ICC Women’s World Cup: செமிஃபைனலில் இந்தியா

மெல்பர்னில் நேற்று (27/2) மகளிர் டி-20 போட்டியில், இந்தியா நியூஸிலாந்தை 3 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்து உலகக்கோப்பையின் செமிஃபைனலில்  பிரவேசித்திருக்கிறது.

முதலில் பேட் செய்த இந்தியா ஷெஃபாலியின் தாக்குதலினால், துவக்கத்தில் ரன்களை வேகமாகக் குவித்தது. ஆனால் ஷெஃபாலி  14-ஆவது ஓவர் வரை விளையாடியும் இந்திய ஸ்கோர் 140-ஐக்கூட எட்டமுடியவில்லை. காரணம் ஷெஃபாலி, தான்யா  தவிர மற்ற வீராங்கனைகள், பிட்ச்சிற்கு வருவதும் போவதுமாக இருந்தார்கள். இந்த மேட்ச்சில் ஸ்ம்ருதி மந்தனா ஆடியும் ஒரு புண்ணியமும் இல்லை. இப்படி ஆடினால் எப்படி 150-160 என்கிற அளவுக்கு ஸ்கோரை உயர்த்தமுடியும்? ஏனெனில் இனிவரும் போட்டிகளில் இப்படி வழிந்தால் ஒப்பேற்றமுடியாது.

நியூஸிலாந்து வீராங்கனைகளின் வெண்ணெய் விரல்களால் ஷெஃபாலிக்கு 3 ‘லைஃப்’ கிடைத்தது! அப்படியும் அவரால் அரைசதத்தை எட்டமுடியவில்லை. அவரது 46 தான் இந்திய அணியில் டாப் ஸ்கோர். அதில் 4 பௌண்டரிகளோடு வழக்கம்போல் 3 சிக்ஸர்கள்! அடுத்ததாக விக்கெட் கீப்பர்-பேட்ஸ்மனான தான்யாவின் 23. நன்றாக ஆடும் ஜெமிமாவும் 10 ரன்களில் காலி. தீப்தி, வேதாவினால் நின்று ஆடமுடியவில்லை. கேப்டன் கௌர் இந்தியா விளையாடியிருக்கும் 3 மேட்ச்களிலும் பேட்டிங்கில் ஜொலிக்கவில்லை. செமிஃபைனலிலாவது ஏதாவது செய்வாரா நமது தலைவி? இந்தியக் கோச் டபிள்யூ.வி.ராமனின் முகத்தில் கவலைக்கோடுகளின் குடியேற்றம்..

நியூஸி ஸ்டார் அமேலியா !

134 என இந்தியா கொடுத்த டார்கெட், நியூஸிலாந்துக்கு அல்வா சாப்பிடுவதுபோல் இருந்திருக்கவேண்டும். ஆனால், விரைவிலேயே நியூஸிலாந்து 34க்கு 3 விக்கெட் என ஆனதால் தடுமாற்றம். க்ரீன் (24), மார்ட்டின்(25) நிலைமையை சரிசெய்ய முயன்றார்கள். இருந்தும் இந்திய ஸ்பின்னர்கள் -பூனம், ராதா, ராஜேஷ்வரி- விக்கெட்டுகளை அவ்வப்போது வீழ்த்தினர். 90க்கு 5 என சரிந்துவிட்ட ஸ்கோரை, ஆல்ரவுண்டர் அமேலியா கேர் (Amelia Kerr) தன் கையில் எடுத்துக்கொண்டார். இந்தியாவின் சிறந்த பௌலரான பூனம் வீசிய 18-ஆவது ஓவரிலேயே தன் வேலையைக் காண்பித்தார். 4 பௌண்டரிகள். பந்தை நன்றாக ஸ்பின் செய்யவிட்டுத் தள்ளி நின்றுகொண்டு ஃபைன் லெக் திசையில் தூக்கிவிட்டு அசத்தினார். நேற்று அமேலியாவின் பிறந்தநாளா! அவரே நியூஸிலாந்தை ஜெயிக்கவைத்துவிடுவார் போலிருந்தது. நியூஸி அணியே அவரிடமிருந்து இந்த ஆவேசத்தை எதிர்பார்க்கவில்லை எனத் தெரிந்தது.

கடைசி ஓவரில் 16 ரன்கள் தேவை நியூஸிலாந்து வெற்றிக்கு. ஷிகா பாண்டே மிதவேகத்தில் வீசினார். முதல் பந்தே பவுண்டரி என அலறியது. அடுத்தடுத்து டைட் செய்தார் ஷிகா. 5-ஆவது பந்தில் கேர் ஒரு ஃபோர்! கடைசி பந்தில் 4 எடுக்கவேண்டும் என்கிற நியூஸி நெருக்கடியில், ஷிகா ஒரு யார்க்கரைப் போட்டு நியூஸி ஷோவை ஸ்விட்ச்-ஆஃப் செய்தார். ஜென்சன் ரன் அவுட்.இருந்தும் 1 லெக்-பை. அமேலியா கேர் 34 நாட்-அவுட் என நிற்க, இந்தியா 3 ரன்னில் தப்பிப் பிழைத்தது; நுழைந்தது செமிஃபைனலில்.

இப்போதிருக்கும் நிலைப்படி பார்த்தால், அடுத்த க்ரூப்பிலிருந்து இங்கிலாந்து செமிஃபைனலில் அனேகமாகப் புகுந்துவிடும். செமிஃபைனலில் இந்தியா, தென்னாப்பிரிக்கா அல்லது பாகிஸ்தானோடு மோத வாய்ப்பிருக்கிறது. இன்றைய போட்டியில் இங்கிலாந்து பாகிஸ்தானை வீழ்த்திவிட்டது என்றபோதிலும். பார்ப்போம் பெண்களின் கதை எப்படி வளரப்போகிறது என.

**  

ICC T-20 Women’s World Cup : இந்தியாவின் அதிரடி ஆரம்பம்

மகளிர் டி-20 கிரிக்கெட்டின் உலகக்கோப்பை ஆஸ்திரேலியாவில் நடந்துவருகிறது. உலகின்  9 முக்கிய கிரிக்கெட் தேசங்களோடு 10-ஆவது நாடாக, அதிசயமாக தாய்லாந்து!   இரண்டு பிரிவுகளாக அணிகள் பிரிகின்றன. Group A: ஆஸ்திரேலியா, நியூஸிலாந்து, இந்தியா, ஸ்ரீலங்கா, பங்களாதேஷ். Group B: இங்கிலாந்து, தென்னாப்பிரிக்கா, வெஸ்ட் இண்டீஸ், பாகிஸ்தான், தாய்லாந்து. இந்திய மகளிர் அணிக்கு  முன்னணி பேட்ஸ்மன் ஹர்மன்ப்ரீத் கௌர் (Harmanpreet Kaur) தலைமை தாங்குகிறார்.

இரண்டு நாள் முன்பு நடந்த முதல் மேட்ச்சில் நடப்பு சேம்பியனான ஆஸ்திரேலியாவும் இந்தியாவும் ஆடிய ஆட்டம் கடுமையான மோதலை வெளிக்கொணர்ந்தது. ஸிட்னியில் (Sydney) முதன்முதலாக, பெண்கள் மேட்ச் ஒன்றிற்கு 18 ஆயிரத்திற்கும் மேலான ரசிகர்கள் வந்திருந்து அமர்க்களப்படுத்தினர். இந்திய மூவர்ணக்கொடிகளும், நீலச்சட்டைகளும் மினுமினுக்க, அரங்கெங்கும். ஆஸ்திரேலியர்கள் நிறையப்பேர்  தங்களது அணியைப் பெருமையுடன் ஊக்குவிப்பதைக் காணமுடிந்தது. பள்ளி சிறுவர்கள் அதிகமாக அமர்ந்து ஆர்ப்பரித்தது கோலாகலத்தைக் கூட்டியது.

டாஸ் வென்ற ஆஸ்திரேலியப் பெண்கள், இந்திய அணியை முதலில் பேட் செய்யச் சொன்னார்கள். இந்தியாவின் துவக்க ஆட்டக்காரர்கள் ஷெஃபாலி வர்மா (Shefali Verma), ஸ்ம்ருதி மந்தனா அதிரடி பேட்டிங் செய்பவர்கள். அதிலும் ஷெஃபாலி சர்வதேசக் கிரிக்கெட் உலகில்  நுழைந்திருக்கும் ஒரு சிறுமி போன்றவர். 16-ஆவது வயதுக்குள் கடந்த மாதமே பிரவேசித்தவர். ஆஸ்திரேலிய வேகப்பந்துவீச்சை துவம்சம் செய்யாமல் மீளப்போவதில்லை என கங்கணம் கட்டி நுழைந்திருந்தாரோ? மந்தனா வழக்கத்துக்கு மாறாக அமைதிகாக்க, ஷெஃபாலி சுழற்றினார் பேட்டை. 29 ரன்களில் அவுட்டானார் எனினும் அதில் 5 பௌண்டரி, 1 சிக்ஸ் ! ஷெஃபாலி அவுட்டானதும்தான் கொஞ்சம் ஆசுவாசமூச்சு விட்டது ஆஸ்திரேலியா. அதற்குப்பின் மந்தனா, கேப்டன் கௌர் என இந்தியாவின் முக்கிய பேட்ஸ்மன்களை சொற்ப ஸ்கோரில் வீட்டுக்கு அனுப்பியது. ஸிட்னியின் ஸ்லோ-பிட்ச்சிற்கு ஏற்றபடி ஆடிய ஜெமிமா ரோட்ரிக்ஸ் மற்றும் தீப்தி ஷர்மா சிங்கிள்களாக ஓடி ரன் சேர்த்தனர். ஷெஃபாலி போனபின்பு இந்தியாவுக்கு ஒரே பௌண்டரிதான் வந்தது. இந்திய அணி 132 -க்கு 4 விக்கெட் என இன்னிங்ஸை முடித்துக்கொண்டது. தீப்தி 49 நாட்-அவுட்.

Spin magician
Poonam Yadav

வலிமையான ஆஸ்திரேலிய மகளிர் அணிக்கு இது ஊதித்தள்ளிவிடக்கூடிய இலக்குதான். அப்படி ஒரு மலர்ந்த புன்னகையாக, பேட்டிங்கைத் துவக்கி நன்றாக ஆடியது ஆஸ்திரேலியா. 133 எடுத்தால் வெற்றி என்கிற நிலையில், ஒரு கட்டத்தில் 66/2 என இருந்த ஆஸ்திரேலியாவின் வெற்றிக்கு 67 ரன்கள்தான் தேவை. 8 விக்கெட்கள் கைவசம். அப்போது கேப்டன் ஹர்மன்ப்ரீத் கௌர், இந்திய சுழல் மந்திரவாதி பூனம் யாதவிடம் கொடுத்தார்: போடுடி பந்தை! என்ன நடக்கிறதெனப் பார்ப்போம்..

ஆஸ்திரேலியாவின் விக்கெட்கீப்பர் ஹீலி (Alyssa Healy) அபாரமாக அரை சதம் கடந்து ஆடிக்கொண்டிருந்தார். தன் முதல் ஓவரிலேயே அவரைத் தூக்கி வீசினார் பூனம்.  அடுத்த ஓவரில் இரண்டு பந்துகளில் இரண்டு விக்கெட்டுகள். மூன்றாவது பந்திலும் விக்கெட் வந்திருக்கவேண்டியது. ஆஸ்திரேலிய பேட்ஸ்மன் கார்ட்னரின் (Ashleigh Gardner) ஸ்டம்பை உரசி, பெயிலை விழவைத்தது. ஆனால் பந்து இரண்டு முறை பௌன்ஸ் (bounce) ஆனதாக அம்பயரால் தீர்ப்பளிக்கப்பட்டு நாட்-அவுட் என்றனர். பரவாயில்லை. ஆஸ்திரேலிய அஸ்திவாரத்தைத் தாக்கிவிட்டார் பூனம். ஆட்டம் கண்ட நிலையில் 133-ஐ நோக்கி மெல்ல நகரப் பார்த்தது ஆஸ்திரேலியா. அதிரடி காட்டமுயன்ற கார்ட்னரை,  ஷிகா பாண்டே காலி செய்தார். பூனம் யாதவ் 4 ஓவர்களில் 4 விக்கெட் வீழ்த்த ஆஸ்திரேலியா 115 ரன்களில் பரிதாபமாகத் தோல்விகண்டது.(A. Healy 51, A.Gardner 34). மீடியம் பேசர் ஷிகா பாண்டே 3 விக்கெட்டுகளையும், இன்னொரு ஸ்பின்னரான ராஜேஷ்வரி கெய்க்வாட் (Rajeshwari Gaekwad) ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர். இரண்டு ரன் அவுட்கள். ஆஸ்திரேலிய ரசிகர்கள் முகங்கள் உறைந்துபோய்விட்டிருந்தன.

பூனம் யாதவின் பௌலிங் சாகஸத்தை devilish spin என்கிறது, ஆஸ்திரேலிய நாளேடு ஒன்று. ஆறு வருஷங்களாக இந்திய அணிக்காக ஆடிவரும் சீனியர் வீராங்கனை. கடந்த வருடம் காயத்தினால் ஆடமுடியாது தவித்தார். உலகக்கோப்பைக்கு முன்னர்தான் தகுதிபெற்று அணியில் சேர்க்கப்பட்டவர்.

இந்திய அணியின் வலிமையான அம்சம் ஸ்பின் பௌலிங் (பூனம் யாதவ், ராதா யாதவ், ராஜேஷ்வரி கெய்க்வாட்). ஸிட்னியைத் தவிர்த்து மற்ற மைதானங்களில் ஸ்பின் எடுபடாது போகலாம். அப்போது இந்திய மிதவேகப் பந்துவீச்சாளர்கள் தீப்தி ஷர்மா, ஷிகா பாண்டே, அருந்ததி ரெட்டி ஆகியோர் உழைக்கவேண்டியிருக்கும். பேட்டிங்கில் ஸ்ம்ருதி மந்தனா, ஷெஃபாலி வர்மா, ஹர்மன்ப்ரீத் கௌர், ஜெமிமா ரோட்ரிக்ஸ் (Jemimah Rodrigues( மற்றும் தான்யா பாட்டியா (Tanya Bhatia)  ஆகியோரின் பங்களிப்பு டி-20 உலகில் ஆர்வமாகப் பார்க்கப்படும்.

ஒரு இனிய மகளிர் உலகக்கோப்பை ரசிகர்களுக்காக, கண்முன்  விரிந்துகொண்டிருக்கிறது. இந்தியாவின் அடுத்த மேட்ச் பங்களா தேஷுக்கு எதிராக 24/2/2020 அன்று. ஸ்பின் பௌலிங்கும், பேட்டிங் திறமைகளும் போட்டிபோடலாம். ரசிப்போம்.  

**