கடைத்தெருக் கதைசொல்லி

ஆ. மாதவன் என்கிற பெயரை மேம்போக்காகத் தமிழ் படிக்கும் பெரும்பாலானோர் அறிந்திருக்க நியாயமில்லை. ஆழமாக எதையும் சென்று நோக்கும் பழக்கம்-அதுவும் இலக்கியம் போன்ற வகைமையில்- பொதுவாக தமிழர்க்கில்லை. பூர்வீகம் திருநெல்வேலியாக இருந்தபோதிலும், மாதவன் திருவனந்தபுரத்திலேயே ஆரம்பத்திலிருந்தே வாழ்ந்து வருபவர். தமிழ் இலக்கிய வெளியில் ஒரு ‘low profile’ எழுத்தாளர். அவருக்கு 2015-ஆம் ஆண்டுக்கான `சாகித்ய அகாடெமி விருது` என்றவுடன் `யாருடா, இந்த ஆளு!` என்று புருவம் உயர்த்தியிருப்பார்கள் நம்மவர்கள்.

அவரது படைப்புகளப்பற்றி வெகுகாலம் கவனம் கொள்ளாதிருந்த சாகித்ய அகாடமி, அவர் வயது 80-ஐத் தாண்டிய நிலையில், அவரை நினைவில் மீட்டது. விருதுக்கு தேர்வு செய்யப்படும் எழுத்தாளர் தேர்வு செய்யப்படும் ஆண்டுக்கு முந்தைய 3 ஆண்டுகளில் ஏதாவது படைத்திருக்கவேண்டும் என்கிற விசித்திர விதி ஒன்று சாகித்ய அகாடெமியிடம் இருக்கிறது! ஆதலால் அவர் 2013-ல் வெளியிட்ட `இலக்கியச் சுவடுகள்` எனும் கட்டுரை நூலை விருதுக்காகத் தேர்ந்தெடுத்திருக்கிறது. அவர் படைப்பின் உச்சத்திலிருந்தபோது எழுதிய `கிருஷ்ணப்பருந்து`, `கடைத்தெருக் கதைகள்` போன்ற படைப்புகளுக்காக அவர் அப்போதே தேர்வு செய்யப்பட்டிருக்கவேண்டும். தூங்குமூஞ்சி அகாடெமி !

ஆ. மாதவனின் எழுத்து பற்றி எழுதியவர்கள் ஓரிருவரே. சாதாரண மனிதர்களின் அன்றாட வாழ்க்கையை ஆழமாக நோக்கும் மாதவனின் படைப்புகள் `இயல்புவாத அழகியல்` சார்ந்தது என்கிறார் ஜெயமோகன். சாரு நிவேதிதா தனது கட்டுரை ஒன்றில் மாதவனின் எழுத்துக்களை `தீமையின் அழகியல்` என்கிறார். காமம், வக்ரம், கொடூரம் போன்ற மனதின் இருட்டுப் பக்கங்களை மறைந்திருந்து படிக்கும் எழுத்துக்கள். அவரது `எட்டாவது நாள்` என்கிற குறுநாவல் இத்தகைய உதாரணத்திற்குச் சிறந்தது.

குடும்ப சூழ்நிலை காரணமாக 10-ஆவது வகுப்புக்கு மேல் படிக்க முடியவில்லை. திருவனந்தபுரத்தின் சாலைத்தெரு எனும் கடைத்தெருவில் கடை வைத்து வியாபாரம் செய்துவந்தார் மாதவன். சிறுவயதிலிருந்தே மலையாள, தமிழ் நூல்களை விரும்பிப் படித்ததனால், இலக்கிய ஈடுபாடு உண்டானது. சந்தைத் தெருல் தென்படும் சாதாரண மனிதர்களே மாதவனின் கதாமாந்தர்கள். அவர்கள் `இன்று`, இப்போது` என வாழ்வை நேரடியாகச் சந்திப்பவர்கள். நேற்றென்றும், நாளையென்றும் பெரிதாக ஏதுமில்லை வாழ்வில். எத்திப்பிழைப்பது, சம்பாதிப்பது, தின்பது, போகிப்பது என வாழ்வை சாதாரணமாக எதிர்கொள்பவர்கள். ஆதலால் `அறம்` பற்றிய தாக்கம், சிந்தனை அவர்களிடம் அறவே இல்லை. அவர்களின் தமிழ், மலையாளம் கலந்த கலப்புமொழி, சந்தைமொழி, தினசரி சந்திக்கும் வாழ்க்கைச் சவால்கள், செய்யும் தடாலடிக் காரியங்கள் போன்றவை அத்தகைய உயிர்ப்பான பாத்திரங்களை வாசகன் முன் கொண்டுவந்து நிறுத்துகின்றன.

நாவல்கள் சில எழுதியிருப்பினும் ஆ. மாதவன் சிறந்த சிறுகதை ஆசிரியராகவே கவனம் பெறுகிறார். ஜெயமோகன் தன்னுடைய `தமிழ் இலக்கிய முன்னோடிகள்` வரிசையில் மாதவனைச் சேர்த்திருக்கிறார். மாதவனின் `கிருஷ்ணப்பருந்து` என்கிற குறுநாவல் பரவலாகக் கவனிக்கப்பட்டது, பேசப்பட்டது. `கடைத்தெருக் கதைகள்`, `அரேபியக் குதிரை` எனும் சிறுகதை தொகுப்புகள் வெளியாகியுள்ளன. தமிழினி பதிப்பகம் அவரது 72 தேர்ந்தெடுக்கப்பட்ட சிறுகதைகளை ஒரு தொகுப்பாக வெளியிட்டு இளைய தலைமுறை வாசகர்களிடம் அவரை அறிமுகம் செய்தது. தான் படித்த, மலையாள எழுத்தாளர்களின் புகழ்பெற்ற படைப்புகளில் சிலவற்றைத் தமிழாக்கம் செய்தும் வெளியிட்டுள்ளார் மாதவன்.

“கடவுள் எனும் புலப்படாத பிரும்மாண்டத்தின் அரவணைப்பை மனித மனத்தின் நுண்ணுணர்வால்தான் உணர முடியும். இந்த உணர்வின் சாட்சிக்கூடங்கள்தான் கோயில்கள், சிற்பங்கள், இசை, நாட்டியம் எல்லாம். இசை தரும் ஸ்பரிச சுகத்தை தெய்வீகம் என்று உணர்பவன். ஆதலால் நான் கலைஞன்!“ என்கிறார் ஆ.மாதவன்.

**

அதர்ம காலத்தில்

அறஞ்செய விரும்பு
அவருக்கென்ன
சொல்லிச் சென்றுவிட்டார்
அந்த மூதாட்டி
செயவிரும்புகையில்
ஏதேதோ கேள்விப்படுகிறேனே
என்னென்னமோ தெரிய வருகிறதே
குழப்பம் கூத்தடிக்கிறதே
எதற்கு நமக்கு இந்த வம்பு
விரும்பிவிட்டு
விட்டுவிடட்டுமா
எதையாவது செய்யப்போய்
பிள்ளையார் பிடிக்கக்
குரங்காகிவிட்டால் ?
**