விக்ரமாதித்யன் நம்பி என ஆரம்பத்திலும், இப்போது விக்ரமாதித்யன் எனவுமே அறியப்படும் தமிழுக்கு நேர்ந்த, தேர்ந்த சமகாலக் கவிஞன். படிமங்கள், உருவகங்கள் எனச் சுமைதாங்கி வராமல், பேச்சுமொழியின் சாதா வார்த்தைகளாலேயே சாகசம் காட்டும் வரிகளைத் தந்துவரும் ஆளுமை. சில சமகால இலக்கியப் பெரிசுகளுக்கு (அப்படித் தங்களை வரித்துக்கொண்டு அழகு பார்க்கும் அசடுகளுக்கு) நேரடிமொழியில் வளர்ந்தது கவிதையேயில்லை எனத் தோன்றுகிறது போலும். அவர்களைச் சொல்லிக் குற்றமில்லை. அவரவர் இலக்கியவிதிவழி அவரவர் செல்கின்றனரே!
விக்ரமாதித்யனின் சில கவிதைகளை இங்கே ப்ரிய வாசகர்களுக்காகத் தருகிறேன்..:
நான்
யாருடைய தற்கொலைப் படையிலும் இல்லை
வசந்தம் தவறியபோதும்
வண்ணத்துப்பூச்சிகளின் வாழ்க்கையில்
வன்கொலைச் சாவுக்கு இடமில்லை
வெயில் காயும்
மழை புரட்டிப்போடும்
அல்பப் புழுக்களும் வாழ்ந்து
கொண்டிருக்காமல் இல்லை
நீ கலகக்காரன் இல்லை?
நல்லது நண்ப
நானும் கூடத்தான்
எனது இருபதுகளில்.
**
பாமரன்
பாடுபடுகிறான்
மேஸ்திரி
வேலை வாங்குகிறான்
மேலாளன்
நிர்வாகம் செய்கிறான்
முதலாளி
லாபம் சம்பாதிக்கிறான்
பொதுவில்
காய்கிறான் சூரியன்
பொதுவாகப்
பெய்யவும் பெய்கிறது மழை
**
கோயிலுக்கு
வாசல் நான்கு
சன்னிதி இரண்டு
சுயம்புலிங்கம்
சொல்ல ஒரு விசேஷம்
அம்மன்
அழகு சுமந்தவள்
ஐந்து கால
பூஜை நைவேத்யம்
பள்ளியறையில்
பாலும் பழமும்
ஸ்தல விருக்ஷம் பிரகாரம்
நந்தவனம் பொற்றாமரைக் குளம்
வசந்தோற்சவம் தேரோட்டம்
நவராத்திரி சிவராத்திரி
பட்டர் சொல்லும் மந்திரம்
ஓதுவார் பாடும் தேவார திருவாசகம்
சேர்த்துவைத்த சொத்து
வந்துசேரும் குத்தகை
ஆகமம் ஆசாரம்
தவறாத நியமம்
தெய்வமும்
ஐதிகத்தில் வாழும்
**
(மேலே இருப்பவை ‘உள்வாங்கும் உலகம்’ தொகுப்பிலிருந்து)
ஜெயிப்பதற்கு
சில சூதுகள்
தோற்பவன் துயரம்
பிரபஞ்ச நாடகம்
**
தப்பித் தப்பிப்
போக
தப்புத் தப்பாக
ஆக
**
சாமி மலையேறி
எங்கே போகும்
தேவி மடியில்
விழுந்து கிடக்கும்
**
சூரியனின் தேருக்கு
ஏழு குதிரைகள் போதுமா?
**
ஆரஞ்சுவர்ணப் புடவை
ஆகாசவர்ணப் புடவை
எதுக்கும் பொருந்திப்போகிறது
இந்தப் பிச்சிப்பூ.
**
விதியை நம்பியபோதும்
வெறுமே இருப்பதில்லை யாரும்
**
இருளில் புதைந்திருக்கிறது
ஏராளமான நட்சத்திரங்கள்
**
(குறுங்கவிதைகள் ‘கிரகயுத்தம்’ எனும் விக்ரமாதித்யனின் தொகுப்பிலிருந்து).

எழுத்தாளர் விமலாதித்த மாமல்லனின் முனைப்பில், இரண்டு நாட்களுக்கு ஒருமுறை இப்போது அமேஸான் தளத்தில் கிடைக்கிறது இலவசவாசிப்புக்கென, விக்ரமாதித்யனின் கவிதை மின்னூல்கள். அந்த வரிசையில் விக்ரமாதித்யனின் சிறுகதைத் தொகுப்பொன்றும் இப்போது இலவச வாசிப்பில் இருக்கிறது : 25-8-2021. பகல் 11:29 வரை(IST). பெயர்: ‘அவன் அவள்‘. 16 சிறுகதைகள் உள்ளன. அமேஸான் அக்கவுண்ட் இருக்கும் வாசகர்கள், கூடவே அமேஸான் தளத்தின் ‘Free Kindle app’-ஐத் தரவிறக்கம் செய்திருந்தால், இலவசமாக மின்னூலைத் தரவிறக்கம் செய்து இந்த சிறுகதைத் தொகுப்பை ஆனந்தமாக வாசிக்கலாம்.
லிங்க்: https://www.amazon.in/dp/B078SNBTCB
அமேஸானில் விக்ரமாதித்யனின் மின்னூல்கள் இலவசமாக சில நாட்களுக்குக் கிடைப்பதுபோக, மற்ற நாட்களில் உலகெங்கும் குறைக்கப்பட்ட விலையில் கிடைக்க வழி செய்யப்பட்டுள்ளது. அதாவது, அமேஸான் மின்னூலின் மிகக் குறைந்த விலையான ரூ.49/-க்கே அவை இனி கிடைக்கும் என எழுத்தாளர் விமலாதித்த மாமல்லனிடமிருந்து தற்போது தகவல் கிடைத்ததால் இங்கே சேர்க்கிறேன், வாசகர்களின் வசதிக்காக.
**