கல்கத்தாவின் ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் நேற்று(22-1-17) நடந்த ஒரு-நாள் போட்டியில் சிறப்பாகப் பந்துவீசிய இங்கிலாந்து, இந்தியாவைத் தோற்கடித்தது.
முதலில் இங்கிலாந்து பேட் செய்கையில். ஜேசன் ராய் வழக்கம்போல் சிறப்பாக ஆடி 65 ரன் எடுத்தார். ஜானி பேர்ஸ்டோவும் (Jonny Bairstow), பென் ஸ்டோக்ஸும்(Ben Stokes) அருமையான ஆட்டத்தில் அரை சதம் கடந்தனர். கேப்டன் மார்கன், ஆல்ரவுண்டர் க்றிஸ் வோக்ஸ் ஆகியோரும் கைகொடுக்க இங்கிலாந்து 8 விக்கெட் இழப்புக்கு 321 எடுத்து அசத்தியது. இந்திய தரப்பில் ஹர்தீக் பாண்ட்யா அபாரமாக வீசி 3 விக்கெட்டுகளை சாய்த்தார். ஜடேஜாவுக்கு 2. தனது இரண்டாவது கட்டத்தில் சிறப்பாகப் பந்துவீசியும் பும்ராவுக்குக் கிடைத்தது ஒரு விக்கெட் தான். புவனேஷ்வரையும் அஷ்வினையும் புரட்டி எடுத்துவிட்டார்கள் இங்கிலாந்து பேட்ஸ்மன்கள்.
பதில் கொடுக்க இறங்கிய இந்திய பேட்ஸ்மன்களை இங்கிலாந்தின் வேகப்பந்துவீச்சாளர்களான க்றிஸ் வோக்ஸ், பென் ஸ்டோக்ஸ், ஜேக் பால்(Jake Ball), லியாம் ப்ளங்கெட் ஆகியோர் வேகத்தினாலும், துல்லியத்தினாலும் கடுமையாக சோதித்தார்கள். கல்கத்தாவின் மைதானம் அவர்களுக்கு குஷியூட்டியதுபோலும். அளவுகுறைந்த பந்துகள் (short pitched balls) வேகம் காட்டி, முகத்துக்கு முன்னே எழும்பித் திணறவைத்தன. இந்தத் தொடரின் இந்திய அபத்தம் நமது ஆரம்ப ஆட்டக்காரர்கள். அவர்களை ஆட்டக்காரர்கள் என்பதை விடவும் ஓட்டக்காரர்கள் எனச் சொல்லலாம். அதாவது மைதானத்தைவிட்டுவிட்டு ஓடுவிடுபவர்கள்! ஷிகர் தவணுக்குப்பதிலாக இறங்கிய ரஹானே எப்போது வந்தார், எங்கே சென்றார் எனவே தெரியவில்லை. போதாக்குறைக்கு அளவுகுறைந்து வேகம் எகிறிய ஜேக் பாலின் பந்தைத் தூக்குகிறேன் பேர்வழி என்று புஸ்வானம் கொளுத்தினார் கே.எல்.ராஹுல். பந்து விக்கெட்கீப்பருக்கு மேலே சிகரம் தொடமுயன்று கீப்பரின் கையில் சரணடைந்தது. ரஹானேயும் ராஹுலும் விளையாடிய ஆட்டத்தைப் பார்க்கையில் முரளி விஜய்யையே ஒரு-நாள் போட்டியிலும் சேர்த்திருக்கலாமோ என்கிற எண்ணம் தலைகாட்டியது.
மூன்றாவதாக இறங்கிய கேப்டன் கோலி சில நல்ல ஷாட்டுகள் – இடையிடையே இங்கிலாந்து ஃபீல்டருக்குக் கேட்ச்சிங் பயிற்சி கொடுக்க முயற்சி என்று பொழுதை ஓட்டினார் முதலில். பிறகு சுதாரித்து அரைசதமெடுத்து நம்பிக்கை ஊட்டிய தருணத்தில், ஸ்டோக்ஸின் பந்துவீச்சில் வீழ்ந்தார். மற்றவர்கள் பார்த்துக்கொள்வார்கள் என நினைத்துவிட்டாரா கேப்டன்! ஆரம்பத்தில் வோக்ஸினால் அதிகம் சோதிக்கப்பட்ட யுவராஜ் சிங், பின் நிதானித்து ஆடியும் ரன் விகிதம் ஏறிக்கொண்டே இருந்தது. ப்ளன்க்கெட்டை(Liam Plunkett) மிட்விக்கெட்டுக்குத் தூக்க முயற்சித்து அங்கு தனக்காகவே காத்திருந்த ஃபீல்டரிடம் கேட்ச் கொடுத்து 45 ரன்னில் வெளியேறினார் யுவராஜ். தோனி வந்ததிலிருந்து ஒரு பெரிய பார்ட்னர்ஷிப்பிற்கு கேதாருடன் இணைய முயல்வதாய்ப்பட்டது. அந்தோ! அதுவும் ஒரு கனவானது. இங்கிலாந்து பௌலர்கள் நனவாக்க விடவில்லை. 25 ரன் தான் முன்னாள் தலைவரால் முடிந்தது.
விடாது போராடிய பாண்ட்யா-கேதார்:
அடுத்த முனையில் கேதார் கவனித்து ஆடி, பந்துக்கு ஒரு ரன் என்கிற வேகத்தில் ஏறிக்கொண்டிருந்தார். ஹர்தீக் பாண்ட்யா கேதார் ஜாதவுடன் ஜோடி சேர, இந்தியா இலக்கை இனிதே நெருங்க கடும் முயற்சி மேற்கொள்ளப்பட்டது. பார்ட்னர்ஷிப் அருமையாக அமைய, வெற்றிக்கற்பனைக்கு உயிரூட்டப்பட்டது. இந்த ஜோடியை எப்படியும் பிரித்தாலே வெற்றி என்கிற நிலையில் இங்கிலாந்து வெகுவாக முனைந்தது. இருவரும் வேகமாக ஓடி ரன் சேர்ப்பது, அவ்வப்போது ஒரு பெரிய ஷாட் என வெற்றி ஆர்வத்துக்கு தூபம் போட்டுக்கொண்டிருந்தனர். ஒருநாள் போட்டிகளில் தன் முதல் அரைசதத்தை 38 பந்துகளில் அதிரடியாகக் கடந்தார் பாண்ட்யா. ஆனால் பாண்ட்யாவை 47-ஆவது ஓவரில் ஸ்டோக்ஸ் நீக்கிவிட, இங்கிலாந்தின் முகம் மலர்ச்சிகண்டது. வெற்றியின் வாடிவாசல் அதற்குத் தெரிய ஆரம்பித்துவிட்டதோ!. இடையிலே ஜடேஜாவும், அஷ்வினும் இருக்க, கேதாரும் இன்னும் விடுகிறபாடில்லை. இந்த இக்கட்டான நிலையில் இங்கிலாந்தின் ஃபீல்டிங் கூர்மை காட்டியது. கேப்டன் மார்கன் வோக்ஸ், ஸ்டோக்ஸ் என பந்துவீச்சாளர்களை வேகவேகமாக மாற்ற, பலன் கிட்டியது. இருவரும் அபாரமாகப்போட்டு, ஜடேஜாவையும் அஷ்வினையும் நிற்கவிடாது விரட்டிவிட்டார்கள். இங்கிலாந்தின் மிகச்சிறந்த பௌலரான வோக்ஸ் கடைசிஓவரை வீச, ஆடினர் கேதாரும் புவனேஷ்வரும். 6 பந்துகளில் 16 எடுத்து வென்றுவிடுமா இந்தியா? பெவிலியனில் தோனி, கோலி, ஜடேஜா, பாண்ட்யா என வீரர்கள் எழுந்து நின்று ஆர்ப்பரிக்கத் தயாராக, முதல் இரண்டு பந்துகளை அனாயசமாக சிக்ஸர், பௌண்டரி எனத் தூக்கி ஜல்லிக்கட்டுக் காளையாகத் தூள் கிளப்பினார் கேதார். ரசிகர்கள் உற்சாக மழையில். ஆனால் அடுத்த இரண்டு பந்துகளை ரன் தராத டாட் பந்துகளாய் (dot balls) வீசி, இந்தியாவை இறுக்கினார் வோக்ஸ். வேறுவழியில்லை என 5-ஆவது பந்தை கேதார் உயரமாகத் தூக்கப்போய், அந்த ஷாட்டிற்காகவே வைக்கப்பட்டிருந்த இங்கிலாந்தின் மிகச்சிறந்த ஃபீல்டரான சாம் பில்லிங்ஸ் (Sam Billings) கேட்ச்சை லபக்கினார். 90 ரன் எடுத்த கேதார் சோர்ந்த முகத்துடன் வாபஸ் பெவிலியனுக்கு. கடைசி பந்து புவனேஷ்வருக்கு. ம்ஹூம். புண்ணியமில்லை. இந்திய இன்னிங்ஸ் 316-லேயே முடிவுகண்டது. தொடர் முழுதும் இங்கிலாந்து காட்டிய கடும் உழைப்புக்குப் பரிசாக கல்கத்தா தந்தது ஐந்து ரன்னில் ஆறுதல் வெற்றி.
3 விக்கெட்டுகளை சாய்த்ததோடு, அடித்து விளையாடி அரைசதமும் கண்ட பென் ஸ்டோக்ஸ் ஆட்டநாயகன். கேதார் ஜாதவ் தொடர் நாயகன். 2-1 என்கிற கணக்கில் ஒரு-நாள் தொடர் இந்திய வசமானது. இந்தத் தொடரில் இந்தியாவுக்குக் கிடைத்த வெகுமதிகளாக ஆல்ரவுண்டர் ஹர்தீக் பாண்ட்யா மற்றும் கேதார் ஜாதவின் சிறப்புப் பங்களிப்புகளைச் சொல்லலாம். இந்தியா இன்னும் இவர்களிடமிருந்து எதிர்பார்க்கும், வரவிருக்கும் ஆஸ்திரேலியாவிற்கெதிரான தொடர்களில். ஆனால் இந்தியாவின் பரிதாப ஆரம்ப ஜோடியை என்னதான் செய்வது?
**