையோ பேர் இன்றும் காசிக்கு வருகிறார்கள். கபீர் காலமெலாம் காசியிலேயே வாழ்ந்தவர். தன் கடைசிகாலத்தில் அப்பேர்பட்ட காசியை விட்டுவிட்டு, எங்கோ மூலையில் ஒரு கிராமத்தில்போய் வாழ்ந்து அங்கேயே உயிரைவிட்டாரே.. முட்டாள் என்று சொல்லாமல் இவரை வேறென்ன சொல்லி அழைப்பது !“

என் மனைவி நிதானமாக மீனாஜிக்கு விளக்குவதைக் கேட்டேன். காசி நகரம், மோட்சம் அருளும் விஸ்வநாதர் வீற்றிருக்கும் இடம். காசியின் ஸ்தல விசேஷத்தைப்பற்றித் தெரியப்படுத்த, வலியுறுத்த அவ்வாறு கூறப்பட்டது. இது சராசரி மனிதர்களுக்காகக் சொல்லப்பட்டதே ஒழிய, தன்னை உணர்ந்த ஞானியருக்கு இது பொருந்தாது. ஞானநிலைபெற்று ஜீவமுக்தி அடைந்தோருக்கு எல்லா இடமும் ஒன்றுதான், புனிதஸ்தலம் என்பதாக தனியாக ஏதுமில்லை- என்றெல்லாம் சொல்லிக்கொண்டிருந்தாள். இருந்தும், திருமதி. பாண்டேயின் தலைக்குமேலேதான் இவை பயணித்திருக்கும் என்பதை புரிந்துகொண்டேன். ஆன்மிகம் இப்படி இருக்க, அவர் செய்திருந்த லௌகீக சங்கதிகளான சமோசாவும், சட்னியும், ஹவானாவின் அந்த இதமான மாலையில் பிரமாதமாகத்தான் இருந்தன.

சரி, கபீர்தாசரிடம் வருவோம். முறையான படிப்பறிவில்லாதவரான கபீர், இளம் வயதில் தனக்கொரு நல்ல குரு கிடைக்கவேண்டுமே என ஏங்கியவர். இறுதியில், காசியில் அப்போது மிகவும் மதிக்கப்பட்ட ஞானகுருவான ஸ்ரீ ராமானந்தரிடம் சேர்ந்து தீட்சை பெற்றார். இவருடைய பாடல்கள், கூற்றுகளில் ராம், கோவிந்த் என்றெல்லாம் வார்த்தைகள் பரம்பொருளைக் குறித்து வந்தாலும், ஒரு மரபுவழி இந்திய ஞானி அல்லர் கபீர். மாறாக மரபுகள், சடங்குகளை, கண்மூடித்தனமான பின்பற்றுதலை, விமரிசித்தவர்; எள்ளி நகையாடியவர். காசியில் அப்போது ஹிந்து, இஸ்லாமிய சமயத்தினர் அதிகம் வசித்து வந்தனர். ’இறுதி உண்மை’ எனப்படும் பரப்பிரும்மம், பரம்பொருள்பற்றி அறிந்துகொள்வதற்கான கடும் சிரத்தை, ஆழமான தேடல் இன்றி, வெறுமனே சாஸ்திரங்களையும், புனிதநூல்களையும் படித்துவிட்டுத் தன்னைப் பண்டிதர் என்றும், மௌல்வி என்றும், ஆன்மிக வழிகாட்டி எனவும் கூறித் திரிந்தவர்களைக் கடுமையாகச் சாடினார் கபீர்தாஸ். ஆதலால், ஹிந்து மதத்தினர், இஸ்லாமியர் என இருதரப்பினரிடமும் வாங்கிக்கட்டிக்கொண்டார்; விரோதத்தை சம்பாதித்துக்கொண்டார். ஆனால் அதுபற்றிப் பெரிதாக அவர் பொருட்படுத்தியதில்லை.

ஒரு ஏழை நெசவுத்தொழிலாளியாக, ஒரு குடும்பஸ்தனாகக் காலம் கழித்த கபீர், காசியின் சந்தைத் தெருக்களில், முச்சந்திகளில் எங்காவது உட்கார்ந்து எதையாவது கதைத்துக்கொண்டிருப்பார். வாயைத்திறந்தாலே வசனகவிதைகள் தெறிக்கும். ஆன்மிக, தத்துவ முத்துக்கள். சிந்தனையைச் செம்மைப்படுத்தும் வார்த்தைகள், அதுவும் பாமரர்களின் புழக்க மொழியில், சுவைதரும் சொல்வழக்கில். படிப்பறிவில்லாத பாமரர்கள், வியாபாரத்திற்காக சந்தைக்கு வருபவர்கள் என பல தரப்பினரும் கபீர் முன் கூடி அவர் என்ன சொல்கிறார் என ஆவலோடு கேட்பது வழக்கம். பண்டிதர்களும்கூட தொட பயப்படும் இவ்வளவு உயர்ந்த, தத்துவார்த்த கருத்துகளை, படிப்பறிவில்லா சாதாரணர்களுக்கு அவர்களுக்குப் புரியும் மொழியில், விதத்தில் கபீரைத் தவிர வேறு யாரால் கூறமுடியும்?

இப்படி அவர் பாடிய பாடல்கள், வாய்மொழியாக மக்களிடையே வெகுவாகப் பரவின. பிராபல்யம் அடைந்தன. நாளடைவில் சீரான மொழிவடிவம், அச்சுவடிவமும் பெற்றன. கபீர் தாசரின் புகழ்பெற்ற ‘தோஹா’ எனப்படும் இரண்டடிக் கவிதைகளிலிருந்து சிலவற்றை அடுத்த பதிவில் பார்ப்போம் .
(தொடரும்)

**