இரவினிலே

கல்யாணச்செலவு
கணக்கில் வருவது
சிந்திக்கும் வேளையிலும்
கவலை தருவது
செலவு செய்தபின்னும்
செய்வதறியாது கலங்கவிடுவது
காதற்செலவின் கதையோ
அலாதியானது
ஒரு கணம் நினைத்தாலே இனிப்பது
ஒரு கணக்கிலும் வராதது
செலவு செய்யும்போதும்
செய்தபின்னரும்கூட
களிப்பையே தருவது
காதல்வரை செலவு
கனவினிலே வரவு
என வைத்துக்கொள்ளலாமா

**

தூரத்து வெளிச்சம்

மந்தையிலிருந்து விலகி
மனம்போன போக்கில்
போய்க்கொண்டிருந்தது
காட்சிகள் விரிய ஆரம்பித்தன
புல்வெளியை அலட்சியம் செய்து
வானத்தைப் பார்க்க ஆரம்பித்தது
அந்திமச் சூரியனின் அழகை
எப்படி இதுவரை பார்க்காமலிருந்தது
இருள் வந்தபின்னும்
இடரேதுமில்லை அதற்கு
மெல்லப் படுத்துக்கொண்டு
இரவு வானை நோக்கியது
நட்சத்திரங்கள் ஒளிர்ந்து வழிகாட்டின
அறிந்திராத மற்றொரு உலகை
அடைந்துவிட்டிருந்தது ஆடு

**