கவிஞர் அப்துல் ரகுமான் – 2

சிறுவயதில் மதுரையில், ரமலான் மாத நோன்புக்கென எழுப்புவதற்காக சிறுவர் கூட்டம் பாடிச்சென்ற ’சஹர்’ பாடல்கள் தன்னுள் கவிதைப் பிரவாகத்தைக் கிளறிவிட்டதாய் ‘கவிதை என் பிதுரார்ஜிதம்’ எனும் கட்டுரையில் சொல்லியிருக்கிறார் கவிக்கோ. உருது, ஹிந்தி, மொழிகளில் காணப்படும் ’நஸம்’ (Nazm) வகைக் கவிதைகள் (நீண்ட உரைநடைக் கவிதைகள்), ரத்தினச்சுருக்கமான ஜப்பானிய ’ஹைக்கூ’ வகைக் கவிதைகள் எனத் தமிழில் தன்பாணியில் தெளித்துவிட்ட கவிஞர் ரகுமான், சினிமாவுக்குப் பாடலெழுத மறுத்தவர். ‘அம்மி குத்த சிற்பி எதற்கு?’ என்றாராம் ! சமீபத்தில் வேலூரில் நடந்த இலக்கிய விழா ஒன்றில் இளையராஜாவின் ஆல்பத்திற்குக் கவிதை எழுதத் தயார் என்று கூறியிருந்தார். ஆனால், காலத்தின் கணக்கோ வேறுவிதமாக இருந்துவிட்டது.

தமிழுக்கு அயலான சிந்தனைகளையும் நெருங்கி உள்வாங்கிக்கொண்ட கவிஞர் அப்துல் ரகுமான். நிறையப் படித்துச் செழித்தவர். ஆன்மிக, தத்துவத் தாக்கம் அவரது கவிதைகளில் பரவலாகக் காணக்கிடைக்கின்றது. அவரது வரிகளை மேலும் பார்ப்போம்:

பித்தன்

பித்தன் மழைக்காகப் பள்ளிகூடத்தில் ஒதுங்கினான்
குழந்தைகளின் கையிலிருந்த புத்தகங்களைப் பார்த்து
புத்தகங்களே சமர்த்தாயிருங்கள்
குழந்தைகளைக் கிழித்துவிடாதீர்கள் என்றான்
அவன் மேலும் சொன்னான்…
குழந்தைகளே பாடப்புத்தகங்களாக இருக்கிறார்கள்
அவர்கள் கையில் ஏன் காகிதக்குப்பைகளைத் தருகிறீர்கள்?
உங்கள் புத்தகங்கள் கண்களைத் திறப்பதில்லை
ஊற்றுக்கண்களைத் தூர்த்துவிடுகின்றன
காகித ஓடங்களை நம்பி இருப்பவர்களே!
நீங்கள் எப்படி அக்கரை போய்ச்சேர்வீர்கள்?
இதோ! இரவு பகல் என்ற ஏடுகள்
உங்களுக்காகவே புரளுகின்றன
நீங்களோ அவற்றைப் படிப்பதில்லை
இதோ! உண்மையான உயிர் மெய் எழுத்துக்கள்
உங்கள் முன் நடமாடுகின்றன
நீங்களோ அவற்றைக் கற்றுக்கொள்வதில்லை
ஒவ்வொரு பூவும் பாடப்புத்தகமாக இருப்பதை
நீங்கள் அறிவதில்லை.
நீங்கள் நட்சத்திரங்களைப் படிக்கக்கற்றிருந்தால்
உச்சரிக்கமுடியாத எழுத்துக்களில்
அதிகமான அர்த்தம் இருப்பதை அறிந்திருப்பீர்கள்
நீங்கள் மின்னலின் வாக்கியங்களை
வாசிக்கமுடிந்திருந்தால்
ஒளியின் ரகசியத்தை அறிந்திருப்பீர்கள்,
உங்களுக்குக் கண்ணீர்த்துளிகளைப்
படிக்கத் தெரிந்திருந்தால்
நீங்கள் மனிதனின் சாரத்தை அறிந்திருப்பீர்கள்.
எழுத்துக்களால் அல்ல
காயங்களால் கற்பதே கல்வி
என்பதை அறிந்து கொள்ளுங்கள்.
உங்கள் புத்தகங்கள் விளக்குகளாக இருக்கின்றன.
சூரியனைக் காண
விளக்குகள் தேவைப்படுவதில்லை.

**
கதவு

பித்தன்
கதவை
மூடிக்கொண்டும்
திறந்துகொண்டும்
இருந்தான்
ஏன் இப்படிச்
செய்கிறாய்?
என்று கேட்டேன்
கதவு
திறப்பதற்கா?
மூடுவதற்கா? என்று
அவன் கேட்டான்
அவன் மேலும் சொன்னான்
கதவுகள்
சில நேரம்
இமைகளாகத்
தெரிகின்றன
சில நேரம்
பூவிதழ்களாக
மலர்கின்றன
சில நேரம்
உதடுகளாகின்றன
பயணம் முடிந்து
வீடு திரும்புகிறவனுக்கும்
சிறையில் கிடப்பவனுக்கும்
கதவு திறப்பது என்பது
ஒரே அர்த்தம் உடையதல்ல
கதவுகளுக்கும்
சிறகுகளுக்கும்
ஏதோ இனம் புரியாத
சம்பந்தம் இருக்கிறது
கதவின்
திறப்பிலும்
மூடலிலும்
கேள்வியும் பதிலும் இருக்கிறது
கதவுகளில்
சந்திப்பும் இருக்கிறது
பிரிவும் இருக்கிறது
நாம்
உள்ளே இருக்கிறோமா?
வெளியே இருக்கிறோமா?
என்பதைக்
கதவுகளே தீர்மானிக்கின்றன
நாம்
கதவு எண்களில்
வசிக்கிறோம்
மூடிய கதவு
உள்ளே இருப்பவற்றின்
மதிப்பைக் கூட்டுகிறது
நம் வீட்டுக்குமட்டுமல்ல
நமக்கும் கதவுகள் உண்டு
நாம் நமக்குள்ளேயே செல்லவும்
நம்மைவிட்டு வெளியேறவும்
ஜனனத்தில்
ஒருகதவு திறக்கிறது
மரணத்தில்
ஒரு கதவு திறக்கிறது
இரண்டிலும் நாம்
பிரவேசிக்கிறோமா?
வெளியேறுகிறோமா?
கதவு தட்டும்
ஓசை கேட்டால்
யார் என்று கேட்காதே
ஒரு வேளை அது
நீயாக இருக்கலாம்
**

அந்தப்புரங்களில் ..

நினைவுகளில் சூலாகி
நினைவுகளில் புதைந்து
கணந்தோறும் எனக்குப்
புதுப்புது அவதாரங்கள்
எண்ணங்களை சுவாசித்து
எண்ணங்களில் நின்றுகொண்டு
பொழுதுக்கும் வாழ்வோடு கண்ணாமூச்சி
குப்பையைக் கிளராமல்
துயிலை அடைகாக்கவே
அமரும் இமைகள்
நரம்புகளின் காம அழைப்பை
அலட்சியம் செய்து
நெருப்புக் காய்களால்
சதுரங்கமாடும் விரல்கள்
ஒட்டடைக் கோலிலேயே
வலைபின்னும் சிலந்தி நான்
சிக்குகின்ற ஈயும் நான்
**

கபீர்தாஸின் தாக்கம் தெரிவதுபோல் ‘நேயர்விருப்பம்’ என்கிற கட்டுரைத்தொகுதியில் ஒரு கவிதை அவரது ஆன்மிக சிந்தனையைக் கோடிட்டுச் செல்கிறது:

ஆயிரம் திருநாமம் பாடி . .

அரன் என்றழைப்பினும்
வரன் கொடுப்பவன் நீ
அரியென்று இசைப்பினும்
சரியென்று இசைப்பாய்
கர்த்தன் என்று உரைப்பினும்
அர்த்தம் நீதான்
அல்லா எனினும் நீ
அல்லாது வேறு யார் ?
**

காதலெனும் உணர்வு கவிஞரைப்போட்டுத் தாக்கி கவிதைத் துளிகளாக ஆங்காங்கே சிந்தவைத்திருக்கிறதோ?. சில:

நீ பலவீனமானவள்
ஆனால்
உன் ஆயுதங்கள்
பயங்கரமானவை
**

உன் இதயத்திற்குள் நுழைய
வழி பார்க்கிறேன்
ஊசியில் காதைத் தேடும்
பார்வை மங்கிய
கிழட்டுத் தையல்காரனைப்போல
**

நீ நதி
நான் உன்னில் விழுந்த சருகு
நீ எங்கே கொண்டுபோகிறாயோ
அங்கேதான் நான் போகமுடியும்
**

பல் பிடுங்கிய பாம்பாய் என்னை
உன் பெட்டிக்குள் வைத்திருக்கிறாய்
நீ விரும்பும்போது மகுடி ஊதி
ஆட வைக்கிறாய்
**

என் உடைந்த கனவுகளால்
உன் வீட்டைக் கட்டிக்கொள்
என் இதயத்தில் எரியும் நெருப்பால்
உன் விளக்கை ஏற்றிக்கொள்
**

நான் எங்கே சென்றாலும் அது
உன் சபையாகவே இருக்கிறது
**

ஆயுள் முழுவதும்
உனக்காகக் காத்திருக்கத் தயார்
மரணம்போல் நீ
நிச்சயமாக வருவதாயிருந்தால்
**

இப்படியெல்லாம் காதலில் கரைந்த நம் கவிஞன், கொஞ்சம் மேலேபோய் –

என் உயிரைக்
காதலில்
ஒளித்துவைத்துவிட்டேன்
மரணமே !
இனி என் செய்வாய் ?

என்று காலனையும் சீண்டிவிட்டான். காலன் விட்டுவைப்பானா? அதிகாலையிலேயே வந்து கூட்டிப்போய்விட்டான்.

**

கபீரின் ஆன்மீகத் தாக்கம்

முந்தைய பதிவு – ‘கபீர்தாஸ் – டெல்லி சுல்தானோடு மோதல்’-இன் தொடர்ச்சி:

கபீருக்கு இரண்டு மகன்கள் என்பதாகத் தெரிகிறது. அவற்றில் ஒருவன் தன் தந்தையின் அறிவுத் தாக்கம் இல்லாதவன். சராசரி மனிதனாகவே வாழ்ந்துவந்தான். ஆனால், அவரது இன்னொரு மகனான கமால், ராம பக்தனாக இருந்ததாகக் கூறப்படுகிறது. ஆங்காங்கே சென்று ராமாயணப் ப்ரசங்கம் செய்துவந்தான். கமாலின் இதிகாசக்கதை சொல்லும் விதம் பாமரர்களை வெகுவாகக் கவர்ந்தது.

கபீர் தன் ஆன்மீகப்பாதையில் முன்னேறிக்கொண்டிருந்தாலும், சராசரி குடும்பஸ்தனாக வாழ்ந்துவந்தார். தன் நெசவுத்தொழிலை விடாமல் செய்துவந்தார். ஒருமுறை காசியிலிருந்த ராமர் கோவிலிலிருந்து, ராம்லாலாவுக்கு (ராமர் விக்ரஹம்) வஸ்திரம் செய்யச்சொல்லி, கபீர் வீட்டுக்கு சொல்லி அனுப்பி இருந்தார்கள். செய்து தருவதாக ஏற்றிருந்தார்கள் கபீரின் குடும்பத்தினர். கபீர்தாஸ் தன் குரு சொல்லிக்கொடுத்த மந்திரத்தில் ஆழ்ந்திருந்தார். கை மட்டும் விடாது வேலை செய்துகொண்டிருந்தது. மதியம்போல் வீடு திரும்பிய அவருடைய மகன் கமால், அவர் இன்னும் நெய்து கொண்டிருப்பதையும், நெய்யப்பட்ட துணி மிக நீண்டிருப்பதையும் பார்த்தான். தன் தந்தையிடம் ” போதுமப்பா. அந்த ராமர் விக்ரஹம் சிறியது தான்.. நீ நெய்திருப்பது மிகவும் நீளம். போதும். நிறுத்தப்பா” என்றான். அவரும் நெய்வதை நிறுத்தி, அதை அறுத்து, ’வஸ்திரத்தை எடுத்துப்போய் கோவிலில் கொடுத்து வா’ என்றார். துணி நீளமாக இருப்பதை திரும்பவும் சுட்டிக்காட்டினான் கமால். ‘நீ போய் கொடுத்துவிட்டு வா’ என்றார் கபீர் மீண்டும். கமால் வஸ்திரத்தை எடுத்துகொண்டு கோவிலில் கொண்டுபோய் கொடுத்தான். அந்த மென்மையான துணியை ராம்லாலாவின் மீது சுற்றினார் கோவில் பண்டிட்ஜி. வஸ்திரத்தை ராமர் விக்ரஹத்தின்மீது சுற்றச்சுற்ற அது வாங்கிக்கொண்டதாய்ப் பட்டது! நன்றாக சுற்றி அணிவித்ததும் ஒரு அங்குலம் கூட மிச்சமில்லாமல் கனகச்சிதமாக இருந்தது. ராமபிரான் மீது அழகாய் ஜொலித்தது. பண்டிட்ஜி வஸ்திரம் அணிவிப்பதைப் பார்த்துக்கொண்டிருந்த கமால் அசந்துபோனான். வீட்டிற்குத் திரும்பி அப்பாவிடம் நடந்ததை ஆச்சரியத்துடன் சொன்னான். துணி நெய்துகொண்டிருந்த கபீர் நிமிர்ந்து கமாலைப் பார்த்தார்; சொன்னார்: ”நாம் கொடுக்கும் எதுவும் அவனுக்கு அதிகமில்லை”.

தன் குருவின் மீது அளவற்ற அன்பும், மரியாதையும் கொண்டிருந்த கபீர், தன் வாழ்நாள் முழுதும் தன்வீடு தேடி வந்த சாது, சந்நியாசிகளுக்கு அன்னமிட்டு வந்தார். அவர்களை மிகுந்த வாஞ்சையுடன் நடத்தினார். அதனாலேயே ஒரு இடத்தில் இப்படிச்சொல்கிறார்: ‘ சாயி! (கடவுளே), நான் மற்றும் என் குடும்பத்தினர் பசியாறவும், வீடுதேடிவந்த சாது பசியோடு திரும்பிப் போகாமலிருக்கவும், எவ்வளவு தந்தால் போதுமோ, அவ்வளவே கொடு’ என வேண்டுகிறார். கபீர்காலத்திய மெய்ஞானிகளான ஞானதேவரும், நாமதேவரும் கபீரின் வீடுதேடி வந்ததாகத் தெரிகிறது. அவர்களுக்கு உணவு படைத்து மகிழ்ந்திருக்கிறது கபீரின் குடும்பம்.

கபீர் துணிவிற்கச் சந்தைக்குச்செல்லும்போதெல்லாம், அங்குவரும் சாதாரண மக்களை, வியாபாரிகளை எல்லாம் பார்த்துப் பேசுவதும், கேட்டவருக்கு நிலைமைக்கு ஏற்றபடி அறிவுரை கூறுவதும் உண்டு. அவருடைய போதனைகள் மற்றும் கவிதைகள் மக்கள் புழங்கும் சாதாரண வார்த்தைகளைக் கொண்டவை. அவருடைய கவிதைமொழி என்பது ஹிந்தி, போஜ்புரி, ப்ரஜ் பாஷா, அவதி, ராஜஸ்தானி ஆகிய பேச்சுமொழிகளின் (dialects) கலவை. சத் விஷயங்கள், தத்துவக் கருத்துக்கள் அவருள் வசன கவிதைகளாய் வடிவம் பெற்று வாய்மொழியாய் வந்தவை. எழுதப்பெறாதவை. அவரோடு தினசரி அளவளாவிய சாதாரண மனிதர்களாலும், அவரது பிற்காலத்திய சீடர்களாலும், மனதில் கொள்ளப்பட்டு, ரசிக்கப்பட்டு, சுவாரஸ்யமான கதைகள் போல, வாய் வழியாக, சொல்வழக்காக மற்றவர்க்கு இவை எடுத்துச் செல்லப்பட்டிருக்கின்றன. இப்படித் திரட்டப்பட்டதுதான் ‘தோஹா’ எனப்படும் அவருடைய ஈரடி வெண்பாக்கள், சாகி (Saakhi) (sanskrit : Saakshi – witness) எனப்படும் கவிதைகள்.

இறுதி உண்மையான பரப்பிரும்மத்தின் நேரடி அனுபவ நிரூபணமாக ‘சாகி’ கவிதைகள் கபீரின் வழிவந்தவர்களால் கொள்ளப்படுகின்றன. ‘சாகி’ யை மனனம் செய்வதும், பாடுவதும், அதன் வரிகள் காட்டும் பொருள்பற்றி ஆழ்ந்து சிந்திப்பதுமே ஒருவனை ஆன்மீக உயர்தளத்திற்கு இட்டுச்செல்லும் என அவர்கள் நம்புகிறார்கள். இவையும் மற்றவையும் தொகுப்புகளாகத் திரட்டப்பட்டு பிற்காலத்தில் வெளியிடப்பட்டன. கபீருடைய சிஷ்யர்களுள் முக்கியமானவர்களான பாகோதாஸ் (Bhaagodas), தர்மதாஸ் என்கிறவர்களே கபீரின் வாய்வழிக்கவிதைகளத் தொகுப்பதில் பிரதான பங்கு வகித்தவர்கள். கபீரின் காலத்தில்தான் வட தேசத்தில் பக்தி இயக்கம் தனிச்சிறப்பும் வலிமையும் பெற்றது. சீக்கியர்களின் 5-வது குருவான, குரு அர்ஜுன் சிங் கபீரின் கவிதைகளை ஆழ்ந்து கற்று, அதன் உண்மைத்துவத்தில் மயங்கியிருக்கிறார். அவற்றில் சிலவற்றை (சுமார் 500 கவிதைகள்) சீக்கியர்களின் புனிதநூலான ‘குரு க்ரந்த்சாகிப்’ பில் குரு அர்ஜுன் சிங் சேர்த்தார்.

ஆழமான ஆன்மீகத்தை, கடினமான தத்துவத்தை எளிதான வார்த்தைகளில், ரத்னச்சுருக்கமாகத் தருவதில் வல்லவர் கபீர். அன்றைய சமய, சமூகவாதிகளுடன் முரண்பட்டிருப்பினும், ’சத்’ விஷயங்களை நேரடியாக, நறுக்குத் தெறித்தாற்போல் சொன்ன ஆன்மீகவாதி கபீர்தாஸ். மதச்சடங்குகளிலும், சம்பிரதாயங்களிலும் இருந்த பகட்டையும், பாசாங்கையும், போலித்தனங்களையும் சாடினார் கபீர். ’கடவுள் ‘காபா’ விலோ (மெக்கா), கைலாசத்திலோ இல்லை; உனக்குள்தான் இருக்கிறான். முடிந்தால் தேடி அறிந்துகொள்!’ என்று அதிரடியாகச் சொன்னதால் மரபுவழி முஸ்லிகளும், இந்துக்களும் இவர்மீது கடும்கோபத்தில் இருந்தனர்.

சந்த் கபீர்தாஸின் இறுதிக்காலம் இப்படிக் கழிந்ததாகக் கூறப்படுகிறது:

காஜிகளும் மௌல்விகளும், ஹிந்துப்பண்டிதரில் பலரும் அவரை விமரிசித்துவந்தாலும் – அவருடைய இறுதிக்காலத்தில், பெரும்பாலான ஹிந்துக்களாலும், தெய்வநம்பிக்கையுடைய எளிய முஸ்லிம்களாலும், இஸ்லாமின் உயர் பிரிவினரான சுஃபிக்களாலும், ’மெய்ஞானி’ என அடையாளம் காணப்பட்டு போற்றப்பட்டார் கபீர். காசியைவிட்டு வெளியேறிய கபீர், மகரில் (Maghar village, near Gorakhpur) 1518-ல் காலமானபோது, அவருடைய சடலத்தை அடக்கம் செய்வதா, எரிப்பதா என்பதில் ஹிந்து, முஸ்லிம் இனத்தவரிடையே வாக்குவாதம் எழுந்திருக்கிறது. இந்த சூடான வாக்குவாதத்தினிடையே கபீரின் புன்னகை முகம் தோன்றியதாகவும், அவர்களை சண்டைப்போட்டுக் கொள்ளாமல் இருக்கும்படி அறிவுறுத்தியதாகவும் சொல்லப்படுகிறது, சடலத்தைப் போர்த்தியிருக்கும் துணியை விலக்கிப் பார்க்குமாறு சொல்லி மறைந்தாராம் கபீர். குழப்பத்துடன் இருதரப்பினரும் துணிவிலக்கிப் பார்த்தபோது, உடம்பு இருந்த இடத்தில் மலர்க்குவியல் இருந்திருக்கிறது. பரவசமான இருதரப்பினர்களும் அவரவர் முறைப்படி கபீரை வணங்கி, ஒருபாதியை அவர்களும், மறுபாதியை இவர்களும் எடுத்துக்கொண்டு எதிர் எதிர் திசைகளில் ஒடினார்கள் எனவும் கூறப்படுகிறது !

சர்ச்சைகளும், சுவாரஸ்யங்களும் மிகுந்த கபீரின் வாழ்க்கை இப்படி இருக்க, இனி நாம் அவருடைய கவிதைகளுக்குள் கொஞ்சம் சென்று அவர் என்ன சொன்னார், அதை எப்படிச்சொன்னார் என அறிய முயற்சிப்போம் (தொடரும்)

**