இந்தியாவை இந்திய மண்ணில் கடந்த 15 வருடங்களாக வெல்லமுடியாத ஆஸ்திரேலியா, 4 மேட்ச்சுகள் கொண்ட டெஸ்ட் தொடரை (Border-Gavaskar Trophy) நாளை (9-2-2023) நாக்பூரில் துவக்குகிறது.

வலிமையாக வந்திருக்கும் உலகின் நம்பர் 1 டெஸ்ட் அணி, எங்கே இந்தியாவில் நம் பருப்பு வேகாதோ, தோற்றுவிடுவோமோ என்ற பயம் கவ்வ, இந்தியாவில் பிட்ச் இப்படி..அப்படி.. என்றெல்லாம் ஏற்கனவே பிதற்ற ஆரம்பித்துவிட்டது. ’எந்த ஒரு நாடும், தன் பலத்துக்கு ஏற்றவாறுதான் பிட்ச்சைத் தரும். ஆஸ்திரேலியாவுக்கு இந்திய அணி செல்கையில், அவர்களுக்குத் தோதான க்ரீன் பிட்ச்சுகளைத்தானே அவர்கள் நமக்குத் தருகிறார்கள்? Bouncy pitches கூடாது என்றா நாம் அங்கே சொல்கிறோம்? சர்வதேச கிரிக்கெட் என்று வந்துவிட்டால், எந்த பிட்ச்சிலும், எந்த ஒரு சூழலிலும் விளையாடத் தெரிந்திருக்கவேண்டும்’ எனக் கருத்து தெரிவித்திருக்கிறார் கிரிக்கெட் லெஜெண்ட் சச்சின் டெண்டுல்கர்.
நன்றாகத் திட்டமிட்டு 4 ஸ்பின்னர்களுடன் இந்திய மண்ணில் இறங்கியிருக்கிறது ஆஸ்திரேலியா. இத்தனை ஸ்பின்னர்களோடு இதுவரை எந்த ஒரு அயல்நாட்டு அணியாவது இந்தியா வந்திருக்கிறதா? இருந்தும் ஒரே பதற்றம்! கடந்த இங்கிலாந்து தொடரின்போது அஷ்வினும், அக்ஷரும் எதிரிகளைக் கிழி கிழியென கிழித்து எறிந்தது கெட்டகனவாய் வந்துகொண்டிருக்கிறதோ என்னவோ? அஷ்வினின் ஸ்பின்னை சமாளிப்பதுபற்றி அவர்கள் ஓவர்டைம் போட்டு யோசிப்பதாகத் தெரிகிறது! பின்னே, பரோடாவிலிருந்து அஷ்வினைப்போலவே பௌலிங் ஆக்ஷனுடன் ஸ்பின் போடும் ஒரு வீரரை அழைத்துவந்து நெட் ப்ராக்டீஸ் செய்துகொண்டிருக்கிறதே ஒரு வாரமாக! ஆஸ்திரேலியாவின் முன்னணி வீரர்களில் ஒருவரான முன்னாள் கேப்டன் ஸ்டீவ் ஸ்மித், டூப்ளிகேட் அஷ்வின் என அழைக்கப்படும் பரோடாவின் கத்துக்குட்டி பௌலரான மகேஷ் பித்தியாவை (Mahesh Pithiya ) பந்து போடச்சொல்லி ஆடி, ஆடி பார்த்துக்கொண்டிருக்கிறாராம். மகேஷே இண்டியன் எக்ஸ்ப்ரெஸுக்கு விவரமாகச் சொல்லியிருக்கிறார். ட்விட்டர்வாசிகள் கவனிக்காமலிருப்பார்களா! கேலி, கிண்டல் என்று இறங்கிவிட்டார்கள். பொழுது போக்க விஷயம் கிடைத்துவிட்டது..

மேலே: நகலும் அசலும்
கொஞ்சம் சீரியஸாக விஷயத்துக்கு வருவோம். இந்திய பிட்ச்சுகளில் ஆடி இந்தியாவை வீழ்த்தும் முனைப்புடன், பிரமாத ஹோம்வர்க்கோடு உழைக்கிறது ஆஸ்திரேலியா. Highly professional approach. டேவிட் வார்னர், உஸ்மான் கவாஜா, மார்னஸ் லபுஷான், ஸ்டீவ் ஸ்மித் போன்ற டாப் ஆர்டர் பேட்ஸ்மன்கள் சிறப்பாக ஸ்பின்னை எதிர்கொள்ளும் திறன் கொண்டவர்கள். நல்ல ஃபார்மிலும் இருக்கிறார்கள். இந்தியாவுக்கு எதிராக நிறைய விளாசுவார்கள் என எதிர்பார்க்கலாம். காயம் காரணமாக ஜோஷ் ஹாசல்வுட், மிட்செல் ஸ்டார்க் இருவரும் முதல் டெஸ்ட்டில் ஆடமாட்டார்கள். ஆல்ரவுண்டர் காமரூன் க்ரீன் (Cameroon Green) ஆடுவதும் சந்தேகம். இது ஒரு பின்னடைவு என்றாலும், கேப்டன் பாட் கம்மின்ஸ் (Pat Cummins), ஸ்காட் போலண்ட் (Scott Boland) – இருவரும் தரமான வேகப்பந்துவீச்சாளர்கள். துணையாக வருபவர்கள் ஸ்பின்னர்கள் நேத்தன் லயன், ஆஷ்டன் ஏகார் (Ashton Agar) (அல்லது டாட் மர்ஃபி (Todd Murphy). இவர்களிடம் நாக்பூரில் நமது பேட்டிங் புலிகள் ஆட்டம்காணாது இருக்கவேண்டும்.

Above: Fast bowler Scott Boland
காயத்திலிருந்து இன்னும் பூரண குணம் அடையாததால், ஜஸ்ப்ரித் பும்ரா (Jasprit Bumrah) , ஷ்ரேயஸ் ஐயர் ஆகியோர் அணியில் இல்லை. முகமது சிராஜ், முகமது ஷமி (அல்லது உமேஷ் யாதவ்) வேகப்பந்துவீச்சை இந்தியாவுக்காகக் கையாள்வார்கள். ஸ்பின் டெபார்ட்மெண்ட்டில், ரவி அஷ்வின், அக்ஷர் பட்டேல், (காயத்திலிருந்து திரும்பி வந்திருக்கும்) ரவீந்திர ஜடேஜா ஆகியோர் சுழல் கொண்டு எதிரியைத் தாக்குவார்கள். பட்டேலுக்கு பதிலாக குல்தீப் யாதவைக் கொண்டுவரலாம் என சிலர் சொன்னாலும், பட்டேலின் பேட்டிங் திறன், ஸ்பின் பௌலிங்கையும் மிஞ்சி அணிக்குக் கைகொடுக்க வாய்ப்புண்டு.

Shubman Gill. Rohit’s opening partner?
பேட்டிங்கில் ரோஹித் ஷர்மாவுடன் ஷுப்மன் கில் (Shubman Gill) துவக்குவதே நல்லது. ஷுப்மன் அபாரமான ஃபார்மில் இருப்பதால், அணியின் நலன் கருதி ராஹுலைக் கொஞ்சம் பெஞ்சில் உட்காரவைக்கலாம். தவறில்லை. புஜாரா, கோஹ்லிக்குப் பின் சூர்யகுமார் யாதவை இறக்கினால், ஆஸ்திரேலியாவுக்கு பீதி கிளம்பும். மடமடவென விக்கெட்கள் சரிந்து நெருக்கடியான நிலை வந்தால், மிடில் ஆர்டரில் விளாசி சூர்யாவால் ஸ்கோரை சரி செய்ய முடியும். கோஹ்லிக்கு நாக்பூர் மைதானம் அதிர்ஷ்டமானதாக இதுவரை அமைந்திருக்கிறது என்கிறது புள்ளிவிபரம்.
யார் இந்தியாவுக்கு விக்கெட்கீப்பர்? ரிஷப் பந்த் இல்லாதது இடிக்கிறது இங்கே. இதுவரை அணியில் ஸ்டாண்ட்-இன் விக்கெட்கீப்பராக அமர்ந்திருந்து ஆனால் இதுவரை ஆட வாய்ப்பில்லாதிருக்கும் கே.எஸ். பரத்திற்கு இப்போது வாய்ப்பு கொடுப்பது நல்லது. நல்ல கீப்பர் என்பதோடு, திறன் வாய்ந்த பேட்ஸ்மனும்கூட. கே எல் ராஹுலே பார்த்துக்கொள்வார் என்று அசடு வழியாமலிருப்பது அணிக்கு நல்லது. டெஸ்ட் ஸ்டாண்டர்ட் விக்கெட்கீப்பர் அல்ல ராஹுல். அவரால் ஸ்பின்னர்களுக்குத் திறமையாக கீப் செய்ய முடியாது.
கேப்டன் ரோஹித்தும், கோச் திராவிடும் சில சாதுர்யமான முடிவுகளை, எதிரணியின் பலம் கருதி எடுக்கவேண்டியிருக்கும் – அவை சர்ச்சைக்குள்ளானாலும் பரவாயில்லை என்று.
Star Sports 1. 09-02-23 @ 09:30 hrs (IST) Nagpur