கோவில்பட்டியில் சமீபத்தில் ஒரு போராட்டத்தை நமது பாரம்பரியமிக்க தேசியக்கட்சிக்காரர்கள் நடத்தினார்கள் என்கிறது மீடியா செய்தி. ’இப்ப என்ன அதுக்கு’ என்று சிடுசிடுக்காதீர்கள். கொஞ்சம் பொறுமையாகப் பொறுமை காட்டவேணும். அப்போதுதான் எதையும் உங்களுக்குச் சொல்ல முடியும்.
மக்கள் பிரச்சினை சம்பந்தப்பட்டதுதான் இந்த போராட்டம். அதனால் நியாயமானதே. என்ன பிரச்சினை? ஆயிரக்கணக்கான
பயணிகளை தினம் சந்திக்கும் ஒரு பிஸியான ஊரின் பஸ்நிலையத்திற்குத் தேவையான யோக்யதை எதுவும் கோவில்பட்டி நிலையத்திற்கு இல்லை என்கிறார்கள் தினம் தினம் அவஸ்தையை அனுபவிப்பவர்கள். விசித்திரம் என்னவென்றால், பழைய பஸ் நிலையத்திற்குப் பதிலாக புதிய பேருந்து நிலையம் சமீபத்தில்தான் திறக்கப்பட்டிருக்கிறது. ஏதாவது முன்னேற்றம்? முன்பு 28 பேருந்துகள் நிறுத்த வசதியிருந்த ‘B’ கிரேடு நிலையமாக இருந்தது கோவில்பட்டி. இப்போது 18 பஸ்கள்தான் நிறுத்தமுடியும். பொதுமக்களின் பயன்பாட்டிற்கென பஸ்களின் நேர அட்டவணை கூடப் பொருத்தப்படாமல், கட்டணக் கழிப்பிட வசதியும் செய்துதரப்படாமல் ‘C’ கிரேடு பேருந்து நிலையமாக மறுபிறவி எடுத்திருக்கிறது அந்த பஸ்ஸ்டாண்ட். அப்பாவி மக்களை சீண்டிக்கொண்டே பொழுதுபோக்கவேண்டும் என நினைக்கிறார்களா ஆட்சியாளர்கள்? அப்படித்தான் இருக்கவேண்டும்.
பொதுமக்களின் இன்னல்கள்போக்க, நடவடிக்கை வேண்டும் என்று போராடியிருக்கிறார்கள். நோக்கம் சரியானதே. விஷயம் இதோடு நிற்கவில்லை; இந்தப் போராட்டத்தை ஒரு நூதனப் போராட்டமாக நடத்தினார்களாம் கோவில்பட்டி காங்கிரஸ்காரர்கள். ஆ.. காங்கிரஸ்.. எப்பேர்ப்பட்ட கட்சி? இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியை, ஆங்கிலேயர்களை நாட்டைவிட்டுத் துரத்தியடிக்கப் போராடும் ஒரு பேரியக்கமாக வடிவமைத்துத் தலைமை தாங்கினார் மகாத்மா காந்தி. வெள்ளையர்களின் ஆதிக்கத்தை எதிர்த்துப்
போராடுகையில் ஹிம்சையை, வன்முறையைத் தவிர்த்தார். எங்குமே, யாருமே கேட்டிராத நூதன வழியாக அஹிம்சைப் போராட்டத்தை அறிவித்தார். இந்தியா முழுவதும் சுதந்திர உணர்வில் எழுந்து ஆர்ப்பரிக்கவைத்தார். ஆங்கிலேய ஆட்சியை ஆட்டம்காணவைத்ததோடல்லாமல், உலகின் கவனத்தையே இந்தியாவின் பக்கம் திருப்பிவிட்டார் காந்தி. அன்னாரின் அடிச்சுவட்டை இம்மியளவும் பிசகாமல் தொடர்பவர்களல்லவா அன்னை சோனியாவின் காங்கிரஸார்?
காந்திக்கு மேலேயும் ஒருபடி போகப் பார்த்திருக்கிறார்கள் கோவில்பட்டியில். ‘நூதனப் போராட்டம்’ என்பதைக் கெட்டியாகப் பிடித்துக்கொண்டார்கள். எப்படி இவர்களது நூதனம்? ஹிம்சைவழிப் போராட்டம். என்னய்யா சொல்கிறீர் என்று கோபப்படுகிறீர்கள். பொறுமை.. பொறுமை. தமிழ்க்காங்கிரஸார் சொகுசாகத் தின்றுவிட்டு, வெள்ளைவெளேர் வேட்டிசட்டையோடு பஸ்ஸ்டாண்டுக்கு வந்து கோஷமிட்டார்கள். ’அதுக்காக, சாப்பிடாமயா இந்த வெயில்ல வந்து போராடமுடியும்’-னு பாயாதீங்க. மேற்கொண்டு அறியுங்கள். இரண்டு அப்பாவி விலங்குகளை – அதாவது அவர்களிடம் எளிதில் அகப்பட்டுக்கொண்ட இரண்டு கழுதைகளை- தரதரவென இழுத்துவந்து அங்கு அடைத்துவிட்டார்கள். மணிக்கணக்கில் விலங்கு ஹிம்சை. கோஷம். நூதனப் போராட்டம் ! ’கழுதையைப் பார்த்தாவது கோவில்பட்டிக்கு யோகம் வருமாம்’ – சொல்கிறார் ஒரு லோகல் காங்கிரஸ் பிரஹஸ்பதி. இப்படிப் போகிறது செந்தமிழ்நாட்டில் நமது பாரம்பரியமிக்க தேசிய கட்சியின் கதை. காந்திவழி வந்த அரசியல்வாதிகளின் போராட்ட நெறி ..
**