அதுவும் இதுவும் . .

‘தரமாட்டியா? நா ஒன்னோட காய்! பேசமாட்டேன் போ..’ பிஞ்சு வயதில் கோபத்தையும் ஏமாற்றத்தையும் வெளிப்படுத்திய வார்த்தை. எத்தனையோ தடவை காயாகி, அடுத்த நாளே மறக்காமல் பழமாகி, சிரித்து, சேர்ந்து விளையாடிக் கழிந்த பொன்னான நாட்கள். பொன்னாள் அதுபோலே .. வருமா இனிமேலே.. என ஏங்கவைக்கும் ஒரு காலம்.

இன்னொரு காயும் உண்டு. மரத்தில், செடியில் காய்ப்பது. ஆனால், இதனைக் கண்டால் சிலருக்கே பிடிக்கும். பலருக்கோ சிரமமாக இருக்கும். பழம் சாப்பிடவே பிறந்தவர்கள் அவர்கள். அதுவும் யாராவது உரித்து, விண்டு வாயில்போட்டால், தோல் சீவிச் சின்ன சின்னத்துண்டுகளாகக் கொடுத்தால் எப்படி இருக்கும் என்று பழத்தின் மீது ஆசையிருந்தும், அடுத்தவரின் உதவியை நாடும் சோம்பேறிகள். இவர்களிடம் காயின் மகிமையைப்பற்றிப் பேசி என்ன பயன்? காய் தரும் சுகத்தைக் கனி தருமா? மாங்காய், கொய்யா, கலாக்காய், எலந்தை இவற்றையெல்லாம் காயாகவோ, செங்காயாவாகவோ –அதாவது பழுப்பதற்கான அறிகுறியுடன் சிவப்போ மஞ்சளோ மேலிடும் பச்சைக்காயாக-(குறிப்பாக எலந்தை) தின்று களித்தவர்க்கே அதன் தனி ருசி தெரியும். இதற்கெல்லாம் வாயில் பல்லும், மனதில் சின்னப்பிள்ளைகளின் துள்ளலும் இருக்கவேண்டும். அப்போதுதான் அனுபவிக்கமுடியும்! மற்றவர்கள் உட்கார்ந்து சிப்ஸ் சாப்பிட்டுக்கொண்டே டிவி பார்க்கலாம்..

*

ஒருகாலத்தில் நம்நாட்டில், வீடுகள் என்பன அவை பழசோ புதுசோ, தனிவீடுகளாயிருந்தன. வீடுகளில் திண்ணையென்று ஒன்று, இரண்டு பக்கமும் பரந்திருந்தது. சிறிய முன்வாசற்பகுதியைக் கடந்து உட்சென்றால், கூடமும் வந்தது. கூடவே இத்தகைய வீடுகளில் பாயும் இருந்தது. இப்போதிருப்பதுபோல் ஃபர்னிச்சர், சோஃபா, குஷன் என்றெல்லாம் ஒன்றும் கிடையாது. யாராவது வீட்டுக்கு வந்தால் திண்ணையிலேயே சந்தித்து, உட்கார்ந்து பேசி அனுப்பிவிடுவார்கள். ரொம்ப சொந்தமாக இருந்து, நெருக்கமானவர்களாக இருந்தால், நிலைமைக்கேற்றபடி கூடத்துக்குள் அழைத்துவரப்படுவார்கள். அங்கே அவசர அவசரமாக சாமான்களை ஓரமாக நகர்த்திவிட்டு, சுவரோரமாகப் பாய்விரித்து பவ்யமாகச் சொல்வார்கள்:’ அடடே! கீழே ஒக்காராதீங்கோ. ஒரே தூசி. இப்பிடிப் பாயில ஒக்காருங்கோ. காப்பி போடட்டுமா.. ?’ என்று வீட்டுப் பெண்கள் மென்மையாகக் கேட்பார்கள். இப்படியெல்லாம் ஒரு சமூகத்தின் கலாச்சார அடையாளமாகத் துணை வந்தது இந்தப் பாய். பாயில் ஓலைப்பாய், கோரைப்பாய், உட்காரத் தோதான தடுக்கு என்றெல்லாம் வகைவகையாக உண்டு. கல்யாணத்தின்போது ஸ்பெஷலாக கலர் கலராக மணமெக்கள் பெயரெழுதி ஆர்டர் கொடுக்கப்பட்டு செய்யப்படும் கல்யாணப்பாய்களும் இருந்தன. அப்புறம் நுழைந்தன ப்ளாஸ்டிக் பாய்கள். கோரைப்பாய்களும், ஓலைப்பாய்களும் பயந்துபோய் ஓடியே போய்விட்டன வீடுகளை விட்டு. துஷ்டனைக் கண்டதால் தூர விலகிவிட்டன போலும்.

– தொடரும்

*