ஒப்பிலாக் கலைஞர்

டிவி-யில் சமையல் நிகழ்ச்சிகளைக்
கண்கொட்டாது கண்டுகளித்துக்
`கற்றுக்கொண்ட` சமையல் ஆர்வலர்
சமையலறையில் பிரவேசித்து
கத்தியைக் கையிலெடுக்கும்
லாவகத்திலிருந்தே தெரிந்துவிடும்
நறுக்குவதற்கும் கொல்வதற்கும்
வித்தியாசம் அறியாத ஆளுமை
செய்முறையை டிவியில் பார்த்து
வன்முறையில் இறங்கியவரிடம்
வசதியாக மாட்டிக்கொள்ளும்
வகைவகையான சாமான்கள்
வதக்கியும் வாட்டியும்
தீய்த்தும் கருக்கியும்
அன்னாரின் கைவண்ணமாய்
அருமையான பதார்த்தங்கள்
நம் தொப்பைக்குள்போய்ச்
சரணடைந்துவிடாதிருக்க
எல்லாம்வல்ல இறைவன்
இனிதே அருள்வாராக
ஆமென்

**