பராகுவேயில் காந்தி !

செய்தி ஊடகத்தை அந்தக் காலையில் ஊடுருவிக்கொண்டிருந்தபோது ஏகப்பட்ட குற்றச் செய்திகளின் கோலாகலங்களுக்கிடையே கண்ணில் பட்டது இது: இந்திய வெளியுறவு மந்திரி ஜெய்சங்கர்  பராகுவே (Paraguay) நாட்டில் மஹாத்மா காந்தி சிலையைத் திறந்துவைத்தார்.  பராகுவேயின் தலைநகரான அஸுன்சியோ(ன்) (Asuncion) -ல், பராகுவே நதிக்கரையில் (ஹாட் டூரிஸ்ட் ஸ்பாட்) காந்தி இப்போது எழுந்தருளியிருக்கிறார்! தென்னமெரிக்க நாடுகளோடான இந்தியாவின் உறவு உலக அரங்கில் மிகவும் முக்கியமானது என்று சில நாட்கள் முன் ஜெய்சங்கர் குறிப்பிட்டுப் பேசியிருந்தார். இந்தியா பராகுவேயிடமிருந்துதான் தன் தேவையில் 94% சோயா எண்ணெயை இறக்குமதி செய்கிறது. பதிலுக்கு வாகனங்கள், வாகன உதிரிஉறுப்புகள், மருந்துகள், ப்ளாஸ்டிக் பொருட்கள் என இந்தியாவிடமிருந்து இறக்குமதி செய்துகொள்கிறது பராகுவே. இந்திய யோகா செண்ட்டர்கள் பிரபலமாகி வருகின்றன. சுமார் 1000 இந்தியர்கள் (பெரும்பாலும் குஜராத்திகள், சிந்திகள்) வசிக்கிறார்கள் அங்கே.

படம்: காந்தி சிலையை திறந்துவைத்தபின் பராகுவே, இந்திய அதிகாரிகள், நண்பர்களுடன் அமைச்சர் ஜெய்சங்கர்

அர்ஜெண்டினா, பராகுவே, உருகுவே ஆகிய தென்னமெரிக்க சுற்றுப்பயணத்துக்கு முன் பிரேஸில், மெக்ஸிகோ, அர்ஜெண்டினா, பனாமா, பராகுவே, உருகுவே, காஸ்ட்டா ரிகா (Costa Rica), க்யூபா, சிலே (Chile) போன்ற நாடுகளின் டெல்லியிலுள்ள தூதர்களை அழைத்து விருந்து கொடுத்து, இந்தியாவுடனான அந்த நாடுகளின் உறவு குறித்து கலந்து ஆலோசித்தார் அமைச்சர் ஜெய்சங்கர்.  அதன் பின்னர்தான் வெளியுறவு அமைச்சரின் தென்னமெரிக்க சுற்றுப்பயணம் ஆரம்பித்தது. எதையும் துவங்குமுன் நன்றாக பின்புல விஷயங்களைத் தெரிந்துகொண்டு, ஹோம்வொர்க்கை  முறையாக செய்துவிட்டுப் போவதுதான் அவரது வழக்கம். இந்திய வெளியுறவுத்துறையில் ஒரு தேர்ந்த டிப்ளோமாட்டாக பணியாற்றிய காலத்திலிருந்தே அவருள் ஊறி விளைந்திருக்கும் ஒரு நல்ல குணம். (ஜப்பானின் தலைநகரில் அவரோடு சில மாதங்கள் பணியாற்றிய அனுபவம் எனக்குண்டு).

காந்தி சிலை திறப்பு செய்தியைப் பார்த்தவுடன், எனது க்யூபா ஞாபகங்கள் மெல்ல நினைவில் மீண்டன. 2007-ஆம் வருடம் மே மாதத்தில் க்யூபாவின் தலைநகர் ஹவானாவின் கலாச்சார சின்னமான பழைய ஹவானா எனும் பகுதியில் கடற்கரையை ஒட்டிய பார்க்கில், கவி  ரவீந்திரநாத் தாகூரின் மார்பளவு சிலை இந்திய தூதரால் திறந்துவைக்கப்பட்டது. இந்திய-க்யூபா கலாச்சார ஒத்துழைப்பின் ஒரு குறிப்பிட்ட சின்னம்போல் அது அங்கு அமைந்திருக்கிறது. ஹவானாவின் முக்கிய வீதிகளில் ஒன்றான கிந்த்தா அவெனீதா (Qinta Avenida)-வில் மஹாத்மா காந்திக்கு ஒரு சிலை வெகுகாலமாக இருக்கிறது. காந்தி ஜெயந்தியை நாங்கள் -அதாவது இந்திய தூதரகத்தினர், க்யூப அதிகாரிகள், நண்பர்கள்- இங்கேதான் கொண்டாடுவோம். எனவே, க்யூபாவில் காந்தியும் உண்டு, தாகூரும் உண்டு. இருவரும் க்யூபர்களால் பெரிதும் மதிக்கப்படும் புகழ்பெற்ற இந்தியர்கள். கடற்கரை ஆட்டபாட்டங்கள், ஆரவார ட்ரம்ஸ் இசைக்கு நடுவே, ரம்மின் தீவிர சுவைக்கும் சுருட்டுப் புகைவளையங்களுக்குமிடையே, க்யூபர்களில் சிலராவது காந்தி, தாகூர் பற்றியும் அவ்வப்போது பேசுகிறார்கள், தெரிந்துகொள்ள விரும்புகிறார்கள் என்பதைக் கவனித்திருந்தேன் அப்போது. இன்னும் இப்படி விஷயங்கள் இருக்கின்றன சொல்ல..!

**