பௌத்தம் – குஷிநகரில் புத்தர்

சொர்கத்திலிருந்து புத்தர் பூமிக்குத் திரும்பிய நாள் என இந்தியாவிலும், பௌத்தமதத்தைப் பிரதான மதமாகக் கொண்ட தாய்லாந்து, மயன்மார், கம்போடியா, ஸ்ரீலங்கா, தென்கொரியா, பூட்டான் போன்ற  நாடுகளிலும் கொண்டாடப்படும் விசேஷமான தினம் இன்று (20/10/21). ’அபிதம்மா தினம் ’(Abhidhamma Day). தான் மறைந்த பிறகு, மூன்று மாதங்களுக்குப் பின் இந்த நாளில்தான், இந்தியாவின் குஷிநகரில் புத்தர் மீண்டும் காட்சியளித்தார் என்கின்றன பௌத்த இலக்கியங்கள்.

Ramabhar Stupa was built over a portion of the Buddha's ashes on the spot where he was cremated by the ancient Malla people.
ராமாபர் ஸ்தூபி, குஷி நகர், உத்திரப்பிரதேசம்

உத்திரப்பிரதேசத்திலுள்ள குஷிநகரில் உள்ள மகாபரிநிர்வாணா பௌத்த கோவிலில் ‘அபிதம்மா தினம்’ வெகுவிமரிசையாக இன்று கொண்டாடப்பட்டது. பௌத்தமதத்தினர் பலர்,  பிஷுக்கள் ஆகியோர் தாய்லாந்து, ஸ்ரீலங்கா, பூட்டான், நேப்பாள், மயன்மார் ஆகிய நாடுகளிலிருந்து குஷிநகருக்கு வந்து புனிதவிழாவில் கலந்துகொண்டனர்.  6 அடி நீள புத்தர் சயனக்கோலத்தில் அழகாகக் காட்சிதருகிறார் இங்கு. இந்த பரிநிர்வாணா புத்தர் சிலை 1876-ல் பூமிக்கடியிலிருந்து தோண்டியெடுக்கப்பட்டு, பின் கோவில் கட்டப்பட்டு பிரதிஷ்டை செய்யப்பட்டிருக்கிறது.  உலகெங்குமுள்ள பௌத்தர்கள் தங்களின் புனிதஸ்தலங்களில் மிகவும் விசேஷமானது எனக் குஷிநகரைக் கொண்டாடுகின்றனர். இங்குள்ள  ஹிரண்யாவதி ஆற்றின் கரையிலே, புத்தர் தன் கடைசிக்காலத்தை, தன் அன்யோன்ய சிஷ்யர்களுடன் கழித்திருக்கிறார். தன் அந்திமசமயத்தில் புத்தர் குஷிநகரில், அங்கிருந்த மரங்கள் நிறைந்த ஒரு தோப்புக்கு வர, அங்கு பூத்துக்குலுங்கிய  ’சால மரங்களின்’ (Sala trees) பேரழகில் லயித்தவாறு அந்த இடத்திலேயே அவர் படுத்திருக்க அவரது உயிர் பிரிந்ததாகவும்,  அதே இடத்தில் அவரது உடல் தகனம் செய்யப்பட்டதாகவும் ’மகாயான மகாபரிநிர்வான சூத்திரம்’ (Mahāyāna Mahāparinirvāṇa Sūtra) எனும் பௌத்தநூல் கூறுகிறது.  இங்குள்ள ’ராமாபார் ஸ்தூபி’ (Ramabar Stupa) கட்டப்பட்டுள்ள இடத்தில்தான், குஷிநகர் பிரதேசத்தில் அக்காலத்தில் வசித்துவந்த ‘மல்லர்’ (Mallas) இனத்தினரால், கௌதம புத்தரின் உடல் தகனம் செய்யப்பட்டிருக்கிறது. ’மல்லர்’ இனத்தலைவனான குஷிநகரை அப்போது ஆண்ட மன்னனே புத்தர் தகனம் செய்யப்பட்ட இடத்தில் நினைவுச்சின்னமாக இந்த ராமாபார் ஸ்தூபியை நிறுவியவன்.

குஷிநகரின் புராணப்பெயர் குஷாவதி. ராமபிரானின் இரு மகன்களில் ஒருவனான மன்னன் குஷனின் ஆட்சியில், அவன் பெயரால் இந்நகரம் புராணகாலத்தில் நிறுவப்பட்டிருக்கிறது. (’குஷ்’ எனும் ஒருவகை புல் மண்டிக்கிடந்த பிரதேசமானதால் இது ‘குஷாவதி’ என அந்தக்காலத்தில் வழங்கப்பட்டது எனச் சொல்வோருமுண்டு). கி.மு. 3-5-ஆம் நூற்றாண்டுவாக்கில் இந்த நகரில் பல பௌத்தவிஹாரங்களும் ஸ்தூபிகளும் இருந்தன. பேரரசன் அசோகன் பலவித பௌத்த நினைவுச்சின்னங்களை குஷிநகரைச் சுற்றியுள்ள பிராந்தியத்தில் நிர்மாணித்திருக்கிறான். பிற்கால மொகலாயப் படையெடுப்புகளின்போது இவை தாக்குதலுக்குள்ளாகி, சிதைவுற்றன. கவனிப்பாரற்று சில நினைவுச்சின்னங்கள் மண்ணிலும் புதைந்துபோயின. Buddha relics  என அழைக்கப்படும் கௌதம புத்தரின் வாழ்வோடு சம்பந்தப்பட்ட (அவர் பயன்படுத்திய சில பொருட்கள், அவருடைய எலும்புகள், சாம்பல் போன்றவை) குஷிநகர் பகுதியில்  பிரிட்டிஷ் காலத்தில் பூமிக்கடியிலிருந்து தற்செயலாக ஒரு மரப்பெட்டியில் கிடைத்திருக்கிறது.

குஷி நகர் சர்வதேச விமானநிலையம்

புகழ்பெற்ற மகாபரிநிர்வாணா புத்தர் கோவிலோடு, 19-20ஆம் நூற்றாண்டுகளில் தாய்லாந்து, சீன, ஜப்பானிய கட்டிடக்கலைகளைக் கொண்டு கட்டப்பட்டுள்ள புத்தர்கோவில்களும் குஷிநகரிலும்  சுற்றிவரவும் காணப்படுகின்றன. இவையன்றி இந்துமதக் கடவுள்களுக்கான குருகுல்லா ஆஸ்தான், குபேர் ஆஸ்தான், சமண மத தீர்த்தங்கரர்களுக்கான தேவ்ரஹா ஆஸ்தான் போன்ற கோவில்களும் குஷிநகரில் இருக்கின்றன. இந்தியாவில் மதங்கள்பற்றி, குறிப்பாக பௌத்தமதம் தொடர்பான ஆராய்ச்சியாளர்களும், இளம் பௌத்த பிக்ஷுக்களும், மாணவர்களும் குஷிநகருக்கு அடிக்கடி வந்து போகின்றனர். சிறப்பான சர்வதேச பௌத்த சுற்றுலாத்தலமாக சமீபகாலங்களில் குஷிநகர் மாறியிருக்கிறது.

குஷிநகரில் சர்வதேச விமானநிலையம் கட்டப்பட்டு, பௌத்தர்களின் புனித நாளான ’அபிதம்மா தின’மான இன்று பிரதமர் நரேந்திர மோதியால் திறந்துவைக்கப்பட்டு, தேசத்துக்கு அர்ப்பணிக்கப்பட்டது. நிகழ்ச்சிக்கு முன், பிரதமர் மகாபரிநிர்வானா கோவிலுக்குச் சென்று புத்தரை வழிபட்டுவிட்டுச் சென்றிருக்கிறார். சுற்றுலாவாசிகளை வெகுவாகக் கவர்ந்துவரும் குஷிநகரின் வளர்ச்சியோடு, உத்திரப்பிரதேசம், பீஹாரின் பௌத்தம் தொடர்பான பகுதிகளின் தொழில், கல்வி வளர்ச்சிக்கான திட்டங்களும் சமீபகாலத்தில்  முன்னெடுக்கப்பட்டு, முனைப்புடன் செயல்படுத்தப்பட்டுவருகின்றன. குஷிநகர் ஏனைய முக்கிய நகரங்களுடன் விமானவழி இணைக்கப்படவுள்ளது.

**