சர்வதேச அமைதி இந்த புத்தாண்டில் நிலைக்குமா, நீடிக்குமா என்பது பெரியதொரு கேள்விக்குறியாகி உலகின் எதிரே நிற்கிறது. புத்தாண்டு நல்லபடியாக கடக்கவேண்டுமே எனப் பிரார்த்தித்து, உலகின் பலபகுதிகளில் இன்னும் கொண்டாட்டம் தொடரும் வேளையில், 2020-ன் மூன்றாவது நாளிலேயே புதிய போருக்கான அச்சாரம் வைக்கப்பட்டுவிட்டதாகவே தோன்றுகிறது.

ராஜீய, ராணுவ சிக்கல்கள் நிறைந்த பாரசீக வளைகுடாப் பகுதியில் (ஈரான், ஈராக், சவூதி அரேபியா மற்றும் சுற்றுப்புறம்-Persian Gulf,) போருக்கான முஸ்தீபுகள் தெரிய ஆரம்பிக்கின்றன. 29 டிசம்பர், 19 அன்று ஈராக்கின் தலைநகர் பாக்தாதிலுள்ள அமெரிக்க தூதரகம், ஈரானின் ஷியா ஆதரவுபெற்ற வன்முறையாளர்களால், உள்நாட்டு இயக்கத்தினர் உதவியுடன் தாக்கப்பட்டது. தாக்குதல் என்றால் கல்லெடுத்து வீசுதல் அல்ல. கட்டுக்குள் வராத திட்டமிட்ட வன்முறைச் செயல்கள். தூதரக சுற்றுச்சுவர் அதன் மின்பாதுகாப்பு அமைப்புடன் வன்முறைக் கும்பலால் தீவைத்துக் கொளுத்தப்பட்டது. உள்ளே இருந்த அமெரிக்க படைவீரர்களில் சிலரும், தூதரக அலுவலர்களும் கடுமையாகக் காயப்பட்டிருப்பதாகத் தெரிகிறது. ஈராக்கிய போலீஸார், துணைராணுவம் அப்போது எங்கே இருந்தனர்? தன் நாட்டில் அதிகாரபூர்வமாக இயங்கும், அந்நிய தூதரகத்தினரின் பாதுகாப்பு அவர்களது பொறுப்பல்லவா? ஒரு நாட்டின் தூதரகம் திட்டமிட்டுத் தாக்கப்பட்டால், அப்போது சம்பந்தப்பட்ட அரசு போதிய பாதுகாப்பு அளிக்காது ஆனந்தித்துக்கொண்டிருந்தால், அது அந்த நாட்டை நேரிடையாக வம்புக்கிழுப்பதற்கு, அதாவது போருக்கு அழைத்ததற்கு ஒப்பாகும். அதுவும் அமெரிக்கா போன்ற வல்லரசின் தூதர் அலுவலகத்தை, ஆயுதம் தாங்கிய குழுக்களை பயன்படுத்தித் தாக்கினால், தாக்கிய மக்களைக்கொண்ட நாடு அல்லது இயக்கம் தன் தலையில் தானே தீவைத்துக்கொண்டதிற்கு சமம். அத்தகைய ராஜீய, ராணுவ முட்டாள்தனம்தான் அந்தப் பகுதியில் இப்போது நடந்தேறியிருக்கிறது. ட்ரம்ப் போன்ற ஒரு சண்டைக்கோழியை ஜனாதிபதியாகக் கொண்ட ஒரு வல்லரசு, நகம் கடித்துக்கொண்டு ரோட்டோரமாய் உட்கார்ந்திருக்கும் அல்லது ஸெல்ஃபோனில் டிக்-டாக் வீடியோ பார்த்துக்கொண்டிருக்கும் என எதிர்பார்த்ததா ஈரானும், ஈராக்கும் ? அதுவும் ஏற்கனவே ஈரான்-அமெரிக்க ராஜீய உறவுகள் சீரழிந்துகொண்டிருக்கும் இக்கட்டான ஒரு சூழலில்?
ஜனவரி 3 அதிகாலையில் ஈரானிய புரட்சிப் படையின் (Iranian Revolutionary Guard Corps) குத்ஸ் பிரிவின் (Quds Force) தளபதி ஜெனரல் காசிம் சுலைமானி (Qassem Suleimani), ஈராக்கில் அமெரிக்க வான்தாக்குதலில் கொல்லப்பட்டிருக்கிறார். கூடவே ஐந்து சிறப்புப்படை வீரர்களும், ஈராக்கிய ஷியா-சார்பு துணைராணுவத் துணைதளபதியும். அவர்கள் பாக்தாத் விமானநிலையத்தில் அந்த அதிகாலையில் விமானத்திலிருந்து இறங்கி நடக்கையில், அமெரிக்க விமானப்படையின் ட்ரோன் (Drone) விமானத்தினால் குறிவைத்துத் தாக்கப்பட்டுள்ளனர் என்கின்றன செய்திகள். அதிபர் ட்ரம்ப்பின் உத்தரவின்பேரில், அமெரிக்கா தன் தற்காப்பிற்காக, இதனை நிகழ்த்தியதாக, அமெரிக்க பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதற்கு ராஜீயவெளியில் என்ன அர்த்தம்? ஈரானுக்கான மெஸேஜ் இது: ’சீண்டாதே.. ஒழித்துவிடுவேன்..!’
அமெரிக்கா இப்படித் திட்டமிட்டு, தன் எதிரியின் ஒரு பேர்போன மிலிட்டரி ஜெனரலைக் குறிவைத்து அழித்திருப்பதின் பின்னணியில் நிறைய கதை இருக்கிறது – மத்திய கிழக்கின் பயங்கர அரசியல், ராணுவ முஸ்தீபுகள், வல்லரசுகளின் ஆதிக்க முயற்சி என எழுத ஆரம்பித்தால் இது ஏதோ ஒரு ரிஸர்ச் பேப்பர் அளவுக்குப் போய்விடும்! சுருக்கமாகச் சொல்ல முயற்சிப்போம் இங்கே.
ஈரான் எனப்படும் ஈரானிய இஸ்லாமியக் குடியரசின் தலைவர் ’Supreme Leader of the Iranian Revolution’ எனப்படும் அலி கமேனி (Ali Khamenei). (1979-இல் இதற்குமுன் மன்னராட்சியில் இருந்த இரான் நாட்டை இஸ்லாமியக் குடியரசாக மாற்றிப் பதவியேற்ற இஸ்லாமிய மதகுரு அயத்தொல்லா கொமேனியின் வழி வந்தவர்). அலி கமேனி 1989-லிருந்து இரானிய அரசின் தலைமைப் பொறுப்பில் இருக்கிறார். அமெரிக்கா, இஸ்ரேலுடன், ஈரான் எதிர்நோக்கும் அனைத்துப் பிரச்னைகளுக்குமான மூலகாரணிகளில் ஒருவர் எனலாம். ஏற்கனவே உள்நாட்டுக் கலகம், ஷியா-சன்னிப்பிரிவுகளிடையே சண்டைகள், தீவிரவாதம் என சிதைந்துபோயிருக்கும் ஈராக், சிரியா நாட்டின் அமைதியற்ற பகுதிகளில், ஈரானிய செல்வாக்கை அதிகப்படுத்தவும், அமெரிக்க ஆதிக்கத்திற்கு எதிராக அந்தப் பகுதி மக்களைத் தூண்டவும் என ஈரானியத் தலைவரால் நியமிக்கப்பட்டவர்தான் ஜெனரல் சுலைமானி. ஈரானின் ’சுப்ரீம் லீட’ருக்கு அடுத்தபடியாக, நாட்டின் ஜனாதிபதியைக் காட்டிலும், செல்வாக்கும் மதிப்பும் பெற்றிருந்தவர்.
மத்தியகிழக்கில் அமெரிக்கர்களுக்கு எதிரான அரசியல் வன்முறைப் போராட்டங்கள், அமெரிக்க இலக்குகளின் மீதான திட்டமிட்ட தாக்குதல்கள் ஆகியவற்றை ஒருங்கிணைத்து செயல்படுத்தும் மையப்புள்ளி இந்த சுலைமானிதான் என அமெரிக்க உளவுத்துறை கண்டறிந்திருக்கிறது. சுலைமானின் ஏற்பாட்டின்படிதான் ஈராக்கில் அமெரிக்க தூதரகம் தாக்கப்பட்டது என்றும், லண்டன், டெல்லி போன்ற நகரங்களில் கடந்த சில ஆண்டுகளில் நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதல்களில் சுலைமானின் ரத்தக்கறைபட்ட கை இருந்தது என்றும் விளக்கியிருக்கிறார் அமெரிக்க அதிபர். சுலைமானி சில மாதங்களாகவே அமெரிக்கர்களால் குறிவைக்கப்பட்டிருந்திருக்கவேண்டும் எனத் தெரிகிறது.
’அமெரிக்க நலன்’ என்கிற பெயரில், அமெரிக்க தளபதிகளுடன் ராணுவ கணக்குகளை சரிபார்த்து வேகமாக முடிவெடுக்கும் இயல்புடையவர் அதிபர் ட்ரம்ப். அதன் நேரடி ராணுவ விளைவுதான் இப்போது மத்தியகிழக்கில் வெடித்திருக்கும் புதிய பதற்றம். பதிலுக்கு, ஈரானும் கடுமையாகப் பழிவாங்கப்போவதாக அறிவித்துள்ளது. சொன்னபடி அதுவும் ஏதாவது செய்யும். தற்கொலைப்படைத் தாக்குதல்கள், நேரிடையான தாக்குதல் என ஷியா-சார்பு ஆயுதந்தாங்கிய குழுக்கள் மூலம் தீவிரமாக முனையும். அவற்றை ஒடுக்குகிறேன் பேர்வழி என சொல்லிக்கொண்டு, அமெரிக்கத் தரப்பிலிருந்து ’ட்ரோன்’, விமானப்படை தாக்குதல்கள் என வேகவேகமாக அரங்கேறும். Crossfire-ல் சிக்கிய வளைகுடாப் பகுதியின் அப்பாவி மக்கள் பலரும் பரிதாபமாக அழிவைச் சந்திப்பார்கள். ஏற்கனவே ஈரான், அமெரிக்கா, இஸ்ரேல், சவூதி அரேபியா போன்ற நாடுகள் கொண்டிருக்கும் ராணுவ ஈடுபாடுகளோடு, மேலும், மேலும் அழிவிற்கான பாதையிலேயே சம்பந்தப்பட்ட நாடுகளை இப்போது உருவாகிவரும் நெருக்கடிநிலமை இட்டுச்செல்லும்.
சமீபகால ஈரான்-அமெரிக்க பகைமை, மூலைக்குமூலை பரவி பயமுறுத்தும் பயங்கரவாதம் என பர்ஷிய வளைகுடாப் பகுதியின் யுத்தவிளையாட்டில் புட்டினின்(Vladimir Putin) ரஷ்யா, ஒரு முக்கியமான ப்ளேயர். கடந்த சில நாட்களாக வாயைத் திறக்கவில்லை. காரியம் செய்யும் நிச்சயம்! இந்தியாவும், சீனாவும் நேற்று (3-1-2020) ஈரானையும், அமெரிக்காவையும் பொறுமை காக்குமாறு வேண்டிக்கொண்டிருக்கின்றன. சீனா, குறிப்பாக பதற்றமான வளைகுடாப் பகுதியில், அமெரிக்கா நிதானமாக செயல்படவேண்டும் என அறிவுறுத்தியிருக்கிறது. அமெரிக்காவுக்கு, சீனாவின் புத்திமதியா தேவை? ட்ரம்ப் மேலும் அதிகப்படியான அமெரிக்க வான்படைகளை வளைகுடாவுக்குள் அனுப்ப உத்தரவிட்டுள்ளார். அந்த ஆபத்தான பிரதேசத்தில் ஏற்கனவே பாதிக்கப்பட்ட சுற்றுப்புற நாடுகள் மேலும் ராணுவரீதியாக நெருக்கப்பட்டு, பதற்ற நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கின்றன. எந்த நேரத்திலும் பெருமளவு தாக்குதல்கள் இருதரப்பிலும் நிகழலாம். கட்டுக்கடங்காமல் போகலாம் – ’நாங்கள் போரை விரும்பவில்லை’ என அமெரிக்க அதிபர் சொன்னபோதிலும்.
முழு ஆண்டை விடுங்கள், இந்த ஜனவரியே சரியாகப் போகுமா என்று கேட்கக்கூடிய அளவிற்கு இருக்கிறது இப்போது பாரசீக வளைகுடாவின் நிலை.
**