மறந்துவிட்ட சாமான் திடீரென
மனதிடுக்கிலே கிடுகிடுக்க
பழக்கமில்லாப் புதுக்கடையின்
வழுக்கப்பார்க்கும் தரையிலாடிய தாத்தா
சின்னதாக ஒரு சாமான் வாங்கிவிட்டு
பெரிய நோட்டைக் கொடுக்கப் பயந்தார்
சிடுசிடுக்காமல் வாங்கிக்கொண்டு
சின்னச்சின்ன நோட்டாக கடைக்காரன்
பாக்கியைக் கொடுத்துவிட்டானே
வாங்கி பர்ஸில் வைத்துக்கொண்டு
வழியெல்லாம் நினைத்துவந்தார்..
வில்லனாய் ஒவ்வொரு பயலும் இருக்க
நல்லவிதமா இருக்கானே மனுஷன்
இங்கதான் வாங்கணும் சாமான்.. இனிமே
வீட்டில் பர்ஸைக் குடைந்த
சுட்டிப்பேரன் சிடுசிடுத்தான்
கண்ணாடி போட்டுண்டு வெளியே போன்னு
எத்தன தடவதான் சொல்றது
கொடுத்திருக்கான் பாரு ஒனக்குன்னு!
அவன் தூக்கிக்காட்டிய விரலிடுக்கில்
அம்பது ரூபாக் கிழிசல் ஒன்று
அலட்சியமாய்ச் சிரித்துவைத்தது
-ஏகாந்தன்
**