பெண்கள் படுத்தும்பாடு !

’ஏதோ கொஞ்சம் படிச்சிடுத்துகளாம். சம்பாதிக்கிறதுகளாம். இதுகளுக்கு இருக்கிற திமிரு இருக்கே..அடேங்கப்பா ! எங்கே போயி சொல்றது..’ என்று அங்கலாய்த்தார் ஒரு மாமி. தன் பிள்ளைக்குப் பெண் தேடும் படலத்தில் ஒரேயடியாக சலித்துப்போயிருக்கவேண்டும். ’அத ஏன் கேக்கறே, பையன் நாப்பது நாப்பத்தஞ்சாயிரம்னு சம்பளம் வாங்கினாப் போதாதாம். குறைஞ்ச பட்சமா எழுபதாயிரம், எண்பதாயிரமாவது கையில வந்தாத்தான் கல்யாணத்தப்பத்தி யோசிக்கவே முடியுமாம். இப்படியெல்லாம் பெரியமனுஷத்தனமா பேசறுதுகள். இதுகளோட எப்படி சம்பந்தம் வச்சிக்கறது!’ என்றார் இன்னொருவர். ’அட, அதவிட்டுத்தள்ளுங்கோ.. கல்யாணத்துக்கப்பறம் மாமியார் மாமனார் எங்ககூட இருக்கக்கூடாதுங்கறா! பிள்ளையப் பெத்தவா – அதுவும் ஒத்தப்பிள்ளைக்காரா- வயசான காலத்துல தன் பிள்ளையோட இருக்காம எங்கதான் போயிருக்கணுங்கறா? பொண்ணப்பெத்தவாளும் இதுகளோடப் பேச்சக்கேட்டுண்டு ஆடறா. இது எங்கபோயி முடியும்னே தெரியலையே..’ சூடான காஃபியை உறிஞ்சிக்கொண்டே கவலையும் கோபமும் தெறிக்கும் உரையாடலில் இரண்டு மாமிகள் ஆழ்ந்திருப்பதை ஒரு ஃபங்க்‌ஷனில் கவனித்தேன்.

உண்மைதான். உலகமயமாக்கல், பொருளாதார, தொழில்துறை முன்னேற்றம், வெளிநாட்டுக் கம்பெனிகளின் அதிரடி வருகை, உயர்கல்வியில் பெண்களின் தொடரும் உழைப்பு, முன்னிலை, இளையோருக்கான புதிய வேலைவாய்ப்புகள், உயர்ந்துவிட்ட சம்பள விகிதங்கள், தராதரங்கள் என கடந்த இருபதுவருடங்களில் மாற்றத்தில் இந்தியா கனவேகம் எடுத்திருக்கிறது. இவற்றின் தாக்கம் சமூகத்தின்மீது, குறிப்பாக மத்தியதர வர்க்கத்தின்மீது வெகுவாகப் படிந்துவிட்டது. அப்போதெல்லாம் நல்ல உத்தியோகத்திலிருந்த பிள்ளைகளைப் பெற்றோர், கல்யாணச்சந்தையில் ஒரு பக்கம் தங்கள் கோரிக்கைகளோடு கூத்தடிக்க, தெண்டத்துக்கு ஒரு டிகிரியுடன், மற்றபடி ஒன்னுக்கும் லாயக்கில்லாத, சாமர்த்தியமில்லாத அசட்டுப் பிள்ளைகளை வைத்துக்கொண்டிருந்தவரும்கூட போடாத ஆட்டமெல்லாம் போட்டார்கள். ’என் பிள்ளக்கு ஒம்பொண்ண கல்யாணம்பண்ணி வைக்கணுங்கிறியா? எத்தன நகை போடுவே? வீடு, வாசலிருக்கா? மாப்பிள்ளைக்கு ஸ்கூட்டர், பைக் ஏதாவது வாங்கித் தருவியா? – என்றெல்லாம் அவர்கள் ஏழ்மையிலிருந்த, அல்லது போதிய பொருளாதார வசதியில்லாமல் தடுமாறிய பெண்வீட்டுக்காரர்களை சீண்டிப் பார்த்ததையும், சித்திரவதை செய்ததையு்ம் எளிதில் இந்த சமூகம் மறந்துவிடாது. பிள்ளைவீட்டுக்காரர்களின் தடித்தனம், நியாயமற்ற கோரிக்கைகளின் காரணமாக எத்தனையோ ஏழை, மத்தியவர்க்க யுவதிகள் கல்யாணம் செய்துகொள்ளமுடியாமல் தவித்தார்கள். பெற்றோருக்கு பாரமாய் நின்றதில், மன உளைச்சலில் உழன்றார்கள். அந்தக்காலந்தான் இப்போது ஒருவழியாக மலையேறிப்போய்விட்டது. காலச்சக்கரத்தின் சுழற்சியில் ஆண்கள் சரிய, பெண்கள் மேலே வந்துவிட்டார்கள். Poetic justice !

தற்காலப் பெண்கள் பெரும்பாலும் நன்றாகப் படித்திருக்கிறார்கள். சிலர் சிறப்பான உயர்கல்வித்தகுதிகளையும் பெற்றிருக்கிறார்கள். நல்ல வேலைகளுக்கு, சவாலான வேலைகளுக்கும்கூடப் போகிறார்கள். பை நிறைய சம்பாதிக்கிறார்கள். பொருளாதார ரீதியில் சொந்தக்காலில் உறுதியாய் நிற்பவர்கள் இவர்கள். இவர்களுக்கென ப்ரத்தியேக சமூக, நட்பு வட்டமும் உண்டு. சுய சிந்தனை, தீர்க்கமான முடிவு இவர்களுக்குக் கைவந்திருக்கிறது. இவர்களெல்லோரும் காதலித்துத்தான் கல்யாணம் செய்துகொள்கின்றனர் என்றில்லை. பெரும்பாலானோர் பெற்றோர் பார்த்துக் கல்யாணம் செய்துவைப்பதை விரும்புகின்றனர். ஆனாலும், தங்களுக்கான வாழ்க்கைத் துணை எப்படி இருக்கவேண்டும் என்பதில் இவர்கள் தெளிவாக இருக்கிறார்கள். இன்னொரு விஷயம்: தற்போதெல்லாம் பெண்ணைப் பெற்றவர்களின் confidence level-ம் அதிகமாகியிருக்கிறது. வேகமாக முன்னேறிவரும் நாட்டில், சமூகமாற்றங்கள், புதிய வாழ்வியல் மதிப்பீடுகள் போன்றவை காலப்போக்கில் நிகழத்தான் செய்யும். தவிர்க்க இயலாதவை இவை.

இந்தக்கால யுவதிகளின் கல்வித்தகுதி, சம்பாத்யம், சுதந்திரம், துணிவு ஆகியவற்றைக் கவனிக்கும் பெற்றவர்கள் – அதாவது பிள்ளையைப் பெற்றவர்கள், நல்ல மருமகளாக நம்வீட்டுக்கு வரவேண்டுமே எனக் கவலைப்படுகிறார்கள். பெண்ணைப் பெற்றோர் ஒன்றும் எந்தக் கவலையுமின்றிக் காத்துவாங்கிக்கொண்டிருக்கவில்லை. அவர்களும், வரப்போகிற மாப்பிள்ளைப் பையன் நன்றாகச் சம்பாதிப்பதோடு மட்டுமல்லாமல், நல்ல குடும்பத்திலிருந்தும் இருக்கவேண்டுமே, குணாளனாக அமையவேண்டுமே என்று கவலைப்படத்தான் செய்கிறார்கள். மாறிவரும் உலகில் இருதரப்பு அக்கறைகள், கவலைகள் எல்லாம் நியாயமானதுதான். ஆனால், சுதந்திரம், சுயமான முடிவு என்கிற பெயரில் இளைஞர்கள் தான்தோன்றித்தனமாகக் காரியம் செய்து குடும்பவாழ்வில் குழப்பங்கள் ஏற்பட்டுவிடாதிருக்க, என்ன செய்யவேண்டும்? பெற்றோர் முதலில் தங்களது பிள்ளையை, பெண்ணை நினைத்து ’நம்பளோட கொழந்த’ என்று பெருமிதம்கொள்வதோடுமட்டும் நின்றுவிடாமல், அவர்களைச் சரியாக அவதானிக்கவேண்டும். நம்வீட்டுப் பிள்ளைகள்தான் எனினும், தனிப்பட்ட மனிதர்கள் என்கிற நிலையில் இவர்கள் யார், எப்படி உருவாகியிருக்கிறார்கள், எத்தகைய நம்பிக்கைகள், வாழ்வியல் மதிப்பீடுகளை நம் பிள்ளைகள் கொண்டிருக்கிறார்கள் எனப் புரிந்துகொள்ள பெற்றோர் முயற்சிக்கவேண்டும். அவர்களிடம் ஒரேயடியாக புத்திமதி சொல்கிறேன் பேர்வழி என்று லெக்சர் அடிக்காமல், புலம்பாமல், போரடித்து விரட்டிவிடாமல், கனிவோடு, தோழமையோடு பேசி இணக்கம் கொள்வது முக்கி
யம். இப்படி ஒரு சூழலை வீட்டில் அமைத்துக்கொண்டால் மட்டுமே கல்யாணம், கார்த்திகை போன்ற விஷயங்களில் குடும்பமாக சேர்ந்து உட்கார்ந்து பேச வாய்ப்புகள் ஏற்படும். இப்படி எடுக்கப்படும் முடிவுகள் சரியாக அமைந்துவிட வாய்ப்புகள் அதிகம். காலங்காலமாக, ஒரு தனிமனித, சமூகத் தேவையாக உருவெடுத்துவிட்ட ’குடும்பம்’ என்கிற institution-மீது, அமைப்பின்மீது வளர்ந்த பிள்ளைகள் நம்பிக்கை இழந்துவிடாதிருக்க இது பெரிதும் உதவும். இத்தகைய ஹோம்வொர்க்கைச் சரியாகச் செய்யாமல் பெற்றோர்கள் வெறும் குழப்பமும், அனாவசியப் பதற்றமும், தடுமாற்றமும் கொள்வதில் ஒரு புண்ணியமும் இல்லை எனத் தோன்றுகிறது.

**

ஆசை ஆசையாய்ப் பெற்றுக்கொண்டு . .

ஆட்டோவில் திரும்பி வந்துகொண்டிருந்தோம் நானும் எனது தர்மபத்தினியும். போகிற வழியில் ஒரு பழக்கடைக்குப் பக்கத்தில் நிறுத்தச் சொல்லுங்கள். கொஞ்சம் பழம் வாங்கிக்கொண்டு வந்துவிடுகிறேன் என்றாள் மனைவி. சிடுசிடுக்காமல், பெரியமனசு பண்ணி ஒரு ஓரத்தில் நிறுத்திய இளம் ஆட்டோ ஓட்டுனரிடம் பேச்சுக்கொடுத்தேன்.

அஞ்சு நிமிஷம் என்ன, பத்து நிமிஷம்கூட வெயிட் பண்ணுவேன் சார்! இந்த வேகாத வெயில்ல, வண்டிய நிறுத்த பக்கத்துல நெழலுகூட இல்ல பாருங்க! என்றார். உண்மைதான். டெல்லியிலிருந்து வந்து இறங்கியபின்தான் உணர்ந்தோம். பெங்களூர்ல இப்ப அடிக்கிற வெயிலுக்கு டெல்லியின் கோடையே பரவாயில்லை. உலகமே உஷ்ணமயமாகிக்கொண்டிருக்கிறது. டெல்லி, பெங்களூர்னு பேசி என்ன பயன்? இருந்தும் பேசினேன்.

மரத்தையெல்லாம் வெட்டி சாச்சிப்பிடுறீங்க. ஏரியையெல்லாம் மண்ணையும் கல்லையும் கொட்டி மூடி, ஏடாகூடமா கான்க்ரீட் கட்டடங்களா கட்டித் தள்ளுறீங்க. நெழல் வேணும், காத்து வேணும்னா எங்கேருந்து வரும்?

அட, என்னசார் நீங்க! மரத்தைக் காணோம், ஏரியை காணோம்கிறீங்க! மனுசனோட வாழ்க்கையே காணாமப் போயிகிட்டிருக்கு சார்!

எதச் சொல்றீங்க!

சுத்துமுத்தும் பாக்குறீங்கல்ல! புரியலையா சார்! தான் பெத்த புள்ளய வேலக்காரிகிட்ட விட்டுபுட்டு, நாயத் தூக்கி மடியில வைச்சுகிட்டு ஏசி கார்ல ஊர்வலம் போறாங்களே! என்ன சார் இதுல்லாம்? இப்பிடிப்போயிட்டானே மனுசன் ! இதுல்லாம்தான் வாழ்க்கைன்னு ஆயிப்போச்சே!

பேச்சு சீரியஸாகிவிட்டது. நீங்க சொல்றது சரிதான் என்றேன் சிந்தனையுடன்.

மனைவி பழங்களுடன் திரும்பியிருந்தாள். ஆட்டோக்காரர் பேச்சை ஸ்டாப் செய்து வண்டியை ஸ்டார்ட் செய்தார். நான் வேறுவிதமாக ஸ்டார்ட் ஆகியிருந்தேன்.

`பெத்த புள்ளய வேலக்காரிகிட்ட விட்டுபுட்டு…` ஹூம்.. பணக்காரர்கள் கிடக்கட்டும். பொதுவாக, நகரங்களில் இளம் தம்பதிகளின் வாழ்க்கைக் கிட்டத்தட்ட இப்படித்தான் ஆகிவிட்டிருக்கிறது. மாமனார், மாமியாரோடு சேர்ந்து வாழும், கூட்டு வாழ்க்கை என்பது கிட்டத்தட்ட நமது சமூகத்தில் அரிதாகிவிட்டது. நவீன குடும்பங்கள் எல்லாம் nuclear families. அதாவது குடும்பம் என்றால் தனிக்குடித்தனம். இளம் தம்பதிகள், ஒன்றிரண்டு குழந்தைகள். சிறு குடும்பம். இந்தவகைக் குடும்பங்கள்தான் சிறுநகரங்களிலும், டெல்லி, பெங்களூர், சென்னை போன்ற மாநகரங்களிலும் மண்டிக்கிடக்கின்றன. எல்லாமே காசு, காசு என்றாகிவிட்ட வாழ்வில், வாழ்வின் மதிப்பீடுகள் தூசாகிவிட்டன. பொருளாதார அபிவிருத்திக்கென மத்தியதரக் குடும்பத்துக் கணவன், மனைவி இருவருமே வேலை செய்யவேண்டிய நிலை, காலத்தின் கட்டாயமாகிவிட்டிருக்கிறது. பணவசதி உள்ளவர்களும்கூட, தங்கள் இளம் மனைவிகள் வேலைக்குச் செல்வதை ஊக்குவிக்கிறார்கள். சோஷியல் ஸ்டேட்டஸ்.. சமூக அந்தஸ்து! அல்லது சம்பந்தப்பட்ட பெண்களே அதை விரும்புகிறார்கள். இவ்வளவு படித்துவிட்டு வீட்டில் கரண்டி பிடிப்பதா? இல்லை, கிழடுகளோடு உட்கார்ந்துகொண்டு டிவி பார்த்துக்கொண்டிருப்பதா? சே! நமது திறமையை, தனித்துவத்தை நாலுபேருக்குக் காட்ட வேண்டாமா?

நகரத்தின் இளம் தாய்மார்களில் பலர் மத்தியதர வர்க்கத்தினர். கணவன், மனைவி இருவரும் வேலை பார்த்தும் அப்படி ஒன்னும் பெரிய வருமானமில்லை. குழந்தைகளின் எல்கேஜி அட்மிஷனுக்கே அள்ளித்தரவேண்டிய நிலையில், இருவரும் வேலை பார்த்தே ஆகவேண்டியிருக்கிறது. அவர்களில் பலருக்கு, மாமனார், மாமியாரோ, பெற்றோரோ துணையாக வீட்டில் இருப்பதில்லை. விளைவாக, குழந்தைகளை க்ரெஷ்களில் தள்ளிவிட வேண்டிய கட்டாயம். அவர்களை சொல்லியும் குற்றமில்லை. ஆனால் இளம் அம்மாக்களில், ஓரளவு பணவசதி உள்ளவர்கள், வேலைக்குப் போகவேண்டிய நிர்ப்பந்தம் இல்லாதவர்களும்கூட, சமூக அந்தஸ்து கருதி, ஏதோ ஒரு வேலைக்குப் போகிறார்கள். தாங்கள் அவசரமாகவோ, ஆசையாகவோ பெற்றுக்கொண்ட குழந்தைகளை க்ரெஷ்களில்தான் கொண்டுபோய் விடுகிறார்கள்.

காலையில் கண்விழிக்கும் குழந்தையை அன்பாகப் பார்த்துச் சிரித்து, அதுகளின் மென்கன்னத்தை வருடி, தலையைக் கோதி, ஆசையாக ரெண்டு வார்த்தை பேசி, அணைத்து, கொஞ்சி..ம்ஹூம்! அந்தக்காலம் மலையேறிவிட்டது. நம்முடைய காலத்தில் அதற்கெல்லாம் நேரமில்லை. தூக்கம் சரியாகக் கலையாமல், அழுகையும் திணறலுமாக இருக்கும் குழந்தைகளை அவசர அவசரமாகத் `தயார்` செய்து, இழுத்துக்கொண்டுபோய் `க்ரெஷ்`களில் கடாசிவிட்டு, வேலைக்கு ஓடுகிறார்கள் அம்மாக்கள். குழந்தைகளை க்ரெஷில் சேர்த்திருப்பது, தாங்கள் கம்பெனிகளில் வேலை செய்வது –இதிலெல்லாம் ஒரு பெருமை, ஆனந்தம்! இத்தகைய பெண்களில் பலர் கைநிறைய சம்பாதிக்கிறார்கள். அலுவலக வளாகங்களில் நண்பர்கள், கூடவேலைசெய்பவர்கள் என நட்பு கொள்கிறார்கள். மாலையிலும் சமூக உறவாடல்களில் மகிழ்கிறார்கள். நிறைய சம்பாதிக்கட்டும். உறவாடட்டும். மகிழட்டும். But at what cost ?

இதுபோன்றவர்களின் பச்சிளம்குழந்தைகள் தங்களின் அம்மாக்களின் தாலாட்டு, சீராட்டு இல்லாமல் தவிக்கின்றன. இது தவிர்க்கப்பட்டிருக்கவேண்டிய விஷயம். `க்ரெஷ்` என்றும் `ப்ளே ஸ்கூல்` என்றும் பெயர் வைத்துக்கொண்டு நகரங்களில் இயங்கும் இத்தகைய டே-கேர் (Day-care) செண்டர்கள் பெரும்பணம் பண்ணுகின்றன. வாங்குகின்ற பணத்துக்கேற்றபடி இவர்களின் சேவை இருக்கிறதா என்றால் இல்லை. குழந்தைகளின் அட்மிஷனுக்காக பெற்றோர்கள் அணுகும்போது, க்ரெஷ்களை நடத்துபவர்கள் வாயெல்லாம் பல்லாக அவர்களை வரவேற்று, தாங்கள் எப்படியெல்லாம் உங்கள் செல்லக்குழந்தையைப் பார்த்துக்கொள்வோம். எத்தனை பொம்மைகள் வாங்கிப்போட்டிருக்கிறோம். கண்ணுக்குள் கண்ணாக வைத்துப்போற்றுவோம். கவலையேபடாமல் நீங்கள் குழந்தையை விட்டுச் செல்லலாம், என்றெல்லாம் தேனான வார்த்தைகள் பேசி அட்மிட் செய்யும்படி செய்துவிடுகிறார்கள். க்ரெஷ் நடத்துபவர்களுக்குப் பணம் வந்தாயிற்று. உங்கள் குழந்தை உள்ளே போயாயிற்று. நீங்கள் ஆஃபீஸுக்குப் போய்விட்டீர்கள். அப்புறம்? போகப்போகத் தெரியும்.

பெற்றோர் தினமும் தங்கள் குழந்தைகளை க்ரெஷ்-ல் கொண்டுவந்து விடும்போது, சிரித்துக்கொண்டே `வரவேற்க`, `ப்ரின்சிபல்`, `மேடம்` என்றெல்லாம் விதவிதமாக அழைக்கப்படும் க்ரெஷ் சொந்தக்காரர் அல்லது மேனேஜ்மெண்ட் அம்மணி இருப்பார். குழந்தைகள் எல்லாம் உள்ளே வந்துவிட்டபின், கொஞ்சநேரத்தில், இவர் கிளம்பிப் போய்விடுவார். மாலையில் பெற்றோர் வருமுன் மீண்டும் வந்துவிடுவார்! பெற்றோர் திரும்பிவந்து குழந்தைகளை கூட்டிக்கொண்டு போகையிலும், இதே அம்மணி அதே சிரிப்புடன் மலர்ந்த முகத்துடன் பெற்றோர், குழந்தைகளை வழி அனுப்புவார். பெற்றோர் பார்த்து மகிழ்வது, அல்லது திருப்திப்பட்டுக்கொள்வது இந்த முகத்தைத்தான்! இடைப்பட்ட வேளையில் அதாவது காலை சுமார் 8 ½ மணியிலிருந்து மாலை 5 ½ மணிவரை, குழந்தைகள் பார்ப்பது, அனுபவிப்பது எந்த முகத்தை? யாருடைய கைங்கரியத்தை? இளம் அன்னையர்களே, யோசித்திருக்கிறீர்களா?

இத்தகைய க்ரெஷ்களில் குழந்தைகளைப் பார்த்துக்கொள்ள, `அக்கா` அல்லது ‘தீதி’(didi) எனப்படும் `அசிஸ்டெண்ட்’டுகள் வேலை செய்கிறார்கள். பெரும்பாலான பெற்றோர்களுக்கு இந்த அக்காக்களைப்பற்றி ஒன்றும் தெரிவதில்லை. அவர்களிடம் தான் மாட்டிக்கொண்டு முழிக்கின்றன இந்த அப்பாவிக் குழந்தைகள். குறைந்த மாதச் சம்பளத்தில் பணியில் இருத்தப்படும் 18-20 வயதான இளம் பெண்கள். அவர்களின் ஆசைகள், ஆசாபாசங்கள் வேறு. கொஞ்ச சம்பளத்திற்காக, குழந்தைகளைப் `பார்த்து`க்கொள்ள நியமிக்கப்படுகிறார்கள். குழந்தைகளுக்கு விளையாட்டுக் காண்பித்து, அவ்வப்போது அந்த சிறுசுகளை பாத்ரூமுக்குக் கொண்டுபோய்விட, கைகால் அலம்பி துடைத்துவிட, குழந்தைகளில் உடம்புக்கு ஒன்றுமில்லாமல் ஆரோக்கியமாக இருக்கிறார்களா என்றெல்லாம் கவனிக்க, அவர்கள் பயிற்சி பெற்றவர்களுமல்லர். அதற்கேற்ற அக்கறையோ, பொறுமையோ அவர்களிடம் பொதுவாக இருப்பதுமில்லை. வேறு வழி இன்றி அவர்கள் தங்களுக்குப் பிடிக்காத இந்த வேலையை `monotonous` ஆகச் செய்கிறார்கள். ஒரு பாவமும் அறியாத, 3-4 வயது அப்பாவிக் குழந்தைகள், இந்த அக்காக்களின் சிடுசிடுப்பு, எரிச்சல், கோபம் இவைகளையெல்லாம் தினம் தினம் சமாளிக்கவேண்டியிருக்கிறது. நிம்மதியாக உட்கார்ந்து நண்பர்களுடன் ஃபோன் போட்டுப் பேசவிடாமல், பிடித்த பாட்டைக் கேட்கவிடாமல் தங்களை `பிஸி`யாக்கும் இந்தக் குழந்தைகளை ஆத்திரம் எரிச்சலுடன் கையாளுகிறார்கள். குழந்தைகளை அவ்வபோது கிள்ளிவிட்டு, கன்னத்தில் அறைந்து, முதுகில் ரெண்டு போடுபோட்டு, தங்கள் எரிச்சல்களுக்கு வடிகால் அமைக்கும் அக்காக்கள். கொண்டுவந்திருக்கும் மதியச் சாப்பாட்டையும் பிரியமாக ஊட்டிவிட ஆளின்றி, அரையும் குறையுமாக சாப்பிட்டு,அங்கும் இங்குமாக அறைக்குள்ளே ஓடி, மாலை நெருங்கும் வேளையில் கொஞ்சம் அசந்து உட்கார்ந்து இக்குழந்தைகள் தூங்கிவிட்டால், அதுவும் பெரும் குற்றம். பெற்றோர் வந்து அழைத்துச் செல்லும் வேலையில், ஃப்ரெஷாகத் தோன்றவேண்டுமல்லவா? அதற்காக, எழுப்பினால் உடனே எழுந்திருக்கிறதுகளா இந்த சனியன்கள்? சரியாக எழுந்திருக்காத குழந்தைகளின் முகத்தில், குளிர்ந்த தண்ணீரை அறைந்து (கவனியுங்கள் – தண்ணீரைத் தெளித்து, ஈரத்துண்டினால் துடைத்துவிட்டு அல்ல), அவர்கள் பயமும், பீதியுமாய் விழித்துக்கொண்டு அழ, அவர்களைப் பெற்றோர்களுக்காக மாலை வேலையில் அக்காக்கள் /`தீதி`கள் தயார்படுத்தும் திருப்பணி இருக்கிறதே..! என்னத்தைச் சொல்ல? அந்தப் பிஞ்சுகள் சோர்ந்த முகத்துடன் மாலையில் வீடு திரும்புகையில், பகற்பொழுதில் க்ரெஷில் தாங்கள் `கவனிக்கப்பட்ட` லட்சணம்பற்றி, தங்களின் அம்மாக்களிடம் சொல்லவும் தெரியாத மழலைப் பருவம்.

`நல்லதொரு வீணை செய்தே, அதனை நலங்கெட உடைத்து…` என்பதுபோல், அழகழகாக, ஆசைஆசையாகப் பெற்றுக்கொண்டு, காசையும் செலவுசெய்து, குழந்தைகளை எங்கேயோ கொண்டுபோய் விட்டுவிட்டு, என்ன நடக்கிறது என்பதுகூடத் தெரியாமல் – இந்த அவஸ்தை தேவைதானா? யார் யார் இதனைத் தவிர்க்கமுடியுமோ அத்தகைய பெற்றோர்களாவது, தங்களின் செல்வங்களின் நலனுக்காக தவிர்க்கவேண்டாமா? மற்றவர்களை `இம்ப்ரெஸ்` செய்வதற்காக வேலைக்குப்போவதை விட்டுவிட்டு, இளம் அன்னைகள் தங்கள் குழந்தைகளை வளர்க்கும் பொறுப்பைத் தாங்களே ஏற்றுக்கொண்டால், அவர்களின் குடும்பத்துக்கு, வாரிசுகளுக்கு மிகவும் நல்லது. கூடவே, ஆரோக்யமான, அன்பான இளம் சமுதாயம் உருவாகவும் இது வழிவகுக்குமல்லவா ?

**