ஒட்டுமொத்த உலகிலும் தீயைப்போட்டுக் கொளுத்தி கொரோனா வேடிக்கை பார்த்துவரும் நெருக்கடி மிகுந்த காலகட்டத்தில் (மார்ச் 2020-க்குப் பின்னான போதாதகாலம்), தெற்கு ஆசியாவின் சில இடங்களில் நோண்டிப் பார்த்தது போதாதென, மேலும் சில தடாலடி நடவடிக்கைகளை சீனா மேற்கொண்டது. தென் சீனக்கடலில் நீர்வழிகள், இயற்கைவளமிக்க நிலத்திட்டுகளைச் சுற்றி இருக்கும் பரப்புகள் சிலவற்றிற்கு வியட்நாம், ஃபிலிப்பைன்ஸ், தைவான், மலேஷியா, ப்ருனெய் (Brunei) போன்ற நாடுகள் பல வருடங்களாக உரிமை கோரிவருகின்றன. திடீரெனக் கிளம்பி, பேயாட்டம்போட்டுவரும் கொரோனாவோடு பல நாடுகள் ஒரு நிழல்யுத்தத்தில் ஈடுபட்டிருக்கையில், தென்சீனக் கடல்பகுதியின் சிறுநாடுகளின் உரிமைகளைத் தூக்கிக் கடாசிவிட்டு தன் போர்க்கப்பல்கள், ஆய்வுக்கப்பல்களை அனுப்பி அங்கே முகாமிட்டு நீர்வளங்களைக் குடையத் துவக்கிவிட்டது சீனா. குறிப்பாக இரண்டாவது உலகமகாயுத்தத்திற்குப் பின், யாருக்குச் சொந்தம் என்கிற சர்ச்சைகளுடன் ஜீவிக்கின்றன பாரஸெல் மற்றும் ஸ்ப்ராட்லி தீவுகள் (Paracel, Spratly islands). (ஒருகாலத்தில் ஜப்பானால் ஆட்சி செய்யப்பட்டவை). இவற்றின் அருகில், செயற்கை நகரம் ஒன்றை சீனா உருவாக்கிவருவது தெரிந்தது. அதற்கு ஸன்ஷா நகர் (Sansha city) எனப் பெயர் சூட்டலும் நடந்திருக்கிறது. (ஸ்ப்ராட்லி தீவுப்பகுதி இதுவரை மனிதனால் துருவப்படாத, எண்ணெய் மற்றும் இயற்கைவாயு வளம் கொண்டது எனக் கணிக்கப்பட்டிருக்கிறது). போனவருடமே இந்த நீர்ப்பரப்பில் சீனக் கடற்படையுடன் பிரச்னைகளை சந்தித்திருந்த அண்டை நாடான வியட்நாம், தன் அதிகாரபூர்வ எதிர்ப்பையும் சீனாவுக்குத் தெரிவித்திருந்தது. அதைப்போலவே சர்ச்சைக்குரிய கடற்பிராந்தியம் தொடர்பாக முன்னொரு முறை ஃபிலிப்பைன்ஸோடும் சீனா மோதிப் பார்த்திருக்கிறது.
இத்தகைய பின்புலத்தில், ட்ரம்ப்பின் அமெரிக்கா அலர்ட் ஆனது. தனது கடற்படையின் 7-ஆவது அணியின் போர்க்கப்பல்கள் சிலவற்றை தியகோ கார்சியா (Diego Garcia) கடற்தளத்திலிருந்து தென்சீனக்கடலுக்கு அனுப்பி நிலைகொண்டது. ஏற்கனவே சீனாவின் அதிரடி ராஜீய, ராணுவ நடவடிக்கைகளினால் கடுப்பிலிருந்த ஆஸ்திரேலியா, தன் போர்க்கப்பல் ஒன்றை அங்கு செலுத்தி, அமெரிக்கக் கப்பற்படையுடன் சேர்ந்துகொண்டு (யுத்தப்) ’பயிற்சிகளை’ ஆரம்பித்தது. சீனாவின் ரத்த அழுத்தம் எகிறிவிட்டது!
சுயமான வெளியுறவுக் கொள்கையோடு செயல்படாமல், அமெரிக்காவழி (அதாவது ட்ரம்ப் அரசின்வழி) சர்வதேச அரசியல் செய்வதாக ஆஸ்திரேலியாவை விமரிசித்தது சீனா. ஆஸ்திரேலியா அலட்டிக்கொள்ளவில்லை. மாறாக, சில வாரங்களில், கல்வான் (Galwan) எல்லைச்சண்டை சமயத்தில், இந்திய மகாசமுத்திரம் மற்றும் சுற்று நீர்ப்பரப்பு பாதுகாப்பு தொடர்பாக இந்தியாவுடன் கப்பற்படைகள்- ஒத்துழைப்பு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது. ஏற்கனவே அமெரிக்காவுக்கும், இந்தியாவுக்கும் குறிப்பாக இந்துமகா சமுத்திரப் பகுதிகளில் நீர்வழிப் போக்குவரத்து, பாதுகாப்பு பற்றிய புரிதல் இருக்கிறது. பெரிதாக முன் அறிவிப்பு ஏதும் செய்யாமல், சில வாரங்களுக்கு முன் அமைதியாகத் தன் போர்க்கப்பல் ஒன்றை தென்சீனக் கடலுக்கு அனுப்பிவைத்தது இந்தியா. கூடவே சர்வதேச விதிமுறைப்படி, கடல்வழிப் போக்குவரத்துகள் எல்லா நாடுகளுக்கும் பொதுவானது. தென்சீனக் கடல்பிராந்தியத்திலும் அது தங்குதடையின்றி நடைபெறவேண்டும் என்பதே இந்தியாவின் நிலைப்பாடு என்றது. சம்பந்தப்பட்ட நாடுகளின் இத்தகைய strategic moves, மூலோபாய நடவடிக்கைகள், அறிக்கைகள் சீன ராணுவ அமைச்சகத்தில் மேலும் புகைச்சலை ஏற்படுத்தியிருக்கின்றன.
அமெரிக்கா, ரஷ்யா போன்ற பேரரசுகளுடன் நேரடி மோதலைத் தவிர்க்கும் சீனா, மற்ற பிராந்திய நாடுகளோடு அவ்வப்போது மோத நேர்ந்தால் தனக்குப் பரவாயில்லை, பெரிய நஷ்டம் ஒன்றும் வந்துவிடாது என்பதான கணக்குகளுடன் ஆங்காங்கே காயை முன்னகர்த்திவருகிறது. எந்த ஒரு மகா யுத்தமும், முதலில் இப்படிச் சிறு சிறு மோதல்கள், சண்டைகளில்தான் ஆரம்பிக்கும் என மனித சரித்திரம் தெளிவாகக் கூறும். ராணுவ பலத்துடன் முஷ்டியை உயர்த்திவரும் ஷி ஜின்பெங் (Xi Jinpeng), சரித்திரம் படித்தவரல்ல. இனியும் அதையெல்லாம் படிக்க, அவருக்கு நேரமில்லை. கம்யூனிஸ்ட் மேனிஃபெஸ்ட்டோ படித்துத்தான், சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் அதிகாரப்பாதையில் முன்னேறி இப்போதிருக்கும் நிலைக்குவந்திருக்கிறார். அதனால் அவருடைய தலைமையில் இயங்கும் சீனா, மேலும் சச்சரவுகள், மோதல்கள் என்கிற வகையில் தொல்லைகளைத்தான் தரும் என எதிர்பார்த்து, தன்னை ராணுவரீதியாக ஆயத்தப்படுத்திக்கொள்ளும் நிலையில் இருக்கிறது தெற்காசியா.
**