டி-20: இந்தியாவின் த்ரில் வெற்றி

ஆஸ்திரேலியாவின் சிட்னியில் (Sydney), நேற்று (31-1-2016) நடந்த இறுதி டி-20 போட்டியில் இந்தியா வெற்றி வாகை சூடியது. கடைசி ஓவர் த்ரில்லரில் ஆஸ்திரேலியாவின் அதிகபட்ச தொடர் ஸ்கோரான 197-ஐ மிஞ்சியது. ஆட்டத்தின் இறுதி பந்தில் சுரேஷ் ரெய்னா விளாசிய அனாயச பௌண்டரியின்மூலம், இந்தியா 3-0 என ஆஸ்திரேலியாவை `ஒயிட்வாஷ்` (Whitewash) செய்தது. கூடவே, ஆஸ்திரேலியாவின் வேகக்கிரிக்கெட் நம்பகத்தன்மையையும் தகர்த்தெறிந்தது.

முதலில் பேட் செய்த ஆஸ்திரேலிய அணிக்கு, அதன் புதிய கேப்டன் ஷேன் வாட்சன் அபாரமான பங்களிப்பு தந்தார். அவருடைய 71-பந்தில் எட்டப்பட்ட 124 (நாட்-அவுட்)-ல், 10 பவுண்டரிகள், 6 ப்ரமாத சிக்ஸர்கள். பும்ரா உட்பட இந்திய பௌலர்கள் எவரையும் அவர் விடவில்லை. வாட்சனின் இந்த ஆக்ரோஷ இன்னிங்ஸ், கிரிக்கெட்டில் ஒரு கேப்டன் எப்படி விளையாட வேண்டும் என்பதன் இலக்கணமாகும். எந்த வகையிலும் பெரிதும் புகழப்படவேண்டிய சாதனை. இந்தத் தொடரில் இருதரப்பிலிருந்தும் ஆடப்பட்ட ஒரே செஞ்சுரியும் அதுவே. எனினும் மற்ற ஆஸ்திரேலிய பேட்ஸ்மன்கள் எடுபடவில்லை.

198 என்பது டி-20-யில் எதிரணியை பயமுறுத்தும் இலக்கு. ஆனால் இந்தியர்கள் இதற்கெல்லாம் மிரண்டதாகத் தெரியவில்லை. ஓப்பனர் ஷிகர் தவனின் 9-பந்தில் எட்டிய 26 ரன்கள் (4 பௌண்டரி, 1 சிக்ஸர்) என்கிற முதல் வெடி, ஆஸ்திரேலியர்களை ஆரம்பத்திலேயே எச்சரித்தது ! ரோஹித் ஷர்மாவும் (38 பந்துகளீல் 52 ரன்கள்), விராட் கோஹ்லியும்(36 பந்துகளீல் 50 ரன்கள்) சூரத்தனத்தில் சோடை போகவில்லை. இருப்பினும் ஒரு ஓவருக்கு 12 ரன்கள் என்கிற விகிதம் இந்தியாவுக்குத் தொல்லைகொடுத்தது. ஆல்-ரவுண்டர் ஷேன் வாட்சன் மற்றும் லெக்-ஸ்பின்னர் கேமரூன் பாய்ஸ் (Cameron Boyce) ஆகியோரின் பந்துவீச்சு துல்லியமாக இருந்ததால், மிடில் ஒவர்கள் கடினமாக இருந்தது. சுரேஷ் ரெய்னா சிறப்பாக விளையாடியும், 8 பந்துகளில் 4 ரன்கள் எடுத்து தயங்கித் தடுமாறிக்கொண்டிருந்த யுவராஜ் சிங், இறுதி ஓவர்களில் இந்திய ஆட்டத்தைக் கெடுத்துவிடுவார் எனத் தோன்றியது.

கடைசி ஓவர் வீசப்படுகையில் இந்தியாவின் வெற்றிக்கு, 6 பந்துகளில் 17 ரன்கள் தேவைப்பட்டது. முதல் பந்தை யுவராஜ் எதிர்கொண்டார். நல்லவேளை, இந்தியாவின் ஸ்டார் நேற்று பிரகாசமாகத்தான் இருந்தது! முதல் பந்தில் பௌண்டரி, இரண்டாவதில் சிக்ஸர், மூன்றாவதில் சிங்கிள் அடித்து அந்தப் பக்கம் சென்றார் யுவராஜ் சிங். ரெய்னாவுக்கு 3 பந்துகள்-அடிக்கவேண்டியது 6 ரன்கள். ரெய்னா தான் எதிர்கொண்ட முதல் இரண்டு பந்துகளில் 2, 2 என ரன்னெடுத்தார். கடைசி பந்து. இந்தியாவுக்குத் தேவை 2 ரன்கள். ஸ்டேடியம் சீட் நுனிக்கு வந்தது. ரசிகர்களின் விழிகள் விரிந்தன. நிலைகுத்தின. பௌலர் ஆண்ட்ரூ ட்டை (Andrew Tye)-க்கு மூச்சு நின்று திரும்பியது! வேறு வழியில்லை. போட்டார் பந்தை. பாய்ண்ட் திசையில் ரெய்னா சாத்தினார் ஒரு பௌண்டரி. தொடரின் ஸ்கோர் முதன்முறையாக 200-ஐத் தொட்டது. இந்தியாவின் வெற்றி நாட்டியம் அரங்கேறியது!

1-4 என்று ஒரு-நாள் போட்டித் தொடரை தோற்றுவிட்ட நிலையில், 3-0 என்று டி-20 தொடரை ஆஸ்திரேலியாவில் வென்றது; இந்த வெற்றியினால், ஐ.சி.சி. இன் டி-20 தரவரிசையில் இந்தியா நம்பர் 1 இடத்தையும் பெற்றது. இது தோனியின் தலைமையிலான இந்திய அணியின் அபார சாதனை. இதற்கு முக்கியக் காரணம் இந்தியாவின் முதல் மூன்று ஆட்டக்காரர்களான, ரோஹித் ஷர்மா, ஷிகர் தவன், விராட் கோஹ்லி- ஆகியோரின் தரமான, ஸ்திரமான பேட்டிங். சுரேஷ் ரெய்னாவின் இறுதி ஓவர் அதிரடியும் மெச்சத்தக்கது. இந்தத் தொடரில் இன்னொரு அம்சம்: இந்தியாவுக்குக் கிடைத்த ஒரு புது பௌலர்; ‘Find of the Tour’ என தோனியினால் புகழப்படும் 22-வயது வேகப்பந்துவீச்சாளர் ஜஸ்ப்ரித் பும்ரா.

இந்த மாதம் ஸ்ரீலங்கா தன் டி-20 படையுடன் இந்தியாவில் விளையாட வருகிறது. ஸ்ரீலங்காவுக்கெதிரான தொடரில் ஜஸ்ப்ரித் பும்ரா (Jasprit Bumrah), ஹர்தீக் பாண்ட்யா (Hardik Pandya) (தமிழ் பேப்பர்களில் குறிப்பிடப்படுவது போல் `பாண்டியா` அல்ல!), யுவராஜ் சிங் ஆகியோர் சேர்க்கப்படுவர். மார்ச்சில் இந்தியாவில் உலக டி-20 கோப்பை. இந்தியாவில் கோப்பையை வெல்வதற்காக ஒவ்வொரு சர்வதேச அணியும் 2-3 ஸ்பின்னர்களை தன் அணியில் சேர்த்து வருகிறது. நேற்று அறிவிக்கப்பட்டுள்ள நியூஸிலாந்து அணியில், ஸ்பின்னர்கள் – நேத்தன் மக்கல்லம்(Nathan McCullum), மிட்செல் சாண்ட்னர்(Mitchell Santner), இஷ் சோடி(Ish Sodhi) (இந்திய வம்சாவளி நியூஸிலாந்து வீரர்) ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். இந்திய மைதானங்களின்மீது அவ்வளவு மரியாதை!

**