சமீபத்தில் கிண்டிலைக் குடைந்துகொண்டிருந்தபோது கவிதைத் தொகுப்புகளால் கவரப்பட்டேன். நல்ல கவிதையைப் பார்த்தவுடன் நம்ப விக்கெட் விழுந்துவிடுவது வழக்கம்தானே! கல்யாண்ஜியின் ‘மூன்றாவது முள்’ மற்றும் ஆத்மாநாமின் கவிதை இதழ் ‘ழ’ -15 ஆகியவற்றை வாங்கிப் புரட்டினேன். மற்ற வாசிப்புகளிடையே, கவிதைகளுக்குள்ளும் புகுந்து ‘ரெஃப்ரெஷ்’ பண்ணிக்கொள்வது வழக்கமாகியிருக்கிறது. ரசித்த கவிதைகளில் –
‘ழ’ இதழிலிருந்து : தோற்றம் -ஆத்மாநாம் தோற்றம் சாதாரண விஷயமில்லை ஒவ்வொருவருக்கும் தோன்றத் தெரிந்திருக்கவேண்டும் நிஜவாழ்க்கையில் மட்டுமல்ல கற்பனை வாழ்க்கையிலும்தான் நிஜவாழ்க்கையில் தோன்றுவது சுலபம் ஏனெனில் அங்கு அனைவரும் தோற்றம் அளிக்கிறார்கள் டீ கொடுப்பதில் சாப்பாட்டுக்கு அழைப்பதில் திருமணங்கள் நடத்துவதில் ஆபீஸ் போவதில் சினிமா போவதில் நாடகங்கள் போவதில் இசை கேட்பதில் இப்படிப் பல்வேறாக. கற்பனை உலகில் தோன்றுவது கஷ்டம் அங்கும் சில உண்மைகள் இருக்கிறார்கள் ஒரு விஞ்ஞானியாக ஒரு தத்துவவாதியாக ஒரு சிற்பியாக ஒரு ஓவியனாக ஒரு கவிஞனாக ஒரு இசை ரசிகனாக ஒரு நாடக இயக்கக்காரராக ஒரு கூத்துக்காரராக ஒரு நாட்டிய ரசிகராக ஒரு திரைப்படக்காரராக - இவற்றில் நாம் யார் கண்டுபிடிப்பது கஷ்டம் ஏனெனில் எல்லாவற்றிலும் கொஞ்சம் கொஞ்சம் உள்ளது அதன் கண்டுபிடிக்கும் காலத்தில்கூட நாம் கண்டுபிடிக்கமாட்டோம் மீண்டும் இவ்வாறு இருக்க.. ** சமூக ப்ரக்ஞை -நிமல. விஸ்வநாதன் சாலையில் என் எதிரில் வந்த நீயும் கவனமாகயிருந்தாய் நானும் கவனமாகயிருந்தேன் நல்லவேளை, ஒரு விபத்திலிருந்து நான் தப்பித்தேன் ** கல்யாண்ஜி-யின்(வண்ணதாசன்) ‘மூன்றாவது முள்’ தொகுப்பிலிருந்து: 1. ஒரு நொடிகூட ஆகாது. என் மணிக்கட்டில் ஊரும் பூச்சியை சுலபமாய்க் கொன்றுவிடலாம். கொல்லும் அந்த ஒரு நொடி அற்ற காலத்துடன் அல்லவா ஓடிக்கொண்டிருக்கிறது என் கடிகாரம். கருணையின் பாடலைப் பாடி அல்லவா குதித்துக் குதித்துச் செல்கிறது அந்த மூன்றாவது முள் ** 2. விருந்தாளியின் பையன்களில் சிறிய பையனுக்கு கதைகள் சொல்வது என் பொறுப்பாக இருந்தது அவன் மறந்துவிட்டுப் போன சிரிப்பு முகமூடி ஒன்று தலையணைக்குக் கீழ் இருந்து அதற்குக் கதை சொல்லச் சொன்னது. உடனடியாக பதில் சொல்லிவிட்டேன், எப்போதும் சிரித்துக்கொண்டிருக்கிற, எப்போதும் இன்னொரு முகத்தை மூடுகிற ஒன்றுக்கு கதைகள் அவசியமில்லை என்று கதைகள் சொல்வதில்லை என்று. ** விக்ரமாதித்யன் படைத்து 1982-ல் வெளிவந்த முதல் கவிதைத் தொகுதியான ’ஆகாசம் நீல நிறம்’ என்கிற நூலும் கிண்டிலுக்குள் நுழைந்திருக்கிறது. நகுலன், ஆர்.சூடாமணி, தஞ்சை ப்ரகாஷ், பிரும்மராஜன் ஆகியோரால் ஸ்லாகிக்கப்பட்ட தொகுப்பு. எட்டிப் பார்த்ததில் கிடைத்த ஒன்றிரண்டு : 1. வாழ்க்கை பறத்தல் சந்தோஷமானது ஆனால் பட்டுப் பூச்சிகள் மல்பரி இலைகளில் தூங்கும் ** 2. ஏகாதசி யாசகத்திற்கென்று ஏழெட்டு வீடுகள் சென்று இருந்த நிலையைப் பார்த்ததில் திருவோட்டைத் தூக்கித் தூர எறிந்தேன் திரும்பி வருகையில் ** 3. நீச்சலுக் கென்றே ஆற்றுக்கு வந்தவனை உள் வாங்கும் சுழல் பார்த்தபடி தன் போக்கில் போகும் நதி ** *